நோபல் விருதும் ‘வீக்கிலீக்ஸ் அசாஞ்’ கையளிப்பு சமிக்ஞையும்
முந்தைய தீர்ப்பு அடிப்படையில் மிகப் பலவீனமானது. கையளிப்பிற்கு எதிராக மிக நியாயமான பல வாதங்கள் இருந்தபோதிலும், அசாஞ்சின் உள-உடல் நிலையை முன்னிலைப்படுத்தி தற்கொலைக்கான ஆபத்தினை முதன்மைக்காரணமாகக் கூறித் தீர்ப்பு வழங்கியமை பலவீனமானது. கையளிப்பானது, மனிதஉரிமைச் சாசன மீறல் என்றோ, ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றோ, நீதிக்குப் புறம்பானது என்றோ தீர்ப்பு வழங்கப்படவில்லை. அசாஞ் வழக்கினை பிரித்தானிய நீதித்துறை நீதியாகக் கையாளவில்லை.
வீக்கிலீஸ் நிறுவனர் அசாஞ் வழக்கில் எதிர்மறையான நிகழ்வு பற்றிய செய்தி அண்மையில் வெளிவந்துள்ளது. அதாவது அமெரிக்காவிடம் அவரைக் கையளிப்பது தொடர்பான சாதகமான சமிக்ஞையைப் பிரித்தானிய நீதித்துறை டிசம்பர் 10, 2021 அன்று வெளிப்படுத்தியுள்ளது. இதன் அர்த்தம், உடனடியாக கையளிப்பு நிகழும் என்பதல்ல. முன்னைய தீர்ப்பிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட மேன்முறையீடு மீள்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்பதே இதிலுள்ள செய்தியாகும். முதற்கட்டமாக முந்தைய தீர்ப்பு வழங்கப்பட்ட (அசாஞ் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டால் அது அவரைத் தற்கொலைக்கு இட்டுச்செல்லக்கூடியது) நீதிமன்றத்தில் அமெரிக்க மேன்முறையீட்டுக்கு அமைய மீள்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் அங்கிருந்து பிரித்தானிய உச்ச நீதிமன்றம் ஒன்றிற்கு நகர்த்தப்படுகின்ற வாய்ப்புள்ளது.
இரண்டு ஊடகவியலாளர்களுக்கு நோபல் விருது
அமெரிக்காவிற்குச் சாதகமான, வீக்கிலீக்ஸ் ஊடக நிறுவனர் அசாஞ்சிற்கு எதிரான பிரித்தானியச் சமிக்ஞையானது, இரண்டு ஊடகவியலாளர்களுக்கு நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் சமாதானத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்ட விழா நாளில் வெளிவந்திருக்கின்றது. இது உண்மையில் மிகவும் முரண்நகையான செயல். மட்டுமல்லாது டிசம்பர் 10 என்பது ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான நாளும்கூட. இத்தகைய நாளில் கையளிப்பிற்குச் சாதகமான சமிக்ஞையை வெளியிட்டமை, ஊடகத்துறை மீதான பிரித்தானிய நீதித்துறையின் கரிபூசல் என்ற தொனிப்படவும் கருத்துகள் வெளிப்படுகின்றன. மேற்கு தனது எதிரிகளின் எதிரிகளைக் கொண்டாடுவதை நீண்ட பாரம்பரியமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் நோபல் சமாதான விருது அதற்கான எடுத்துக்காட்டு என நோர்வேஜிய இடதுசாரி நாளிதழான Klassekampen (Class Struggle) 11.12.2021 ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் விருது முறையே ரஸ்யாவைச் சேர்ந்த Dmitrij Muratov மற்றும் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த Maria Ressa ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தத்தமது நாடுகளின் ஆட்சிபீடங்களின் அதிகார மீறல்களுக்கு எதிரான துணிகரமான ஊடகச் செயற்பாடுகளுக்காக விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் ஊடக செயல்முனைப்புகள் ஜனநாயகத்திற்கும் நிரந்தர சமாதானத்திற்குமான முன்நிபந்தனைகள் என்பதாக தமது தேர்வு நியாயப்படுத்தலில் நோபல் தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒக்ரோபர் மாதம் வெளிவந்திரந்தது. விருது விழா ஒஸ்லோ நகர சபை மண்டபத்தில் டிசம்பர் 10ஆம் நாள் பிரமாண்டமாக இடம்பெற்றது.
