கொரோனா தோற்றம்: இயற்கையானதா? மனித உருவாக்கமா? – விவாதங்களும் சர்ச்சைகளும்
இதுவரை ஒரு சதிக்கோட்பாடாகவும் சர்ச்சையாகவும் திசைதிருப்பலாகவும் மறுதலிக்கப்பட்டுவந்த கருத்தியல் மீண்டும் சர்வதேச விவகாரமாகியுள்ளது. இததற்கான முதன்மைக் காரணி அமெரிக்க ஜனாதிபதி புலனாய்வுத்துறையிடம் கோரியுள்ள விசாரணை அறிக்கை. ஆனால் அதனைவிடப் பல்வேறு துணைக்காரணிகளும் உள்ளன.
கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவத்தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை உலகம் முழுவதுமாக 3,4 மில்லியன் வரையான மக்கள் அந்தக் கொடும் கிருமிக்குப் பலியாகியுள்ளனர் என்கின்றன உத்தியயோகபூர்வமான பதிவுகள். பதிவுக்கு உட்படாத (Unrecorded) இறப்புகளும் பாரிய எண்ணிக்கையில் உள்ளன. கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது என்பது உறுதிப்படுத்தப்பட்ட விடயம். ஆனால் அது எப்படித் தோன்றியது என்பது குறித்து விஞ்ஞானபூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதன் தோற்றம் பற்றிய இரண்டு கருதுகோள்கள் ஆரம்பத்தில் நிலவிவந்தன. ஒன்று வுகான் நகரிலுள்ள இறச்சிச் சந்தையிலிருந்து (Wet Market) பரவியது என்பது. மற்றையது செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது மனிதத் தவறினால் உருவானது என்பதாகும்.
ஆயினும் இரண்டாவது கருதுகோள் பல மட்டங்களில் நிராகரிக்கப்பட்டு வந்தது. தொற்றுப்பரம்பலின் தோற்றம் பற்றிய உண்மையைத் திசைதிருப்புகின்ற சதிக்கோட்பாடு என்பதான கருத்து மேலோங்கிய நிலையில் ‘மனித உருவாக்கமென்ற’ அக்கருதுகோள் புறமொதுக்கப்பட்டிருந்தது. ஊடகங்களும் அந்தக் கோணத்திலான கருத்துகளைத் தவிர்த்து வந்தன. நோர்வே ஊடகச் சம்பவம் ஒன்றினை உதாரணமாக இங்கு குறிப்பிடலாம்: 2020 இல் ஒரு முறை நோர்வேயின் தேசிய தொலைக்காட்சியின் இணையத் தளத்தில் கொரோனா வைரஸ் மனித உருவாக்கம் என்று நம்பிய ஒரு ஆய்வாளரின் பேட்டி வெளியிடப்பட்டது. அதற்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, அதனைச் சமப்படுத்த இயற்கையான வைரஸ் என்ற கருத்துடைய வேறொரு ஆய்வாளரின் பேட்டிமூலம் முன்னவரின் கருத்துகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன.
ஊடகங்களும் வைரஸ் தோற்றம் பற்றிய கருதுகோள்களும்
Facebook போன்ற உட்பட்ட சமூக ஊடகத்தளங்களும் அவ்வாறான கருத்துடைய பதிவுகள், பகிர்வுகள், கட்டுரைகளை நீக்கிவந்தன. அவற்றை நீக்குவதற்குரிய செயற்கை நுண்ணறிவுப் பொறிமுறை (Artificial intelligence) மற்றும் Algorithm படிமுறைகள் மூலம் தணிக்கை, நீக்க விதிகளை Facebook நடைமுறைப்படுத்துகின்றது. Algorithm என்பது கணினித் தொழில்நுட்ப செயல்முறையில் நிறைவேற்ற வேண்டியவற்றின் வரிசைப்படுத்தல் முறை, கையாளுகையாகும்.
