‘இஸ்லாமிய அரசு – ISIL’ பயங்கரவாதமும் ஈராக் நெருக்கடியும்
வெளிச்சக்திகளின் இராணுவத் தலையீட்டின் மூலம் திடமான நல்லாட்சியினையே, ஜனநாயகத்தையோ உறுதிப்படுத்த முடியாது என்பதற்கு வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் உள்ளன. லிபியாவில் கடாபியின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த வெளிச்சக்திகளின் இராணுவத் தலையீடு, அங்கு ஜனநாயகத்தை நிறுவுவதில் தோல்வி கண்டுள்ளது. இவ்வாறான தலையீடுகள் ஐனநாயத்தின், நல்லாட்சியின, மனிதாபி;மானத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டாலும், உள்ளார்ந்த அரசியல் நோக்கங்கள் வேறாகவே இருந்திருக்கின்றன என்பதும் பலரும் அறிந்ததே.
அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து 2011இல் வெளியேறிய போது ஒரு அங்கு ஒரு ஆட்சியதிகார வெற்றிடமும் உள்நாட்டுப் போருக்கான புறநிலையுமே விடப்பட்டிருந்தது. வெளி சக்திகளால் ஆக்கிரமிக்கப்படும் தேசங்கள், அச்சக்திகள் வெளியேறிய பின்னரும் அவற்றினால் ஏற்படுத்தப்பட்ட அரசியல், சமூக, பொருளாதாரச் சிதைவுகளிலிருந்து வெளிவருவதென்பது குறுகிய கால அடிப்படையில் சாத்தியம் குறைந்தது.
ஈராக்கில் சதாமின் இரசாயன உயிரழிவு ஆயுதங்கள் உள்ளன என்ற போர்வையில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதும், நல்லாட்சியை நிலைநிறுத்துவதும் தமது தலையாய கடமையெனச் சூளுரைத்தவாறு 2003இல் ஈராக்கில் இறங்கிய அமெரிக்க இராணுவ இயந்திரம், 2011 எந்தப் புறநிலையில் வெளியேறியது என்பது பரவலான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வு. இன்று ISIL (Islamic State of Iraq and the Levant) ) இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பு ஈராக் மற்றும் சிரியாவின் பல பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பொதுமக்களைக் கொன்று குவிக்கின்ற அவலநிலைக்குள் ஈராக் தள்ளப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டிலிருந்து கடந்த 8 ஆண்டுகளாக ஈராக்கின் தலைமை அமைச்சராக பதிவியிலிருந்த Nouri Al-Maliki பதவியிலிருந்து விலக்கப்பட்டு, Heider Al-Abadi புதிய தலைமை அமைச்சராக இம்மாதம் 12 ஆம் திகதி பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் Nouri Al-Maliki பதவி விலக மறுத்துவந்தார். அமெரிக்கா மற்றும் ஈரானின் தொடர் அழுத்தங்களாலும் நாட்டின் சீயா மற்றும் சன்னி முஸ்லீம்கள் மத்தியிலான ஒருமைப்பாட்டினை உருவாக்கத் தவறிவிட்டதான குற்றச்சாட்டுகளால் அவர் மீது உருவான அதிருப்திகளின் விளைவாகவும் அவர் பதிவி விலக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜீன் மாத நடுப்பகுதியிலிருந்து ISIL இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பு, ஈராக்கின் பல பிரதேசங்களைக் கைப்பற்றி வந்துள்ளது. இந்த அமைப்பு 2011இல் சிரியாவில் வெடித்த உள்நாட்டுப் போரினைத் தொடர்ந்து அங்கும் பல நகரங்களைக் கைப்பற்றியது. ஈராக் மற்றும் சிரியாவை உள்ளடக்கிய அகண்ட இஸ்லாமிய அரசினை உருவாக்குவதைத் தமது இலக்காக அறிவித்துள்ளது. 2011இல் சிரியாவின் அரசதலைவர் Assad–ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கிய போது ISIL மீளெழுச்சி கொண்டது. சிரியாவின் அரச படைகளுக்கும், அந்த அரசபடைகளுக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சியாளர்களுக்கும் எதிரான தாக்குதல்களை ஒருசேர இந்த அடிப்படைவாத அமைப்பு நடாத்தி வந்தது.
