ஈராக்கிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்: அரசியல் வெறுமைக்குள் ஈராக்

பயங்கரவாதத்திற்கு எதிரான – அனைத்துலகப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான போர்கள் என்ற போர்வையில் தொடங்கப்பட்டாலும், அவை ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டவையாகவே இருந்தன. பொருளாதார நலன் சார்ந்த – பிராந்திய நலன்கள் சார்ந்தவையாகவே அதன் அணுகுமுறைகள் இருந்தன.

ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் ஓகஸ்ட் 31ஆம் நாளுடன் (2010) அதிகார முறையாக அமெரிக்காவினால் மீள அழைக்கப்பட்டுள்ளன. அதாவது ஈராக்கில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படைத்துறை ஆளணிகள் ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ளன.

அமெரிக்காவின் ஈராக் போர், உள்நாட்டிலும் (அமெரிக்க மக்கள் மத்தியிலும்) அனைத்துலக மட்டத்திலும் பாரிய எதிர்ப்புகளைச் சந்தித்த பின்னணியில், ஈராக்கிலிருந்து படைகளைத் திருப்பி அழைத்தல் என்ற வாக்குறுதியை, 2008 ஆம் ஆண்டு தேர்தலில் அரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிட்ட போதே இன்றைய அமெரிக்க அரசதலைவர் பராக் ஒபாமா வழங்கியிருந்தார்.
அந்த அடிப்படையில் ஒபாமாவின் தேர்தல் வெற்றியைத் தீர்மானித்த அக-புறக் காரணிகளில் ஈராக் விவகாரத்திற்கு முதன்மையான பங்கு உண்டு. அரசதலைவராகப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்குள் ஈராக்கிலிருந்து படைகளை மீள அழைத்து, தனது வாக்குறுதியை ஒபாமா நிறைவேற்றியுள்ளார் எனலாம்.

தொடர்ந்தும் ஈராக்கில் அமெரிக்கப் படையின் பிரசன்னம்
165 000 வரையான அமெரிக்கப்படைகள் இறுதிக் காலங்களில் ஈராக்கில் நிலைகொண்டிருந்தன. அங்கு 600 இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது. இவற்றில் கடந்த ஓகஸ்ட் 31ஆம் நாளுடன் 115 000 வரையான படையினர் மீள அழைக்கப்பட்டுள்ளனர். 50 000 வரையான படையினர் தொடர்ந்தும் ஈராக்கில் நிலைகொண்டிருக்கவுள்ளதான அறிவிப்பும் வெளிவந்துள்ளது. எனவே அங்கிருந்து அமெரிக்கப்படைகள் முற்றுமுழுதாக வெளியேறவில்லை. அமெரிக்காவின் படைத்துறைப் பிரசன்னம் ஈராக்கில் தொடர்ந்தும் இருக்கப் போகின்றது.

இந்த 50 000 படைத்துறை ஆளணிகளும் போர் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை. மாறாக ஈராக்கியப் படைத்துறையைக் கட்டியெழுப்புவதற்கான பயிற்சிகள் மற்றும் மதியுரை வழங்கும் நடவடிக்கைகளையே முன்னெடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

2003ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கியது. ஈராக் மீது போர் தொடுக்கப்பட்ட அதே ஆண்டு டிசம்பர் மாதம், ஈராக்கின் வட பிரதேச நகரமான Tikritஇல் பதுங்குகுழியில் சதாம் உசேன் கைதுசெய்யப்பட்டு, பின்னர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கிலிடப்பட்டார்.

அக்காலப்பகுதியிலிருந்து இற்றைவரை 4200 வரையான அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 30 000 வரையானவர்கள் விழுப்புண் அடைந்துமுள்ளனர். கொல்லப்பட்ட ஈராக் மக்களின் எண்ணிக்கை தொடர்பான நேர்த்தியான புள்ளிவிபரங்கள் அறியப்படாதபோதும், நூறாயித்திற்கும் (100 000) மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட மக்கள் தொகை நூறாயிரத்தை விடப் பலமடங்கு அதிகம் என்ற தகவல்களும் உண்டு.