Maria Ressa – பிலிப்பைன்ஸ்
Maria Ressa தனது ஊடகச் செயற்பாடுகள் மூலம் பிலிப்பைன்ஸ் ஆட்சிபீடத்தின் அதிகாரமீறல்கள், வன்முறை, ஊழல்களுக்கு எதிராக இயங்கிவருபவர். Rappler என்ற இணைய ஊடக மையத்தினை 2012இல் துவங்கி நடாத்திவருபவர். அதற்கு முன்னர் சில காலங்கள் சி.என்.என் தொலைக்காட்சியின் தென் கிழக்காசிய நிருபராகப் பணிபுரிந்தவர். போதைப்பொருள் கடத்தல், விநியோகத்திற்கு எதிரான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் (Rodrigo Duterte) கடும் நடவடிக்கைகளுக்கு எதிராக (போதைப்பொருள் கடத்தல் விநியோகத்துடன் தொடர்புடையவர்களெனக் கருதுவோரைச் சுட்டுக்கொல்வதற்கான முழு அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து) குரல் எழுப்பி வந்துள்ளார். பல தடவைகள் சிறைக்கும் சென்றுள்ளார். சமூக ஊடகங்கள், குறிப்பாக பேஸ்புக் போலியான செய்திகளைப் பரப்புவதற்கும் கருத்தியல் எதிர்ப்பாளர்கள், விமர்சகர்கள் மீது வெறுப்பினைப் பரப்புவதற்கும், பொது உரையாடல்களைத் திசைதிருப்பவும் பயன்படுகின்றமையைக் கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் விருது விழாவில் ஆற்றிய உரையிலும் சமூக ஊடகங்கள் மீதான தனது விமர்சனங்களைப் பகிர்ந்திருந்தார். சமூக ஊடகங்கள் அதிகாரம் மற்றும் பொருளீட்டலை மையமாகக் கொண்ட கொடிய விளையாட்டாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவை தகவல்களுக்கு நஞ்சூட்டுகின்றன. எமது உலகளாவிய தகவற்சூழல் அமைப்பினைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள் உண்மை தொடர்பான ஒரு சிதைந்த சித்தரிப்பினையே கொடுக்கின்றன. ஊடகவியலாளர்கள் பற்றியும் சிதைந்த பிரதிபலிப்பினையே கொடுக்கின்றன. பிளவுடுத்துவதற்கும் மனங்களுக்குள் அடிப்படைவாதத்தை அதிகரிப்பதற்கும் ஏற்ற வகையில் சமூக ஊடகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தனது உரையில் தெரிவித்திருந்தார்.
Dmitrij Muratov – ரஸ்யா
நோபல் விருதினைப் பெற்ற மற்றொருவரான Dmitrij Muratov, ‘Novaya Gazeta’ (New Gazette’) எனும் ரஸ்ய சமூக அரசியல் பத்திரிகையின் பொறுப்பாசிரியர். நாட்டின் சமூக அரசியல் விவகாரங்கள் தொடர்பான விமர்சன மற்றும் விசாரணைச் செய்திகள், கட்டுரைகளால் இப்பத்திரிகை அறியப்பட்டிருக்கின்றது. 1993இல் தொடங்கப்பட்ட இப்பத்திரிகையின் பொறுப்பாசிரியராக செயற்பட்டு வந்திருக்கின்றார். சமகால ரஸ்யாவின் சுயாதீன – கொள்கை அடிப்படையிலான அதிகார எதிர்ப்பு பத்திரிகைகளில் முதன்மையானதாக இது கருதப்படுகின்றது. தொடங்கப்பட்டதிலிருந்து ஊழல், காவல்துறையின் வன்முறை, சட்டத்திற்குப் புறம்பான கைதுகள், தேர்தல் முறைகேடுகள் உட்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ விவகாரங்களை அம்பலப்படுத்தி வருகின்றது. அதிகம் பேசப்படாத விவகாரங்களைப் பேசுபொருளாக்குகின்ற விமர்சன மற்றும் விசாரணைக் கட்டுரைகளை அதிகம் பிரசுரித்து வருகின்றது. பத்திரிகையின் விமர்சனங்களுக்கான ஆளும் தரப்பின் பதிலாக அச்சுறுத்தல், வன்முறை, கொலைகளை எதிர்கொள்ளநேர்ந்திரக்கின்றது. பத்திரிகை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை 6 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செச்சேனியா போர் தொடர்பாக ஆட்சிபீடத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வந்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான Anna Politkovskaja 2006இல் கொல்லப்பட்டார். இத்தனை படுகொலைகள் நடந்தும் அதன் பொறுப்பாசிரியராக Muratov பத்திரிகையின் சுயாதீனத் தன்மையை விட்டுக்கொடுக்கவில்லை.
