நோர்வே அரசியல்: பெண்களின் பிரதிநிதித்துவமும் பாலின சமத்துவமும் -ஒரு வரலாற்றுப் பார்வை! பகுதி 1

1970 – 1990 வரையான இருபதாண்டுக் காலப்பகுதியிலேயே நோர்வே அரசியலில் அதி முக்கியத்துவம் பெற்ற காலமென வரையறுக்கப்படுகின்றது. அதற்கு முன்னர் கிட்டத்தட்டப் பிரசன்னம் இல்லாமலிருந்த நிலையிலிருந்து மக்களால் தேர்நதெடுப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்புகளுகள், பொதுச் செயற் குழுக்களுக்குள் பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரவேசிக்கின்றனர். இதனை ஆய்வுத் துறையில் Critical mass அல்லது Critical volume என்பர்.

இந்த ஆண்டு (2021) நாடாளுமன்றத்தில் முதலாவது பெண் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்ட 100வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. நூற்றாண்டு அடையாப்படுத்தல்களில் ஒரு அம்சமாக நோர்வே நாடாளுமன்ற வளாகத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் கோடைகாலம் முழுவதும் பொதுமக்கள் காணும் வகையில் அக்கண்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த அடையாளப்படுத்தல் என்பது இரண்டு நோக்குநிலைகளில் அணுகப்படுகின்றது. ஒன்று பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவ பங்கேற்பின் முன்னோடிகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் நினைவுகூர்தல் என்பது. மற்றையது பெண்களின் உரிமைகள், நலன்கள், பிரதிநிதித்துவம் சார்ந்து இன்னும் அடைய வேண்டிய இலக்குககள் பற்றிய விழிப்புணர்வினை வலியுறுத்துதல் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

1921ஆம் ஆண்டில் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த Karen Platou என்பவர் முதன்முதலில் நாடாளுமன்றப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கட்டட வடிவமைப்பாளரும் தொழிலதிபருமாவார். அத்தோடு சமூக விவாதங்களில் தீவிரமாக இயங்கிவந்ததோடு சொற்பொழிவாளராகவும் இருந்தவர்.

நாடாளுமன்றத்தில் 45 வீதம் பெண் பிரதிநிதிகள்
169 உறுப்பினர்களைக் கொண்ட நோர்வே நாடாளுமன்றத்திற்கான இந்த ஆண்டு (செப்ரெம்பர் 13, 2021) இடம்பெற்ற தேர்தலில் 76 உறுப்பினர்கள் பெண்கள். அதாவது 45 வீதம். அதிலும் தொழிற்கட்சி, மற்றும் இடதுசாரி நிலைப்பாடுள்ள கட்சிகளிலிருந்து கூடுதலான பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் சென்றுள்ளனர். சோசலிச இடதுசாரிக்கட்சி, சிவப்புக்கட்சி, பசுமைக்கட்சி ஆகியனவற்றிலிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள். தொழிற்கட்சி, மத்திய கட்சி மற்றும் வலதுசாரிக்கட்சி ஆகியனவற்றில் 50 வீதமானவர்கள் பெண்களாவர். ஐவர் வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்டவர்கள். ஒருவர் தமிழ்ப் பின்னணியுடையவர்.

நோர்வேயில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலும், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநகர- உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடைபெறுகின்றன. இறுதியாக 2019இல் மாநகர மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலும், இந்த ஆண்டு செப்ரெம்பர் 13 நாடாளுமன்றத் தேர்தலும் இடம்பெற்றது. இன்னொரு வகையில் சொல்வதானால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நோர்வே மக்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

