இஸ்ரேல் – அமெரிக்க உறவும் பலஸ்தீனத்திற்கான தீர்வும்

அமெரிக்காவின் மத்தியகிழக்கு அரசியல் விவகாரங்கள் சார்ந்த அணுகுமுறைக்கும் இஸ்ரேலுடனான உறவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இஸ்ரேலை மீறியோ, அதனை மேவியோ, அதன் நலன்களுக்கு குந்தகமாக அமெரிக்க அணுகுமுறை ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக இஸ்ரேலுக்கான தார்மீக ஆதரவு சக்தியாக எல்லாத்தருணங்களிலும் முண்டுகொடுப்பு அரசியலையே அமெரிக்கா கடைப்பிடித்துவந்தது.

மார்ச் 17ஆம் திகதி (2015) இஸ்ரேலில் இடம்பெற்ற தேர்தலில் பெஞ்சமின் நேதன்யாகு (Likud கட்சி) மீண்டும் பிரதமராகியுள்ளார். பலஸ்தீனத் தனியரசு தொடர்பாக தேர்தல் பரப்புரைகளின் போது நேதன்யாகு வெளிப்படுத்திய கருத்துகளால் அமெரிக்கா அதிருப்தியுற்றிருந்தது.

இதன் பின்னணியில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்குமிடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. நீண்ட பாரம்பரியமாக நெருங்கிய நட்பு சக்திகளாக விளங்கிவந்த இவ்விரு நாடுகளுக்குமிடையிலான உறவில் முரண்பாடு தோன்றியிருக்கும் புறநிலை மத்தியகிழக்கு அரசியலில, குறிப்பாக இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாட்டுச் சிக்கலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அவை நேர்மறையான தாக்கங்களா அல்லது எதிர்மறையான தாக்கங்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த ஆறு ஆண்டுகளாக நேதன்யாகு தலைமையான அரசாங்கம் ஆட்சியதிகாரத்தில் இருந்து வந்துள்ளது. 2வது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக புதிய தேர்தல் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பரப்புரைகளின் இறுதிக்கட்டத்தில், பெஞ்சமின் நேதன்யாகு வெளிப்படுத்திய கருத்துகள் ஒபாமா நிர்வாகத்தின் மத்தியில் கசப்பினை ஏற்படுத்தியுள்ளன. தான் தலைமை அமைச்சராக பதவியிலிருக்கும் காலத்தில் பலஸ்தீனத் தனியரசு அமைக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என நேதன்யாகு சூளுரைத்துள்ளார். இது 2009இல் நேதன்யாகு முதன்முறை தலைமையமைச்சராக பதவியேற்றதையடுத்து வெளிப்படுத்திய கருத்திற்கு முற்றிலும் தலைகீழானது. அன்றைய சூழலில் பேச்சுவார்த்தைகள் மூலம் தனிநாட்டுத் தீர்வினைக் கண்டடைவதென்ற நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தார். பலஸ்தீனத் தனிநாட்டினை அமைப்பதென்ற உடன்பாடு 1993இல் இருதரப்பிற்குமிடையில் (இஸ்ரேல் – பலஸ்தீனம்) “ஒஸ்லோ உடன்படிக்கையில்” இணக்கம் காணப்பட்ட விவகாரமாகும்.

அமெரிக்க – இஸ்ரேல் உறவின் விரிசலுக்கு ஈரான் விவகாரமும் மற்றுமோர் காரணியாகும். ஈரானின் அணுசக்தி உற்பத்திக்கான வரையறைகள் சார்ந்த உடன்படிக்கையொன்று அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையில் கைச்சாத்தாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. ஈரானுடன் அமெரிக்கா கிட்டநெருங்குவது இஸ்ரேலுக்கு உவப்பில்லை. இதன் அடிப்படையில் அமெரிக்காவின் ஈரான் சார்ந்த அண்மைய அணுகுமுறை இஸ்ரேலின் கடுமையான விசனத்திறகு உள்ளாகியுள்ளது. ஈரான் அணுவாயுத உற்பத்தியைத் தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது ஒபாமாவின் நிபந்தனையற்ற விட்டுக்கொடுப்புன்கூடிய கையறு நிலையை வெளிப்படுத்தும் அணுகுமுறை என்றவாறான விமர்சனம் இஸ்ரேலினால் முன்வைக்கப்படுகின்றது.