அசாஞ் பற்றி இவர்கள் இருவரும் தமது உரையில் ஒரு வரிகூடக் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருந்தால், அது நிச்சயம் உலகளாவிய கவனத்தைப் பெற்றிருக்கும். அவரின் கையளிப்பிற்கு எதிரானதும் விடுதலைக்கு ஆதரவானதுமான அரசியல் குறியீட்டு அளவிலான குரலாக அமைந்திருக்கும்.
அசாஞ் அமெரிக்க வல்லரசிற்கு எதிராக அல்லாமல், ரஸ்ய ஆட்சிபீடத்திற்கு எதிரான அம்பலப்படுத்தல்களைச் செய்திருப்பாராயின் நிச்சயம் நோபல் விருது வழங்கிக் கௌரவப்படுத்தப்பட்டிருப்பார் என்பதில் வியப்பில்லை.
விருதுக்கு அசாஞ் பரிந்துரை
அசாஞ்சிற்கு நோபல் விருது வழங்கப்படவேண்டுமென்ற குரல்களும் ஆங்காங்கே ஒலித்திருந்தன. Oslo Metropolitan University பத்திரிகை மற்றும் ஊடகவியல் ஆய்வுத்துறைப் பேராசிரியர் Rune Ottosen அசாஞ்சை நோபல் விருதுக்குப் பரிந்துரை செய்திருந்தார். பிரித்தானிய நீதிமன்றத் தகவல் மிகுந்த கவலைக்குரியது என்று தெரிவித்துள்ள அவர், ஊடகச் சுதந்திரத்திற்கும் கருத்துச்சுதந்திரத்திற்கும் இது மிகப்பெரிய பின்னடைவு என்றும் கருத்துரைத்துள்ளார். Muratov மற்றும் Ressa ஆகிய இருவரும் இந்த ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் விருதுக்குத் தகுதியானவர்கள் என நம்பும் Ottosen இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் தெரிவுக்குழுவின் நியாயப்படுத்தல் குறிப்புகளின் கீழ் அசாஞ்சும் பொருந்தக்கூடியவர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்றாவது நபராகவேனும் அசாஞ் தேர்வாகியிருக்கவேண்டுமென்றும் அவர் வாதிடுகின்றார்.
இந்த ஆண்டு அசாஞ் சமாதான நோபல் விருதினைப் பெற்றிருந்தால், மிகவும் கடினமான இன்றைய சூழ்நிலையில் அவருக்குத் தேவையான ஆதரவுத்தளத்தினை விருது விரிவுபடுத்தியிருக்கும். துணிகரமான ஊடகவியலாளர்களுக்கு ஆதரவும், பாதுகாப்பும் உள்ளது என்ற சமிக்ஞையை நோபல் விருதுக்குழு உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்க முடியும் என்கிறார்.
அசாஞ் நோபல் விருதுக்குத் தெரிவாகியிருந்தால் 2010ஆம் ஆண்டின் நிலையை ஒத்ததாக அது அமைந்திருக்கும். அந்த ஆண்டு சீன அரசின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துச் செயற்பட்டுவந்த மனித உரிமையாளர் Liu Xiaoboஇற்கு விருது வழங்கப்பட்டது. அவர் அப்போது சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த ஆண்டு அசாஞ்சிற்கு வழங்கப்பட்டிருந்தால் அதனையொத்த சூழல் மீண்டும் ஏற்பட்டிருக்கும். 2010இல் இந்த விருது வழங்கப்பட்டமைக்கு சீனா தனது கடுமையான எதிர்ப்பினை நோர்வேக்குத் தெரிவித்திருந்தது. அசாஞ் அமெரிக்காவிற்கு எதிரானவர் என்ற அடிப்படையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அமெரிக்க- நோர்வே உறவு பாதிக்கப்படக்கூடும். அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்று விளிக்கப்படுமளவிற்கு நோர்வே அமெரிக்க உறவு உள்ளது. நோபல் விருது என்பது முற்றுமுழுதாக அரசியல், அதிகார நலன்களுக்கு அப்பாற்பட்ட சுயாதீன வெளியினைக் கொண்டிருக்கின்றது எனச் சொல்லிவிட முடியாது.