கொரோனா வைரஸ் மனித உருவாக்கமா, இயற்கையான தொற்றா என்ற சர்ச்சைகள் பெருந்தொற்றுத் தொடங்கிய காலத்திலிருந்தே நிலவிவந்தன. இருப்பினும் அண்மைய நாட்களில், குறிப்பாக மே மாத நடுப்பகுதியிலிருந்து இவ்விவகாரம் அதிக கவனக்குவிப்பினைப் பெற்றுள்ளது. அதாவது மனிதத்தவறு தொற்றுக்கான தோற்றமாக இருக்கக்கூடும் என்பதாகும். அந்தக் கருதுகோளின் அடிப்படையில் ஆய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
இங்கு இன்னுமொரு விவகாரம் பற்றிக் குறிப்பிடவேண்டும். அது Facebook கொண்டுள்ள அதிகாரம் தொடர்பானது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் என்பது மனித உருவாக்கம் என்பதைச் சதிக்கோட்பாடாக முன்னிறுத்திப் புறமொதுக்கிய (நீக்கிய) Facebook, தற்பொழுது அத்தகைய பதிவுகளை அனுமதிக்கிறது. இந்த அனுமதிப்பிற்கான முதன்மையான காரணி, அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி புலனாய்வுத்துறைக்கு விடுத்த கட்டளையாகும். கொரொனா வைரசின் தோற்றம் தொடர்பான அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜோ பைடன் அமெரிக்க புலனாய்வுத்துறையிடம் கோரியுள்ளார். இதனையடுத்து கொரோனா வைரசின் தோற்றம் மனித உருவாக்கம் என்ற கோணத்திலான பதிவுகள், பகிர்வுகளை Facebook அனுமதிக்கிறது. அது ஒருபுறம் இருக்க, உண்மை எது பொய் எது, சதிக்கோட்பாடு எது என்பவை துரிதமாக மாறிவிடக்கூடிய தகவல்யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். தகவல்களைத் தீர்மானிக்கின்ற அதிகாரத்தினை Facebook தன்னிச்சையாகக் கொண்டுள்ளது என்பது முன்னரும் பலவிடயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கருத்தியல் அதிகாரம்
முன்னரே சில ஆய்வாளர்கள் மனிதத்தவறு வைரஸ் தோற்றத்திற்கான ஒரு காரணியாக இருக்கக்கூடிய சாத்தியக்கூகூறுகளை முன்வைத்துள்ளனர். எனவே இப்பொழுது ஆய்வாளர்கள், விஞ்ஞானிகளின் வலியுறுத்தல்களால் இக்கருத்துகளை Facebook அனுமதிக்கின்றது என்ற முடிவுக்கு வரமுடியாது. மாறாக அமெரிக்க ஜனாதிபதி அந்தக் கோணத்திலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளமையே தணிக்கைவிதி மாற்றத்திற்குரிய மூலகாரணி. இதில் இரண்டு விடயங்கள் கவனத்திற்குரியன. ஒன்று அமெரிக்காவின் அரசியல் நோக்கம். மற்றையது Facebookஇன் குவிமையப்பட்ட கருத்தியல் அதிகாரம். எத்தகைய மோசமான கருத்தியல் அதிகாரத்தை அது கொண்டுள்ளது என்பதை இந்த விவகாரம் காட்டுகின்றது.
மக்கள் எதை விவாதிப்பது, எதைத் தவிர்ப்பது, எதை அறிந்து கொள்வது, எதனை அறியாமல் இருப்பது போன்றவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இந்நச் சமூக ஊடகம் தம்வசப்படுத்தியுள்ளது என்பது சமகாலத் தகவல்யுகத்தின் யதார்த்தமாகியுள்ளது. சமூக ஊடகங்கள் அறிவியல், அறவியல் அடிப்படைகளில் வழிநடத்தப்படுவதிலும்பார்க்க அதிகாரத்தினாலேயே அதிகம் வழிநடத்துகின்றன என்பதுதான் இங்குள்ள சவாலும் ஆபத்துமாகும்.
