ஐ.நாவில் ’அவதானிப்பு நாடு’ அங்கீகாரம் பெற்றுள்ள பலஸ்தீனம்

இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டுக்கு ‘இரு நாடுகள்’ (two-state solution) தீர்வு என்பது அனைத்துலக நாடுகளின் ஒட்டுமொத்தமாக அங்கீகரித்துள்ள நிகழ்வாகும். ஆகவே பலஸ்தீனத் தனிநாட்டுக்குரிய அங்கீகாரம் ஏலவே வழங்கப்பட்ட ஒன்றாகும். அதன் எல்லைகள் தொடர்பான இணக்கப்பாடு தான் எட்டப்படவில்லையே தவிர, தனிநாட்டை அமைப்பதற்கான அனைத்துலக ஆதரவிலோ அங்கீகாரத்திலோ கொள்கையளவில் தடைகள் இல்லை. ஆனால் பேச்சுவார்த்தை தேக்கமடைந்துள்ள கால நீட்சியில் பலஸ்தீனத்தின் நிலங்களை, குறிப்பாக மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பலஸ்தீன நிலங்களை இஸ்ரேல் விழுங்கி வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையில் ’அவதானிப்பு நாடு’ என்ற அங்கீகாரத்தினை 2012இன் ஆரம்பத்தில் பலஸ்தீனம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 193 நாடுகளில் 138 நாடுகள் பலஸ்தீனத்தின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் அவுஸ்ரேலியா உள்ளிட்ட 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், கனடா உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன.

ஐ.நாவில் முழுமையான உறுப்புரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான முயற்சிகளை பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தின் தலைவர் முகமட் அப்பாஸ் கடந்த ஆண்டு மேற்கொண்டிருந்தார். ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தப்போவதாக அச்சுறுத்தி அதனைத் தடுத்தது. ஆனால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐ.நாவின் கல்வி-அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தில் (UNESCO) பலஸ்தீனம் உறுப்புரிமை பெற்றிருந்தது.

அரசியல் அர்த்தத்தில் ஒரு ’குறியீட்டு வெற்றியாகவே’ பலஸ்தீன நிர்வாகத்தின் இன்றைய இந்நகர்வும், இதற்கான ஐ.நா உறுப்பு நாடுகளின் பெரும்பான்மை ஆதரவும் நோக்கப்படுகின்றது. முழுமையான விடுதலை பெற்ற பலஸ்தீனத் தனியரசை நோக்கிய பாதையின், அடுத்த கட்டத்திற்கான காத்திரமான படிநிலை நகர்வாக இது கருதப்படுகின்றது.

நடைமுறை அர்த்தத்தில், ’அவதானிப்பு நாடு’ எனும் அங்கீகாரமானது மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளையே கொண்டிருக்கின்றது. ஐ.நா அவையின் கூட்டத்தொடர்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்பதற்குரிய உரிமை இதன் மூலம் வழங்கப்படுகின்றது. அத்தோடு ஐ.நாவின் கிளை அமைப்புகளில் உறுப்புரிமை பெறுவதற்குரிய வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால் தனிநாடென்ற அனைத்துலக அங்கீகாரம் பெறப்படும் வரை ஐ.நாவில் முன்வைக்கப்படும், நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது வாக்களிக்கின்ற உரிமை பலஸ்தீனத்திற்கு வழங்கப்படமாட்டாது.

இஸ்ரேல்-பலஸ்தீனத்திற்கிடையில் நெடுங்காலமாகக் கிடப்பிலுள்ள சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சியானது, மீளத் தொடங்கப்பட்டு, தனிநாட்டுக்கான இறுதித்தீர்வு எட்டப்படும் பட்சத்தில் முழுமையான உரிமைகளுடனான ஐ.நா உறுப்புரிமை பலஸ்தீனத்திற்குச் சாத்தியமாகும். பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதுமாக பெரும் இழுபறி தொடர்கின்றது.

