அம்மா… என்னோடு ஒருவிநாடி! – Rebekah Knight
மெதுவாக…
கொஞ்சம் மெதுவாக அம்மா!
இப்படி அவசரப்பட
என்ன தேவை வந்துவிட்டது
எதற்காக இந்த
அமைதியிழந்த
படபடப்பு
கொஞ்சம் மெதுவாக அம்மா!!
ஒரு கப் தேநீர் வைத்துக்
குடியுங்கள்
எனக்குப் பக்கத்தில்
வாருங்கள்
என்னோடு கொஞ்சநேரம்
செலவிடுங்கள்
காலணிகளை அணிந்து
வெளியில் சற்று
உலாத்தி வருவோம்
பாதைகளில் தென்படும
சருகுக் குவியல்களைக்
கால்களால் கிளறிவிடலாம்
கலகலத்துச் சிரிக்கலாம்
கதைகள் பேசலாம்
கொஞ்சம் மெதுவாக அம்மா!!!
நீங்கள் எப்பொழுதும்
சோர்வாக இருக்கிறீர்கள்
என்னருகில் வாருங்கள்
ஒரு போர்வைக்குள்
என்னை அணைத்தபடி
சில கணங்கள் ஓய்வெடுங்கள்
கொஞ்சம் மெதுவாக அம்மா
அந்த அழுக்குப் பாத்திரங்கள்
சற்றுக் காத்திருக்கட்டும்
நாங்கள் கொஞ்சம்
குதூகலித்திருப்போம்
கேக் செய்து
சாப்பிட்டு மகிழ்வோம்
கொஞ்சம் மெதுவாக அம்மா
எனக்குத் தெரியும்
உங்களுக்கு தலைக்குமேல்
வேலையிருக்கிறது
ஆனால் சிலவேளைகளில்
அம்மா…
அவற்றை நீங்கள்
நிறுத்தினால் நல்லது!
ஒருவிநாடி
எங்களோடு இருங்கள்
‘எங்களின் நாள்’ பற்றிக் கேளுங்கள்
நேசம் பொதிந்த கணங்களை
எங்களோடு செலவிடுங்கள்
ஏனென்றால்…
எங்கள் குழந்தைப்பருவம்
நிலையாக இங்கேயே
நின்றுவிடாது!
–
மூலக்கவிதை (ஆங்கிலம்): Rebekah Knight
தமிழில்: ரூபன் சிவராஜா
26-09-2014