பாரிஸ் தாக்குதல்: அமெரிக்காவின் “பயங்கரவாத்திற்கு எதிரான போரின்” தோற்றுப்போன அணுகுமுறை!

தனக்குத் தேவைப்படும் போது கிளர்ச்சியாளர்கள் எனச் சித்தரிப்பதும், தனக்குச் சவாலாக தலையெடுக்கும் போது பயங்கரவாதிகளென்று சொல்வதொன்றும் அமெரிக்காவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் புதிதல்ல. அமெரிக்கா உட்பட்ட அதிகார சக்திகள் அடிப்படைவாத ஆயுதக்குழுக்களை எப்படிக் கருவிகளாகக் கையாள்கின்றன என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமது பூகோள-பொருளாதார-அதிகார நலன்களை மீளுறுதிப்படுத்தவும், மேலோங்கச் செய்யவும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வது வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து வருவதொன்றே. அமெரிக்கா மத்திய கிழக்கில் கையாள்வதும் இதுவென்பது கண்கூடு.

2015 நவம்பர் 13ம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 140 பேர் பலியாக்கப்பட்டு, 400 பேர் வரை காயமடைந்து, 100 பேர் வரை படுகாயமடைந்தனர். 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுமிருந்தனர். பாரிஸ் நகரத்தின் பல பகுதிகளில் வார இறுதிக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருந்த மக்கள், மற்றும் ஒரு இசை நிகழ்ச்சி அரங்கத்தில் குழுமியிருந்த மக்களுமாக 140 வரையானவர்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதே ஆண்டு ஜனவரியில் பிரான்சின் Charlie Hebdo வாரப்பத்திரிகை அலுவலகத்தில் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டதில் அந்த ஊடகத்தின் பணியாளர்களில் 11 பேர் கொல்லப்பட்டு 11 பேர் வரை காயமடைந்தனர். ஊடக நிறுவனக் கட்டடத்திற்கு வெளியில் ஒரு காவல்துறையினனும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. ஒரு வருடத்தில் பாரிசில் நடாத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

“செப்ரெம்பர் 11” இற்குப் பின்னர் உலக நாடுகளை அணிதிரட்டிய அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பிரகடனமும் அதன் இராணுவ மேலாதிக்க அணுகுமுறையும் உலக ஒழுங்கினைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா என நீள்கிறது பயங்கரவாதத்திற்கெதிரான போர்முனைப்பு. 14 ஆண்டுகளைக் கடந்து அது முடிவில்லாத திசைவழி செலுத்தப்படுகின்றது. பாரிஸ் தாக்குதலும் அதன் நேரடி விளைவுகளில் ஒன்றே.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரென்ற இந்த “லேபல்” விடுதலைப் போராட்டங்கள் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தவும், அடக்குமுறை அரசுகள் அந்த லேபலை பயன்படுத்தி வெற்றிகரமாகப் போரை நகர்த்தவும், விடுதலைப் போராட்டத்தை பூண்டோடு அழிக்கவும் வாய்ப்பளித்தது. இதற்கு ஈழ விடுதலைப் போராட்டம் உதாரணமாய்ப் போயிற்று. அதேவேளை அல்-ஹைடா, ஐ.எஸ் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்ததும் வளர்த்ததும் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளுமே.

2012இல் சிரியாவின் Assad ஆட்சிபீடத்தைப் பலவீனப்படுத்தும் இலக்கிற்காக, Assad இற்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் மற்றும் போர்ப்பயிற்சியை வழங்கத்தொடங்கியது என்பது பகிரங்கமான தகவல். ஆனால் இந்தக்குழுக்களில் ஐ.எஸ் அமைப்பும் அடக்கம் என்பது பரவலாக வெளித்தெரியாத உண்மை. 2014 நடுப்பகுதியில் ஈராக்கின் பெருநகரங்களை ஐ.எஸ் அதிரடியாகக் கைப்பற்றியதையடுத்தே, அமெரிக்காவும் மேற்குலகமும் சுதாகரித்துக்கொண்டு அதற்கெதிரான பெருமெடுப்பிலான போருக்குத் தயாராகின. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட்ட நாடுகள் கூட்டாகக் களமிறங்கின.

இந்த ஆண்டு (2015) செப்ரெம்பர் இறுதியிலிருந்து ரஸ்யாவும் களத்தில் இறங்கியது. ஆனால் ரஸ்யாவும் “பயங்கரவாதத்திற்கு எதிரான” என்ற அமெரிக்காவின் கோஷத்தைத் தத்தெடுத்துத், தனது நலன்களுக்குச் சாதகமாகவும், அதேவேளை Assad ஆட்சிபீடத்திற்கு ஆதரவாகவும் காய்களை நகர்த்துகின்றது.