‘உண்மை ஊரைச் சுற்றி வருவதற்குள் பொய் உலகைச் சுற்றி வந்துவிடும்’ என்பது நாமறிந்த முதுமொழி. இன்றைய உலகில், அதுவும் நெடிப்பொழுதுக்குள் தகவல்கள் பரவக்கூடிய தொழில்நுட்ப வசதிகளால் – எல்லோர் விரல்நுனிகளிலும் சமூக ஊடக வாய்ப்பு இருப்பதால் – தவறான தகவல் பலம்பல், பொய்யான பரப்புரை என்பன இன்றுள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது வெளிப்படை. ஆனால் தன்னிச்சையாகவும் ஏகத்துவ அதிகாரத்துடனும் Facebook போன்ற நிறுவனங்கள் தகவல்களைக் கட்டுப்படுத்துவதும் தீர்மானிப்பதும் அதற்கான தீர்வாகிவிடாது.
தோற்றம் பற்றிய கருதுகோள்கள்
கொரோனா வைரஸ் முதன்முதலில் எப்படி உருவாகியது என்பது தொடர்பான துல்லியமான தகவல் இதுவரை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. வெளவாலில் இருந்து வேறொரு மிருகத்திற்குத் தொற்றி, மிருகத்திலிருந்து பின் மனிதனுக்குத் தொற்றியது என்பதே இதுவரையான கணிப்பீடு. அதாவது ‘இயற்கையாகத்’ தொற்றியது என்பதாகும். இயற்கையாகத் தொற்றியது என்பதே அடிப்படையில் தவறான கூற்று. இயற்கைக்கு எதிரான உலகளாவிய மனிதமேலாண்மைச் செயற்பாடுகளின் விளைவே பெருந்தொற்றுக்கள். இப்படியிருக்க ‘இயற்கையாக’ அல்லாமல், மனித உருவாக்கம் அல்லது மனிதத்தவறு மூலமாகப் பரவியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் தான் சமகால விவாதங்களின் மையம். சீனாவின் வுகான் நகரில்தான் அந்நாட்டின் முதன்மை வைரஸ் ஆய்வகம் (Wuhan institute of virology) அமைந்துள்ளது. அங்கு தற்செயலாக நடந்த விபத்து ஒன்றிலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என வலுவாகச் சந்தேகிக்கப்படுகின்றது.
SARS-CoV-2 என்பது தற்போதைய கொரோனா பெருந்தொற்று நுண்கிருமியின் மருத்துவ அடையாளப் பெயர். வுகான் வைரஸ் ஆய்வகம் SARS-CoV-2 இற்கு நெருக்கமான வைரசுகளைக் கையாண்டு வந்துள்ளமை அறியப்பட்ட ஒன்றாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில் ஆய்வுக்காக வைரஸ் வகைமைகள் ‘இயற்கையிலிருந்து’ சேகரிக்கப்பட்டபோது, அல்லது வைரஸ் பரிசோதனை நடைபெற்ற பொழுதில் ஏற்பட்ட விபத்தில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனப்படுகின்றது. ஆய்வக விபத்துத் தொடர்பான கருதுகோள் வலுப்பெற்றதற்குரிய இன்னுமொரு முக்கிய காரணம், வுகான் ஆய்வகத்தைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் நவம்பர் 2019இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதான தகவலாகும். இரகசிய ஆவணங்களிலிருந்து இத்தகவல் கசிந்திருந்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் சீனா அதனை முற்றிலும் மறுத்திருந்தது.