செப்ரெம்பர் 11இன் பின்னான உலக ஒழுங்கு
செப்ரெம்பர் 11இன் (உலக வர்த்தக மையம் தகர்ப்பு) பின்னரான ஒற்றைத் தன்மை கொண்ட உலக ஒழுங்கின் விளைவுகளே ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கா தலைமையிலான போர்கள் ஆகும். இவை செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்காவினதும் அனைத்துலகத்தினதும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகச் சித்தரிக்கப்பட்டு, பாதுகாப்பு அரசியலுடன் தொடர்புபடுத்துப்பட்டு, ”பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற அறைகூவலுடன் தொடுக்கப்பட்ட போர்களாகும்.
ஈராக்கின் அரசதலைவராகவிருந்த சதாம் உசேன் ஒரு சர்வாதிகாரி என்ற அடிப்படையிலும், பயங்கரவாத அமைப்பான அல்-கைதா வலைப்பின்னலுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அந்த அமைப்பிற்கு தளம் அமைத்துக் கொடுக்கின்றது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தும்- அதற்கும் மேலாக சதாம் இரசாயன பேரழிவு ஆயதங்களை வைத்திருப்பதான குற்றச்சாட்டுகளுடனும் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தொடுக்கப்பட்டது.

அமெரிக்காவில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலை, அல்-கைதா பயங்கரவாத அமைப்பு நடாத்தியது. அந்த அடிப்படையில் ஆப்கானிஸ்தனைத் தளமாகக் கொண்டு அல்-கைதா இயங்குகின்றது என்ற பின்னணியில் ஆப்கானிஸ்தான் மீது 2002ஆம் ஆண்டு போர் தொடுக்கப்பட்டது. எனவே செப்ரெம்பர் 11 தாக்குதலின் நேரடி விளைவே ஆப்கானிஸ்தான் மீதான போராகும்.

பொருளாதார நலனும் தளம் மத்திய கிழக்கில் அமைத்தலும்
பயங்கரவாதத்திற்கு எதிரான – அனைத்துலகப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான போர்கள் என்ற போர்வையில் தொடங்கப்பட்டாலும், அவை ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டவையாகவே இருந்தன. பொருளாதார நலன் சார்ந்த – பிராந்திய நலன்கள் சார்ந்தவையாகவே அதன் அணுகுமுறைகள் இருந்தன.

மத்திய கிழக்கு எண்ணெய் வளம் குவிந்துள்ள பிராந்தியம். உலகப் பொருளாதாரத்தின் அடிநாதமாக எண்ணெய் வளமும், அதற்கான கடற்போக்குவரத்துப் பாதையும் அமைந்துள்ளன. மத்திய கிழக்கில் தளம் அமைத்தல், அப்பிராந்தியத்தில் தனது செல்வாக்கினை நிலை நாட்டுதல் என்ற அமெரிக்க பொருளாதார நலன், ஈராக் மீதான போர் தொடுப்பிற்குரிய காரணிகளில் ஒன்றென்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற வாதமாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான அறைகூவல்
ஆரம்பத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அறைகூவலுடன் படைகளை இறக்கிய அமெரிக்கா, அதன் சாயம் வெளுக்கத் தொடங்கியதை அடுத்து, ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புதல் – நல்லாட்சியை ஏறபடுத்துதல் – பிராந்திய அமைதியையும் திடத்தன்மையையும் நிலைநாட்டுதல் – மனித உரிமைகளைப் பேணுதல் போன்ற சொல்லாடல்களூடாகத் தனது போரை நியாயப்படுத்தியது.

செப்ரெம்பர் 11 தாக்குதலின் நேரடி விளைவான ஆப்கானிஸ்தான் போருக்கு ஒப்பீட்டளவில் அனைத்துலக ஆதரவு வலுவான நிலையில் இருந்தது. அனைத்துலக நாடுகள் பல ஆப்கானிஸ்தானுக்கு தமது நாட்டுப் படைகளையும் அனுப்பி அமெரிக்காவின் அணியில் தம்மை இணைத்துக் கொண்டன. ”எல்லை மீறிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற புஸ் அவர்களின் அறைகூவல் அனைத்துலக நாடுகள் மட்டத்தில் எடுபட்டது. தவிர செப்ரெம்பர் 11 தாக்குதலில் 3000இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வின் தாக்கமும், அனைத்துலக பேரூடகங்களில் அவை காட்சிப் படுத்தப்பட்ட விதங்களும் ஆப்கானிஸ்தான் போருக்கான உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டக் காரணமாயிற்று.

ஆனால் ஈராக் போருக்கு அப்படியான பரந்த ஆதரவுத் தளம் இருக்கவில்லை. நியாயமற்ற அடிப்படைகளுடன், தவறான அணுகுமுறைகளுடன் ஐநா பாதுகாப்பு மையம் உட்பட அனைத்துலகத்தினதும் ஒட்டுமொத்த எதிர்ப்புகளைப் புறமொதுக்கி ஜோர்ஜ் புஸ் நிர்வாகத்தினது தன்னிச்சையான முடிவுடன் ஈராக் போர் தொடங்கப்பட்டது.

