தென் சூடான்: பிறக்கப்போகும் புதிய தேசம்!

சூடானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான அனைத்துலக சமூகத்தின் அக்கறை பற்றியும் சூடான் மீது செல்வாக்கு செலுத்த காய்நகர்த்தும் வல்லரசுகளின் உள்நோக்கம் பற்றியும் புரிந்துகொள்வது அவசியமாகும். தென் சூடான் எண்ணெய் வளமிக்க நாடு. வட சூடான் அரசு எண்ணெய் வள அபிவிருத்திக்கான ஏக உரிமையினை சீனாவிற்கு வழங்கியுள்ளது. எண்ணெய் அபிவிருத்திக்கான ஏக உரிமை, வல்லரசாக வளர்ந்துள்ள சீனாவை மேலும் அமெரிக்காவிற்குச் சவாலாக வளர்த்துவிடுமென்ற அமெரிக்காவின் அச்சமே சூடான் சமாதான முயற்சியில் அமெரிக்கத் தலையீட்டுக்கான அதிமுக்கிய காரணியாகும்.

சூடான் விடுதலை அமைப்பினைப் பயன்படுத்தி சூடான் அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதும், தனது செல்வாக்கினை நிலைநாட்டுவதுமே அமெரிக்காவின் உள்நோக்கமென்பது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதே.

2010 ஏப்ரல் 11ஆம் நாள் சூடானில் அரச தலைவர் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அரை நூற்றாண்டுக்கு மேலான உள்நாட்டு இனமுரண்பாட்டு சிக்கல்களுக்குள் மூழ்கியிருந்த சூடான் நாட்டில் 1986 ஆம் ஆண்டு இறுதியாக தேர்தல் நடைபெற்றது. எனவே இது 24 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவுள்ள தேர்தல் என்பதால் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது.

அதுமட்டுமல்லாது தென் சூடானுடன் இடைக்காலச் சமாதானத் தீர்வு எட்டப்பட்ட பின்புலத்திலும், தென் சூடான் பிரிந்து தனிநாடாக உருவாகும் வாய்ப்பு நிலவுகின்ற புறநிலையிலும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. 2005 ஆம் ஆண்டு எட்டப்பட்ட சமாதானத் தீர்வுத்திட்டத்திற்கு அமைய, தென் சூடான் பிரிந்து சென்று தனிநாட்டினை அமைப்பதா அல்லது ”ஒன்றுபட்ட சூடான்” என்ற இறுதித்தீர்வை எட்டுவதா என்பதைத் தீர்மானிக்கும் மக்கள் கருத்து வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடாத்தப்படவுள்ளது.

சமாதான உடன்படிக்கை
2005ஆம் ஆண்டு சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை அமைப்பிற்குமிடையில் சமாதான உடன்படிக்கையினை (Comprehensive Peace Agreement, CPA) எட்ட முடிந்தது. கென்ய தலைநகர் நைறூபியில் 2005ஆம் ஆண்டு ஜனவரியில் இருதரப்பிற்குமிடையில் சமாதான உடன்படிக்கை; கைச்சாத்தானது. உடன்படிக்கை எட்டப்படுவதற்கு முன்னர் ஐந்தாண்டு காலங்கள் கென்யாவிலும் நைஜீரியாவிலும் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு, கடினமான பல கட்டங்களைத் தாண்டியே சமாதான உடன்படிக்கையை எட்ட முடிந்தது. அதிகாரப்பரவலாக்கல், வளப்பங்கீடு, பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களுடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விபரங்களும் உடன்படிக்கையின் உள்ளடக்கங்களாகும்;.

இடைக்கால தன்னாட்சி நிர்வாகம்
சமாதானத் தீர்வுக்கு அமைய, சூடான் மக்கள் விடுதலை அமைப்பினை அரசாங்கத்துடன் இணைத்து ஒரு தேசிய கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டது. இது ஆறு ஆண்டுகால ஆயுளைக் கொண்ட ஒரு இடைக்கால ஒழுங்காகும். இந்த இடைக்கால தன்னாட்சி நிர்வாகம் ஐந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டது. ஆறு ஆண்டுகளின் பின்னர் தென்-சூடான் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடாத்தப்படும். அவ்வாக்கெடுப்பின் மூலம் தென்- சூடான் மக்கள் பிரிந்து சென்று தனியரசை அமைப்பதா..? அல்லது இணைந்து வாழ்வதா..? என்ற முடிவு எட்டப்படும் என்பதே உடன்படிக்கையின் முக்கிய இணக்கப்பாடாக இருக்கின்றது. அதற்கமையவே அடுத்த ஆண்டு பிரிந்து செல்வது தொடர்பான வாக்கெடுப்பு தென்சூடான் மக்கள் மத்தியில் நடாத்தப்படவுள்ளது.