அறிவியல் எதிர் அரசியல்
முன்னர் இதைவிட இன்னும் தீவிரமாக இக்கருதுகோள் பேசப்பட்டது. அதாவது சீனா திட்டமிட்டு கொரோனா வைரசினை உருவாக்கிப் பரப்பியுள்ளது என்பதாகப் பரப்பப்பட்டது. ‘சீன வைரஸ்’ என்று விளித்து அதற்குத் தூபமிட்டவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். இது அமெரிக்க-சீன அதிகார நலன் சார் போட்டி சார்ந்த விவகாரமாக விமர்சிக்கப்பட்டது. வைரசின் தோற்றம் தொடர்பான விவகாரத்தை அமெரிக்கா தொடக்கத்திலிருந்து அரசியலாக்கி வந்திருக்கின்றது என்பது பொதுவான கருத்து. சீனாவைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகின்ற முனைப்பு அமெரிக்காவிற்கு உள்ளதென்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளை இந்தக் கருதுகோள் தொடர்பான விவாதங்களின் தீவிரத்தன்மையையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக முந்நாள் ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப் அத்தகைய அணுகுமுறையினையே அப்பட்டமாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த அரசியற்படுத்தல் விஞ்ஞானபூர்வமான விடைதேடுதலை ஊனப்படுத்திவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்தும் வந்துள்ளது. விஞ்ஞானத்தையும் அரசியலையும் வேறுபடுத்திப் பார்க்கின்ற பக்குவத்துடன் நடந்துகொள்ளுமாறு நாடுகளை உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி முகாமைத்துவத் தலைவர் ; Michal Ryan கோரியுமிருந்தார். அரசியல் ரீதியாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சர்ச்சை உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானபூர்வமான செயற்பாடுகளைச் சவாலானாதாக்குகின்றது எனவும் அவர் மேலும் சுட்டியிருந்தார்.
‘மனித உருவாக்க’ கருதுகோள் வலுப்பெற்ற பின்னணிகள்
இதுவரை ஒரு சதிக்கோட்பாடாகவும் சர்ச்சையாகவும் திசைதிருப்பலாகவும்; மறுதலிக்கப்பட்டுவந்த கருத்தியல் மீண்டும் சர்வதேச விவகாரமாகியுள்தற்கான முதன்மைக் காரணி அமெரிக்க ஜனாதிபதி புலனாய்;வுத்துறையிடம் கோரியுள்ள விசாரணை அறிக்கை. ஆனால் அதனைவிடப் பல்வேறு துணைக்காரணிகளும் உள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி அறிக்கை கோரிய சமகாலத்தில், 18 விஞ்ஞானிகள் கூட்டாக ஒரு கோரிக்கையை வெளியிட்டிருந்தனர். வுகான் ஆய்வக விபத்திலிருந்து முதலில் கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர ஆய்வுகள் நடாத்தப்படவேண்டுமென்ற அவர்களின் பரிந்துரை அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘Science Magazine – அறிவியல் இதழில்’ மே நடுப்பகுதியில் வெளிவந்தது. Sceience இதழில் வெளிவந்த விஞ்ஞானிகளின் கூட்டு வேண்டுகோள், அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை மீது ஒருவித அறிவியல் வெளிச்சம் பாய்ச்சுவதற்கு உதவியுள்ளது. இயற்கையான தொற்று என்ற கருதுகோளுக்கு நிகராக ஆய்வக விபத்தின் சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வு, விசாரணைகளும் நடாத்தப்படவேண்டும் என்கிறது அவர்களின் பரிந்துரை. கொரோனா வைரஸ் எப்படித்தோன்றியது என்பதை உலகிற்கு அறிவிப்பதானது, எதிர்காலத்தில் தொற்று அபாயங்களைக் கையாள்வதற்கும் உலகளாவிய உத்திகளைக் கண்டடைவதற்கும், சுகாதாரக் கூட்டுப் பாதுகாப்புப் பொறிமுறைகளை மேம்படுத்தவும் அவசியமானது