பெண் அரசியல் தலைமைத்துவம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2017) தெரிவுசெய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் 41 வீதம். இம்முறை 4 வீதத்தால் அதிகரித்துள்ளது. மட்டுமல்லாமல் முக்கிய பல கட்சிகள் பெண் தலைமைத்துவத்தினைக் கொண்டிருந்திருக்கின்றன. தொழிற்கட்சி, சோசலிச இடதுசாரிக் கட்சி ஆகியனவற்றின் சமகாலத் தலைவர்கள் ஆண்கள் எனும்போதும் அக்கட்சிகளின் ஆளுமைமிகு தலைவர்களாக முன்னர் முறையே Gro Harlem Brundtland மற்றும் Kristin Halvorsen ஆகியோர் இருந்துள்ளனர். பல கட்சிகளின் சமகாலத்தலைவர்களும் துணைத் தலைவர்களும் பெண்களாக உள்ளனர். இவற்றின் தற்போதைய துணைத்தலைவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் 45 வீதம் பெண்களாகவும் அதேவேளை புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக 53 வீதம் பெண்கள் உள்ளனர். கடந்த 14.10.21 புதிய கூட்டணி (தொழிற்கட்சி, மத்தியகட்சி) அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 19 அமைச்சர்களில் 10 அமைச்சர்கள் பெண்கள்.

இன்றைய நிலை எட்டப்படுவதற்குப் பின்னால் நூற்றாண்டுகளுக்கு மேலான போராட்டங்கள், விழிப்புணர்வுகள் இருக்கின்றன. படிப்படியான சிறியசிறிய மாற்றங்கள் இருக்கின்றன. சட்ட ரீதியான தீர்மானங்கள் உள்ளன. 1800களின் இறுதியில்தான் பெண்களுக்கான வாக்குரிமை பேசுபொருளானது. வாக்குரிமை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட மூன்று தசாப்தங்கள் எடுத்தன. 1913இல் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். இன்றைய நிலையில் நோர்வே அரசாங்கத்தில், அரசியலில், ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தில் பெண்கள் எந்தவொரு அதிகாரம்மிக்க பதவிகளையும் கொண்டிருக்க முடிகிறது. 1981இல் தொழிற்கட்சியைச் சேர்ந்த Gro Harlem Brundtland நோர்வேயின் முதலாவது தலைமை அமைச்சர் ஆனார். இரண்டாவது பெண் தலைமை அமைச்சராக வலதுசாரிக்கட்சியைச் சேர்ந்த Erna Solberg 2013 தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டார். 2021வரை இரண்டு முறை அவர்தான் தலைமை அமைச்சராக பதிவியில் இருந்தார். 1981இல் முதலாவது பெண் தலைமை அமைச்சரானதிலிருந்து 2013 வரையான 32 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் இன்னொரு பெண் தலைமை அமைச்சரை நோர்வே காண நேர்ந்தது. கடந்த 40 ஆண்டுகளில் பல தடவைகள் தலைமை அமைச்சர்களாகவும் நீண்ட காலங்கள் கட்சித்தலைமையாகவும் இருந்த-இருக்கின்ற பெரிய தலைமைத்துவ ஆளுமைகளாக இவர்கள் இருவருமே விளங்குகின்றனர்.

நோர்வே அரசியலில், குறிப்பாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ அரசியலில் பெண்களின் பங்கேற்பின் வரவாற்றுப் பின்னணி, பரிணாம வளர்ச்சி, அதிகாரம் மிக்க பதவிகள், செயற்குழுக்களில் அவர்களுக்கான இடம் மற்றும் சமகால நிலைமை தொடர்பான பார்வையை உள்ளடக்கியதாக இக்கட்டுரை அமைகின்றது.

பாலின சமத்துவத்திற்கான திருப்புமுனை
நாடாளுமன்றப் பிரவேசம் நூறாண்டுக்கு முன் நிகழ்ந்தது என்ற போதும், 1970களின் தொடக்கத்திலேயே நோர்வே அரசியலில் ஒரு திருப்புமுனை நிகழத்தொடங்குகிறது. இக்காலப்பகுதியிலேயே பெண்களும் பெண்கள் விவகாரங்களும் அரசியலில் கவனயீர்ப்பினைப் பெறத்தொடங்கியது. பலர் அரசியலில் ஈடுபடத்தொடங்கியதோடு பிரதிநிதிகளாகத் தெரிவாகுகின்றனர். பெண்களின் பிரச்சினைகளும் பாலின சமஉரிமை தொடர்பான பல்வேறு விவகாரங்களும் புதிய அரசியல் பரிமாணத்தையும் கவனக்குவிப்பினையும் பெறுகின்றன. அரசியல் நிகழ்ச்சி நிரலில் முக்கியத்தும் பெறத்தொடங்குகின்றன.

இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் 1970 – 1990 வரையான இருபதாண்டுக் காலப்பகுதியிலேயே நோர்வே அரசியலில் அதி முக்கியத்துவம் பெற்ற காலமென வரையறுக்கப்படுகின்றது. அதற்கு முன்னர் கிட்டத்தட்டப் பிரசன்னம் இல்லாமலிருந்த நிலையிலிருந்து மக்களால் தேர்நதெடுப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்புகளுகள், பொதுச் செயற் குழுக்களுக்குள் பெண்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரவேசிக்கின்றனர். இதனை ஆய்வுத் துறையில் Critical mass அல்லது Critical volume என்பர். அதாவது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அமைப்பு அல்லது பொருளாதார செயற்பாட்டுத் தளங்களில் முன்னர் சிறுபான்மையாகவிருந்த பிரிவினர், திடீரெனக் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பிரிதிநிதித்துவத்தைப் பெறுவது Critical volume எனப்படுகிறது. நோர்வே அரசியிலில் 80களின் நடுப்பகுதியில் அதுவே நிகழ்ந்தது. 1980 இன் நடுப்பகுதியில் பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் உச்சம் பெற்றது. அதுவும் குறிப்பாக 1986இல் Gro Harlem Brundtland தலைமை அமைச்சரானதும் அவர் தலைமையில் பெண்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்கம் அமைந்தமையையும் குறிப்பிடலாம்.

முதற் பெண் தலைமை அமைச்சரும் ‘பெண் அரசாங்கமும்’
Gro Harlem அடிப்படையில் மருத்துவர். மூன்று முறை தலைமை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். முதலில் 1981இல் எட்டு மாதங்களும் பின்னர் 1986 – 1989 வரையான நான்காண்டுகளும், இறுதியாக 1990 – 1996 வரையான காலப்பகுதிகளிலும் தலைமை அமைச்சராக இருந்தவர். மூன்று அடிப்படைகளில் இவர் ‘முதற்பெண்’ என நோர்வே அரசியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றார். தொழிற்கட்சியின் முதலாவது பெண் தலைவர், முதலாவது தலைமை அமைச்சர், முதலாவது ‘பெண் அரசாங்கத்தை’ அமைத்தவர் என்பன அந்து மூன்று அடிப்படைகளுமாகும். அரசாங்கத்தின் 18 அமைச்சர்களில் 8 பேர் பெண்கள். 40 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் என்ற இலக்கு முதன்முறையாகச் சாத்தியமானது. அதனையே பெண் அரசாங்கம் என்பது இங்கு குறிக்கின்றது.

இவருடைய தாய், தந்தை, சகோதரர்கள் உட்பட்ட பலரும் அரசியலில் இயங்கியவர்கள். இவரும் இளமையிலிருந்து மாணவ இயக்கம், தொழிற்கட்சியின் இளைஞர் பிரிவு போன்றவற்றில் தலைமைப் பொறுப்பினை வகித்தவர். 1975 – 1981 வரை தொழிற்கட்சியின் துணைத்தலைவராகவும், 1981 – 1992 வரை அதன் தலைமைப் பொறுப்பிலும் இருந்தவர். கட்சித்தலைமையைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் 5 ஆண்டுகள் சூழற்பாதுகாப்பு அமைச்சராகச்; செயற்பட்டிருந்தார். தொழிற்கட்சியை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தியவர்.

