கற்றலோனியா: தனிநாட்டுக் கோரிக்கையும் பொதுசன வாக்கொடுப்பும்

ஸ்பெயின் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சமகால முரண்பாட்டுச் சிக்கல் கற்றலோனியாவின் தனிநாட்டுக்கோரிக்கையாகும். அதேவேளை கற்றலோனியாவைப் பொறுத்தமட்டில் அதன் மிகப்பெரிய அரசியல் உரிமை சார்ந்த அபிலாசை இது.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிநாட்டினை அமைத்துக்கொள்ளும் முனைப்புகளுக்கு அண்மைய காலங்களும் சான்றாக அமைந்துள்ளன.
கிழக்குத் தீமோர், தென் சூடான், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான கொசவோ, மென்ரநீக்ரோ என்பன கடந்த 10 – 15 ஆண்டுகளுக்குகிடைப்பட்ட, வெற்றிபெற்ற எடுத்துக்காட்டுகள். சுயநிர்ணய அடிப்படையில் பிரிந்து செல்லும் முனைப்புடன் பொதுவாக்கெடுப்புகளின் வரிசையில் 2014இல் ஸ்கொட்லாந், 2017 இறுதி மாதங்களில்; குர்திஸ்தான் (வட ஈராக்), கற்றலோனியா (வட கிழக்கு ஸ்பெயின்) ஆகியவற்றினைக் குறிப்பிடலாம்.

ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கில் பிராந்திய சுயாட்சி அரசாங்க ஆட்சியினைக் கொண்டிருக்கும் கற்றலோனிய மக்களிடையேயும் நீண்ட காலமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து செல்கின்ற முனைப்பு நிலவி வந்துள்ளது. 2017 ஒக்ரோபர் 1ம் திகதி அதற்கான பொதுவாக்கெடுப்பும் நடாத்தப்பட்டது. வாக்களிப்பில் பங்கெடுத்தோரில் மிகப்பெரும்பான்மையினர் ஸ்பெயினிலிருந்து பிரிந்து கற்றலோனியா தனிநாடாகச் செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். வாக்களிப்பில் பங்கேற்றோர் 47 வீதத்தினர் எனப்படுகிறது. 2,26 மில்லியன் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில். அதில் 90 வீதம் பிரிந்துசெல்வதற்கு ஆதரவான வாக்குகளெனத் தகவல்கள் கூறின.

ஆயினும் ஸ்பெயின் உச்சநீதிமன்றமும் அரசாங்கமும் இந்த பொதுவாக்கெடுப்பினை நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கை என நிராகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வாக்கெடுப்பு நடாத்தப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் காவல்துறையை இறக்கிவிட்டு நெருக்குவாரங்களையும் கொடுத்திருந்தது. வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்காளர் அட்டைகள், பிரசுரங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுவாக்கெடுப்பிற்கு ஆதரவான அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், மக்கள் பலநூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல வட ஈராக்கில் நீண்டகாலமாக சுயாட்சி நிர்வாகத்தினை கொண்டிக்கும் குர்தீஸ் மக்களும் 2017 செப்ரெம்பர் இறுதியில் தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பினை நடாத்தியுள்ளனர் 92.7 வீதத்தினர் குர்திஸ்தான் தனிநாட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஈராக், துருக்கி மற்றும் ஈரான் ஆகியன இதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை, கற்றலோனியா பிராந்தியத்தில் தனிநாட்டுக் கோரிக்கை வலுவான நிலையிலுள்ளது. அத்தோடு ஸ்பெயின் நாட்டின் வடக்கினையும் பிரான்ஸ் நாட்டின் மேற்கு எல்லைப் பிரதேசத்தின் நிலப்பரப்பையும் உள்ளடக்கிய (ஸ்பெயின் – பிரான்ஸ் இரண்டு நாடுகளின் எல்லைப்பிரதேசங்களை அமைவிடமாகக் கொண்டுள்ள Basque மொழி பேசும் தேசிய இன மக்கள்) பிராந்தியமான Basque Countryயைத் தனிநாடாகக் கோரும் அமைப்பு, பிரான்சின் கொர்சீகா (Corsica), மற்றும் வடக்கு இத்தாலிய பிராந்தியம் ஆகியவற்றை தனிநாட்டு முனைப்புக் கொண்டவைகளின் வரிசையில் குறிப்பிடலாம்.

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கினை அமைவிடமாகக் கொண்டுள்ள கற்றலோனியாவின் மக்கட்தொகை ஏழரை மில்லியன். சனத்தொகை கூடிய பிராந்தியங்களில் இரண்டாவது பெரியது. Barcelona அதன் தலைநகரம் என்பதோடு அது உலகப்புகழ் பெற்ற சுற்றுலா நகரம்.