அசாஞ் நவால்னுஜாக இருந்திருந்தால்…
பிரான்சிலிருந்து வெளிவரும் Le Monde Diplomatique சர்வதேசப்பதிப்பின் நவம்பர் இதழில் ஒரு கட்டுரையில், அதன் ஆசிரியர்களான Serge Halimi மற்றும் Pierre Rimbert ஆகிய இருவரும் ஒரு ஒப்பீட்டினைச் செய்துள்ளனர். ‘அசாஞ் நவால்னுஜாக இருந்திருந்தால்…’ என்பது அக்கட்டுரையின் தலைப்பு. மேற்கின் ஊடகங்கள் எவ்வாறு ஜூலியன் அசாஞ்சினையும் Aleksej Navalnyj இனையும் சித்தரிக்கின்றன, எத்தகையை இடத்தினை அவர்கள் பற்றிய கட்டுரைகள், செய்திகளுக்குக் கொடுக்கின்றன என்பது பற்றிய விரிவான ஒப்பீட்டுக் கட்டுரை அது.
Aleksej Navalnyj ரஸ்யாவைச் சேர்ந்த வழக்கறிஞரும் எதிர்ப்பரசியலாளருமாவார். ரஸ்ய ஆட்சிபீடத்திற்கு எதிராக இயங்கி வருபவர். அதற்காக ரஸ்ய அதிகார பீடத்தினால் அச்சுறுத்தல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் சிறைப்படுத்தல்களுக்கும் ஆளாகி வருபவர். அடிப்படையில் அசாஞ்சும் நவால்நுஜ்சும் ஒரே தளத்தில் இயங்கியவர்கள். இருவரும் அதிகார எதிர்ப்பாளர்கள். ஆனால் இங்கு ஊடகக் கவனக்குவிப்பு சார்ந்த பாரபட்சமானது, நவால்நுஜ்சினது ‘புதின் எதிர்ப்பு’ கூடுதல் மனிதத்தன்மை வாய்ந்ததாகப் பிரதிபலிக்கப்படுவதாகும்.
அதிகார மீறல்கள், ஊழல் நடவடிக்கைகளுக்கெதிராக மக்களை ஒன்றுதிரட்டுகின்ற சக்தியாகப் பார்க்கப்படுபவர். நாடாளுமன்றத்திற்கு வெளியிலான எதிர்ப்பரசியல் தலைவர்களில் முக்கியமானவராகப் பார்க்கப்படுபவர். 2000ஆம் ஆண்டிலிருந்து அரசியல் களத்தில் இயங்கி வருபவர். ஐரோப்பிய சார்பு மைய-இடதுசாரிக் கட்சியில் இணைந்து செயற்பட்டவர். வெளிநாட்டவர்களின் குடிவரவிற்கு எதிரான கடுமையான இனவாதக் கருத்துகளை வெளியிட்டதற்காக 2007இல் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்.
ஆயினும் பின்னர் 2013 காலப்பகுதியிலிருந்து, சமூக ஊடகங்களைத் தீவிரமாகப் பயன்படுத்தி எதிர்ப்பரசியல் செயற்பாடுகளைப் பரந்த அளவில் முன்னெடுத்து வந்தவர். ரஸ்ய ஆட்சிபீடத்தின் அதிகார- நிர்வாகத்தவறுகள் மற்றும் ஊழல்களை வலையொளி ஆவணங்கள் (Youtube Documentaries) மூலம் வெளிக்கொணர்ந்தவர். 2015/2016 காலப்பகுதியில் விளாமிடிர் புதினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட ஊழல் ஆவணங்களை வெளிக்கொணர்ந்ததாகக் கூறப்படுகின்றது. முக்கிய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் Dmitrij Medvedev உட்பட்டவர்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிடப்பட்ட ஆவணக் காட்சிகள் YouTube வலையொளித் தளத்தில் உலகளவில் 30 மில்லியன் பேரினால் பார்வையிடப்பட்டுள்ளது.