இது ஈராக்கைத் தளமாகக் கொண்டியங்கிய அல்-கைடாவிலிருந்து பிளவுபட்ட ஒரு பிரிவாகும். ஆனபோதும் Ayman al-Zawhiri தலைமையிலான தற்போதைய அல்-கைடா ISILஇற்கும் தமக்கும் தொடர்பில்லை எனக் கூறுகின்றது. இவ்விரு மதவாத அமைப்புகளுக்குமிடையில் பல ஒற்றுமைகள் இருப்பினும் ஒரு வேற்றுமையைச் சுட்டிக்காட்ட முடியும். அதாவது அல்-கைடா மேற்குலகத்திற்கெதிரான அடிப்படைவாத சித்தாந்தங்களோடு முஸ்லீம்களை ஒன்றிணையக் கோருகின்றது. ஆனால் ISIL, சன்னி முஸ்லீம்களை கடும்போக்கு மத அடிப்படைவாதத்தை முன்வைத்து ஒருங்கிணைத்து மோசமான முறையில் வன்முறைத் தாக்குதல்கள் வழிநடத்தி வருகின்றது. அத்தோடு அல்-கைடாவிற்கு மாறாக நிலப்பரப்புகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டுகின்றது.
தலையை அறுத்துக் கொல்லுதல், கம்பத்தில் கட்டி சுடுதல், கைகளை வெட்டுதல் எனப் படுபயங்கரமான படுகொலைகளை இநத அமைப்பு செய்துவருகின்றது. இவ்வகையான மோசமான பயங்கரவாத நடவடிக்கைகள், படுகொலைகள் மூலம் தமது எதிராளிகளையும் மக்களையும் உளவியல் ரீதியில் பாரிய உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதும், அதனூடாகத் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விரிவுபடுத்துவதும் இந்த அமைப்பின் திட்டமிட்ட மூலோபாயமாக உள்ளது. மோசமான மனிதப்படுகொலைகளை நிகழ்த்திய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. தாமே இணையத்தளத்தினூடாக தமது குரூரமான படுகொலைகளை காணொலி வடிவில் வெளியிட்டும் வருகின்றது இந்த அமைப்பு.
ISIL மதவாத அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் சன்னி முஸ்லீம் ஆயுதக்குழுக்களைத் தம்மோடு இணைத்து செயற்படுகின்றது. ஈராக்கின் முன்னாள் ஆட்சியாளர் சதாம் உசேனின் Baath கட்சியுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களையும் தன்னுடன் இணைத்துள்ளது.
ஈராக்கில் இயல்புநிலையை ஏற்படுத்தி, சன்னி மற்றும் சீயா இன முஸ்லீம் குழுமங்களுக்கிடையில் பதட்டசூழலைத் தணித்து, ஈராக்கிய ஒருமைப்பாட்டினை நிறுவும் திராணியற்றவர் என்ற கருதுகோளின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகியன Maliki மீதான நம்பிக்கையை இழந்திருந்தன. தற்போதைய புதிய தலைமை அமைச்சர் அவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது இந்நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவர் ஒருங்கிணைந்த (சீயா-சன்னி) அரசங்கத்தை நிறுவும் பட்சத்தில் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகளை அதிகரிப்பது தொடர்பாக அமெரிக்கா சாதகமாக ஆராயும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெரி உறுதியளித்திருந்ததாக அண்மைய ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
ISILஇன் நிலைகளுக்கு எதிராக வான்வெளித் தாக்குதல்களை இம்மாத ஆரம்பத்திலிருந்து அமெரிக்கா முன்னெடுத்து வருகின்றது. ஈராக்கிய மற்றும் குர்தீஸ் படைகளுக்கு (வட ஈராக்கில் Eebil நகரத்தைத் தலைநகராகக் கொண்டுள்ள குர்தீஸ் சுயாட்சிப் பிரதேசத்தின் படைகள் – (Kurdistan Reional Government) அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது. அத்தோடு ISIL மீதான தாக்குதல்களில் ஈராக் மற்றும் குர்தீஸ் படைகளுக்கு வான்வழித் தாக்குதல்கள் மூலமும் உதவி வருகின்றது.
எது எப்படியாயினும் ஈராக்கில் மீண்டுமொரு போருக்குள் அமெரிக்கா இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. 2003 இல் அன்றைய அமெரிக்க அரச தலைவர் ஜோர்ஜ் புஸ் தலைமையில் அமெரிக்கப்படைகள் ஈராக்கிற்குள் கால் வைத்தன. ஆனால் உள்வைத்த காலை முழுவதுமாக வெளியெடுக்க முடியாத நிலையே அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. 2011இல் வெளியேறும் போது அங்கு இயல்புநிலையோ, ஒரு திடமான அரசாங்கமோ, செயற்திறன் கொண்ட படைக்கட்டமைப்போ உருவாக்கப்படவில்லை. சீயா முஸ்லீம்களை மையப்படுத்திய, இப்பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கிய அரசாங்கமாகவே அமெரிக்க ஆசீர்வாதத்துடன் உருவாக்கப்பட்ட Maliki தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டது.
