புத்தக அறிமுக நிகழ்வில் பகிர்ந்தவைகளும் பகிராதவைகளும்

நேரநெருக்கடி காரணமாகவும் ஒட்டுமொத்த நிகழ்வொழுங்கின் தன்மை கருதியும் 10.04.2022 நடைபெற்ற எனது மூன்று புத்தகங்களின் அறிமுக நிகழ்வில், எனது உரையில் மனதிலிருந்ததை முழுமையாகப் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு அமையவில்லை. ஆதலால் பகிர்ந்தவற்றோடு பகிராமற்போனவற்றையும் சேர்த்து இந்தப் பதிவு.

நிகழ்வை நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளடக்கக்கனதியுடனும் நிகழ்வினைக் கவிதா நெறிப்படுத்தியிருந்தார். எழுத்தாளர் சரவணன் ’அதிகார நலனும் அரசியல் நகர்வும’; புத்தகம் குறித்த அறிமுகத்தினை வழங்கினார். கேட்டவுடன் சம்மதித்து பிரித்தானியாவிலிருந்து வருகைவந்த ஊடகவியலாளர் பிரேமலதா சாம் பிரதீபன் ’கலைப்பேச்சு’ குறித்து உரையாற்றினார். பர்கனிலிருந்து வருகை கேமச்சந்திரன் மார்க்கண்டு ’எழுதிக் கடக்கின்ற தூரம்’ கவிதைத் தொகுப்பினை அறிமுகம் செய்தார். எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் மூன்று புத்தகங்களையும் முன்வைத்து, அவற்றின் உள்ளடக்கங்களையும் எனது எழுத்துகளின் தனித்துவமெனத் தான் கருதும் அம்சங்களையும் குறிப்பிட்டார்.

எழுதுபவர்களுக்கு தமது எழுத்துகள் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றன, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அவற்றின் வரலாற்றுப் பெறுமதி, உள்ளடக்கப்பெறுமதி, பயன்பாட்டுப் பெறுமதி எவை என்பதை அறிந்துகொள்வது மகிழ்ச்சிக்குரியவை. வெளியீட்டு நிகழ்வில் உரையாளர்கள் பகிர்ந்துகொண்ட பார்வைகள் உந்துதல் தருகின்றன. அவர்கள் முன்வைத்த விமர்சனங்கள் கருத்திலெடுக்கக்கூடியவை. என் எதிர்கால எழுத்துகளுக்கு பயனுடையவை. அங்கு பகிரப்பட்ட கருத்துகளும் பார்வைகளும் குறித்து ஒரு பதிவிலோ கட்டுரையிலோ பதிலளித்துவிடமுடியாது. அவை என் புத்தகங்கள் மீதான வாசிப்பிற்கும், அவற்றின் உள்ளடக்கம் தொடர்பான உரையாடலுக்கும் உரியவை.

கொரேனா நெருக்கடி என்பது சமூகத்தை எல்லா மட்டங்களிலும் முடக்கிப்போட்டிருந்தது. கூடிக் கலை செய்வதும், கலையை ரசிப்பதும்கூட கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக முடங்கிப்போயிருந்தது. ஆசுவாசமாய் மூச்சு விடவும் மனிதர்களுடன் ஓரளவு இயல்பாக ஊடாடவுமான காலம் மீண்டும் கனிந்திருக்கின்ற ஒரு சூழலில் எனது புத்தகங்களை முன்வைத்த இன்றைய நிகழ்வு அமைந்ததில்; மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறேன்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவருகின்ற போதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் (2020) முதலாவது புத்தகம் வெளிவந்தது. கட்டுரைகளைத் தொகுப்பாக வெளியிடவேண்டுமென்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்துவந்த ஒன்றுதான். நண்பர்கள் பலரும்கூட அதனை எடுத்துக்கூறியிருந்தனர். இருப்பினும் என்னுடைய வேலைப்பளு உட்பட்ட இன்னபிற சூழ்நிலைகளினால் தள்ளிப்போய்கொண்டே இருந்தது. புத்தகமாகக் கொண்டுவருவதென்று தீர்மானித்த காலத்திலிருந்துகூட இரண்டுவருட தாமதத்தின் பின்தான் அத்தொகுப்பு சாத்தியமானது.

