நோர்வேயில் அமைந்துள்ள (வட ஐரோப்பாவின்) மிக உயரமான மலை: ஒரு பயண அனுபவம்!

Galdhøpiggen என்பது ஒரு மலையின் பெயர். இது நோர்வேயின் மட்டுமல்ல வட ஐரோப்பாவினதும் மிக உயரமான மலை. கடல் மட்டத்திலிருந்து 2469 கி.மீ உயரம்.

இம்மலை உச்சிக்கு ஏறுவதற்கான பயணம் ஒன்றினை ஜூன் இறுதியின் வார இறுதியில் மேற்கொண்டிருந்தோம். இந்த மலையானது தென்-நோர்வேயின் மத்திய பகுதியினை அமைவிடமாகக் கொண்ட Jotunheimen பிரதேசத்தில் உள்ளது. ஒஸ்லோவிலிருந்து கிட்டத்தட்ட 400 கி.மி தூரம். 5 மணிநேர கார்ப் பயணம். 3500 சதுர கி.மி பரப்பளவைக் கொண்ட Jotunheimen, பெருமலைகளாலால் சூழப்பட்ட பிரதேசம். திடகாத்திரமான கற்களையும் கற்பாறைகளையும் பனிப்பாறைகளையும் கொண்ட பரந்த நிலத்தோற்றமுடையது.

Galdhøpiggen மலை உச்சியை நாம் அடைந்தபோது கருமேகங்கள் சூழ்ந்து மழை சிணுங்கிக் கொண்டிருந்தது. மேகத்திரள் விலக்கிச் சூரியன் தன்முகம் காட்டிய கணங்கள் மிகச் சொற்ப நிமிடங்களே. அந்தச் சில நொடிகளில் உச்சிமலையிலிருந்தபடி வானப் பெருவெளியை, அதன் நீலத்தை, கூர்முனைகளையுடைய மலை உச்சிகளை, பனிபடர்ந்ததும் பனிநீங்கியதுமான மலைத் தொடர்கள், பனிப்பாறைகள் என Jotunheimen பிரதேசம் முழுவதையும் ஒரு அகலப்பரப்புக் காட்சியாகக் (Panoramic view) காணக்கிட்டியது. உயர்ந்த கருமை படிந்த அந்த மலை பிரமிடு வடிவத்தில் காட்சியளிக்கிறது.

மலைப் பயணத்திற்கு முதல் நாளே ஒஸ்லோவிலிருந்து சென்று அப்பிரதேசத்திலுள்ள ‘Juvasshytta’ என்ற ஓய்வுவிடுதியில் தங்கினோம். மலையேற்றத்திற்குப் பின்னரும் அங்கு தங்கி அடுத்தநாள் காலையிலேயே ஒஸ்லோவிற்கு மீண்டும் திரும்பினோம். இந்தத் ஓய்வுவிடுதியின் அமைவிடம் மிக உயரமானது. கடல்மட்டத்திலிருந்து 1850 கி.மி உயரத்தில் அது அமைந்துள்ளது. ஒடுக்கமான பாதையெனினும காரில் அங்கு செல்லமுடியும். பாதையின் இருமருங்கிலும் கட்டுகள் ஏதும் இல்லை. மிக அவதானமாகவும் மெதுவாகவும் வாகனத்தைச் செலுத்தவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல, சற்றுத் தடம் தவறினால் பாதையின் இரு மருங்கும் பெரும் பள்ளத்தாக்குகள். மரங்களற்ற பெருவெளியில், மலைகளுக்கு நடுவில் இவ்விடுதி அமைந்துள்ளது.

இத் தங்குவிடுதி மிகப் பழைமையானது. 1874இல் மலைப் பயணத்திற்கான தற்காலிக ஓய்வுத்தங்கலுக்கான ஒரு கற்கூடாரமாக இது கட்டப்பட்டது. பின்னர் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு தற்போது நூற்றுக்கணக்கான அறைகளைக் கொண்ட 2 அல்லது 3 நட்சத்திர விடுதி என்று மதிப்பிடத்தக்க வசதிகளைக் கொண்டுள்ளது. காலை உணவு, மதிய உணவு ஏற்பாடுகளுடனான உணவகம் மற்றும் மது அருந்தகமும் உள்ளது. Galhøpiggen செல்பவர்ளில் பெரும்பாலானவர்கள், குறிப்பாக தூர இடங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் செல்வோர் இவ்விடுதியில் தங்கியே மலைக்கான நடைபயணத்தினை மேற்கொள்கின்றனர்.