சமாதான உடன்படிக்கைக்கமைவான இடைக்கால அரச ஒழுங்கு அமைக்கப்பட்டு, சூடானின் துணை அரசுத்தலைவராக சூடான் விடுதலை அமைப்பின் தலைவரான ஜோன் கராங்; 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற 3 வாரங்களில் அவர் பயணம் செய்த உலங்குவானூர்தி சூடான்- உகண்டா எல்லையில் விபத்துக்குள்ளாகி ஜோன் கராங் உயிரிழக்க நேரிட்டது. இந்த விபத்து சூடான் அரசின் சதி என்ற பேச்சு ஆரம்பத்தில் வலுவாக இருந்தது. ஜோன் கராங்கின் மறைவை அடுத்து சூடான் விடுதலை அமைப்பின் துணைத்தலைவரான சல்வா கீர் (Salva Kiir) சூடானின் துணை அரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.

கிட்டத்தட்ட இதே சமகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள், இடைக்கால தன்னாட்சி அதிகார அவை (Interim Self Governing Authority) தீர்வுத் திட்டத்தினை ரணில் அரசாங்கத்திடம் கையளித்தனர். அனைத்துலக சமூகத்தினால் வரவேற்கப்பட்ட தமிழர் தரப்பின் அத்தீர்வுத்திட்டம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட சிறிலங்காவின் முன்நாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்காவினால் நிராகரிக்கப்பட்டது.

விடுதலைப் போராட்டங்கள் ஆதரிக்கப்படுவதற்கும், எதிர்க்கப்படுவதற்கும், அழிக்கப்படுவதற்கும் வல்லரசுகளின் நலன்சார் மூலோபாயங்களே மூலமாக உள்ளன. பொருளாதார நலனே தென் சூடான் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் கறமிறங்கியமைக்கான முதன்மைக் காரணியாகும். எண்ணெய் வளம் மிக்க சூடானில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவதே வல்லரசுகளின் மூலோபாய அடிப்படையாகும்.

இடைக்கால அரசு – நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்
உடன்படிக்கையின் படி சூடான் தேசிய கொங்கிரஸ் கட்சி, சூடான் விடுதலை அமைப்பு மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டது. உடன்படிக்கைக்கமைவான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய செயற்குழுக்களும் அமைக்கப்பட்டன. ஆனால் முக்கிய இணக்கப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தீர்வுத்திட்டத்திற்கு அமைய ஆறு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய முக்கிய விவகாரங்கள் ஐந்தாண்டுகள் கடந்த நிலையில்கூட இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

இவற்றில் முக்கிய சிக்கல்கள் Abyei, Blue Nile kw;Wk; Nuba Mountains ஆகிய மூன்று பிரதேசங்கள் தொடர்பானவை. இம்மூன்று பிரதேசங்களும் தென் சூடான், வட சூடான் ஆள்புலத்திற்கு (Territory) இடையில் அமைந்துள்ளன. எனவே இவற்றை நிர்வாக ரீதியாக தென்சூடானுடன் இணைப்பதா அல்லது வட சூடானுடன் இணைப்பதா என்ற இழுபறி தொடர்கின்றது என்பது முதலாவது சிக்கலாகும். Abyei பிரதேசமும் பெரும் எண்ணெய் வளத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ளது. Abyei பிரதேசத்திற்கும் தனியான இடைக்கால நிர்வாக ஒழுங்கு ஏற்படுத்துவதாகவும் பின்னர் மக்கள் மத்தியில் ”கருத்து வாக்கெடுப்பு” நடாத்தப்பட்டு தென் சூடானுடன் இணைவதா அல்லது வட சூடானுடன் இணைவதா என்ற முடிவு எட்டப்படுவதெனவும் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கேற்ற செயல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை.

தென் சூடானிலேயே எண்ணெய் வளம் அதிகமுண்டு. வடக்குக்கும் தெற்குக்கும் இடையே எண்ணெய்ப்பங்கீடு தொடர்பான பிணக்கு தீர்வு காணப்படாத நிலையே தொடர்கின்றது.
சமாதான உடன்படிக்கையின் படி, எண்ணெய் வருமானம் ஐம்பதுக்கு ஐம்பது (50:50) என்ற விழுக்காடு அடிப்படையில் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் பங்கிடப்படுதல் வேண்டும். ஆனால் எண்ணெய் வருமானப் பங்கீடு தொடர்பிலும் சரியான நடைமுறை இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. எண்ணெய் வள வருமானம், அதனைக் கையாளுகின்ற கட்டமைப்பில் (எண்ணெய் அகழ்வு, உற்பத்தி, ஏற்றுமதி, வருமானக் கணக்குவழக்கு உட்பட்ட விவகாரங்களில்) ளுPடுஆ தரப்பு உள்ளடக்கப்படவில்லை. மாறாக முhயசவழரஅ அரசாங்கம் தீர்மானித்து வழங்குவதைப் பெறுகின்ற நிலையே இன்னமும் நடைமுறையிலுள்ளது.

பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு சூடான் அரசாங்கம் ஆதரவு வழங்கி வருகின்றது. உடன்படிக்கைக்கமைய ஆயுதங்கள் களையப்படவில்லை. இதனால் பல வழிகளிலும் உடன்படிக்கை பெருமளவில் மீறப்படுகின்றது. இணக்கப்பாடுகளை நிறைவேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்ட செயற்குழுக்கள் சரியான முறையில் இயங்கவில்லை.

ஜோன் கராங்கின் மரணம் – இன்று உறுதியான தலைமைத்துவமின்மை
இவற்றுக்கெல்லாம் மேலாக SPLM தலைவர் ஜோன் கராங்கின் அகால மரணம் சமாதான ஒப்பந்தத்தின் நகர்வை வெகுவாகப் பாதித்துள்ளது. அதாவது உறுதியான தலைமைத்தினை இழந்த பின்னர் சமாதான உடன்படிக்கையை காத்திரமாக முன்னகர்த்துவதில் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. கராங்கின் மரணத்தின் பின் சமாதானத்திற்கெதிரான சக்திகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

சூடான் விடுதலை அமைப்பு எதிர்நோக்கும் சவால்கள்
சூடான் விடுதலை அமைப்பு சிவில் நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிராத, நிர்வாக அனுபவமற்றிருக்கின்ற ஒரு சூழலில் சிவில் நிர்வாகத்தை இயக்குவதற்குரிய வளப் பற்றாக்குறை பெருமளவில் நிலவுகிறது. சிவில் சமூகத்திற்குரிய சேவைகளை வழங்குவதற்கும் நிர்வாகக் கட்டமைப்புகளை இயக்குவதற்கும் தேவையான ஆளணிவளம், தொழில்வளம், ஆளுமைத்திறன் போன்றவற்றில் பெரும் பற்றாக்குறை நிலவுகின்றது. சிவில் சமூகத்திற்குரிய உட்கட்டுமானங்கள் உருவாக்கப்படவில்லை. 1956இல் இருந்து உள்நாட்டு யுத்தத்திற்கு முகம்கொடுத்துள்ள நாடு என்பதால் நாட்டின் பெரும்பகுதிகளில் எவ்வித பொருளாதார மேம்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ”வெறுமையிலிருந்தே” சகலதும் புதிதாக (தேசத்தின் நிர்வாக உட்கட்டுமானம்) கட்டமைக்கப்பட வேண்டிய-உருவாக்கப்படவேண்டிய பெரும் சவால்கள் நிறைந்த சூழலையே தென்-சூடான் எதிர்நோக்குகின்றது. மீள் கட்டமைப்புக்கென அனைத்துலக சமூகத்தினால் உறுதியளிக்கப்பட்டதற்கமைய நிதி உதவிகள் சென்றடையாமையும் பொருளாதார ரீதியில் தடையாக அமைந்துள்ளது.

90 விழுக்காடு வரையான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். 60 விழுக்காடு வரையான மக்கள் எழுத்தறிவற்ற நிலையிலும், பல மில்லியன் கணக்கான சிறார்கள் கல்வி கற்கும் வசதியற்ற நிலையிலுமே இன்றைய தென் சூடான் உள்ளது. சுய உற்பத்தி, தொழில் வாய்ப்பற்ற நிலையில் பொருளாதாரம் படுபாதாளத்தில் உள்ளது. தென் சூடான் தனித்து இயங்கக்கூடிய நிலையை எட்டுவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.

பிரிந்து செல்வதில் மக்கள் ஆர்வம்
நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக தென் சூடான் மக்கள் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகின்றது. மாறாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கருத்து வாக்கெடுப்பில் மக்கள் அதிகம் நாட்டம் கொண்டிருக்கின்றனர். பிரிந்து சென்று தனிநாடு அமைப்பது தொடர்பான மக்களின் அரசியல் வேணவாவின் வெளிப்பாடாக இது நோக்கப்படுகின்றது. அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரிந்து செல்வது தொடர்பான தேர்தல் நடாத்துப்படவுள்ள நிலையில், ஏப்ரல் 11இல் நடைபெறவுள்ள தேர்தலை வெளித் திணிப்பாகவே (அனைத்துலக சமூகத்தின்) சூடான் விடுதலை அமைப்பு கருதுகின்றது. ஆனபோதும் ஜனநாயக விரோதப் போக்காளர்கள் என்ற பார்வை தம்மீது படிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் பிரக்ஞை கொண்டிருக்கின்றனர்.