கலை – சமூகம் -எழுத்து
கலையில் ஈடுபடுவது என்பதுதான் என் சமூகப் பணிகளுக்குரிய திறவுகோலாக அமைந்தது 1993ஆம் ஆண்டு செப்ரெம்பர் இறுதியில் எனக்கு 14 வயதில்; அம்மாவுடன் நாங்கள் நான்கு சகோதரர்களும் நோர்வேக்குப் புலம்பெயர்ந்தோம். அப்பா 1987இல் நோர்வேக்கு வந்துவிட்டார். நோர்வேக்கு வந்த 2வது மாதம் சர்வே அண்ணையின் நெறியாள்கையில் ‘யாழ்தேவி’ அரங்க ஆற்றுகையில் பங்கெடுக்கும் வாய்ப்பு அமைந்தது. நாடக ஒத்திகையைப் பார்ப்பதற்கு அப்பா என்னை அங்கு அழைத்துச் சென்றபோது, பங்குபெற விருப்பமுள்ளதா எனச் சர்வே அண்ணை கேட்டார். ஓம் என்று இணைந்துகொண்டேன் என்பது நினைவிருக்கிறது. நாடகம் மேடையேறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது நாடகம் உருவாகி வளர்ந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியிருந்த பின்னரே இணைந்தேன். அதுவே அந்தக் காலத்திலிருந்து தொடர்ச்சியாகத் தாயகம் நோக்கிய பணிகள் – இங்குள்ள தமிழ்ச் சமூகம் நோக்கிய செயற்பாடுகள் – நோர்வேஜிய சமூகத்துடனான இணைந்த செயற்பாடுகள் எனப் பயணிப்பதற்கான தொடக்கமாக அமைந்தது.

கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்டமை சமூக செயற்பாட்டாளன் என்ற இயங்குநிலைக்கு உந்தித்தள்ளியது. இந்த இரண்டு இயங்குநிலைகளுடன் சமாந்தரமாக எழுதுவதற்குரிய தேவை, புறச்சூழல், தூண்டுதல் என்பன இயல்பாக அமைந்தன. இந்த மூன்று இயங்குநிலைகளுக்கிடையிலான தொடர்பு என் அனுபவத்தில் நெருக்கமாக இருந்திருக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவற்றுக்குரிய முன்னுரிமைகளுடன் இயங்கிவந்திருப்பதாக நம்புகிறேன். காலவோட்டத்தில் இயல்பாக நிகழ்ந்த ஒரு transformation இதுவென்று கூறமுடியும். இந்நிகழ்விலும் அவற்றுக்கிடையிலான பிணைப்பின் பிரதிபலிப்பு அமைந்தமை தற்செயலானதென்று கருதிவிட முடியாது. இயல்பான பிரதிபலிப்புத்தான.

அதிகார நலனும் அரசியல் நகர்வும்
நான் அதிகம் எழுதியது சர்வதேச அரசியற்கட்டுரைகள் என்பதாலும் அது முதல் நூலாக அமைந்தது. சர்வதேச அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எழுதுபவர்கள் ஒப்பீட்டளவில் தமிழில் குறைவு என்பதும் நான் தொடர்ச்சியாக இத்தகைய கட்டுரைகளை எழுதியதற்கான காரணிகளில் முதன்மையானது.

இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் ஐ.பி.சி வானொலியில் ‘அவனியில் பவனி’இ ‘ஐரோப்பியக் கண்ணோட்டம், போன்ற நிகழ்ச்சிகளை வாராவாரம் வழங்கியமை சர்வதேச அரசியற்கட்டுரைகளை எழுதுவதற்கான தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும், சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் எனது கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அந்தக் காலகட்டங்களிலிருந்து பார்க்கும் போது இருநூறுக்கும் மேற்பட்ட அரசியற்கட்டுரைகள் உள்ளன. 2014 – 2019 வரையான 5 ஆண்டுகளில் எழுதப்பட்டவற்றிலிருந்து 50 கட்டுரைகள் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை பொங்குதமிழ் இணையம், தினக்குரல், காக்கைச் சிறகினிலே, வீரகேசரி, தமிழர்தளம், யாழ் இணையம் ஆகிய ஊடகங்களில் வெளிவந்தவை.
சர்வதேச அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எழுதுபவர்கள் தமிழில் குறைவு என்பதும் நான் தொடர்ச்சியாக இத்தகைய கட்டுரைகளை எழுதியதற்கான காரணிகளில் முதன்மையானது. ஊடகங்கள் பலவும் தொடர்ச்சியாக எழுதுமாறு வேண்டுகோள் விடுத்தமை மற்றொரு காரணி.

உலக நாடுகளில் என்ன நடக்கின்றன என்பதைத் தகவல் ரீதியாக அறிந்து கொள்வதும், அந்த அரசியல் நிகழ்வுகள், போக்குகள் எப்படி ஒன்றோடொன்று தொடர்புபட்டிருக்கின்றன – எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன – எவ்வாறான நலன்களைக் கொண்டிருக்கின்றன – அந்தந்த நாடுகளுக்குள், பிராந்திய ரீதியில், உலகளாவிய ரீதியில், அவற்றின் பூகோள அரசியல் பரிமாணம், விளைவுகள் என்பவற்றைப் புரிந்துகொள்கின்ற முயற்சிதான் இந்த அரசியல் கட்டுரைகள். அந்தப் புரிதலை அடைவதற்குரிய சமகால நிகழ்வுகள் பற்றிய வாசிப்பும் தேடலும் அவதானிப்பும் மட்டும் போதுமானவை அல்ல. சரியான தகவல்களோடும் தரவுகளோடும் ஆய்வுக்கண்ணோட்டத்தோடும் வரலாற்றுத் தன்மையோடும் கட்டுரைகளை எழுதுவதென்பது தேடலையும் நேரத்தையும் பரந்த வாசிப்பையும் கோருகின்ற விடயம்.

உதாரணமாக உள்நாட்டுப்போர் பற்றிய ஒரு கட்டுரையை எழுதுவதென்றால், முரண்பாட்டுத் தரப்புகளின் பின்னணி, முரண்பாட்டுக்கான காரணிகள், வரலாறு, சமூக-அரசியல் நிலைப்பாடுகள் – நோக்கங்கள்- அணுகுமுறைகள்- நலன்கள்- பிராந்தியத்தில் அவர்கள் பற்றிய நிலைப்பாடு- உலகளாவிய சூழலில் அவர்கள் பற்றிய நிலைப்பாடு – பிராந்திய சக்திகளும் சர்வதேச சக்திகளும் அவர்களை எவ்வாறு கையாள்கின்றன – மறுவளமாக அவர்கள் பிராந்திய, சர்வதேச சக்திகளை எவ்வாறு கையாளுகின்றார்கள் போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் கட்டுரைகள் உள்ளடக்கப் பெறுமதியும் பயன்பாட்டுப் பெறுமதியும் வரலாற்றுத் தன்மையுமுடையதாக அமையும். தகவல் பூர்வமாகவும் அதேவேளை அறிவுபூர்வமாகவும் அவற்றை அணுகுவதும்;, அறிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதும்; அவற்றின் நோக்கமாக இருந்திருக்கின்றது. நான் தேடிக் கண்டடைவதையும் கற்பதையும் பிறரது கற்றலுக்குரிய எழுத்தாக முன்வைப்பது எனவும் கொள்ளலாம்.