ஆரம்பகாலத்திலும், அமெரிக்கா மற்றும் நோர்வேயின் நேரடி அனுசரணையுடன் பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடங்கப்பட்ட 90களின் காலகட்டங்களிலும் யாசீர் அரபாத் தலைமையிலான பலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைமையின் கீழ் பலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட அக-புறச் சூழ்நிலைகள் இருந்தன. யாசிர் அரபாத்தின் மறைவிற்குப் பின்னர், ஹமாஸ் அமைப்பு பலம்பெறத் தொடங்கியது. 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பலஸ்தீன தேர்தலின் பின்னர் நடந்தேறிய நிகழ்வுகளின் விளைவாக காசா பிரதேசம் ஹமாஸ் (Hamas) அமைப்பின் மேலாண்மைக்குள் கொண்டுவரப்பட்டது.
தற்போதைய நிலையில் பலஸ்தீன மக்கள் பிரதேச ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாஃதா (PLOவின் அரசியல் அமைப்பு) மற்றும் ஹமாஸ் என இரண்டு அமைப்புகளின் கீழ் பிளவுபட்டுள்ளன. காசா பிரதேசம் ஹமாஸ் அமைப்பின் கீழும், மேற்குக் கரை பாஃதா தலைமையிலான பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன.

பேச்சுவார்த்தைகளை மீள உயிர்பெறவைப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இஸ்ரேல் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அதற்கு பாதகமான புறநிலைகளை ஏற்படுத்துவதிலேயே மாறிமாறி ஆட்சிக்கு வந்த இஸ்ரேல் தலைவர்கள் முனைப்புக் காட்டிவந்துள்ளனர். பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான தற்போதைய இஸ்ரேல் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலேயே முனைப்புக் காட்டுகின்றது.

தற்போதுகூட, அதாவது ஐ.நாவில் அவதானிப்பு நாடு என்ற தகுதிநிலையைப் பலஸ்தீனம் பெற்றதை அடுத்து, மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பிரதேசங்களில் பதிதாக யூதக்குடியேற்றங்களைப் விரிவுபடுத்தும் திட்டத்தினை பெஞ்சமின் நேதன்யாகு அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அப்பிரதேசங்களில் மேலும் 3000 வரையான குடியேற்ற அலகுகளை நிறுவப்போவதாக அறிவித்துள்ளது. இவ்வாறாக காலங்காலமாக மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலோம் பிரதேசங்களில், 500 000 வரையான யூதக்குடியேற்ற அலகுகள நிறுவப்பட்டுள்ள நிலை உள்ளது.

அனைத்துலக சமூகத்திடமிருந்தும் பேச்சுவார்த்தைளை முன்தள்ளுவதற்குரிய வலுவான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளில் நிகழந்துவரும்; தொடர் அரசியல் மாற்றங்களும், அங்கு நிலவும் பதட்ட சூழல்களும் அதீத கவனக்குவிப்பினைப் பெற்றுவரும் நிலையில், பலஸ்தீனப்பிரச்சினை மீதான கவனம் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2012 நவம்பர் மாதம் காசா மீது பாரிய வான்படைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடாத்தியிருந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் படைகள் மேற்கொண்ட இத்தாக்குதல்களில் 150இற்கும் மேலான பலஸ்தீன மக்கள் பலியானதோடு, பெரும் சொத்தழிவுகளும் ஏற்பட்டிருந்தது. 2008 – 2009 காலப்பகுதியில் காசா மீது பாரியளவிலான தரை-வான் வழித்தாக்குதல்களை இஸ்ரேல் படைகள் நடாத்தியிருந்தன. அதே போன்றதொரு நிலைக்குத் தற்போதைய தாக்குதல்களும் இட்டுச்செல்லுமென்ற அச்சம் நிலவியது. ஆனால் குறுகிய சில நாட்களுக்குள்ளேயே இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்குமிடையில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டது. போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதில் எகிப்தின் அரசதலைவர் முகமெட் மூர்சி முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஹமாஸ் அமைப்பினைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளதோடு, அதனைத் தனிமைப்படுத்தும் முனைப்பினைக் கொண்டுள்ளன. ஆனால் பலஸ்தீன மக்கள் மத்தியில் ஹமாஸ் அமைப்புத் தன்னைப் பலப்படுத்தி வருவதோடு, தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் மக்கள் கிளர்ச்சிகளும் அவற்றின் விளைவான அரசியல் மற்றும் ஆட்சி மாற்றங்களும் ஹமாஸ் அமைப்பிற்குச் சாதகமானவையாகும். அமெரிக்கா உட்பட்ட மேற்குலகின் முண்டுகொடுத்தல்களுடனேயே மத்திய கிழக்கின் பெரும்பாலான சர்வாதிகார ஆட்சிபீடங்கள் நிலைபெற்றிருந்தன. தற்போது ஏற்பட்டுவரும் மக்கள் கிளர்ச்சிகளால் இச்சர்வாதிகார ஆட்சிபீடங்கள் ஆட்டம் கண்டுவருகின்றன. குறிப்பாக எகிப்த்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் ஹமாஸ் அமைப்பிற்குச் சாதகமானதாகும். ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் அண்மையில் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்குரிய எகிப்த் அரச தலைவரின் முனைப்பினை இச்சாதகமான சூழலின் அங்கமாக நோக்க முடியும்.

