உத்தம வில்லன்- The Anti-hero

******நூல் அறிமுகம்******
கமலின் அரசியல் சார்பு நிலையைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் நான்கு திரைப்படங்களை மையப்படுத்தி யமுனா ராஜேந்திரன் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தகம் இது. 110 பக்கங்கள். சில மணி நேரங்களில் வாசித்து முடிக்கக்கூடிய புத்தகம்.
ஹேராம், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன். விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்கள் கமல்ஹாஸன் எழுதி இயக்கியவை அல்லது கதை, திரைக்கதை உரையாடலில் நேரடியாக அவர் சம்மந்தப்பட்ட திரைப்படங்கள் என்ற பட்டியலுக்குள் அடங்குபவை.
‘வன்முறை’, ‘பயங்கரவாதம்’, ‘அவற்றை எதிர்கொள்ளுதல்’ எனும் பேசுபொருளைக் கொண்ட கமலின் ‘அரசியல்’ திரைப்படங்கள் என்ற அளவில் இவற்றுக்கிடையிலான தொடர்பு அமைகின்றது. நான்கு வெவ்வேறு திரைப்படங்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் என்கிற போதும் ஒரு முழுமையான நூலுக்குரிய தொடுப்பினையும் ஒன்றச்செய்யும் கட்டமைப்பினையும் கொண்டிருக்கின்றது.
கமலின் அரசியல் சார்பு நிலையை, இந்தத் திரைப்படங்கள் மூலம் வெளிப்பட்ட இந்துத்துவ உளவியலை, இஸ்லாமிய வெறுப்பினை, அமெரிக்க-மேற்குலக ஆதரவினை, பயங்கரவாதத்தின் தோற்றுவாய்கள் பற்றிய அடிப்படைகளைப் புறந்தள்ளி பயங்கரவாதம் பற்றிய அமெரிக்காவின் கருதுகோளுக்கு முண்டுகொடுக்கும் நிலைப்பாடு என்பன ஆழமான விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.
மேற்சொன்ன கமலின் இந்தத் திரைப்படங்களின் உருவாக்கத்தில் காணக்கூடிய தொழில்நுட்ப நேர்த்தி, திரைப்பட அழகியல், பார்வையாளனுக்குக் கடத்தப்படும் காட்சியின்ப உணர்வுகள் அனுபவங்கள் சொல்லப்படும் அதேவேளை, முழுமையான திரைப்படங்களாக அவற்றின் அரசியல் அபத்தங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
கமல் பத்து வேடங்களில் வெளுத்துக்கட்டிய திரைப்படம் தசாவதாரம் என்ற பிரமிப்பு மேலோங்கிக் காணப்படினும் அரசியல் ரீதியில் அது பிரக்ஞையற்ற மிகமோசமான படம். ‘ஜோர்ஜ் புஸ்’ஐ உலகநாயகனாகச் சித்தரிக்கிறது.
ஒவ்வொரு திரைப்படம் பற்றிய கட்டுரைகளுக்குமான தலைப்பு அர்த்தச் செறிவானதாக உள்ளது.
‘ஆர்.எஸ்.எஸ் ஊழியனின் உளவியல்’ என்பது ஹேராம் பற்றிய விமர்சனக் கட்டுரைக்கான தலைப்பு. ‘உயிர்கொல்லி நாயகனின் தமிழ் அவதாரம்’. இது தசாவதாரத்திற்கானது. ‘பயங்கரவாதம் குறித்த பயங்கரவாதம்’ என்பது உன்னைப் போல் ஒருவன் விமர்சனத் தலைப்பு. விஸ்வரூபத்திற்கான தலைப்பு சுவாரஸ்யமானதென்பதோடு ஒரு வசனத்தில் அந்தப்படத்தை எடுப்பதற்கான கமலின் அபிலாசையை அங்கதமாகச் சொல்லிவிடுகிறது. ‘அமெரிக்கப் பைத்தியநிலை தரும் சந்தோசம்’ என்பது அந்தக்கட்டுரைக்கான தலைப்பு.
யமுனா ராஜேந்திரனுடைய திரைப்பட விமர்சனங்கள் என்பது வெறுமனே ஒரு குறித்த படத்தை, அதன் கலைத்துவம், கதைக்களம் மற்றும் கருத்தியலை மட்டும் மையப்படுத்தியவையாக இருப்பதில்லை. அவை பரந்துபட்ட நோக்கில் உலகப்பார்வையோடு அணுகப்படும். திரைப்படங்கள் கதைக்களம், சமூக, அரசியல், பொருளாதார, வாழ்வியல் பண்பாட்டு, வரலாற்று நோக்குநிலைகளிலிருந்து அணுகப்படும். அதே பேசுபொருள் குறித்து தமிழ், இந்திய மற்றும் உலக மொழிகள், அமெரிக்க (Hollywood) திரைப்படங்களுடன் ஒப்புநோக்கி அந்தக் கட்டுரைகளில் பேசப்படும்.
இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விஸ்வரூபம், மற்றும் உன்னைப்போல் ஒருவன் கட்டுரைகளில் ஆப்பானிஸ்தான் சூழல், தலிபான், பயங்கரவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பின்னணியாகக் கொண்டு வெளிவந்த இந்திய, ஈரானிய, ஆப்கான் மற்றும் Hollywood திரைப்படங்கள் இதில் ஒப்பு நோக்கப்படுகின்றன.
கமல் தற்பொழுது அரசியல் களத்தில் கால்வைத்து ஆழம்பார்க்க இறங்கியிருக்கும் புறநிலையில் அவருடைய இறுதிக்கால அரசியல் திரைப்படங்கள் பற்றிய ஆழமான விமர்சனப்பார்வையை வாசிப்பதென்பது காலப்பொருத்தமுடையதாக இருக்கின்றது.

✍ ரூபன் சிவராஜா
05.02.2019

Leave A Reply