முழு நாட்டிலும் செல்வச்செழிப்பு மிக்க பிராந்தியமாக கற்றலோனியா விளங்குகின்றது. நாட்டின் தேசிய வருமானத்தில் 20 வீதம் இங்கிருந்துதான் கிடைக்கின்றது. முக்கிய இயந்திர மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகள் இங்குள்ளன. இந்தப் பொருளாதார நலனே, அதனைத் தனிநாடாகப் பிரிந்துசெல்வதை இரும்புக்கரம்கொண்டு தடுக்கும் ஸ்பெயினின் நிலைப்பாட்டுக்கான மூலகாரணம்.

கற்றலோனிய மக்கள் மத்தியில் இத்தகைய பொதுசன வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படுவது முதற்தடவையல்ல. 2014இல் ஸ்கொட்லாந் பொதுவாக்கெடுப்பினால் உந்தப்பட்டு அதே ஆண்டு நவம்பர் மாதமும் இதேபோன்றதொரு பொதுவாக்கெடுப்பு கற்றலோனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வாக்களிப்பில் பங்கேற்றவர்களில் 80 வீதமானவர்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

அந்த ஆணையை மீளுறுதிப்படுத்தும் அடிப்படையில் 2015இல் கற்றலோனிய பிராந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்திலும் தனிநாட்டுக்கு பெரும்பான்மை ஆதரவு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் குறியீட்டு அடிப்படையில் தனிநாட்டுக்கோரிக்கை ஒரு கொதிநிலையில் உயிர்ப்போடு பேணப்பட்டுவருகின்றமையை அவதானிக்கமுடியும்.

கல்வி, கலாச்சார விவகாரங்கள், வீடமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியனவற்றின் நிர்வாக அதிகாரம் பிராந்திய அரசாங்கத்திடம் உளளது. தவிர வீதிப்போக்குவரத்து உட்பட்ட சட்ட ஒழுங்கு சார்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட பிராந்திய காவல்துறையும் அதற்குக் கீழ் உள்ளது.

தனியான மொழியைக் கொண்ட தேசிய இனம், தாயகப் பிரதேசம், சுயநிர்ணய உரிமை ஆகிய அடிப்படைகளில் தனிநாட்டுக்கான அபிலாசை கற்றலோனிய மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. இவற்றுக்கப்பால் தமது பிராந்தியத்தில் ஈட்டப்படும் பெரும் வருமானத்தை ஸ்பெயின் மத்திய அரசு சுரண்டுகின்றது என்ற புறநிலையில், தமது பொருளாதாரத்தைத் தாமே தீர்மானிக்கும் உரிமை சார்ந்த கோரிக்கையும் கற்றலோனியத்தரப்பு மத்தியில் கூர்மையடைந்துள்ளது.

புதியதொரு தனிநாடாக கற்றலோனியா பிரகடனப்படுத்தப்படுமானால், தனியான அரசியலமைப்பு, பாதுகாப்புப்படை, வெளியுறவுத்துறை, மத்திய வங்கி, நாணயம் என்பன உருவாக்கப்பட வேண்டும்.

தவிர, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அங்கத்துவம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்விரண்டு விவகாரங்களிலும் கற்றலோனியாவிற்கு எதிராக ஸ்பெயின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகச் சட்டநியமங்களுக்கு உட்படாத வகையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு என ஐரோப்பிய ஒன்றியமும் கற்றலோனிய விவகாரத்தை நிராகரித்து ஸ்பெயினுக்கு முழு ஆதரவை வழங்கிவருகின்றது. வெனிஸ் ஆணைக்குழு உடன்படிக்கைக்கு (The European Commission for Democracy through Law) எதிரான வகையில் முன்னெக்கப்பட்ட பொதுசன வாக்கெடுப்பென்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வாதம். தவிர ஐரோப்பியநாடுகள் இதனை ஒரு உள்நாட்டு விவகாரமென்ற அணுகுமுறைக்கூடாகக் கையாளுகின்றன.