ISIL மதவாத அடிப்படைவாதத்தை எதிர்கொள்ளக்கூடிய அல்லது முறியடிக்கக்கூடிய வலுக்கொண்டதாக அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட ஈராக் படைகள் இருக்கவில்லை. ISILஇன் தாக்குதல்கள் தொடங்கிய ஜீன் மாதத்திலேயே ஈராக்கியப் படைகள் நிலைகுலைந்து விட்டன. குர்தீஸ் படைகளே ISIL மீது கடுமையான பல தாக்குதல்களை நடாத்தி சில பிரதேசங்களை மீட்டுமுள்ளன.
Al-Abadi தலைமையில் ஸ்திரத்தன்மை கொண்ட ஒரு அரசாங்கம் அமைக்கப்படுவதையே ஈரானும் விரும்புகின்றது. திடத்தன்மை பொருந்திய அயல் நாடாக ஈராக் இருப்பதே தனது பாதுகாப்பிற்கு சாதகமானது என ஈரான் கருதுகின்றது. வடக்கில் எண்ணெய் வளம் மிக்க குர்திஸ்தான் ஒரு நாடாகவும், சன்னி முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட பிரதேசங்கள் ISIL கட்டுப்பாட்டிலும், தெற்கில் Bagdadஐ மையமாகக் கொண்ட ஒரு சீயா முஸ்லீம் அரசு என மூன்று துண்டுகளாகப் பிளவுபட்ட ஈராக்கினை விட, ஒன்றுபட்ட ஈராக் தனது பாதுகாப்பிற்கு முக்கியமென ஈரான் கருதுகின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தமது இராணுவத் தலையீடு அமையுமெனக் கூறியுள்ள அமெரிக்கா முதற்கட்டமாக எண்ணெய் வளம் நிறைந்த குர்தீஸ்தானைப் பாதுகாப்பதிலேயே முனைப்புக் கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் உள்ளார்ந்த நோக்கத்தை இலகுவில் தெளிவுபடுத்துகின்றது. குர்தீஸ்தான் தன்னாட்சி நிர்வாகமும் இந்தச் சிக்கலைப் பயன்படுத்தி எண்ணெய் வளப் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டுகின்றது. ஏலவே எண்ணெய் வள வருமானப் பங்கீடு தொடர்பான முரண்பாடு ஈராக்கின் Bagdad நிர்வாகத்திற்கும் குர்தீஸ்தான் தன்னாட்சி நிர்வாகத்திற்குமிடையில் நிலவி வந்துள்ளது.
உலகின் 5வது பெரிய எண்ணெய் வளம் ஈராக்கில் உள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலான எண்ணெய் குர்திஸ்தான் (வட-ஈராக்) பிரதேசங்களில் உள்ளன. ஈராக்கின் எண்ணெய் உற்பத்தியின் மையம் என்று சொல்லப்படுவது வட ஈராக்கில் அமைந்துள்ள Kirkuk நகரமாகும். அதனைத் தமது உரித்தாக கோரிவந்திருக்கின்றது குர்தீஸ் நிர்வாகம். தற்போது ஈராக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி எண்ணெய் வளத்தின் கணிசமான பங்கினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பினை குர்தீஸ் நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதாவது அனைத்துலக சந்தையில் சுயமாகத் தமது எண்ணெயை விநியோகிப்பதில் குர்தீஸ் நிர்வாகம் சவால்களை எதிர்கொண்டிருந்ததோடு, Bagdad-நிர்வாகத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை இதுவரை இருந்தது. இனி அந்நிலையைத் தவிர்க்கும் வகையில் புதிய வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
குர்தீஸ் மக்களின் தனிநாட்டுக்கான போராட்டத்தை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. ஆனால் தற்பொழுது தமது சொந்த நலனுக்கு ஏற்ப அவர்களைக் கையாள்கின்றது. ISILஐ எதிர்ப்பதற்காக குர்தீஸ் படைகளுக்கு ஆயுதம் வழங்குகின்றது. தமது காரியம் முடிந்தவுடன் குர்தீஸ் நிர்வாகத்தை எவ்வாறு கையாளுமென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அரசியல் இராஜதந்திர செல்நெறி என்பது நீதி நியாயங்களுக்கு அப்பாற்பட்டது. அது அவரவர் நலனுக்கேற்ப அவரவரைக் கையாளுதல் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் தான் ஈராக் விவகாரம் உள்ளது. தனது நலனுக்காக அமெரிக்கா குர்தீஸ் நிர்வாகத்தைக் கையாள்வது போல, தமது நலன்களுக்காக குர்தீஸ் நிர்வாகம் அமெரிக்காவைக் கையாள முனைகின்றது.