குடியரசுக்கட்சி பெரும்பான்மையைக் கொண்டுள்ள அமெரிக்க கொங்கிரஸ் அவையின் அழைப்பின் பேரில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கொங்கிரஸ் அவையில் அமெரிக்காவின் ஈரான் அரசியல் அணுகுமுறையக் கடுமையாக விமர்சித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முதுகில் குத்திய நிகழ்வாக ஒபாமா நிர்வாகத்தினால் பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க-இஸ்ரேல் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ள நேரடிக் காரணங்களாக இரண்டு விவகாரங்களைக் குறிப்பிடலாம். பலஸ்தீனத் தனிநாட்டுக்கெதிரான நெதன்யாகுவின் கூற்று முதலாலது காரணி. மற்றையது ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் அணுகுமுறைக்கு எதிரான இஸ்ரேலின் காட்டமான விமர்சனம்.

பலஸ்தீனத் தனிநாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டினை நேதன்யாகு வெளிப்படுத்தியுள்ளமையின் பின்னணியில், இஸ்ரேல் தொடர்பான தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் அணுகுமுறைகளைத் தாம் மீளாய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக ஒபாமா நேரடியாகவே நேதன்யாகுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நேதன்யாகு வெற்றியீட்டிய அறிவிப்பு வெளியிடப்பட்ட 2 நாட்களின் பின்னரே ஒபாமா தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்பது உறவு விரிசலை வெளிப்படுத்தும் சமிக்ஞையாகப் பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவின் மத்தியகிழக்கு அரசியல் விவகாரங்கள் சார்ந்த அணுகுமுறைக்கும் இஸ்ரேலுடனான உறவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இஸ்ரேலை மீறியோ, அதனை மேவியோ, அதன் நலன்களுக்கு குந்தகமாக அமெரிக்க அணுகுமுறை ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக இஸ்ரேலுக்கான தார்மீக ஆதரவு சக்தியாக எல்லாத்தருணங்களிலும் முண்டுகொடுப்பு அரசியலையே அமெரிக்கா கடைப்பிடித்துவந்தது. அமெரிக்காவிற்கு உவப்பில்லாத பலஸ்தீனத்திறகு எதிரான நேதன்யாகுவின் கூற்றும் அவர் தலைமையமைச்சராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டமையும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு அரசியலில் மாற்றத்தைத் தூண்டக்கூடிய காரணிகளாகக் கருத இடமுண்டு;. ஐ.நா பாதுகாப்பு மையத்திலும் இஸ்ரேலுக்குரிய அமெரிக்க ஆதரவு குறைவடையவும் வாய்ப்பகளும் உள்ளன.

அவ்வாறு நிகழுமானால் அது வரலாற்று நிகழ்வாகக் கருதப்படும். ஏனெனில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேலுக்கு எதிரானதும் இஸ்ரேலைக் கண்டிப்பதுமான ஐ.நா பாதுகாப்புச்சபையின் தீர்மானங்களை தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் செயலிழக்கச் செய்துவந்தது அமெரிக்கா.

தற்போதைய முறுகலுக்கு இறுதியாண்டுகளிலேயே தூபமிடப்பட்ட ன என்பதற்குச் சான்றாகச் சில சம்பவங்களைக் கூறமுடியும். 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஒபாமா 2வது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட அரசதலைவர் வேட்பாளர் Mitt Romneyf தனது வெளிப்படையான ஆதரவினை நேதன்யாகு தெரிவித்திருந்தமை நினைவுகூரத்தக்கது. அதேபோல் தற்போதைய இஸ்ரேல் தேர்தலில் நேதன்யாகுவை எதிர்த்துப் போட்டியிட்ட இஸ்ரேல் தொழிற்கட்சித் தலைவர் Yitzhak Herzog வெல்லவேண்டுமென்ற விருப்பத்தையும் சமிக்ஞையையும் ஒபாமா அரசாங்கம் வெளிக்காட்டியிருந்தது.

ஒபாமா மற்றும் நேதன்யாகு இருவருக்குமிடையில் பகைமை நிலவியது என்பது இரகசியமானதில்லை என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும். ஈரானின் அணுசக்தி சார்ந்த உடன்படிக்கை வரைபு விரைவில் வெளிவரவிருக்கிறது. அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் பலஸ்தீனம் அதிகாரபூர்வமாக ஏப்ரல் 1ஆம் நாளிலிருந்து அங்கத்துவம் வகிக்கின்றது. இவற்றின்; புறநிலையிலும் அமெரிக்க – இஸ்ரேல் உறவு மேலும் விரிசலைச் சந்திக்கும என்பதும் பரவலான எதிர்பார்ப்பு.

அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இஸ்ரேலை ஒரு ஆபத்தான நிலைக்குள் நேதன்யாகு கொண்டு செல்வதான கருத்து சில மட்டங்களில் முன்வைக்கப்படுகின்றது. ஹமாஸ் அமைப்பினை அழித்தொழிக்கும் முனைப்புடன் 2008இலிருந்து காசா மீது 3 தடவைகள் போர் தொடுக்கப்பட்டு அப்பிரதேசம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

காசாப் பிரதேசத்தின் மனிதாபிமான அவலங்கள் பற்றிய அறிதல் இஸ்ரேலின் சாதாரண மக்கள் மத்தியில் இல்லை. அரசாங்கத்தை விமர்சிக்கும் சிவில் மற்றும் ஊடக வெளியும் இல்லை என்பதே யதார்த்தம். அந்தவகையில் ஒருமுனைப்பட்ட கருத்துருவாக்கமே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. பலஸ்தீனப் பிரச்சினையை பயங்கரவாதப்பிரச்சினையாகச் சித்தரிப்பதைத் தனது நீண்டகால அணுகுமுறையாக இஸ்ரேல் கைக்கொண்டு வந்துள்ளது. உள்நாட்டு மட்டத்தில் கணிசமான வெற்றியும் அதற்குக் கிடைத்துள்ளது. பலஸ்தீனப் பிரதேசங்கள் மீதான யூதக்குடியேற்றங்கள், காசா மீதான படையெடுப்பு, பலஸ்தீன எதிர்ப்பு மனநிலை மீதான விமர்சனங்கள் உள்நாட்டு மட்டத்தில் எழுப்பப்படுவதில்லை. ஜனநாயகபூர்வமான அமைப்பியல் ரீதியான வலுவோடு சிவில்சமூகம் இல்லை. யூத இனவாதத்தை ஊட்டி வளர்க்கும் நிலையே அதிகரித்துள்ளது.

பலஸ்தீனப் பிரதேசங்களில் குறிப்பாக மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் பிரதேசங்கள் ஏலெவே திட்டமிட்ட குடியேற்றங்களால் விழுங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தேர்தலில் தான் மீளவும் தலைமையமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டால் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளை மேலதிகமாக அமைத்துக் கொடுப்பேனெனவும் வாக்காளர்களுக்கு நேதன்யாகு வெளிப்படையாக வாக்குறுதி அளித்திருந்தார்.

22 ஆண்டுகளாக இழுபறிக்குள் சிக்கியுள்ளபோதும் அவ்வப்போது தூசிதட்டப்பட்டு இஸ்ரேல்-பலஸ்தீனப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் அனுசரணையுடன் இடம்பெற்றுள்ளன. பெஞ்சமின் நேதன்யாகுவின் அண்மைய நிலைப்பாடும் கூற்றுகளும் பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைகளையே தகர்த்துவிடுமென்ற கோணத்தில் அமெரிக்க அதிருப்தி வெளியாகியுள்ளதை அவதானிக்கமுடியும்.