அரச பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டம்
தென் சூடான் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பதும் அரைநூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டதாகும். 1956ஆம் ஆண்டு பிரித்தானியக் கொலனித்துவ ஆட்சியிலிருந்து சூடான் விடுபட்ட காலகட்டத்திலிருந்து, காட்டூம் (Khartoum) அதிகாரமையத்தின் அடக்குமுறைக்கு எதிராக தென் சூடான் போராடி வந்துள்ளது.

சூடான் மக்கள் விடுதலை அமைப்பு சூடான் அரச அடக்குமுறைகளுக்கும், இஸ்லாமிய அடிப்படைவாத சாரியா சட்டங்களுக்கும் எதிராக தென் சூடான் மக்களின் உரிமைக்காக போராட்டத்தை தொடங்கியது. ஆனால் ஒன்றுபட்ட சமத்துவமான சூடானை உருவாக்குவதே SPLM அமைப்பின் கொள்கையாக இருந்தது. அதாவது பிரிவினை அல்லது தனிநாடு என்பது SPLM இன் முதன்மைக் கொள்கையாக இருக்கவில்லை.

அமெரிக்காவுடன் பிரித்தானியாவும் சூடான் சமாதான முயற்சியில் பங்கு வகிக்கின்றது. இதில் நோர்வேக்கும் அனுசரணையாளர் என்ற முக்கிய பங்குண்டு. நோர்வேயின் முந்நாள் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் கில்ட பிறாபியூர்ட் ஜோன்சன் அவர்கள் நோர்வே தரப்பிலிருந்து முக்கிய பிரதிநிதியாகக் கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அந்தப்பணியினை எரிக் சூல்கைம் கையேற்றிருந்தார்.

அனைத்துலக சமூகத்தின் தலையீடு
அடிப்படையில் அமெரிக்கா சூடானை பயங்கரவாத அரசாகவே கணிக்கின்றது. 90களின் நடுப்பகுதியில் ஒசாமா பின்லேடனுக்கு சூடான் அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. தவிர வட உகண்டாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் LRA தீவிரவாத அமைப்புக்கு சூடான் அரசாங்கம் வழங்கிய ஆதரவு என்பன அமெரிக்காவின் சூடான் எதிர்ப்பு நிலைக்குரிய காரணியாகும்.

2008 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், சூடானின் இன்றைய அரசுத்தலைவர் Omar Hassan Al-Bashir மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினால் (International Criminal Court) இன அழிப்பு மற்றும் போர்க்குற்றம் (Genocide and War crimesr) சுமத்தப்பட்டு, அவர் மீதான கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சூடானின் டார்பர் பிரதேச மக்கள் மீது சூடான் அரசினால் நடாத்தப்பட்ட இன அழிப்பு போர் குற்றங்களுக்காகவே இக்கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

சூடானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான அனைத்துலக சமூகத்தின் அக்கறை பற்றியும் சூடான் மீது செல்வாக்கு செலுத்த காய்நகர்த்தும் வல்லரசுகளின் உள்நோக்கம் பற்றியும் புரிந்துகொள்வது அவசியமாகும். தென் சூடான் எண்ணெய் வளமிக்க நாடு. வட சூடான் அரசு எண்ணெய் வள அபிவிருத்திக்கான ஏக உரிமையினை சீனாவிற்கு வழங்கியுள்ளது. எண்ணெய் அபிவிருத்திக்கான ஏக உரிமை, வல்லரசாக வளர்ந்துள்ள சீனாவை மேலும் அமெரிக்காவிற்குச் சவாலாக வளர்த்துவிடுமென்ற அமெரிக்காவின் அச்சமே சூடான் சமாதான முயற்சியில் அமெரிக்கத் தலையீட்டுக்கான அதிமுக்கிய காரணியாகும். சூடான் விடுதலை அமைப்பினைப் பயன்படுத்தி சூடான் அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதும், தனது செல்வாக்கினை நிலைநாட்டுவதுமே அமெரிக்காவின் உள்நோக்கமென்பது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதே.

வல்லரசுகளின் உள்நோக்கம் பொருளாதார நலனாக இருந்தாலும் தென் சூடான் மக்களின் சுயநிர்ணய உரிமை (self-determination) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கின்ற – தமது இறைமையையும் சுதந்திரத்தையும் நிறுவிக்கொள்கின்ற அவர்களது உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதே அதீத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வாகியுள்ளது.

பொங்குதமிழ், ஏப்ரல் 2010

Leave A Reply