ஒபாமாவுக்கான சமாதான நோபல் விருதும் விமர்சனங்களும்
உரையின் பெரும் பகுதி ”நீதிக்கான போர்” என்ற சொல்லாடலின் கீழ், அமெரிக்காவின் போர்களை நியாயப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. மானிடத்தின் நீண்ட வரலாற்றுப் பாதையில் தேசிய விடுதலை, ஜனநாயகம், சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட போர்கள் பற்றிய வரலாற்று எடுத்தரைப்புகளினூடாக அமெரிக்காவின் சமகாலப் போர் முன்னெடுப்புகளை நியாயப்படுத்த அவர் முயன்றார்.
”பயங்கரவாதத்திற்கு எதிரான போர், நீதிக்கான போர், சமாதானத்திற்கான போர்” ஆகிய சொல்லாடல்களின் கீழ் மிக மோசமான இரத்தக்களரிகளை ஏற்படுத்திய – ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற, அந்நாடுகளின் ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராக நடாத்தப்படுகின்ற போர்களுக்கு அங்கீகாரம் கோருவது தார்மீக நியாயமற்தென்ற குற்றச்சாட்டுகளும் ஒபாமாவின் உரையை முன்வைத்த விமர்சனங்களாக பதிவாகியுள்ளன.
2009ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் விருதுக்கு அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா தெரிவாகியமை உலகளாவிய ஆச்சரியத்திற்கும் சர்ச்சைக்குமுரிய விவகாரமாக ஆகியிருந்தது. விருது வழங்கும் பெருவிழா டிசம்பர் 10ஆம் நாள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெற்றது. விருதினைப் பெறுவதற்காக ஒரு நாள் பயணமாக அமெரிக்க அரசுத் தலைவர் ஒஸ்லோ வருகை தந்திருந்தார். ஒபாமாவின் வருகையையொட்டி வரலாறு காணாத வகையில் ஒஸ்லோ நகரப்பகுதி பாரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு உள்ளாகியிருந்தது. ஏறத்தாழ 2500 வரையான காவல்துறையினர் அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென மட்டுமே 10 மில்லியன் நோர்வேயியன் குரோணர்கள் செலவிடப்பட்டதாக விபரங்கள் வெளியாகியிருந்தன.
ஒபாமாவிற்கான நோபல் விருது பல்வேறு வகையிலும் வாதப் பிரதிவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது. விருது அறிவிக்கப்பட்ட செப்ரெம்பர் (2009) மாதத்திலிருந்து எழுந்த விமர்சனங்கள் விருது வழங்கப்பட்ட நாள் வரை தொடர்ந்தன.
அமெரிக்க அரசுத்தலைவராக ஒபாமா ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுகூட நிறைவடையாத நிலையில், சமாதானத்திற்கான நோபல் விருதினை அவருக்கு வழங்குவதற்குரிய அழுத்தமான காரணங்கள் ஏதுமிருக்கல்லை என்ற கடுமையான விமர்சனங்கள் பல மட்டங்களிலும் முன்வைக்கப்பட்டன.
ஆட்சிப் பொறுப்பேற்று மிகக்குறுகிய காலமே கடந்துள்ளது என்ற அடிப்படையிலும், செயல் ரீதியாக காத்திரமான பெறுபேறுகளை அவர் இன்னமும் காட்டவில்லை என்ற புறநிலையிலும் ஒபாமாவிற்கான நோபல் விருது ஆச்சரியத்திற்கும் சர்ச்சைகளுக்குமுரிய ஒன்றாகியது. குறிப்பாக மோசமான இரண்டு போர்களுக்குத் (ஈராக், ஆப்கானிஸ்தான்) தலைமை தாங்கும் நாட்டின் அரசுத்தலைவருக்கு, சமாதானத்திற்கான விருதினை வழங்குவது நோபல் விருதின் நோக்கத்திற்கு நேர்முரணானது என்ற கருத்துக்களும் அழுத்தமாக வெளிப்படுத்தப்பட்டன. ஆப்கானிஸ்தானுக்கு மேலதிகமாக 35 000 படைகளை அனுப்புவதென்ற தீர்மானமும் அண்மையில் எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
அமெரிக்காவின் கடந்த கால அணுகுமுறை, அதாவது ஜோர்ஜ் புஸ் (George W. Bush) பதவியிலிருந்த எட்டாண்டு காலப்பகுதிகளில், உலகின் ஒற்றை வல்லரசென்ற ஆதிக்க சிந்தனையின் பாற்பட்ட தன்னிச்சையான முடிவுகளை புஸ் நிர்வாகம் அனைத்துலகத்தின் மீது திணித்தது. செப்ரெம்பர் 11 தாக்குதலின் பின் உலக ஒழுங்கில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது. ”பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற போர்வையில் ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்கா நேரடியாகத் தலைமை தாங்கிய போர்களும், அனைத்துலக ரீதியில் இன்னும் பல ஆக்கிரமிப்பு அழிவுகளும் நடந்தேறின. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அமெரிக்காவின் முழக்கத்தினை, வேறு சில நாடுகள் தமது ”அரச பயங்கரவாத” வன்போர் மூலோபாயங்களுக்குச் சாதகமாகக் கைக்கொண்டன.