2008 ஜோர்ஜியா ஆயுத முரண்பாட்டில் ரஸ்யாவிற்கு ஆதரவாக நின்றவர். ரஸ்ய – உக்ரைன் முரண்பாட்டில் கிரிமியா (Crimea) மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நின்றவர். 2014 இல் இடம்பெற்ற கிரிமியா பொதுவாக்கெடுப்பு ரஸ்யாவிற்குச் சாதகமாகத் தவறாகக் கையாளப்பட்டதான கருத்தினை வெளியிட்டதோடு, உரிய சுயாதீனமான தேர்தல் கண்காணிப்புடன் பொதுவாக்கெடுப்பு புதிதாக மீளவும் நடாத்தப்படவேண்டுமென்ற கருத்தினை முன்வைத்தவர்.
2020 ஒரு பயணத்தின் போது விசமூட்டப்பட்ட நிலையில் ஜேர்மன் அரசின் உத்தரவின் பேரில் பர்லீனுக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவர் ரஸ்ய – ஐரோப்பிய ஒன்றிய உறவில் மேலும் விரிசலைக் கொண்டுவந்துள்ளது. 2021 ஜனவரி சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பின்னர் சிறையிலடைக்கப்பட்டார். முன்னரும் பல தடவைகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குசெய்து நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2012 – 2014 காலப்பகுதியில் இவர் ஏழு தடவைகள் கைது செய்யப்பட்டமையை, அரசியல் பன்மைத்துவத்தினை ஒடுக்கும் நடவடிக்கை என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கண்டித்திருந்தது.
மேற்கின் ஊடக அணுகுமுறையின் அரசியல்
Aleksej Navalnyj ஒரு துணிகர அதிகார எதிர்ப்பாளர் எனப் பல ஊடகங்கள் முக்கியப்படுத்தி கட்டுரைகளை எழுதுகின்றன. ஆசிரியர் தலையங்கங்கள் தீட்டப்பட்டுள்ளன. அசாஞ் மீதான அமெரிக்க சி.ஐ.ஏ கடத்தல் மற்றும் படுகொலைத் திட்டங்கள் தொடர்பான அம்பலப்படுத்தல் தகவல்களை உலக ஊடகங்கள் உரிய முறையில் கவனப்படுத்தவில்லை என்ற விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். அசாஞ் விவகாரத்தில் ஊடகங்கள் அப்படியல்ல. அவருடைய விடுதலை தொடர்பாக ஆதரவு தெரிவித்தும், அவரை அமெரிக்காவிடம் கையளிப்பது தொடர்பாகவும் கொள்கை ரீதியாக எதிர்த்தும் எழுதுகின்ற ஊடகங்களும் தனிப்பட்ட நபராக அவரையும், விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல் முறைமைகள், அவருடைய அரசியல் கூட்டுகள் தொடர்பாகப் பிரஸ்தாபிப்பது வழக்கமான ஒன்றாகும்.
சமகாலத்தில் இந்த இருவர் பற்றிய பாரபட்சம்மிக்க ஊடகக் கட்டுரைகள், ‘மனித உரிமைகள் மற்றும் ஊடகச்சுதந்திரம்’ ஆகிய சொல்லாடல்கள் எவ்வாறு வசதிக்கேற்ப நெகிழ்வுத்தன்மையுடன் (flexibility) கையாளப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மேற்கின் மிகப்பெரிய விழுமியங்களாக ஜனநாயகமும் ஊடகச்சுதந்திரமும் பிரஸ்தாபிக்கப்படுகின்ற புறநிலையில் அதன் போலித்தன்மையையே இவ்விருவர் பற்றிய ஊடகச்சித்தரிப்புகள் பிரதிபலிக்கின்றன.