சிதைக்கப்பட்டுள்ள ஈராக்
இன்று அமெரிக்கப் போரினால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டதொரு நாடாக ஈராக் ஆகியுள்ளது. படை நடவடிக்கைகளால் நாடு சிதைக்கப்பட்டது ஒருபுறமிருக்க, மறுபக்கம் நாட்டின் படைத்துறை – காவல்துறை – அரச நிர்வாக அலகுகள் கலைக்கப்பட்டன. உட்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டன. 2.2 மில்லியன் மக்கள் உள்நாட்டிலும், 1.8 மில்லியன் மக்கள் அயல்நாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர் என ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் (UNHCR) தரவுகள் கூறுகின்றன.

செயற்படு நிலையில் அங்கு ஒரு அரசாங்கம் இல்லை. கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அரசாங்கம் இன்னமும் அமைக்கப்படவில்லை. தேர்தலில் வென்ற கட்சிகளுக்கிடையில் பொது இணக்கப்பாடு எட்டப்படாது, அதிகாரம் தொடர்பான சிக்கல்களால் இழுபறி தொடர்கின்றது.

இஸ்லாமிய குழுக்களுக்களால் வன்முறை
ஈராக் மக்களின் பாதுகாப்பினையும் நாட்டின் சட்ட ஒழுங்கினை நிலைநிறுத்தக்கூடிய செயல்வலு ஈராக் படைகளிடமோ காவல்துறையிடமோ இல்லை. தவிர ஈராக்கின் இனக்குழுமங்கள் -இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கிடையில் ஏலவே நிலவும் வன்முறைகள், மோதல்கள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதாவது ”சீயா” மற்றும் ”சன்ணி” ஆகிய இஸ்லாமியப் பிரிவுகள் மற்றும் குர்தீஸ் இனக் குழுமங்களுக்கிடையிலான வன்முறைகள் அதிகரிக்கும்.

இராணுவ வழிமுறையில் வெல்ல முடியாத போர் என்ற கருத்து அனைத்துலக மட்டத்தில் வலுப்பெற்றிருக்கின்ற புறச்சூழலில் மற்றுமோர் கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. பரந்த அளவிலானதொரு உள்நாட்டுப் போருக்குள் ஈராக் தள்ளப்படும் அபாயம் இருப்பதான கருத்து அதுவாகும். கால நீட்சியில் மத – இன ரீதியான வேறுபாட்டைக் கொண்ட பிரதேசங்கள் தனித்தனியாக உடைந்து போகும் நிலைமைகள் தென்படுவதாக ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

குர்தீஸ் மக்கள்
இங்கு குர்தீஸ் இன மக்கள் என்று நோக்குமிடத்து அவர்கள், ஈராக், ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ”குர்திஸ்தான்” எனப்டும் இவர்களின் பாரம்பரிய பிரதேசம், இம்மூன்று நாடுகளின் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. தாம் வாழும் பிரதேசங்களை இணைத்த தனி நாட்டுக்கான விடுதலைப் போராட்டத்தினை குர்தீஸ் இன மக்கள் நீண்ட நெடுங்காமாக நடாத்தி வருகின்றனர். இம்மூன்று நாடுகளிலும்; 25 மில்லியன்களுக்கு மேற்பட்ட குர்தீஸ் இனத்தவர்கள் வாழ்கின்றனர். ஈராக்கின் வடபகுதியில் வாழும் குர்தீஸ் மக்கள் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியைக் கொண்ட தனி நிர்வாகத்தினைக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின்னர் ஈராக்கின் இஸ்லாமிய குழுக்களுக்கிடையிலான மோதுகைகள் வலுப்பெற்றுள்ளன. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அதிகார போட்டிகள் இவற்றிற்கிடையில் வலுப்பெற்றுள்ளன. இதில் ஈரான் நாட்டின் பின்தள ஆதரவுடன் சீயா முஸ்லீம் பிரிவுகள் இயங்குகின்றன. ஈராக்கில் இன்றுள்ள அரசாங்கம் அமெரிக்க அரசாங்கமாகவே நோக்கப்படுகின்றது. அதாவது அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே அது இயங்குவதான பார்வை உண்டு.