புஸ் நிர்வாகத்துடன் ஒப்பு நோக்குகையில் கடந்த அமெரிக்க நிர்வாகத்தின் தன்னிச்சையான வல்லாதிக்கப் போக்கிற்கு மாற்றாக – அனைத்துலகத்துடனான இராஜதந்திர உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையை ஒபாமா கையாள்கின்றமை வரவேற்புக்குரியதாகக் கருதப்படுகின்ற புறநிலை தற்போது நிலவுகின்றது.
செப்ரெம்பர் 11 இற்குப் ”பின்-பின்னான” புதிய உலக ஒழுங்கினைத் தேற்றுவிக்கவல்ல ஆற்றல் மிக்கவராக ஒபாமா நோக்கப்படுகின்ற ஒரு கருதுகோளின் அடிப்படையிலும் – அணுகுமுறை மாற்றத்தின் பிரதிநிதியாக ஒபாமா பார்க்கப்படுவதாகவும் – எதிர்காலத்தில் அவருக்கான செயல்முனைப்பிற்குரிய உந்துசக்தியாக நோபல் விருது வழங்கப்படுவதாக ”நோர்வேஜிய நோபல் தெரிவுக் குழு” தனது தெரிவைக் காரணப்படுத்தியுள்ளது.
நோபல் விருதென்பது அடைந்துவிட்ட இலக்கினை மட்டும் அடையாளப்படுத்தி வழங்கப்படுவதல்ல. மாறாக உயர்ந்த தொலைநோக்கு (Vision) அடிப்படையிலான செயல்நோக்குகளுக்கான (Mission) உந்துசக்தியாகவும் வழங்கப்படுவதாகும். எனவே காத்திரமான மாற்றங்களுக்கான தொலைநோக்குச் சிந்தனையுடன் செயற்படும் ஒபாமா சமாதான விருதுக்கு தகுதியுடையவர் என்ற வாதங்களும் பதிவாகியுள்ளன.
அமெரிக்கா தலைமை தாங்கும் இரண்டு போர்களும் தோற்றுப்போன போர்களாகவே சித்தரிக்கப்படுகின்றன. தார்மீக நியாயங்கள் அற்ற, தவறான நியாயப்படுத்தல்களுடன் முன்னெடுக்கப்படுகின்ற போர்கள் என்ற கணிப்பு பரவலாக நிலவுகின்றது. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பிராந்திய ஆதிக்க நலன்சார் மூலோபாயங்களே இப்போர் முன்னெடுப்புகளுக்கான மூலகாரணிகள் என்பது அரசியல் ஆய்வு மட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.
”மாற்றம்” என்ற கொள்கைப் பிரகடனத்துடன் அமெரிக்காவிலும்; அனைத்துலக அரசியல் விரிதளத்திலும் புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் விதைத்தவர் ஒபாமா. மாற்றம் என்ற கொள்கைப் பிரகடனத்தின் மூலம் தேர்தலில் வெற்றிக்கனியை அவரால் பறிக்க முடிந்தது. ஆனால் பொருளாதார நலன் எனும் அச்சில் உலகின் சுழல்ச்சி நிகழ்கின்ற புறநிலையிலும் நடைமுறை யதார்த்தத்திலும் ஒபாமா உருவாக்கிய எதிர்பார்ப்புக்கள் எங்ஙணம் நேர்த்தியான செயல்வடிவம் பெறும் என்பதும் இயல்பாக எழுகின்ற கேள்வியாகும்.