அமெரிக்கா தன்னிச்சையாக ISIL மதவாத அமைப்பினை அழிக்க முயலவில்லை என்ற தோற்றப்பாடு காட்டப்படுகின்றது. மாறாக ஈராக்கிய மற்றும் குர்தீஸ் படைகளுக்கு ஆயுத, தொழில்நுட்ப உதவிகளை வழங்கி அவற்றின் படைவலுவை அதிகரிப்பதென்பதே அமெரிக்கா தற்போது கைக்கொண்டுள்ள மூலோபாயமாகும்.
அத்தோடு ஒரு பரந்துபட்ட சர்வதேச ஆதரவுடன் இந்தச்சிக்கலைக் கையாள்வதான ஒரு தோற்றப்பாட்டினைக் காட்டுவதில் அமெரிக்கா கணிசமாக வெற்றி பெற்றுள்ளது எனலாம். ஜோர்ஜ் புஸ் போன்று தன்னிச்சையான முன்முடிவுகளோடும் இராணுவத் தீர்வின் மீதான அதீத நம்பிக்கையோடு அல்லாமல், மட்டுப்படுத்தப்பட்ட இராணுவத் தலையீடு என்ற மூலோபாயத்தையும் ஈராக்கிய மற்றும் குர்தீஸ் படைகளுக்கு உதவியளிப்பதோடு, ஈராக் அரசாங்கத்தைப் பலப்படுத்துவது என்ற அடிப்படையில் தாம் செயற்படுவதானதொரு அரசியல் மற்றும் மனிதாபிமான முகத்தை வெளிக்காட்ட அமெரிக்கா முனைகின்றது.
பல்லாயிரக்கணக்கான குர்தீஸ் மொழி பேசும் ஜேசிடி பழங்குடி மக்கள் சிரிய எல்லைப் பிரதேசமான சின்ஜார்-மலைத்தொடர்களில் ISIL மதவாதிகளால் சுற்றிவளைக்கப்பட்டு, கொடூரமான படுகொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து சிரியாவில் நிலை கொண்டிருந்த பி.கே.கே (குர்திஸ் விடுதலை அமைப்பு) போராளிகள் இம்மக்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை மீட்டு பாதுகாப்பு வழங்கியதைத் தொடர்ந்து அமெரிக்க வான்படையும் அவர்களை மீட்க உதவியதாக செய்திகள் வெளிவந்திருந்தன. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வானூர்திகள் மூலம் சின்ஜார் மலைப்பிரதேச ஜேசிடி இன மக்களுக்கு உணவுப்பொதிகளையும் போட்டு வருகின்றன.
ஈராக்கின் ஜேசிடி பழங்குடி குர்தீஸ் மக்களை இனக்கொலையிலிருந்து பாதுகாப்பதும், குர்திஸ்தானின் தலைநகரை (Erbil) பாதுகாப்பதும் தமது முதன்மை இலக்கென அமெரிக்கா தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் இந்த மனிதாபிமான முகம் கேள்விக்குரியது. ஆரம்பத்தில் ஈராக்கில் ISIL படைகள் முன்னேறி வந்த போது, குறிப்பாக Bagdad இலிருந்து 400 கி.மி. வடமேற்கில் அமைந்துள்ள Mosul நகரம் ISIL வசம் வீழும் வரை இதில் தாம் தலையிடுவதில்லை என்ற முடிவிலேயே அமெரிக்கா இருந்தது. இந்தச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வில்லை. மாறாக அரசியல் தீர்வே என்றும் கூறியது. ஆனால் வட ஈராக்கின் நகரங்களைக் கைப்பற்றி வந்த ISIL, எண்ணெய் உற்பத்தி நகரங்களைக் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தினால் இராணுவ ரீதியில் தலையிட்டுள்ளது.
குர்திஸ்தானின் Erbil நகரைக் காப்பாற்றுவதன் மூலம் அங்குள்ள எண்ணெய் உற்பத்தியினைக் காப்பாற்றுவதே அமெரிக்காவின் முதன்மை நோக்கம். நலன்களின் அச்சிலேயே அனைத்தும் சுழல்கின்றது என்பதற்கான் நடைமுறை எடுத்துக்காட்டு இதுவாகும்.