பெரும் அரசியல் வெறுமைக்குள் ஈராக்
இன்று ஆக்கிரமிப்பு தொடங்கப்பட்டு, ஏழரை ஆண்டுகளின் பின்னர், ஈராக்கை பெரும் அரசியல் வெறுமைக்குள் தள்ளிவிட்ட நிலையில் அமெரிக்கா வெளியேறுகின்றது. அரசியல் வெறுமை – உள்ளக முரண்பாடுகள் -அரசியல் அதிகாரப் போட்டிகள் – திடமின்மை ஆகிய இன்றைய நிலை தொடருமானால் லெபணான் இன்றுள்ள நிலைக்கோ அல்லது அதிலும் மோசமாக சோமாலியா இன்றுள்ள நிலைக்கோ ஈராக் தள்ளப்படலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்கள் மட்டத்தில் பேசப்படுகின்றது.
இன்றைய சமகாலத்தில் கூட மாதாந்தம் 200–300 வரையான மக்கள் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டு வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமைகள் இவ்வாறிருக்க, ஈராக் தனது சொந்தக் காலில் நிற்கக்கூடிய நிலையை அடைந்துவிட்டதாக அமெரிக்கா கூறுவது வேடிக்கையானதாகும்.

”ஈராக்கின் எதிர்காலத்தை ஈராக் மக்களின் கைகளில் ஒப்படைப்பதற்கு அமெரிக்கா பெரும் விலைகளைக் கொடுத்துள்ளதாக, அமெரிக்கப் படைகள் திருப்பியழைக்கப்பட்ட நிகழ்வையொட்டி உரைநிகழ்த்தும் போது அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு தேர்தலில் ஈராக் விவகாரம் ஒபாமாவின் தேர்தல் வெற்றியைத் தீர்மானித்த முதன்மைத் தேர்தல் பேசுபொருளாக விளங்கியது. இன்னும் 2 ஆண்டுகளில் அடுத்த அரசதலைவர் தேர்தல் வரவிருக்கின்றது. எனவே 2012இல் தனது வெற்றியைத் தடுக்கும் காரணியாக ஈராக் விவகாரம் அமைந்து விடக்கூடாது என்பதில் ஒபாமா நிர்வாகம் கரிசனைக் கொண்டிருக்கின்றமை வெள்ளிடைமலை.

ஈராக்கிய படைத்துறைக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கைகளுக்காக ஈராக்கில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள 50 000 படையினர் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் முற்றாக மீள அழைக்கப்படுவர் என்ற அறிவிப்பும் வெளிவந்திருக்கின்றது. அதேபோல ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து படைகளை திருப்பியழைக்கும் நடவடிக்கை தொடங்கப்படவிருப்பதாக ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளமை கவனிப்பிற்குரியது.

பொருளாதார நெருக்கடிக்குள் அமெரிக்கா
உலக பொருளாதார நெருக்கடியும் அதனால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாரிய பாதிப்பும் -அதன் விளைவான மிக மோசமான வேலைவாய்ப்புச் சிக்கல்களையும் அமெரிக்கா எதிர்கொண்டது. எனவே மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் அமெரிக்காவைக் கொண்டு சென்ற புறக்காரணிகளில் அமெரிக்கா தலைமை தாங்கும் இந்த இரண்டு போர்களும் முக்கியமானவை. அதாவது இப்போர்களுக்காக அமெரிக்கா செலவிட்ட நிதியும் படைத்துறைக்காக ஒதுக்கிய நிதியும் ஆகும். எனவே இப்போர்கள் முடிவுக்கு வருகின்றமையானது, அமெரிக்காவின் சரிந்த பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு துணை நிற்கும். இது விடயம் ஒபாமா நிர்வாகத்திற்கும் முக்கியமானதாகும்.

ஈராக்கில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதிலோ அன்றி, மத்திய கிழக்கில் தனது செல்வாக்கினை விரிவுபடுத்தி நிலைநாட்டுவதிலோ அமெரிக்கா வெற்றி கண்டுள்ளதாக கூற முடியாது. சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் தமது செல்வாக்கினை வலுப்படுத்தி வருகின்றன என்பதும் மற்றுமோர் யதார்த்தமாகும்.
இந்நிலையில் ஈராக்கினை பெரும் அரசியல் வெறுமைக்குள்ளும் சிதைவுக்குள்ளும் தள்ளிவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் வெளியேற்றம் நலன்சார் அரசியல் அடிப்படைகளையும் மூலோபாயங்களையும் பார்க்க, ஒரு குறியீட்டு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

தினக்குரல், பொங்குதமிழ் இணையம், செப்ரெம்பர் 2010

Leave A Reply