அமெரிக்க அரசுத் தலைவராக ஒபாமா உள்நாட்டிலும் அனைத்துலக ரீதியிலும் சிக்கல்களைக் கையாள்வதில் ஏலவே சவால்களை எதிர்கொண்டு நிற்கின்றார். நோபல் விருது அவருக்கான சவால்களை மேலும் கூர்மையாக்கியுள்ளதாகவும் கருதப்படுகின்றது. அதாவது அவர் மீது கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது எனவும் கூறலாம்.
மோசமான அழிவுகளைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்ற இரண்டு போர்களுக்குத் தலைமை தாங்குகின்ற அரசுத் தலைவர் என்ற நிலையில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நோபல் விருதினைப் பெறும் போது ஒபாமா நிகழ்த்திய உரை அமைந்திருந்தது.
உரையின் பெரும் பகுதி ”நீதிக்கான போர்” என்ற சொல்லாடலின் கீழ், அமெரிக்காவின் போர்களை நியாயப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. மானிடத்தின் நீண்ட வரலாற்றுப் பாதையில் தேசிய விடுதலை, ஜனநாயகம், சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட போர்கள் பற்றிய வரலாற்று எடுத்தரைப்புகளினூடாக அமெரிக்காவின் சமகாலப் போர் முன்னெடுப்புகளை நியாயப்படுத்த அவர் முயன்றார்.
”பயங்கரவாதத்திற்கு எதிரான போர், நீதிக்கான போர், சமாதானத்திற்கான போர்” ஆகிய சொல்லாடல்களின் கீழ் மிக மோசமான இரத்தக்களரிகளை ஏற்படுத்திய – ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற, அந்நாடுகளின் ஒட்டுமொத்த மக்களுக்கு எதிராக நடாத்தப்படுகின்ற போர்களுக்கு அங்கீகாரம் கோருவது தார்மீக நியாயமற்தென்ற குற்றச்சாட்டுகளும் ஒபாமாவின் உரையை முன்வைத்த விமர்சனங்களாக பதிவாகியுள்ளன.
எது எப்படியிருப்பினும் அமெரிக்காவின் நலன்களைப் பேணுவதும் பெருக்குவதுமே அமெரிக்காவின் முதன்மை நோக்கமென்பதையே அவரின் உரை உணர்த்தி நின்றது. ஆனபோதும் அனைத்துலக அரசியலில் புதியதொரு மென்முறை அரசியல் அணுகுமுறையை ஒபாமா கடைப்பிடிப்பதாகவும் இராஜதந்திர அணுகுமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் கணிக்கப்படுகின்றது.
கிழக்கு ஐரோப்பாவில் (போலந் மற்றும் செக்கியா) அமெரிக்கா நிறுவவிருந்த ”ஏவுகணை பாதுகாப்பு மைய திட்டம்” கைவிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த
இந்த விவகாரத்தினை ரஸ்யா கடுமையாக எதிர்த்து வந்தது. ஈரானின் அணு ஆயுத ஆபத்தைத் தடுக்கும் நோக்கில் இந்த ஏவுகணை பாதுகாப்பு மையம் நிறுவப்படவிருந்ததாக அமெரிக்கா தெரிவித்து வந்தது. ஆனபோதும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா தனது இராணுவ மேலாண்மையை நிலைநாட்டி, அப்பிரதேசத்தில் ஆழக்காலுன்றும் அதன் நோக்கங்களில் ஒன்றாகவே இது விவகாரம் ரஸ்யாவினால் பார்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தினை தற்பொழுது ஒபாமா நிர்வாகம் கைவிட்டமையானது, ரஸ்யாவுடன் முறுகல் நிலையைத் தவிர்க்கவும், இராஜதந்திர உறவை மேம்படுத்தவும் உதவுமென கருதப்படுகின்றது.