பிரச்சார இயந்திரமும் பாரபட்சமும்
இதனைத்தான், எதிரிநாடுகளால் பாதிக்கப்பட்டவர்களையும், அமெரிக்காவினாலும் அதன் நேச சக்திகளினாலும் பாதிக்கப்பட்டவர்களையும் பிரச்சார இயந்திரம் பாரபட்சமாகக் கையாளுகின்றது என்று Noam Chomsky மற்றும் Edward S.Herman இணைந்து எழுதிய ‘Manufacuring Consent’ எனும் நூலில் குறிப்பிடுகின்றனர். வெகுஜன ஊடகங்களின் பொருளாதார அரசியல் பற்றிய நூல் அது. அதிகார மற்றும் பொருளாதார நலன்கள் செய்தியை வடிவமைப்பதில் எத்தகைய கணிசமான பங்காற்றுகின்றன, பிரச்சினைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, தலைப்புகள் எவ்வாறு தேர்வுசெய்யப்படுகின்றன என்பதைப் பகுப்பாய்வு செய்கின்றது. உலகைப் புரிந்து கொள்ளத் தேவையான தகவல்களை வழங்குதிலிருந்து அமெரிக்க வெகுஜன ஊடகங்கள் எவ்வாறு தோல்விகண்டன என்பதற்கான காத்திரமான மதிப்பீட்டினை உள்ளடக்கிய ஆய்வு நூல் அது. உண்மையைத் தேடுவது தொடர்பான பத்திரிகைகளின் வழக்கமான பிம்பத்திற்கு மாறாக, ஒரு அடிப்படையான உயரடுக்கு ஒருமித்த கருத்தோடு எவ்வாறு செய்திகளின் அனைத்து அம்சங்களையும் பரவலாகக் கட்டமைக்கிறது என்பதை விபரிக்கின்றனர்.
2010இல் அமெரிக்க Time இதழ் அந்த ஆண்டின் நபராக அசாஞ்சினைத் தெரிவுசெய்திருந்தது. 2016இல் ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்களை வீக்கிலீக்ஸ் வெளியிட்டதையடுத்து, அமெரிக்க மேற்கின் ஊடகங்கள் அசாஞ் மீதான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கின. குறிப்பாக இந்த மின்னஞ்சல் பிரசுரிப்பிற்குப் பின்னால் ரஸ்ய புலனாய்வுத்துறை இயங்கியிருந்ததான தகவல்களும் உள்ளன.
அசாஞ் தொடர்பான மனித உரிமை சிறப்பு அறிக்கை
சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் Nils Melzer அசாஞ்சை பிரித்தானியச் சிறையில் சென்று பார்வையிட்டுள்ளார். அசாஞ் நிரந்தர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுமுள்ளார். அசாஞ் விவகாரம் தொடர்பான தனது விசாரணைகளை மையமாகக் கொண்டு புத்தகம் ஒன்றினையும் அவர் எழுதியுள்ளார். அமெரிக்காவும் பிரித்தானியாவும் கூட்டாக ‘உண்மையைக் குற்றவியலாக்கியுள்ளன’ என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை சுவீடன் நீதித்துறை மீதும் அவர் விமர்சனத்தினை முன்வைத்துள்ளார். அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு கோரிய காலத்தை விட, அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டிருந்தமையானது, அசாஞ் மீது அவதூறு பரப்பும் நோக்கிலானது என்றும் அவர் பதிவுசெய்துள்ளதாக ஊடகத் தகவல் ஒன்றில் அறியக்கிடைக்கிறது.
அமெரிக்காவில் சட்டவிதிகளுக்கு ஏற்ப நீதியான விசாரணைகள், வழக்கு மற்றும் சிறைப்படுத்தல் நிகழும் என்பதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. சி.ஐ.ஏ கடத்தல், படுகொலைத் திட்டம் அதற்கான அண்மைய உதாரணம். ஆமெரிக்க சிறை உத்தரவாதங்களை விசாரணை செய்து அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச சபை (Amnesty International), அவை திருப்தியளிக்கும் சூழலில் இல்லை எனத் தெரிவித்துள்ளது. எனவே அசாஞ் நிச்சயம் அமெரிக்கச் சிறைகளில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவார்.
