சூரியனுக்கு எவர் சொல்வர்?
சூரியனுக்கு எவர் சொல்வர்?
என் நிலத்தைப் பற்றி
சூரியனுக்கு எவர் எடுத்துச் சொல்வர்
துன்புற்ற என் மெட்லர் மரத்தைப் பற்றி
நரம்புகள் நீங்கிய என் வசந்தகாலம் பற்றி
என் உதவிக்காய் நீளும் என் கரத்தினைப் பற்றிச்
சூரியனிடம் யார் எடுத்துச் சொல்வர்
வேர்களற்ற என் பூந்தோட்டத்தை
எவர் விபரிக்கக்கூடும்
வருவோர் அனைவருக்காகவும்
எனது கதவுகள் திறந்திருப்பதை,
தொலைதூர ஒலிகளாலான என் இரவினை,
நேரங்களை விழுங்கும் என் கோதுமையை
எவர் விபரிக்கக்கூடும்
என் தனித்திருத்தலையும்
இனிய இரகசியத்தையும்
எவர் அறிவர்
என் ஒற்றைவண்ணக் கனவிலிருந்து
எவர் என்னை விடுவிப்பர்
கோயில்களில் என் வெளிகள்
சாம்பல் படிந்திருக்கின்றன
கட்டுக்கடங்காத என் எதிர்பார்ப்பிற்கான பண்டமாற்றாய்
குணமடைதலின் விளிம்பில் காய்ச்சல் உறங்குகிறது
என் ஸ்ரெப்பி புல்வெளிகள்
சிரிப்பினை நிறைத்துவைத்திருக்கின்றன
சிலவேளை இது போதுமானதாக இருக்கும்
ஆயினும் நான் பார்த்தபடி இருக்கிறேன்
நேரம் நகர்ந்துகொண்டிருக்கிறது.
– மூலம்: Djamal Amrani
– தமிழில்: ரூபன் சிவராஜா
– பிரசுரம்: நடு சஞ்சிகை (பிரான்ஸ்), ஒக்ரோபர் 2019