முழுமையாகப் பார்க்கும் போது,
வல்லரசுகளின் அதிகார நலன்சார் அரசியல் – அவற்றின் பொருளாதார நலன்சார் தலையீடுகள் – உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் – ஆயுத விடுதலைப் போராட்டங்கள் – சர்வாதிகார ஆட்சிபீடங்களுக்கெதிரான எழுச்சிகள் – பயங்கரவாதத்தின் அழிவரசியல் – பின் புரட்சிகர தேசங்களின் அனுபவங்களை, ஆளுமைகளை முன்னிறுத்திய பார்வைகள் – இனப்படுகொலையை எதிர்கொள்ளும் தேசங்கள் – தகவல் தொழில்நுட்பத்தின் பலம், தாக்கம், அதன் அரசியல் – கிறீஸ் நாட்டு நிலைமைகள், அனுபவங்களை முன்னிறுத்தி உலக பொருளாதார நெருக்கடி என உலக அரசியல் நிகழ்வுகள், அனுபவங்கள், நகர்வுகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. தனித்தனிக் கட்டுரைகளாக வாசிப்பதற்கும் ஒரு தொகுப்பாக இதனை வாசிப்பதற்குமுரிய பரிமாணப்பரப்பு வேறுபட்டது. அதற்குரிய வகையில் இந்நூலின் தொகுப்பு முறையில் கவனம் செலுத்தியுள்ளேன்.

அடிப்படையில் பொருளாதார நலன்களும் – அந்த நலன்களை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரத்தை யார் வைத்திருப்பது- எப்படி அதனை விரிவாக்குவது என்பதே உலக அரசியல் நகர்வுகளின் அடிநாதம். அதன் அடிப்படையிலேயே ‘அதிகார நலனும் அரசியல் நகர்வும்’ என இந்நூலின் தலைப்பு.

எழுதிக் கடக்கின்ற தூரம்
வாசிப்பும் எழுத்தார்வமும் சிறுவயதிலிருந்து எனக்குள் இருந்தபோதும், அடிப்படையில் சமூகத் தேவைகளே என்னை ஊடக, கட்டுரை, கலை, நாடக, கவிதைத் தளங்களில் இயங்கத் தூண்டிய புறச்சூழல்கள். கவிதைகளை எழுதியதற்கான-எழுதுவதற்கான புறச்சூழல்களை ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்லிவிட முடியாது. கவிதைகளின் புறச்சூழல்கள் பன்முகப்பட்டவை.
அக உணர்வுகளின் உந்துதலிலிருந்தும் சமூகப் புறச்சூழல்களின் தாக்கத்திலிருந்தும் வெவ்வேறு தருணங்களில் கருக்கொண்டவையே இத்தொகுப்பிலுள்ள கவிதைகள்.
கவிதை தோன்றுகின்ற அக-புறத் தூண்டுதல்கள் எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவை அந்தந்தத் தருணங்களின் மனநிலைகளுக்கேற்ப மாறுபடக்கூடியவை. இதைத்தான் எழுதவேண்டும் என்று திட்டமிட்டு இக்கவிதைகள் எழுதப்படவில்லை. அப்படி எழுதும் கவிதைகள் உயிர்ப்புடையனவாக வந்துவிடுவதுமில்லை. மனநிலை, மனிதர்கள், அனுபவங்கள், சம்பவங்கள், தாக்கங்கள், சமூகம், அரசியல், இயற்கை, ஆழ்மனதைத் துழாவும் நினைவுகள், அலைக்கழிக்கின்றதும் உந்துதலுமான கனவுகள், காலம், தூரம் கவிதைகளின் பேசுபொருளைத் தீர்மானித்திருக்கின்றன.

என் கவிதை ஆர்வத்திற்குரிய ஆரம்பம் அல்லது அடித்தளமாக இலக்கிய இதழ்கள், கவிதைத் தொகுப்புகள் மீதான வாசிப்பு இருந்துள்ளது. கவிதை மீதான ஈர்ப்பும் விருப்பும் ஈடுபாடும் பதின்ம வயதில் ஏற்பட்டிருந்தாலும், கவிதைகளை எழுதுவதற்கான முயற்சிக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவ்வப்போது நாடக, அரங்க, நடன நாடகங்களுக்கானதும் பல பாடல்களையும் தன்னார்வ உந்துதலால் தனிப்பாடல்களுமாக எழுதிவந்திருக்கின்றேன்.