ஆனபோதும் நேதன்யாகுவின் அதீத கடும்போக்கு, அமெரிக்கா உட்பட்ட அனைத்துலக சக்திமிக்க நாடுகளின் இஸ்ரேல் மீதான அழுத்தங்களை அதிகரிக்க வழிகோலுவதோடு, பலஸ்தீனச் சிக்கலுக்கான தீர்வினை விரைவுபடுத்தவும் வழிகோலுமென்ற கருத்தும் சிலமட்டங்களில் உண்டு.
1967இல் “7 நாள் போர்” மூலம் பலஸ்தீனப் பிரதேசங்கள் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பலஸ்தீனத் தனியரசை அமைப்பதற்கான “ஐ.நா பாதுகாப்புச்சபைத் தீர்மானம்” ஒன்றிற்கு ஆதரவளிப்பதற்கு அமெரிக்கா முனைவதான தகவல்களும் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அரசியலில் செல்வாக்கு மிக்கவர்களாக யூதர்கள் விளங்கிவருகின்றனர். அமெரிக்காவில் ஏறத்தாழ 5.3 மில்லியன் யூதர்கள் வாழ்கின்றனர். இது இஸ்ரேலின் மொத்தச் மக்கட்தொகைக்கு நிகரான தொகை. இந்தப்புறநிலை யதார்த்தமே இஸ்ரேல் மீதான அமெரிக்க அரசியல் அணுகுமுறையை வடிவமைப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் செல்வாக்குச் செலுத்திய் மூலகாரணியாகும். அத்தோடு அமெரிக்காவில் யுத பரப்புரை இயந்திரம் வலுவானதாக இயங்கி வந்துள்ளது. உலகளாவிய ரீதயில் யூத பரப்புரை இயந்திரம் வலுவான நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு விவகாரங்களில் குறிப்பாக இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டுச் சிக்கலுக்குரிய தீர்வை அடையக்கூடிய வகையில் உரிய அழுத்தத்தினை அமெரிககா இஸ்ரேல் மீது பிரயோகிக்காமைக்கு அமெரிக்கா மீது யூதர்கள் செலுத்துகின்ற வலுவான செல்வாக்கே முதன்மைக் காரணியாகும். இது விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன மக்களின் உரிமைப்போராட்டத்தின் தன்மைகளைப் புரிந்துள்ளதோடு அதன் நியாயப்பாடுகளையும் ஓரளவிற்கு வெளிப்படுத்தியுள்ளன. இஸ்ரேலின் பலஸ்தீனம் மீதான நில ஆக்கிரமிப்பு, போர் நடவடிக்கைகளை அவை கண்டித்தும் வந்துள்ளன.
ஆனால் அமெரிக்கா ஐ.நா பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்லப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான, பலஸ்தீன ஆதரவுத் தீர்மானங்களைத் தனது வீட்டோ அதிகாரம் மூலம் செயலிழக்கச் செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா இவ்வாறு ஐ.நா தீர்மானங்களைச் செயலிழக்கச்செய்து இஸ்ரேலுக்கு முண்டு கொடுத்து வந்துள்ளது. எனவே பலஸ்தீனத்தின் இன்றைய மோசமான நிலைமைகளுக்கு இஸ்ரேல் மட்டுமல்ல. அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு கருத்தியல் மற்றும் மூலோபாய அடிப்படைகளில் கட்டியமைக்கப்பட்டதொன்றாகும். மத்தியகிழக்கில் இருந்த ஒரேயொரு அமெரிக்க ஆதரவு நாடு இஸ்ரேல் என்ற பரிமாணத்திற்கூடாகவும் அதன் மூலோபாயப் அர்த்தத்தினை நோக்கவேண்டும். தற்போது பல அரபுநாடுகளுடன் அமெரிக்கா இராஜதந்திர உறவகளை வலுப்படுத்திவருகின்ற போதும் ஆரம்ப காலகட்டங்களில் இஸ்ரேல் மட்டுமே அமெரிக்காவின் நெருங்கிய நட்பு சக்தியாக விளங்கியது.

1948இல் இஸ்ரேல் தேசம் உருவாக்கப்பட்டபோது, அமெரிக்காவே அதனை முதன்முதலாக அங்கீகரித்தது. அதன் பிரகாரம் அதனைப் பாதுகாப்பதைத் தனது தலையாய கடமையாகவும் அமெரிக்கா வரித்துக்கொண்டது. இஸ்ரேலுக்கு அரசியல்-பொருளாதார-இராணுவ-இராஜதந்திர உதவிகளை அமெரிக்கா வழங்கி வந்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார உதவிகளின்றி இஸ்ரேல் தனித்தேசமாக நிலைத்து நின்றிருக்க முடியாது. குறிப்பாக பகை முரண்பாடுகளுடன் சூழவிருந்த அரபுநாடுகளை எதிர்த்து வலுமிக்க சக்தியாக இஸ்ரேல் எழுச்சிடைய அமெரிக்கா பெரிதும் துணைநின்றதென்பது வரலாற்று யதார்த்தம்.

இவ்வாறான புறநிலைகளில் அமெரிக்காவை மீறி, அமெரிக்காவை மேவி பலஸ்தீனத்தின் மீது கடும்போக்கு அணுகுமுறையைக் கைக்கொண்டு வந்துள்ளது இஸ்ரேல். பலஸ்தீனம் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பிற்கும், போர் நடவடிக்கைகளுக்கும், திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் உட்படுத்தப்பட்டுவந்துள்ளது.
இஸ்ரேல் தனக்குச் சாதகமான அரசியல் நகர்வுகளை எடுக்கும் போதெல்லாம், அவை பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு எதிரானவையாக இருந்தபோதும்கூட, இஸ்ரேலின் முடிவுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா முண்டுகொடுத்து வந்துள்ளது என்பது வெளிப்படையானது.

நடைமுறை அர்த்தத்தில் இந்த இராஜதந்திர முறுகல் இருநாடுகளுக்குமிடையிலான விரிசலாக கூர்மையடையுமா அல்லது குறுகிய கால அடிப்படையில் மீண்டும் சுமூக நிலைக்குத் திரும்புமா என்பதையும் எதிர்வுகூறுவது சுலபமல்ல. ஏனெனில் அமெரிக்க – இஸ்ரேல் உறவிற்கு நீண்ட பாரம்பரியமுண்டு. குறிப்பிட்ட சில சம்பவங்களால் அவற்றிற்கிடையிலான பரஸ்பர உறவு பாதிக்கப்படுமென உறுதியாகக் கூறமுடியாது.

பொங்குதமிழ் இணையம், ஏப்ரல் 2015

Leave A Reply