இவ்விடுதியிலிருந்து ‘நோர்வேயின் கூரை’ என்றும் அழைக்கப்படுகின்ற Galhøpiggen மலையின் உயரம் என்பது கிட்டத்தட்ட 600 மீற்றர்கள் மட்டுமே. ஆயினும் இந்த 600 மீற்றர் உயரத்தை அடைவதற்கான நடைபயணம் என்பது 6 கிலோ மீற்றர் தூரத்தினைக் கொண்டுள்ளது. சென்றுதிரும்புவதற்கான மொத்தத் தூரம் 12 கிலோ மீற்றர். உச்சிக்குச் சென்று திரும்புவதற்கு மொத்தமாகத் தேவையான நேரம் 6 – 7 மணித்தியாலங்கள். முழுமையான ஒரு பகற்பொழுதைக் கோருகின்ற பயணம் இது.

முதலில் கற்பாறைகள் நிறைந்த பரந்த வெளியில் கிட்டத்தட்ட இரண்டு கி.மி தூரமும் – இரண்டாவது கட்டமாக பனிப்பாறைகளின் ஊடான 3 கி.மீ தூரமும் – பாறைகள், மலைகளின் ஊடான ஒரு கி.மீ தூரம் இறுதியும் மூன்றாவதுமான பயணப் படிநிலைகளாகும். இறுதிப்பகுதி கிட்டத்தட்ட 70 பாகை மேல்நோக்கிய சாய்வுக் கோணத்தில் ஏறவேண்டும். இரண்டாவதும் மூன்றாவதுமான கட்டங்கள் மிகச் சவாலானவை.

இப் பயணம் அனுபவமும் பயிற்சியுமுடைய மலையேற்ற வழிகாட்டிகளால் குழுநிலையில் நெறிப்படுத்தப்படுகின்றன. நாம் சென்ற குழுவில் கிட்டத்தட்ட 150 பேர் இடம்பெற்றிருந்தனர். இத்தனை பேரும் ஒருவர் பின் ஒருவராக வரிசையிலேயே பெருமளவு தூரமும் நடக்க வேண்டும். பரந்தவெளியாயினும் பெரும்பாலும் ஒற்றையடிப் பாதையிலேயே நடக்க முடியும். பயணவழியின் தன்மை அத்தகையது. கற்களும், பாறைகளும், பனியும் பனிப்பாறையுமான அந்தப் பயணவழியில் காலடிகளைக் கவனமாகவும் குறித்த சமநிலையுடைய வேகத்திலும் எடுத்துவைக்க வேண்டும்.

மலைப்பயணத்திற்கும் காலநிலைக்குமுரிய உடைகள், சப்பாத்துகள், போதியளவு தண்ணீர் மற்றும் உணவு முக்கியமாக எடுத்துச் செல்லவேண்டும். குளிருக்கான பல அடுக்கு ஆடைகளின் இறுக்கம் நடக்கும் போதான உடல் வெக்கையும் வேர்க்கவைக்கும். ஆயினும் நாம் சென்றபோது மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. மழை மென்சாரலாகத் துமித்துக் கொண்டிருந்தது. தென்றலும் சாரலும் உடலுக்கும் உள்ளத்துக்கும் இதமாக இருந்தது. வெக்கையையும் வியர்வையையும் அவை தணித்தன. ஓய்வெடுக்கும் தருணங்களிலும் மலை உச்சியில் நின்ற போதும் தான் குளிராடைகளின் தேவையை அதிகம் உணர முடியும்.

