நீ நகரத்திற்கு வந்துவிடு! – Marie Takvam

எனக்குத் தெளிவாகத் தெரிகிறது
இங்கிருக்கும் எல்லா வீடுகளும்
என்னைப் பார்த்துப் புன்னகைக்கின்றன
உன்னை நான் நேசிப்பதை அவை புரிந்திருக்கின்றன
நீ நகரத்திற்கு வந்துவிடு
பூங்காவிலுள்ள மரங்களில்
நான் அதனைக் காண்கிறேன்
அசையும் இலைகளுடன் நின்றபடி
அம்மரங்கள்
காற்றிடமிருந்தும் சூரியனிடமிருந்தும்
முத்தங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
நீ நகரத்திற்கு வந்துவிடு
ஆதலால் தான்
ஒளியிலிருந்து… காற்றிலிருந்து…
தென்றலில் அசையும் பாய்மரக்கப்பலிலிருந்து
கற்பனைக்கும் எட்டாத
இந்தப் பேரானந்தம் சித்திக்கிறது
எல்லாமும் வித்தியாசமாய் இருக்கிறது இன்று
நேற்றைய பொழுது
சாம்பல் அப்பியிருந்த வீட்டுவரிசைகள்
இன்று அந்தியின் மஞ்சளிலும் ஊதாவிலும் மூழ்கியிருக்கிறது
நேற்றைய பொழுது
பேரூந்துகளும் சிற்றுந்துகளும் செல்லும் பாதையில்
அன்றாட வழிப்போக்கர்களாக இருந்தவர்கள்
இன்று உள்ளார்ந்து நெருங்கிய மனிதர்களாகிவிட்டனர்
நேற்றைய பொழுது
போக்குவரத்து நெரிசலாகவும்
இரைச்சல்களாகவும் இருந்த யாவும்
இன்று நகரத்தின் இதய நாதமாகிவிட்டன
அனைத்தையும் முன்னகர்த்தும் மூலமாகியும் நிற்கின்றன
சுருங்கக்கூறின்: நீ நகரத்திற்கு வந்துவிடு

மூலம்: Marie Takvam
தமிழில்: ரூபன் சிவராஜா

Leave A Reply