வழக்கு – தீர்ப்பு – பலம் – பலவீனம்
அசாஞ் வழக்கு விவகாரத்தில், அமெரிக்கா தனது இலக்கில் ஒருபடி முன்னேறியுள்ளது. முந்தைய தீர்ப்பில் அசாஞ்சின் சிறைப்படுத்தல் சூழல் அவரைத் தற்கொலைக்கு இட்டுச்செல்லாத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுத்தப்படுவதற்கு நீதிமன்றம் இடம் கொடுக்கவில்லை என்ற அடிப்படையில் அமெரிக்காவின் மேன்முறையீடு அமைந்திருந்தது. முந்தைய தீர்ப்பு அடிப்படையில் மிகப் பலவீனமானது. கையளிப்பிற்கு எதிராக மிக நியாயமான பல வாதங்கள் இருந்தபோதிலும், அசாஞ்சின் உள-உடல் நிலையை முன்னிலைப்படுத்தி தற்கொலைக்கான ஆபத்தினை முதன்மைக்காரணமாகக் கூறித் தீர்ப்பு வழங்கியமை பலவீனமான தீர்ப்பு. இதன் அத்தீர்ப்பின் மறைமுகமான பொருள், உள-உடல் நிலை சீராக இருந்தால் கையளிக்கப்படலாம் என்பதாகும். இன்னொரு வகையில் அவர் குற்றவாளி என்று ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்ப்பு அதுவாகும்.
அமெரிக்க மொழியியல் அறிஞரும் விமர்சகருமான Noam Chomsky முந்தைய தீர்ப்புத் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை. அல்ஜசீரா ஊடகத்திற்கு அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். அதனை மீள் நினைவூட்டுவது பொருத்தமுடையது.
‘அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனமான சிறைவாச முறைமைக்குள் அசாஞ் அனுப்பப்படப் போவதில்லை என்ற நிகழ்வு கொண்டாடத்தக்கது. ஆனால் மீதியனைத்தும் ஒரு பேரழிவு. இந்தத் தீர்ப்பு பைடன் நிர்வாகத்திற்கு ஒரு பரிசாக அமைந்திருக்கிறது. சர்வதேச வழக்கு ஒன்றின் பொறுப்பைச் சுமப்பதிலிருந்து அவர்கள் தப்பிக் கொள்கின்றனர்.
ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவராக அசாஞ் முத்திரை குத்தப்பட்டுள்ளார். இது எத்தகைய வேடிக்கையானது என்பதோடு, அவரது தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்களால் நிராகரிக்கப்பட்டபோதும், இத்தீர்ப்பு அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு ஒரு சட்டரீதியான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது. அந்த அங்கீகாரத்தின் விளைவு, எதிர்காலத்தில் அதிகார மையங்கள் மூடிமறைக்க விரும்பும் அரசுகளின் குற்றவியல் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த முனையும் ஒருவரை ஒதுங்கவைப்பதற்கான அங்கீகாரத்தையும் வழங்குகின்றது’
கையளிப்பானது, மனிதஉரிமைச் சாசன மீறல் என்றோ, ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றோ, நீதிக்குப் புறம்பானது என்றோ தீர்ப்பு வழங்கப்படவில்லை. அசாஞ் வழக்கினை பிரித்தானிய நீதித்துறை நீதியாகக் கையாளவில்லை என்பதையே Noam Chomskyஇன் கருத்து வலியுறுத்துகின்றது. ஆவணக் கசிவுகள், இரகசியத் தகவல்களை அடிப்படையாகக் கொண்ட ‘விசாரணை ஊடகவியல் செயற்பாடுகளுக்கு’ மிக மோசமான விளைவை ஏற்படுத்துவதாகவும் வரலாற்று இழிவாகவும் இந்தத் தீர்ப்பு கணிக்கப்படுகின்றது. கையளிப்புக்கு சாதகமான சமிக்ஞையை பிரித்தானிய வழங்கியுள்ள இன்றைய சூழலில், அம்முடிவுக்கு எதிரானதும் அசாஞ்சின் விடுதலையை வலியுறுத்தியதுமான கருத்தியல் போராட்டங்கள் பரந்த அளவில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தி மனிதஉரிமைகள் மற்றும் ஊடகக் குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் உள்ளன.
காக்கைச் சிறகினிலே
ஜனவரி 2022