இந்தப் பொதுசன வாக்கெடுப்பு, அரசியல் குழப்பம் என்பதற்கு அப்பால் சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பிரச்சினை என்ற அளவிற்கு ஸ்பெயின் மத்திய அரசினால் கொண்டுசெல்லப்பட்டது. அரசாங்கத்தைக் கலைத்து புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. கற்றலோனிய அரசாங்கத் தலைவர் Carles Puigdemont உட்பட்ட அமைச்சர்கள் பதவிகளைப் பறித்ததோடு, துரோகம், ஊழல் மற்றும் நாட்டின் இறைமைக்கெதிரான கிளர்ச்சியை மேற்கொண்டனர் என Carles Puigdemont உட்பட்ட பிராந்திய அரசாங்க பிரதிநிதிகள் மீது குற்றம் சாட்டியது.
மத்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் திடமின்மையினால் பல தொழில்நிறுவனங்கள் மற்றும் பிராந்தியத்தின் முதன்மை வங்கிகளான Banco Sabadell, Caixabank ஆகியன தமது தலைமையகங்களை கற்றலோனியாவிற்கு வெளியில் வேறு பாதுகாப்பான பிரதேசத்திற்கு மாற்றும் முடிவுக்குப் போயின.

தனிநாட்டுக்கோரிக்கையை கைவிடுவதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென ஸ்பெயின் அரசாங்கம் நெருக்குதல் கொடுத்தது. ஆயினும் Puigdemont வளைந்து கொடுக்கவில்லை. மாறாக ஸ்பெயின் அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தை தொடர்பான கோரிக்கையை அவர் முன்வைத்தார். சுதந்திரத்திற்கான ஒருதலைப்பட்சமான ஆணையை வாக்கெடுப்பின் பெறுபேறுகள் வெளிப்படுத்தியுள்ளதென Puigdemont கூறியபோதும், ஸ்பெயின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் மூலம் அதன் அடுத்தகட்டங்கள் தொடர்பான நகர்வுகளுக்குச் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

கற்றலோனியாவின் பிரிந்துசெல்லும் முனைப்பென்பது இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. அதற்கான தோற்றுவாக்குரிய வரலாற்றுப் பின்னணி உண்டு.
1939 முதல் 1975 வரை ஸ்பெயினில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி நிலவியது. அந்தக் காலகட்டத்திலேயே கற்றலோனிய தேசிய இன உணர்வுக்கு எதிரான ஒடுக்குமுறை நிலவியது. கற்றலோனிய மொழிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பிரான்க்கோ இறந்த போது கற்றலோனிய மக்கள் தெருக்களில் இறங்கி ஆடினர் எனச்சொல்லப்படுகிறது.

பிராங்கோவின் வீழ்ச்சிக்குப்பின்னர் 1978இல் பிராந்திய சுயாட்சி முறைமை கொண்டுவரப்பட்டது. அதாவது பிராந்தியங்கள் தனியான பாராளுமன்றத்தினைக் கொண்ட ஆட்சி முறைமை அதுவாகும். கற்றலோனிய தேசிய உணர்வு நிலைப்பாட்டினைக் கொண்ட கட்சிகள் தொடர்ச்சியாக பிராந்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்துவந்தன.

2006இல் பிராந்திய சுயாட்சி முறைமைக்கு கூடுதல் உரிமையை வழங்கும் சட்ட அமுலாக்கம் கொண்டுவரப்பட்டது. ஆனபோதும் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான சட்டஅமுலாக்கம் அதுவெனக்கூறி 2010இல் அரசியலமைப்பு நீதிமன்றத் தலையீட்டுடன் அச்சட்டம் நீக்கப்பட்டது. தனிநாட்டுக் கோரிக்கை நீண்டகாலமாக நிலவிவந்தபோதும் அக்கோரிக்கை மக்கள் மயப்பட்ட இயக்கமாக உருவெடுப்பதற்கும் பொதுசன வாக்கெடுப்பு நோக்கிய தொடர் செயற்பாடுகளுக்கு கூடுதல் சுயாட்சி தொடர்பான உரிமைச்சட்ட நீக்கமே உந்துதலெனலாம்.

தனிநாட்டுக்கோரிக்கையை அரசியல் அபிலாசையாக தொடர்ந்து முன்வைத்து மக்கள் மயப்படுத்தி வருவது இடதுசாரி அரசியல் கட்சிகள் என்றபோதும் தனிநாட்டுக்கோரிக்கைக்கு இடதுசாரி வலதுசாரி வேறுபாடுகளைத் தாண்டிய பெரும்பான்மை ஆதரவுள்ளது. கற்றலோனிய மக்களின் தேசிய எழுச்சியின் வெளிப்பாடாகவும் தனிநாட்டுக்கோரிக்கை கணிக்கப்படுகின்றது.

ஸ்பெயின் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சமகால முரண்பாட்டுச் சிக்கல் கற்றலோனியாவின் தனிநாட்டுக்கோரிக்கையாகும். அதேவேளை கற்றலோனியாவைப் பொறுத்தமட்டில் அதன் மிகப்பெரிய அரசியல் உரிமை சார்ந்த அபிலாசை இது.