எனவும் அந்தக்கூட்டுக் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ‘போதுமான தகவல்கள் கண்டடையப்படும் வரை இருவகையான கருதுகோள்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும்’ எனவும் விஞ்ஞானிகள் குழு வலியுறுத்தியுள்ளது. வெளிப்படைத்தன்மை, தரவுபூர்வ அடிப்படைகள், பரந்துபட்ட நிபுணத்துவ உள்ளீடு, சுயாதீன மேற்பார்வை ஆகியவற்றை உள்ளடக்கிய நேர்த்தியான ஆய்வு வலியுறுததப்பட்டுவருகின்றது. அத்தோடு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, நோர்வே, டென்மார்க், இஸ்ரேல், ஜப்பான் உட்பட்ட 14 நாடுகள் ஆய்வக விபத்தின் சாத்தியக்கூறுகளை மையப்படுத்திய விசாரணைகளை வலியுறுத்தி, உலக சுகாதார அமைப்பிற்குக் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
‘DRASTIC Team – துப்பறியும் தன்னார்வக் குழு’
இந்தக் கருதுகோள் தொடர்பான விவாதங்கள் மற்றும் அது சார்ந்த ஆய்வு விசாரணைகளுக்கான அழுத்தத்திற்கு ‘DRASTIC Team’ என்ற ஒரு சுயாதீனக்குழுவும் முக்கிய காரணம். DRASTIC Team (Decentralized radical autonomous search team investigating Covid-19) எனும் இந்தக் குழு ஆய்வக விபத்துச் சாத்தியக்கூறுகள் குறித்த கவனத்தைப் பெறவைத்துள்ளது. இது 2020இல் Twitter சமூக ஊடகத்தளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ‘துப்பறியும் தன்னார்வக் குழு’ எனத் தம்மை அழைத்துக்கொள்கிறது. தங்களது உண்மையான பெயர்களில் பங்கேற்கும் ஒரு சில விஞ்ஞானிகளைத் தவிர இதிலுள்ள பெரும்பாலானவர்கள் இரகசியக் குறியீட்டுப் பெயர்களுடளேயே இயங்கிவருகின்றனர். கொரோனா வைரசின் தோற்றத்தை ஆராயும் பணியை இக்குழு நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. இக்குழுவினால் முன்வைக்கப்படும் தகவல்களும் வாதங்களும், சில வைரலோஜிஸ்டுகள், நுண்ணுயிரியலாளர்கள் மற்றும் அறிவியல் நிபுணர்புகளால் ஆராயப்பட்டன.
தவிர ஆய்வக விபத்துகளின் சாத்தியக்கூறுகள் குறித்து விஞ்ஞானபூர்வமாக விவாதிக்கப்பட்ட கட்டுரைகள் முதலில் கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் சில அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ளன. ஆனால் 18 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு, மே 13 ‘Science’ இதழில் வெளிவந்த கட்டுரையின் பின்னரே, ஆய்வக விபத்துக் கருதுகோள் பரந்த கவனத்தினைப் பெற்றிருக்கின்றது.
WHO அறிக்கைகளின் போதாமைகள்
இதுவரை அறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வுகான் ஆய்வகத்திலிருந்து வைரஸ் தோன்றிப் பரவியதற்கான தகவல், ஆதாரங்கள் குறைவு எனப்படுகின்றது. இருந்தும் பல விடயங்கள் விஞ்ஞான ஆய்வறிவிற்கு அப்பாற்பட்டதாக, அறியப்படாதவைகளாக உள்ளன. 2020 நவம்பர் சீன-WHO கூட்டு முதற்கட்ட தகவல், தரவுகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் எவ்விதமான திட்டவட்டமான கண்டடைவுகளும் வெளிவரவில்லை. 313 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கையில் ஆய்வக விபத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து வெறும் நான்கு பக்கங்களில் மட்டுமே பிரஸ்தாபிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆய்வக விபத்துக் கருதுகோளை ஆய்வுசெய்வதற்கு போதுமான தகவல், தலவுகள் இல்லை எனவும், அதற்கு மேலும் கூடுதலான தரவுகள் அவசியப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்திருந்தார்.