இரண்டாவது கட்டமான பனிப்பாறை மேல் நடக்கும் போது, அனைவரும் கயிற்றினால் ஒருவருடன் ஒருவர் பிணைக்கப்பட்ட நிலையில் நடக்க வேண்டும். இது ஒரு முக்கிய பாதுகாப்பு ஏற்பாடு. மேற்பகுதியில் உதிர்பனி பரந்திக்கின்றபோதும் அதன் கீழ் உறைபனி படிந்துள்ளது. உறைபனிப் பரப்பில் நடக்கும் போது வெடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. உதிர்பனிக்குக் கீழ் மறைந்துள்ள பனிப்பாறைகளில் கண்ணுக்குத் தெரியாத வெடிப்புகள் இருக்கக்கூடும் எனவும்வழிகாட்டிகள் கூறினர். வெடிப்பு ஏற்படுமாயின் பெரும் ஆழத்திற்குள் விழுகின்ற ஆபத்து உள்ளது. அவ்வாறான விபத்துகள் நடந்து யாரேனும் பாறைவெடிப்பினூடு கீழே விழநேர்ந்தால் அவரை அல்லது அவர்களை ஏனையவர்கள் கூட்டுப்பலத்துடன் வெளியில் தூக்கி எடுப்பதற்கானதே கயிற்றினால் அனைவரும் பிணைக்கப்படுவதற்கான முதன்மைக்காரணம். பனிப்பாறைகள் எந்நேரமும் அசைந்துகொண்டிருப்பவை எனப்படுகிறது. வெடிப்புகள் விரிவடைவதும் சுருங்குவதுமாக காலநிலைக்கேற்ப மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும்.

பனிப்பாறையினாலான இந்தப் பகுதியை நோர்வேஜிய மொழியில் ‘Styggebreen’ என்றழைக்கின்றனர். ‘Stygg’ என்பதன் நேரடி அர்த்தம் அசிங்கம், அழுக்கு என்பதாகும். ஆனால் பெரும் ஆபத்தான விடயங்களையும் பேச்சுவழக்கில் அப்படிக் கூறுவதுண்டு. Styggebreen என்பது ‘ஆபத்தான பனிப்பாறை’ என்பதைக் குறிக்கிறது.

பனிக்காலங்களில் மலையேற்றப் பயணங்கள் நிகழ்வதில்லை. பனிப்பொழிவு இல்லாத, ஜூன் ஆரம்பத்திலிருந்து செப்ரெம்பர் நடுப்பகுதி வரையான 4 மாதங்கள் மட்டுமே மலை உச்சிக்கான பயணங்கள் நடைபெறுகின்றன. ஆயினும் கற்பாறைகள் மற்றும் திடமான நிலப்பரப்புகள் தவிர்ந்த இப்பிரதேசத்தின் பல பகுதிகளில் கோடை முழுவதும் பனி கரையாமல் இருக்கின்றது. பனிப்பாறைகளும் உள்ளன. ஆண்டு முழுவதும் பனிச்சறுக்கல் பயிற்சிகள், விளையாட்டுகள் இடம்பெறக்கூடிய தனி இடங்கள் அங்கு உள்ளன.

பனிப்பறை மீது நடப்பது கிட்டத்தட்ட ஒரு மணிநேரப் பயணம். அதற்கு முன்னரான பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய தகவல் வழங்கல் மற்றும் கயிற்றில் அனைவரையும் பிணைக்கும் செயற்பாட்டுக்கு கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகியிருந்தது. பனிப்பாறை மீது நடக்கும்போது நினைத்த நேரம் இளைப்பாற முடியாது. அனைவரும் ஒரே வேகத்தையும் கயிற்றில் ஒரே அளவு இடைவெளியைப் பேணியபடியும் நடக்கவேண்டும். நடைபாதைகூட ஒற்றையடிப் பாதைதான். ஒற்றையடிப்பாதையிலிருந்து விலகிக் காலடிகளை வைக்கும் போது பனிச்சேற்றுக்குள் கால்கள் புதைந்து விடும்.

இறுதிப்பகுதி கத்தியின் கூரினையொத்த முனைகளைக் கொண்ட பாறைகளும் கற்களினாலுமானது. நீளமான காலடிகளை வைத்து ஏறவேண்டும். தருணங்களில் தொடர்ச்சியாக பாறைகளின் விளிம்புகளில் கைகளை ஊன்றி ஏறவேண்டும். இத்தனை மணிநேரக் கடினமான நடைபயணம் என்றாலும் மலை உச்சியை அடைந்தவுடன் பட்ட பாடுகள் மறைந்து புத்துணர்வு கிட்டிவிடுகிறது. இதுவே இந்தப்பயணத்தின் உளரீதியான அடைவு.

ஆண்டுதோறும் சராசரியாக உள்நாடு மற்றும் வெளிநாட்டினைச் சேர்ந்த 25 000 பேர் வரை மலை உச்சிக்குப் பயணம் மேற்கொள்கின்றனர் எனத் தரவுகள் கூறுகின்றன.

Leave A Reply