அத்தோடு சோசலிச ஜனநாயக ஆட்சிமுறைமையைத் திடப்படுத்தியதிலும் இவருடைய பங்கு முக்கியமானது. 1980களின் பின்னர் நோர்வேயில் தனிப்பெரும்பான்மை அரசாங்கங்கங்கள் அமையப் பெறவில்லை. சிறுபான்மை அரசாங்கங்களும் பல கட்சிகளின் கூட்டணி அரசாங்கங்களுமே அமைந்து வந்துள்ளன. அந்த வகையில் அரசாங்கங்கள் பெரும்பாலும் ஏனைய கட்சிகளின் ஆதரவினைப் பெற்றே ஆட்சியை நடாத்தியுள்ளன. அதாவது வரவு-செலவுத் திட்ட அங்கீகாரத்திற்கு மத்திய கட்சி, கிறிஸ்தவ மக்கள் கட்சி, சோசலிச இடதுசாரிக்கட்சி ஆகியனவற்றின் ஆதரவினையும், ஐரோப்பிய ஒன்றிய கூட்டுச்செயற்பாடுகள், சந்தை விவகாரங்களுக்கு வலதுசாரிக்கட்சி மற்றும் முன்னேற்றக் கட்சியின் ஆதரவு என அவரது ஆட்சிக்காலத்தில் வெவ்வேறு அரசியல் தீர்மானங்களுக்கு வெவ்வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

சர்வதேச மட்டத்தில் Gro Harlem
நோர்வேயை ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளக பொருளாதாரச் சந்தைக்குள் அதன் ‘European Economic Area’ உடன்படிக்கை ஊடாக இணைத்தவர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான நோர்வேயின் உறுப்புரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியவர். 1994இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு மூலம், இணைவதில்லை என்ற முடிவு எட்டப்பட்டது.

ஐ.நாவின் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான உலக ஆணையத்தின் தலைவராகச் செயற்பட்டதன் மூலம் World Commission on Environment and Development (1983- 1987) சர்வதேச ரீதியாகவும் ஆரம்பத்தில் அறியப்பட்டார். 1998 இலிருந்து 2003 வரை உலக சுகாதார அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருந்த காலகட்டத்தில் இந்த அமைப்பினை மறுசீரமைப்புக்கு உட்படுத்தியதில் இவருடைய பங்கு விதந்துரைக்கப்படுகிறது. அத்தோடு மதுபான மற்றும் புகைத்தல்பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்துவதனூடாக உடல்நலப் பிரச்சினைகளை முன்தடுப்பது தொடர்பான கவனக்குவிப்பினை ஏற்படுத்தியிருந்தார்.
நோர்வேயில் Brundtland அரசாங்கத்திற்கு முன்னர் வரலாற்றில் ஒருபோதும் 25 வீதத்திற்கு மேல் பெண் உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கவில்லை. அதற்குப் பின்னர் ஒருபோதும் 40 வீதத்திற்குக் குறையவுமில்லை. அதன் பொருள் சகல துறைகளிலும் நோர்வேயில் ஆண் – பெண் சமத்துவம் மேலோங்கியுள்ளது என்பதல்ல. ஆனால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெண்கள் முன்னிலையில் இருந்து வந்துள்ளனர்.

அரசியல் நிகழ்ச்சிநிரலில் பெண்ணுரிமை, பாலின சமத்துவம்
1800களின் இறுதிப்பகுதி பெண்ணுரிமை, பாலின சமத்துவம் சார்ந்த பேசுபொருட்கள் கலை, இலக்கிய, பண்பாட்டு மற்றும் அரசியல் தளங்களில் நிகழ்ச்சி நிரலுக்கு வரத்தொடங்குகிறது. பெண்ணிய இலக்கியப் படைப்புகளின் முக்கிய தொடக்கமாக இப்சனின் பொம்மை வீடு பார்க்கப்படுகிறது. ‘Norwegian Association for Women’s Rights (Norsk Kvinnesaksforening) – நோர்வேஜிய பெண்கள் விவகார அமைப்பு’ 1884இல் உருவாக்கப்படுகிறது. இதுவே இன்றுள்ள பெண்கள் அமைப்புகளில் காலத்தால் முன்னோடியானது. ஆண்களுக்கு நிகரான உரிமைகளைப் பெண்களும் கொண்டிருத்தல் என்பது இவ்வமைப்பின் அடிப்படைக் கொள்கை. பெண்களை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்துகின்ற – அவர்களின் சமவுரிமைகளைத் தடுக்கின்ற சட்டங்கள் – சமூக ஒழுங்குமுறைகள், அணுகுமுறைகளுக்குத் துணைபோகின்ற – அவற்றைப் பேணுகின்ற அனைத்துச் சிந்தனைகள், செயற்பாடுகள், கட்டமைப்புகளுக்கு எதிராகச் செயற்படுவதை இலக்காகக் கொண்டிருக்கின்றது.