முதற்கட்டமாக மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா, சவுதி, குவைத், அவுஸ்ரேலியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிடமிருந்து பெற்றுள்ளது அமெரிக்கா. இவற்றோடு மேலும் பல நாடுகளின் இராணுவ ரீதியிலான உதவிகளை ஈராக்கிய மற்றும் குர்தீஸ் படைகளுக்கு அனுப்புமாறும் ஊக்குவிக்கின்றது.
ஜோர்டானிலிருந்து ஆயுதங்களை ஈராக்கிற்குள் எடுத்துச் சென்று வழங்கும் பொறுப்பினை பிரித்தானியா எடுத்துள்ளது. ஆரம்பத்தில் குர்தீஸ் படைகளுக்கு ஆயுத தளவாடங்களை வழங்க மறுத்திருந்த ஜேர்மன் பின்னர் தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டுள்ளது. ஆயுதங்கள் அனுப்புவது தொடர்பான முடிவினைப் பிரித்தானியா இன்னமும் எடுக்கவில்லை. மீண்டுமொருமுறை ஈராக் போருக்குள் தாம் முழுமையாகத் இழுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் பிரித்தானிய எச்சரிக்கையாக உள்ளது போல் தோன்றுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈராக்கிற்கு ஆயுதங்களை அனுப்புவதற்கு அனுமதிக்கப்பட்டு ஒரு தீர்மானம் பிரான்ஸ் நாட்டின் முனைப்பின் பேரில் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு தேசத்தின் மீதான வல்லரசுகள் மற்றும் வெளிச்சக்திகளின் இராணுவத் தலையீடுகள் முரண்பாட்டுச் சூழலை மேலும் சிக்கலாக்குவதோடு, முடிவுறாத நிலைக்குள் தள்ளி நீடித்துச் செல்ல வைப்பதாகவே இருந்திருக்கின்றது. அண்மைய எடுத்துக்காட்டுகளாக ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் ஈராக்கினைச் சொல்லமுடியும். உள்நாட்டுப் போராக நீடிப்பதும், பின்னர் தொடர்ச்சியான வெளித்தலையீடுகளுக்குள் மாறி மாறிச் செல்வதுமான நிலைக்குள் தள்ளப்படும். ஈராக்கில் மீண்டும் அதுவே நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் இராணுவத் தலையீடு நீடிப்பதற்கான புறநிலை ஏற்பட்டுள்ளது.
வெளிச்சக்திகளின் இராணுவத் தலையீட்டின் மூலம் திடமான நல்லாட்சியினையே, ஜனநாயகத்தையோ உறுதிப்படுத்த முடியாது என்பதற்கு வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் உள்ளன. லிபியாவில் கடாபியின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த வெளிச்சக்திகளின் இராணுவத் தலையீடு, அங்கு ஜனநாயகத்தை நிறுவுவதில் தோல்வி கண்டுள்ளது. இவ்வாறான தலையீடுகள் ஐனநாயத்தின், நல்லாட்சியின, மனிதாபி;மானத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டாலும், உள்ளார்ந்த அரசியல் நோக்கங்கள் வேறாகவே இருந்திருக்கின்றன என்பதும் பலரும் அறிந்ததே.
ஈராக்கின் தற்போதைய நிலைமையில் ISILஇற்கு எதிரான போர் நடவடிக்கைகள் குறகிய கால அடிப்படையில் முடிவிற்கு வர வாய்ப்பில்லை தாம் ஆட்சியில் சன்னி முஸ்லீம்கள் அரசியில் செல்வாக்குச் செலுத்தி வந்தனர். ஆனால் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர், சதாம் வீழ்த்தப்பட்ட பின்னர், சீயா முஸ்லீம்களின் கையோங்கும் நிலை வந்தது. 2006இல் பதவிக்கு வந்த Maliki ஆட்சியில் சன்னி முஸ்லீம்கள் ஓரம்கட்டப்பட்டனர்.
ஈராக் நிலைமைகளைச் சீர் செய்வது, அதாவது ISIL படைகளுக்கெதிரான படை நடவடிக்கை பல மாதங்கள் எடுக்கும் என ஒபாமா அண்மைய ஊடகச் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதன் பொருள் போர் நீடிக்கும் என்பதேயாகும்.
ஓகஸ்ட் 2014