2014 – 2019 வரையான ஐந்து ஆண்டுகளுக்குள் எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்து ‘எழுதிக் கடக்கின்ற தூரம் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியிலேயே வெளிப்பாட்டிலும், நடையிலும் உத்தியிலும் எனக்கான ஒரு கவிதைமொழியையும் வடிவத்தையும் ஓரளவு கண்டடைந்திருப்பதாகக் கருதுகின்றேன். என்னளவில் ஓரளவு திருப்தி கொள்கின்ற இந்த அடைவிற்கு உந்துதலாக இருந்தவர்கள் கவிஞர்கள் க.ஆதவன், கவிதா லட்சுமி, அறிவுமதி, மற்றும் கி.பி அரவிந்தன் ஆகியோர். கவிதைகள் சார்ந்து அவர்களுடன் மேற்கொண்ட உரையாடல்களும், அவர்களின் காத்திரமான விமர்சனங்களும் உரிமையுடனான சுட்டிக்காட்டல்களும் அதற்குத் துணைநின்றது.

கவிதை என்பது சொல்விளையாட்டு அன்று. மொழிக்கு அலங்காரம் பூசும் கலையுமன்று. அதனைத் தாண்டிய உணர்வும் உயிரும் வடிவமும் உத்தியும் உள்ளடக்கமும் சொல்முறையும் பார்வையும் பிரதிபலிப்பும் அதற்குள் இருக்கவேண்டும் என்பது கவிதை பற்றிய எனது புரிதல். இந்தப் புரிதலும் நாட்டமும் புதுக்கவிதைகளைத் தேடிச்செல்ல வழி கோலியது. தவிர நோர்வேஜிய மற்றும் ஆங்கிலக் கவிதைகள் மீதான ஈடுபாடும் அவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்க்கின்ற முனைப்பும் விருப்பமும் கவிதை பற்றிய தேடலுக்கும் புரிதலுக்குமான மற்றொரு வெளியைத் தந்திருப்பதாக உணர்கிறேன்.

கலைப்பேச்சு
கலைகளைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் என்பது அவற்றிலிருந்து உள்வாங்கிய அம்சங்களைக் பதிவுசெய்வது, அவை ஏற்படுத்திய மனப்பதிவுகளை இன்னொருவருடன் பகிர்வது, அவற்றின் பிரதிபலிப்பினைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது என்ற அளவில் முக்கியமானவை. பிரதிபலிப்பு எனும்போது அவற்றின் கலைத்துவம், அழகியல், பேசுபொருள், வடிவம், வெளிப்பாடு, வாசகருடனும் பார்வையாளருடனும் அவை கொண்டுள்ள ஊடாட்டத்தையும் – ஏற்படுத்துகின்ற சமூக வாழ்வியல் தாக்கத்தையும் குறிக்கின்றது. இந்தக் காரணங்கள்தான் கலை வெளிப்பாடுகளைப் பற்றி அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகளுக்கான உந்துதல்.

வாசிக்கின்ற புத்தகங்கள், பார்க்கின்ற இன்னபிற கலை வடிவங்கள் அனைத்தும் குறித்து எழுதிவிட முடிவதில்லை. வாசிக்கின்ற எல்லாப் புத்தகங்களும், பார்க்கின்ற காட்சிபூர்வ கலைவடிவங்கள் அனைத்தும் எழுதுவதற்கான தூண்டுதலைத் தருவதும் இல்லை. உந்துதல் தருகின்ற, விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய படைப்புகளைப் பற்றி எழுதவேண்டுமென்ற விருப்பம் இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் எழுதுவதற்கு உகந்த நேரமும் மனநிலையும் சூழலும் அமைந்துவிடுவதுமில்லை. அவற்றைத் தாண்டி, உந்துதல் நிமிர்த்தமும் அவற்றைப் பற்றிப் பகிரவேண்டுமென்ற தேவைகளின் நிமிர்த்தமும் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

வாசிப்பனுபவங்கள், திரைப்படங்கள், நாடக அரங்குகள் பற்றிய இக்கட்டுரைகளை ஒரு தொகுப்பாக்கும் எண்ணம் ஏற்படச் சில காரணங்கள் உள்ளன.