அமெரிக்காவும் மேற்கும் இஸ்லாமிய கடும்போக்கு சக்திகளை எவ்வாறு கையாண்டன என்பதற்கு எடுத்துக்காட்டாக 1980களில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்காவின் CIA ஆப்கானிஸ்தானில் அல்-ஹைடாவை உருவாக்கியதை நினைவுபடுத்திக் கொள்ளமுடியும். 2003இல் ஈராக்கை ஆக்கிரமித்த பின்னர் சதாம் உசேனைப் பலவீனப்படுத்துதவற்கு அங்குள்ள சியா மற்றும் சன்னி இஸ்லாமியப் பிரிவுகளுக்கிடையில் குழுவாத முரண்பாட்டினைக் கூர்மைப்படுத்தியும் அமெரிக்கா அதில் இலாபமடைந்தது.

2011இல் லிபியா மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடாத்தி கடாபி ஆட்சிபீடத்திற்கு எதிரான போரை முன்னெடுத்த வேளையில், கடாபியின் பூர்வீக நகரம் ஐ.எஸ் கட்டுப்பாட்டுக்குள் இருந்துள்ளது. தனக்குத் தேவைப்படும் போது கிளர்ச்சியாளர்கள் எனச் சித்தரிப்பதும், தனக்குச் சவாலாக தலையெடுக்கும் போது பயங்கரவாதிகளென்று சொல்வதொன்றும் அமெரிக்காவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் புதிதல்ல. அமெரிக்கா உட்பட்ட அதிகார சக்திகள் அடிப்படைவாத ஆயுதக்குழுக்களை எப்படிக் கருவிகளாகக் கையாள்கின்றன என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமது பூகோள-பொருளாதார-அதிகார நலன்களை மீளுறுதிப்படுத்தவும், மேலோங்கச் செய்யவும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வது வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து வருவதொன்றே. அமெரிக்கா மத்திய கிழக்கில் கையாள்வதும் இதுவென்பது கண்கூடு.

பாரிஸ் தாக்குதல்களின் பின்னர், அமெரிக்காவும் பிரான்சும் ஐ.எஸ் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஈவிரக்கமற்ற முறையில் ஐ.எஸ் பயங்கரவாதத்தைப் போரில் எதிர்கொள்ளப் போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி Francois Hollande பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார். 3 மாதங்களுக்கு பிரான்சில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. பிரான்சில் மட்டுமல்ல. அயல் நாடான பெல்யியத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.

“செப். 11” இன் பின்னர் அமெரிக்கா எத்தகையதொரு சொல்லாட்சி (Rhetoric) மூலம் போர் குறித்த தீவிரத்தனத்தை முன்னெடுத்ததோ, அதனை ஒத்தவகையில் “நவம்பர் 13” என்ற குறியீட்டுப் பெயருடன் அழைக்கத்தக்க வகையில் பாரிஸ் தாக்குதல் அமைந்துவிட்டது. அரசியல், ஊடக மட்டங்களில் அவ்வாறானதொரு தோற்றம் இதற்குக கொடுக்கப்படுகின்றது.

ஏற்கனவே அகதிகள் விடயத்தில், அதாவது அகதிகளை தமது நாடுகளுக்குள் அனுமதிப்பது தொடர்பாக திணறிக்கொண்டிருக்கிறது ஐரோப்பா. மொத்தமாக 120 000 வரையான சிரிய அகதிகளுக்குத் தஞ்சம் வழங்கும் முடிவை எடுத்த ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடுகளுக்கிடையில் பங்கீடு செய்யும் இணக்கப்பாட்டினை எட்டியது. இந்த இணக்கம் செப்ரெம்பர் 2015இல் காணப்பட்டது. ஆனபோதும் இழுபறி தொடர்கின்றது. ஜேர்மன், நோர்வே போன்ற நாடுகள் ஒப்பீட்டளவில் கூடுதலான அகதிகளுக்குத் தஞ்சம் வழங்கிவருகின்றன. ஆனால் சில நாடுகள் மறுத்தும் தயங்கியும் வந்தன. போலந்த் போன்ற மறுத்து வந்த நாடுகள் தமது மறுப்பிற்கான காரணத்திற்கு வலுச்சேர்ப்பதாக பாரிஸ் தாக்குதல்களை முன்வைக்கின்றன.