பெண்கள் விவகார அமைப்பின் போராட்டங்கள்
இந்த அமைப்பு 1884இல் இருந்து படிப்படியாக பாலின சமவுரிமைக்கான போராட்டங்களை நகர்த்திவந்துள்ளது. அரச நிறுவனத்திலும் சட்டத்திலும் பாலின சமத்துவம் சார்ந்த விவகாரங்கள் தாக்கம் பெறுவதற்கும் முன்னுரிமை பெறுவதற்கும் வழிகோலியுள்ளது. பெண்களுக்கான வாக்குரிமை, கல்விவாய்ப்பு, தொழில்வாய்ப்பு, அரசியல் பங்கேற்பும் பிரதிநிதித்துவமும், பாலின சமவுரிமைச் சட்டம், சமவுரிமை முறையீட்டு வாரியம் என்பன நோர்வேஜிய பெண்கள் விவகார அமைப்பின் போராட்ட வெற்றிகளில் சிலவாகும்.
பெண் தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டனர். பெண்கள் தமது உடமைகள் மீதான முடிவெடுக்கும் உரிமையையும் அதிகாரத்தையும் பெறத்தொடங்கினர். ஆண்களைப் போல பாரம்பரியசொத்துரிமைக்கான உரித்தினையும் பெறுகின்றனர். வணிகம், கைத்தொழில் உட்பட்ட வேறுபல தொழில்களுக்குரிய வாய்ப்புகளையும் பெறுகின்றனர். படிப்படியாக உயர்கல்வி வாய்ப்புகள் அமைகின்றன.

இன்றுவரை ‘நோர்வே பெண்கள் விவகார அமைப்பு’ உண்மையான ஆண்-பெண் சமத்துவத்தினை நோக்கித் தாக்கம்செலுத்துவதில் முக்கிய வகிபாகத்தினைக் கொண்டுள்ளது. குறிப்பாக பெண்கள் உரிமைகள் தொடர்பான ஐ.நா உடன்படிக்கை பேணப்படுவதை உறுதிப்படுத்துகின்ற, பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்கள், கல்வி மற்றும் தொழிற்துறையில் சமவாய்ப்பு, பெண்கள் சார்ந்த முன்னோக்கினை சர்வதேச நிறுவனங்கள்-வெளியுறவு அரசியல்-சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது.

1814இல் நோர்வே அரசியல் யாப்பு எழுதப்பட்டது. அதிற்கூட பெண் ஒடுக்குமுறை என வரையறுக்கக்கூடிய சரத்துகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆண்களைவிட வேறுபட்ட விழுமியங்களையும் நலன்களையும் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதாக பாலின சமத்துவ விவாதம் முன்னெடுக்கப்பட்டுவந்தது. அதாவது ஆண்களும் பெண்களும் தத்தமக்குரிய தனித்துவ வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதாகும்.

பாடசாலை நிர்வாகத்தில் பெண்களும் தெரிவுசெய்யப்படலாம் என்ற சட்டம் 1889 இல் கொண்டுவரப்பட்டது. 1986இல் தான் முதன்முதலில் அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமுலுக்கு வருகின்றது. நகரசபைகளுக்கான தேர்தலில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களில் ஒருவர் அல்லது இருவர் பெண்களாக இருத்தல் வேண்டும் என்பதே அச்சட்டம். அதனைப் பாலின இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் முதலாவது சட்டஅமுலாக்கம் எனலாம்.