நோர்வேஜிய பெரும்சமூகச் சூழலில் நாடக அரங்குகள், சிறுவர் நாடக அரங்குகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. இத்தொகுப்பில் எனக்குப் பார்க்கக் கிடைத்த சில நோர்வேஜிய நாடகங்கள் பற்றிய கட்டுரைகளும் உள்ளன. நோர்வேஜிய அரங்கச் சூழல் பற்றிய ஒரு ஆரம்பச் சித்திரத்தை அக்கட்டுரைகள் கொடுக்கின்றன என்று கருதுகின்றேன்.

அடுத்ததாக நோர்வேயில், குறிப்பாகத் தலைநகர் ஒஸ்லோவில் நிகழ்ந்த சில நூல் வெளியீடுகள் உட்பட்ட அரங்க நிகழ்வுகள் குறித்த கட்டுரைகள், பதிவுகளும் உள்ளன. அவை நோர்வேத் தமிழ்ச் சூழலில் இடம்பெறும் கலை, இலக்கிய, அரங்க முயற்சிகள் பற்றிய ஒரு அறிமுகத்தை வழங்கக்கூடியவை.

தவிர இதிலுள்ள ஈழத் தமிழ்த் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகள் ஈழத்தமிழ் திரைப்பட முனனெடுப்புகளின் சமகால நிலையைப் பிரதிபலிக்கக்கூடியன.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வரவுள்ள புத்தகங்கள்

தொடர்ந்து வெளிவரவுள்ள புத்தகங்களுக்கான நிரல் பெரியது.
1) பிரேசிலைச் சேர்ந்த அரங்கவியலாளர் Augusto Boal உருவாக்கி வளர்த்தெடுத்த ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின்’ அனைத்து வடிவங்கள், அவற்றின் தோற்றம், வளர்ச்சி, நிகழ்த்துமுறைமைகள் சார்ந்த புத்தகம் வெளிவரவுள்ளது. அப்புத்தகம் உலக நாடகத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்த வரலாற்று அம்சங்களையும் பார்வைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

2) நோர்வேஜிய மொழிபெயர்ப்புக் கவிதைகள் (நானும் கவிதாவும் மொழிபெயர்த்தவை.)

3) ரூமி, கலீல் ஜிப்ரான் மற்றும் ஆங்கில வழி மொழிபெயர்க்கப்பட்ட சில வேற்றுமொழிக் கவிதைகள் தனியான புத்தகமாகவும் வெளிவரவுள்ளன.

4) சர்வதேச அரசியல் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பும் விரைவில் நூலாக்கம் பெறவுள்ளது.

இவையே அடுத்த சில அண்டுகளுக்கான திட்டங்கள்.
என் எழுத்துகளை ஊக்கப்படுத்துகின்ற வாசகர்கள், நண்பர்கள், ஆக்கபூர்வமான விமர்சனங்கள், உரிமையுடனான சுட்டிக்காட்டல்களைச் செய்கின்ற நண்பர்கள் என் நன்றிக்குரியவர்கள்.

இப்பொழுது எழுத்து என்பது என் வாழ்வில், என் அடையாளத்தில் முதன்மையான ஒன்றாக ஆகியிருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு வகைப் போதை. அந்தப் போதையை இறங்காமல் வைத்திருக்கவேண்டுமென்பதே என்னுடைய இப்போதைய மனநிலையும் விருப்பமும்.

Leave A Reply