பாரிஸ் தாக்குதலுக்கான நேரடியான காரணங்களாக வெளியில் சொல்லப்படுபவை ஒருபுறமிருக்க வெளித்தெரியாத மறைமுகப் பின்னணிகளும் உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றது. தாக்குதல் நடாத்தப்பட்ட முறை, அதற்கான திட்டமிடல் நேர்த்தி, பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள் ஆகியவற்றைக் கருத்திலெடுத்துப் பார்க்கும் போது, ஐ.எஸ் அமைப்பின் வெளித்தெரியும் முகத்திற்குப் பின்னால் வெளித்தெரியாத பெரிய சக்திமிக்க கைகள் இருப்பதற்கான வாய்ப்புகளையும் புலப்படுத்துகின்றன. சிரியாவில் தாம் முன்னெடுக்கும் போரினை நியாயப்படுத்தவும் ஐ.எஸ் இற்கு எதிராக ஐரோப்பிய வெகுசன ஆதரவை அதிகரிக்கவும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்க மற்றும் மேற்குலகின் கரங்களும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் இல்லாமலில்லை. ஐ.எஸ் இற்கு எதிரான மேற்கின் போர் நியாயமானது, ஐ.எஸ் அழிக்கப்படவேண்டியது என்ற வெகுசன அலையைத் தோற்றுவிப்பது என்ற அடிப்படையில் மேற்கின் கரங்கள் இதன் சூத்திரதாரிகளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

பாரிசில் தற்கொலைத் தாக்குதல் உட்பட்ட தாக்குதல்களை நடாத்தியவர்கள், பிரெஞ் குடியுரிமை பெற்றிருந்தவர்கள். இவ்வாறான புறநிலையில் இதற்குப் பதிலடியாக ஐ.எஸ் இற்கு எதிரான இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவது தீர்வாகாது. ஐ.எஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டு, இத்தகைய பயங்கரவாதத்தைத் தெரிவுசெய்ய இந்த இளைஞர்களைத் தள்ளிய பிரான்ஸ் (உட்பட்ட ஐரோப்பிய நாடுகளின்) உள்ளக அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பின்புலங்களிலிருந்து இவை ஆராயப்படவேண்டும். இந்தத் தாக்குதலின் பின்னணியில், பிரான்ஸ் உள்ளக அரசியலின் திசைவழித் தேர்வின் எதிர்காலம் குறித்த தீவிரமான ஆய்வு அவசியப்படுகின்றது.

பிரான்ஸ் புறநகர்ப் பகுதிகளின் சிக்கல் என்பது நீண்ட காலங்களாக அதிகரித்துவரும் பிரச்சினை. வேலை வாய்ப்பின்மை, பொருளாதார கீழ்நிலை, அதன் விளைவான விரக்தி என்பன இளைஞர்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் புறநிலைகளாகவுள்ளன. இவை அங்கு அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வியல் சிக்கல்களைக் கூர்மைப்படுத்தும் காரணிகள்.

2005 காலப்பகுதியில்; புறநகர்ப் பிரதேசமான Clichy Sous Bois இல் இளைஞர் வன்முறை வெடித்தது. விரக்தியுற்ற இளைஞர்கள் காவல்துறையினருக்கு எதிரான தாக்குதல்களை நடாத்தினர். வாகனங்களைத் தீயிட்டுக் கொழுத்தியதோடு, பொதுச் சொத்துக்களையும் அடித்து நொருக்கிச் சேதப்படுத்தினர். 3 வாரங்கள நீடித்த இந்த வன்முறைச் சம்பவங்களையொட்டி 3000 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த வன்முறைக் கிளர்ச்சியின் பிற்பாடுகூட இந்நிலைமைகளைச் சீர்செய்யும் வகையிலான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. பாரபட்சம் தொடர்ச்சியாக நிலவுகின்றது என்ற உணர்விலிருந்து புறநகர் மக்கள்; விடுபடவில்லை. எனவே வன்முறையின் பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் விட்டுவைக்கப்பட்டுள்ளன என்பதே யதார்த்தம்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து, சிரியாவின் ஆட்சிபீடத்திற்கு எதிரான போரில் பங்கேற்கவென ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிரியாவிற்குச் சென்றுள்ளனர். ஐ.எஸ் அமைப்பில் இணைந்துமுள்ளனர். இவ்வாறாக பிரான்சிலிருந்து 1000 பேர் வரையில் ஐ.எஸ் உடன் இணைந்தாக தகவல்கள் கூறுகின்றன.