மற்றுமெரு விடயமாக அணுவாயுத பரம்பலைத் தடுப்பதற்கும் அதனைப் படிப்படியாகக் குறைப்பதற்குமான திட்டத்திற்கு வல்லரசு நாடுகளுக்கிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அனைத்துலக விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அவையினுடைய வகிபாகமும் அதிகாரமும் முக்கியத்துவம் பெறவேண்டுமென்ற சிந்தனையை ஒபாமா வெளிப்படுத்தியுள்ளார். புஸ் ஆட்சிக்காலத்தில் ஐக்கியநாடுகள் அவை செயற்திறன் குன்றிய, அதிகார வெறுமை நிலைக்கு இட்டுச்செல்லப்பட்டிருந்தது.
செப்ரெம்பர் 11 இற்குப் பின்னர், அமெரிக்காவின் வெளியுறவு அரசியல் நிலைப்பாடும் அந்நிலைப்பாடு தழுவிய நடவடிக்கைகளும் இஸ்லாமிய நாடுகளுக்கும் மேற்குலகிற்கும் இடையிலான பாரிய இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது. 2009 ஜூன் மாதம் எகிப்த் நாட்டின் தலைநகர் கைரோவில் ஒபாமா உரையாற்றும் போது, இஸ்லாமிய நாடுகளுடனான நட்புறவின் அவசியத்தை வலியுறுத்திக் குறிப்பிட்டமையானது, இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டும் அமெரிக்காவின் அணுகுமுறை மாற்றத்தின் தொடக்கமாக நோக்கப்படுகின்றது.
நோபல் விருதுக்குத் தான் தெரிவாகியமை தனக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றும் தன்னைவிட இந்த விருதுக்குப் பொருத்தமானவர்கள் பலர் உள்ளனர் என்பதில் தனக்கு ஐயமேதுமில்லை என்று ஒஸ்லோவில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டிலும், விழாவில் ஆற்றிய உரையிலும் ஒபாமா குறிப்பிட்டார். அதே போல் ஏலலே இந்த விருதினால் மதிப்பளிக்கப்பட்ட ஜாம்பவன்களுடன் இணைந்து கொள்வதற்குரிய தகுதிநிலை தனக்கு இருப்பதாகத் தான் உணரவில்லை என்று அவர் குறிப்பிட்டமை அவருடைய தன்னடக்கத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுகின்றது. அதேவேளை அமெரிக்காவின் அரசதலைவர் என்ற வகையில் அந்நாட்டின் நலன்களை முன்னிறுத்தி, அதன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் தனது முதன்மைப் பணி என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
அனைத்துலக பொருளாதார, அரசியல், இராணுவ நிலைமைகள், இவை சார்ந்த நலன்கள் மற்றும் உள்நாட்டு சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளுமே ஒரு நாட்டின் வெளியுறவு அரசியல் செல்நெறியை-கொள்கை வகுப்பினைத் தீர்மானிக்கும் கூறுகள்!
”செப்ரெம்பர் 11” ஏற்படுத்திய அச்சுறுத்தலின் தன்மைக்கும் அதன் அச்சுறுத்தல் அளவுகோலுக்கும் மீறிய பூதாகரமாக்கப்பட்ட விவகாரமாகவே அதற்கான எதிர்வினை புஸ் நிர்வாகத்தால் நிகழ்;தப்பட்டது. செப்ரெம்பர் 11 இற்கான எதிர்வினை அதிதீவிரமான தன்னிச்சையான இராணுவ வழிமுறையாகவே இருந்திருக்கின்றது.
அவ்வாறாக புஸ் நிர்வாகத்தினால் உலகளாவிய நிலையில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளின் பட்டறிவினூடு, ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவு அரசியல் செல்நெறியில் மாற்றங்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்பார்க்கப்பட்டன. அந்த எதிர்பார்ப்புகள் தொடர்ச்சியாக நிலவுகின்றன என்பதோடு சமாதானத்திற்கான நோபல் விருது ஒரு பக்கத்தில் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தாலும், மறுபக்கத்தில் அந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
தினக்குரல், பொங்குதமிழ், டிசம்பர் 2009