ஆனால் ஹமாஸ் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத கடும்போக்கு அமைப்பாகவும், பயங்கரவாத அமைப்பாகவுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் நோக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலும் ஹமாஸ் உள்ளது. இப்பின்னணியில் ஹமாஸ் அமைப்பின் வளர்ச்சியும், அந்த அமைப்பிற்கான மக்கள் ஆதரவும் மேற்கிற்கு உவப்பான விவகாரமல்ல. ஹமாஸ் அமைப்பினைத் தனிமைப்படுத்தி ஓரம்கட்டுவதில் இச்சக்திகள் முனைப்புக் காட்டி வந்துள்ளன. பாஃதா தலைமையில் ஒரு தீர்வினை அடைவதே இச்சக்திகளின் எண்ணமாகும்.

இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டுக்கு ‘இரு நாடுகள்’ (two-state solution) தீர்வு என்பது அனைத்துலக நாடுகளின் ஒட்டுமொத்தமாக அங்கீகரித்துள்ள நிகழ்வாகும். ஆகவே பலஸ்தீனத் தனிநாட்டுக்குரிய அங்கீகாரம் ஏலவே வழங்கப்பட்ட ஒன்றாகும். அதன் எல்லைகள் தொடர்பான இணக்கப்பாடு தான் எட்டப்படவில்லையே தவிர, தனிநாட்டை அமைப்பதற்கான அனைத்துலக ஆதரவிலோ அங்கீகாரத்திலோ கொள்கையளவில் தடைகள் இல்லை. ஆனால் பேச்சுவார்த்தை தேக்கமடைந்துள்ள கால நீட்சியில் பலஸ்தீனத்தின் நிலங்களை, குறிப்பாக மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பலஸ்தீன நிலங்களை இஸ்ரேல் விழுங்கி வந்துள்ளது.

1974 ஆம் ஆண்டிலிருந்து பலஸ்தீன விடுதலை அமைப்பிற்கு ஐ.நாவில் ‘அவதானிப்பு நிலை’ இருந்து வந்துள்ளது. எனவே அக்காலத்திலிருந்து பலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் பேச்சுரிமை மற்றும் ஏனைய நாடுகளின் தீர்மானங்களையும் முன்மொழிவுகளையும் தார்மீக அடிப்படையில் ஆதரிப்பதற்குரிய உரிமை இருந்து வந்துள்ளது. ஆனால் ‘அவதானிப்பு நிலை’ யிலிருந்து ‘அவதானிப்பு நாடு’ எனும் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டுள்ளமையே அரசியல் குறியீட்டு அடிப்படையில் இன்று முக்கியத்துவம் பெறுகின்றது.