இரண்டு தரப்பிற்கும் பொருளாதார நலன் இதற்கான அடிப்படையாக உள்ளது. நாட்டின் பெரும் பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கும் ஒரு பிராந்தியத்தைத் தனது ஆள்புல இறைமைக்குள் வைத்திருக்க விரும்புகிறது ஸ்பெயின். தனது பொருளாதாரத்தைத் தானே தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றெடுக்க முனைகிறது கற்றலோனியா.

Barcelona ஒரு துறைமுக நகரம். மத்திய தரைக்கடலில் முக்கிய துறைமுகங்களில் ஒன்று. உகந்த கடல்வழி, கப்பல் போக்குவரத்து பொருளாதாரத்தின் அடிநாதம் என்ற வகையில் ஒரு துறைமுக நகரத்தையும் அது கொண்டிருக்கின்ற வணிக நலன்களையும் ஸ்பெயின் விட்டுக்கொடுக்குமென எதிர்பார்க்க முடியாது.

துறைமுக நகரம் என்பதற்கு அப்பால் இயந்திரப் பெருந்தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ளது. கார் உற்பத்தி, உலோக இரசாயனத் தொழிற்சாலைகள் மற்றும் கப்பல்கட்டுமானம், ஆடைத்தொழில், உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய உற்பத்திகளுக்குரிய தளமாக கற்றலோனியா விளங்குகின்றது. தவிர விவசாய உற்பத்திகளும் குறிப்பிடத்தக்க வருமான மற்றும் தொழில்வாய்ப்புகளுக்குரியதாக காணப்படுகின்றது. ஒலிவன் எண்ணெய் மற்றும் வைன் தயாரிப்பிற்குரிய திராட்சை பயிர்ச்செய்கை பெருமளவில் இடம்பெறுகின்றது.

நாட்டின் வருமானத்தின் 20 வீதத்தை இழப்பதற்கு, பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டுள்ள ஸ்பெயின் விரும்பப்போவதில்லை. ஸ்கொட்லாண்டிலிருந்து பிரித்தானியா பெற்றுக்கொள்ளும் வருமானத்தைவிட இரட்டிப்பான வருமானத்தை கற்றலோனியாவிடமிருந்து ஸ்பெயின் மத்திய அரசாங்கம் பெற்றுக்கொள்கின்றது என்றொரு தரவு சொல்கிறது. எனவே இங்கு பொருளாதார நலனம் அதுசார்ந்த அதிகாரமுமே ஸ்பெயின் நிலைப்பாட்டினைத் தீர்மானிக்கும் கருவியாக இருக்கின்றது.

பிரிந்து செல்வதற்கான விருப்பும் முனைப்பும் அணையாது பேணப்படுகின்றமை ஸ்பெயின் அரசுக்கு உவப்பான செய்தியல்ல. எனவே அதனை நிரந்தரமாக முடக்கும் நோக்கமும் தேவையும் அதற்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில் பிராந்திய அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

பிராந்திய அரசாங்கம் தமது பொருளாதார அரசியலைத் தாமே தீர்மானிக்கும் அதிகாரங்களைப் பேச்சுவார்த்தைகளில் கோருமெனப்படுகிறது. Basque Country வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்த வகையில், வரி அறவீட்டு அதிகாரத்தை மேலதிகமாக வழங்குவதற்கு ஸ்பெயின் தயாராக உள்ளதென்பதே அந்தத் தகவல்.

மறுவளமாகச் சொல்லவாதானால், கற்றலோனிய பிராந்திய அரசாங்கத்திற்கு பொருளாதார அரசியலைத் தீர்மானிக்கும் மேலதிக அதிகாரங்கள் என்ற அளவில் பேச்சுவார்த்தைகள் அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. கற்றலோனியர்களின் தனிநாட்டுக்கோரிக்கையின் தீவிர அல்லது உறுதியான கொள்கைசார் கோரிக்கையும் அதனை நோக்கிய தொடர்செயற்பாடுகளும் ஸ்பெயின் மத்திய அரசினைப் பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திக்கின்றது. மேலதிக உரிமைகள் பற்றி பிரஸ்தாபிக்கின்ற அழுத்தத்தினைக் கொடுத்திருக்கின்றது என்பதனை ஒரு செய்தியாகப் பார்க்கமுடிகிறது. அரசியல் அபிலாசைகளைத் தணியவிடாது பேணுவது என்ற அளவிலும் இது முக்கியத்துவம் பெறுகின்றது.

பொங்குதமிழ் இணையம், டிசம்பர் 2017

Leave A Reply