வாக்குரிமை
இன்னுமொரு முக்கிய அடைவு பெண்களுக்கான வாக்குரிமையாகும். இது மூன்று தசாப்த கால அரசியல் போராட்டத்தின் பின்பே சாத்தியமாகியிருக்கிறது. 1886 இல் முதன் முதலாக பெண்களுக்கான வாக்குரிமை தொடர்பான கோரிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 27 ஆண்டுகளின் பின்னர் 1913இல் பெண்களுக்கான வாக்குரிமைக்குச் சட்ட அங்கீகாரம் கிட்டியது. அதன் பின்னர் ஆண்கள் போல தேர்தலில் போட்டியிடவும் தெரிவுசெய்யப்படவுமான சமவுரிமை நடைமுறைச் சாத்தியமாகியது. ஆனபோதும் வாக்குரிமை கிடைக்கப்பெற்றதையடுத்த 20 ஆண்டுகளின் பின்னரே ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் வாக்களிக்கத் தொடங்கினர். பிரதிநிதிகளாகத் தேர்தல்களில் பங்கேற்கின்ற, தெரிவுசெய்யப்படுகின்ற நிலைமைகள் தொடர்ச்சியாக மந்தமாகவே இருந்து வந்தன.

பெண்களுக்கான அரசியல் சமூக பொருளாதார உரிமைகள் சார்ந்த சட்ட உருவாக்கங்கள் முக்கியத்துவம் பெற்ற காலம் 1880 இலிருந்து முதலாம் உலக யுத்தம் வரையான காலமாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தலிலேயே 5 வீதத்திற்குச் சற்று அதிகமான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். 1973 தேர்தலிலேயே 10 வீதத்தை எட்டியது. நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் போக்கு மேற்சொன்னபடி இருந்தது. இதனையொத்த நிலைமையே நகரசபைப் பிரதிநிதித்துவத்திலும் நிலவிவந்தது.

ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் பாரிய இடைவெளியுடன் உரிமை சார்ந்த வளர்ச்சியும் அதற்கான அரசியல் இணைவாக்க ஓட்டமும் நிகழ்ந்தது. 1800களின் பிற்பகுதியில் நிறுவனமயப்பட்ட உயரடுக்குகளுக்கு வெளியிலான ஆண்கள் அதிகாரம் மிக்க பதவிகளைப் பரவலாகப் பெறத்தொடங்கினர். தொழில்முறை வேலை, தொழில்முறை அமைப்புகள், தலைமைத்துவ மேலாண்மை வழியாக தொழிற்சந்தையிலும், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள் மூலம் சிவில் சமூகத்திலும், அரசியல் பிரதிநிதித்துவம் நிர்வாக அதிகாரம் மூலம் அரசிலும் பதவிகளை ஆண்கள் அதிகம் பெறத்தொடங்கினர். ஆனால் பெண்களின் நிலைமை வேறாக இருந்தது. 1800களின் இறுதியிலிருந்து 1970 வரையான நூறாண்டுகள் சிவில் சமூக தன்னார்வ நிறுவனங்கள் மட்டுமே பெண்களுக்கான அரசியல் அரங்குகளாக இருந்துள்ளன.

இல்லத்தரசிகள் சங்கம்
‘The Housewives’ Association – இல்லத்தரசிகள் சங்கம்’ பெண்களினதும் இல்லத்தரசிகளினதும் நலன்களை முன்னிறுத்தியதோடு, பெண்களின் கல்வி மற்றும் அரசியல் பங்கேற்பிற்காகவும் செயற்பட்டது. அரச நிர்வாகம் மற்றும் தொழிற்சந்தையில் அதிகாரமும் செல்வாக்குமென்று நோக்குமிடத்து பெண்கள் அரிதாகவே இருந்தனர். இவற்றில் பெண்களைப் பொறுத்தவரையில் மறைமுகமான – பொதுவெளிக்குப் புலப்படாத வகையிலான செல்லாக்கினை ஆண்கள், தந்தைமார், கணவன்மார், சகோதரர்கள், நண்பர்களூடாகச் செலுத்த முடிந்தமை ஒரு பாரம்பரியமான வழிமுறையாக இருந்து வந்தது.

தாய் வீடு,
நவம்பர் 2021
தினக்குரல்
டிசம்பர் 2021

Leave A Reply