எதிர்கால தேசத்திற்குரிய உட்கட்டுமான அடித்தளங்களைச் சரியான முறையில் உருவாக்குவதில் பலஸ்தீனர்கள் இறுதிக்காலத்தில் முன்னேற்றமடைந்து வந்துள்ளனர். குறிப்பாக மேற்குக்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள பலஸ்தன தன்னாட்சி நிர்வாகத்தில், காவல்துறை நிர்வாகம் உட்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள், பொருளாதார மற்றும் அரசியல் நிறுவனங்கள் மற்றும் ஏனைய உட்கட்டுமானங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் கருதப்படுகின்றது. கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் காசா பிரதேசத்தில் ஹமாஸ் அமைப்பினால் சிவில் நிர்வாக அலகுகள் இயக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவதானிப்பு நாடு எனும் நிலையை அடைந்துள்ளதன் மூலம், பலஸ்தீனம் தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்குரிய ‘அரசியல் கனதி’ கிட்டியுள்ளது. இந்த அரசியல் கனதியைச் நுணுக்கமாகக் கையாள்வதனூடாக இஸ்ரேல் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை நோக்கி தொடர்ச்சியாகவும் வலுவாககவும் கோரிக்கைகளை முன்வைக்க முடியும். இஸ்ரேலிடம் பறிகொடுக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களை மீளப்பெறுவதற்கானதும் பலஸ்தீனத் தனியரசை நிறுவுவதற்கானதுமான நேரடிப் பேச்சுவார்த்தைகள் காத்திரமாக நடைபெறுவதற்குரிய அழுத்தங்களை அனைத்துலக சமூகத்திடமிருந்து கோருவதற்கான வாய்ப்பினை இந்தப் புதிய தகுதிநிலை பலஸ்தீனத்திற்கு வழங்கியுள்ளது எனலாம்.
பாஃதா தலைமையிலான பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்நகர்வினை ஹமாஸ் அமைப்பு ஆதரித்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்விரு அமைப்புகளும் இது விவகாரத்தில் புரிந்துணர்வுடன் செயற்பட்டமைக்கான எடுத்துக்காட்டாக இது விளங்குவதோடு, பெரும்பான்மை பலஸ்தீன மக்களின் அரசியல் விருப்பினையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ள நிகழ்வுமாகும்.

இன்றைய புறநிலையில், அவதானிப்பு நாடு எனும் அந்தஸ்தினைக் கோரி ஐ.நாவில் பலஸ்தீனம் விண்ணப்பித்ததை அடுத்து, பலஸ்தீனத்திற்கு வழங்கிவரும் 200 மில்லியன் டொலர் வரையான வருடாந்த நிதித்தொகையை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பலஸ்தீனப் பிரதேசத்திற்கான வரி அறவீடு இஸ்ரேல் அரசாங்கத்தினூடாக அறவிடப்பட்டு, பலஸ்தீன நிர்வாகத்திற்கு வழங்கப்படும் நடைமுறை கடந்தகாலப் பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாடாகும். பலஸ்தீன நிர்வாகத்தினை இயக்குவதற்குரிய இந்நிதித் தொகையை நிறுத்தப் போவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் ஊடாக அறவிடப்படும் இவ்வரித்தொகை ஏறத்தாழ 120 – 150 மில்லியன் டொலர்களாகும். இந்நிதியே காவல்துறை, வைத்தியசாலை மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட பலஸ்தீன நிர்வாகத்தினை இயக்குவதற்கான மூலமாகும். இவ்வாறாக பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களும், சவால்களும் பலஸ்தீனத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட போதும், தமது அரசியல் இலக்கினை அடைவதற்கான வலுமிக்க நகர்வாகவே ‘அவதானிப்பு நாடு’ என்ற அந்தஸ்தினைப் பலஸ்தீனத் தலைமை முன்னெடுத்துள்ளது என்பது புலனாகின்றது.

அவதானிப்பு நாடு என்ற இன்றைய அங்கீகாரம் பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமை, தாயக உரிமைககான இறுதித்தீர்வு அல்ல என்பது அனைத்துத் தரப்பும் அறிந்த உண்மை. ஆனால் பலஸ்தீனத்தின் இன்றைய அரசியல் தேக்கநிலையிலிருந்து வெளிவருவதற்கான முக்கிய திறவுகோலாக இது கணிக்கப்படுகின்றது. அரசியல் இராஜதந்திர நிலையிலும் முகமட் அப்பாஸ் சரியான நகர்வினை மேற்கொண்டுள்ளார். பலஸ்தீனப் பிரச்சினையை அனைத்துலக மட்டத்தில் தீர்க்கமான முறையில் முன்வைப்பதற்கும், பேச்சுவார்த்தைகளை மீள் உயிர்ப்பிக்கவும் புதிய வாய்ப்பு இந்த அந்தஸ்தின் மூலம் எட்டப்பட்டுள்ளது எனலாம்.

டிசம்பர் 2012

Leave A Reply