பாரிஸ் தாக்குதலின் பின்னர், ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புப் பொறிமுறைகள், நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திப் பலப்படுத்துதல் என்ற திசையில் கவனம் கொள்ளத் தொடங்கியுள்ளன. இது கூடுதல் கண்காணிப்பு, காவல்துறை நடமாட்டம், ஆயுதம் தரித்த காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் பொதுவெளிகளில் பிரசன்னமாயிருப்பதை அனுமதிக்கும் சூழல் தோன்றக்கூடும். நாடுகளுக்கிடையிலான எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தல், விமானப்பயணங்கள் உட்பட பல்வேறு நிலைகளில் கெடுபிடிகள் அதிகரிக்கப்படுவதான தோற்றம் காண்பிக்கப்பட்டன. செங்கன் (schengen) நடைமுறைகளில் இறுக்கமாக்கும் மாற்றங்களை பிரெஞ் ஜனாதிபதி கோரியுள்ளார்;. ஐரோபபாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பயணிப்பவர்கள் பற்றிய முழுமையான விபரங்களைச் சேகரித்துப் பதிவுசெய்யும் பொறிமுறையை (பயணிகள் பெயர்ப் பதிவு, Passenger Name Record – PNR) நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்பும் வெளித்தெரிந்தது.

பாரிசில் மேற்கொள்ளப்பட்ட வகையிலான பயங்கரவாதத் தாக்குதல்கள் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையை வளர்ப்பதற்கான தீனியாகுகின்றன. வலதுசாரிக் கடும்போக்கு சக்திகள் பலப்படும் சூழல் தோன்ற இடமுண்டு. மதத்துவேசம் வளரும். சகிப்புத்தன்மை கேள்விக்குறியாகும்.

அல்-ஹைடா, ஐ.எஸ் போன்றன அரசியல் அடிப்படைகளற்ற கடும்போக்கு அடிப்படைவாத மற்றும் மிக மோசமான பயங்கரவாத அமைப்புகளென்பதில் ஐயமில்லை. ஆனால் பயங்கரவாத்திற்கெதிரான அமெரிக்காவின் போர், பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு மாறாக அதற்குத் தீனிபோட்டு வளர்த்து வருகின்றது என்பதே நடைமுறையில் வெளிப்படுகின்றது. 14 ஆண்டுகால “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” அதனை மெய்ப்படுத்தி வந்திருக்கின்றது.

ஐ.எஸ் இற்கு எதிரான தீவிரப்படுத்தப்பட்ட போர், ஐ.எஸ் அமைப்பை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்துவதைக் காட்டிலும், அதன் கருத்தியலை வலுப்படுத்தி, ஆதரவை அதிகரிப்பதற்கே அதிகம் சேவகம் செய்யும். இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைக்கு ஆதரவாக இளைஞர்களை அணிதிரட்ட வழியேற்படுத்திக் கொடுக்குமென்பது மறுக்கமுடியாத யதார்த்தம். ஐ.எஸ் மீது போர் தொடுக்கும் நாடுகளுக்கு இது தெரியாதது அல்ல. எனவே “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” மூலம் பயங்கரவாதத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருப்பது அவர்களின் அதிகார நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரல் என்பது புலப்படுகின்றது. யதார்த்தம் இப்படியிருக்க இன்றைய அரசியல் சதுரங்க ஆட்டத்தின் திசைவழி இவ்வாறு நகர்த்தப்படுவதென்பது, ஐ.எஸ் அமைப்பினைக் கருவியாகக் கொண்டு நடாத்தபபடும் பெரிய அரசியல் நாடகம் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்காவினதும் மேற்குலகினதும் இராணுவத்தீர்வு முனைப்புகள் அடுத்தடுத்துத் தோல்வியடைந்த படிப்பினைகளையே கருத்திலெடுககாமல் தொடர்ச்சியாகத் தமது இராணுவ இயந்திரங்களை களமிறக்கி வருகின்றன. சிரியாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பேரில் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும், அவற்றிற்குப் போட்டியாகத் தற்போது ரஸ்யாவும் களமிறங்கியுள்ளமையானது தற்காப்புப் போரல்ல. தமது பூகோள அதிகார நலனை நிலைநிறுத்துவதற்கான ஆக்கிரமிப்புப் போரின் ஒரு வடிவமே.

பொங்குதமிழ், நவம்பர் 2015

Leave A Reply