2021 மார்ச் 30ஆம் திகதி கொரோனா தொற்றின் தோற்றம் தொடர்பான பிறிதொரு அறிக்கையினையும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்தது. சுகாதார அமைப்பின் குழுவொன்று வுகான் ஆய்வகத்திற்கு விஜயம் செய்து சில விசாரணைகளை மேற்கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் ஆய்வக விபத்துக் குறித்த கருதுகோள் அவ்வறிக்கையிலும் போதிய முக்கியத்தும் பெற்றிருக்கவில்லை. அதேவேளை விசாரணைக்குழு சீனாவிடமிருந்து தமது விசாரணை ஆய்வுகளுக்குரிய முழுமையான தகவல்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளமையையும் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இதுவும் தொடர்ச்சியாகப் பல மட்டங்களிலும் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுத்தான். அதாவது சீன வெளிப்படைத்தன்மையுடன் கொரோனா தோற்றம், தொற்றுப் பரம்பல் பற்றிய தகவல்களை வழங்க மறுக்கின்றது என்பது. இன்னொரு முறையில் சொல்வதானால் தகவல்களை மறைக்கின்றது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
விசாரணைகளும் சீனாவின் ஒத்துழையாமையும்
2002இல், SARS சார்ஸ் தொற்று ஏற்பட்டபோதும் உரிய தகவல்களை வழங்க மறுத்ததாகச் சீனா மீது உலக சுகாதார அமைப்பின் அன்றைய தலைவர் Gro Harlem Brundtland குற்றம் சாட்டியிருந்தார். (Brundtland ஒரு நோர்வேஜியர். நோர்வே அரசியலில் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செல்வாக்குச் செலுத்திய முக்கிய தலைவர். நோர்வேயின் முதலாவது பெண் தலைமை அமைச்சர். 1981 முதல் 1996 வரை மூன்று முறை தலைமை அமைச்சராகப் பதவிவகித்தவர். தொழிற்கட்சியின் தலைவராகவும் பொறுப்பில் இருந்தவர்.) SARS அனுபவத்தின் பின்னணியில் உலக சுகாதார அமைப்பு உலககளாவிய பெருந்தொற்றுக்களைக் கையாள்வது தொடர்பாக முற்றிலும் புதிய விதிகளை வகுத்திருந்தது.
உண்மையில் வுகான் ஆய்வகத்தில் விபத்து நடந்திருந்தால் அதனை வெளிப்படைத்தன்மையுடன் சீனா ஒப்புக்கொள்வது, மறைப்பதைவிட மேலானது. அது உலகின் மிகப்பெரும் பொருளாதார சக்தியான சீனாவிற்கும் நன்மையானது என்ற கருத்துகளையும் அவதானிக்கமுடிகிறது. சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் என கூறிவருகின்றது.
ஆய்வக விபத்துச் சாத்தியக்கூறுகளின்; அடிப்படையிலான விசாரணை, ஆய்வுகளுக்கு சீனாவின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. அந்த ஒத்துழைப்பு என்பது போதிய தகவல், தரவுகளை வழங்குதலைக் குறிக்கின்றது. ஆய்வக குறிப்பேடுகளிலிருந்து, வைரஸ் ஆய்வுத்திட்டங்கள், அவற்றின் பெறுபேறுகள் உட்பட்ட பல்வேறு விஞ்ஞானபூர்வமான தகவல்கள், தரவுகளை ஒளிவுமறைவின்றி சீனா முன்வைக்க வேண்டும். ஆனால் அதற்குத் தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறி. இதுபோன்ற விடயங்களில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் புதிதல்ல.
கற்றுக்கொள்ளக்கூடிய பாடமும் மாற்றங்களின் அவசியமும்
இனி முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வுகள் இயற்கையான தொற்று, ஆய்வக விபத்து என்ற ஏதோவொரு முடிவை வழங்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எந்த முடிவையும் தராமற்கூட போகலாம். இந்த இரு கருதுகோள்களும் தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகக்கூட தொடரக்கூடும். கொரோனா தொற்றின் மூலகாரணி இயற்கையானதோ இல்லையோ என்பது ஒருபுறமிருக்க இயற்கைக்கு எதிரான மனித மேலாண்மையின்; விளைவுகள், தீவிர வேகத்தைக் கொண்டுள்ள தொழில்மயமாக்கல், உற்பத்தி முறைமைகள் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அத்தோடு பெருந்தொற்று வைரசுகளைச் சேகரிப்பது மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்புப் பொறிமுறைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற கருத்துகளும் சமகால விவாதங்களில் முன்வைக்கப்படுகின்றன.
தினக்குரல் 13/06/2021