வல்லரசுகளின் போர்க்களமாக்கப்பட்ட நாடு – சிரியா பகுதி 3
இத்தனை ஆண்டுகளாக Assadஐ அகற்றவோ அன்றி சிரியா விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவோ அமெரிக்காவால் முடியவில்லை என்பது அமெரிக்க அணுகுமுறையின் தோல்வியேயன்றி வேறல்ல. அரசியல், இராஜதந்திர, இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் இது அமெரிக்காவிற்குப் பெருந்தோல்வி. அமெரிக்காவின் தோல்வியினைச் சமயம் பார்த்துப் பல முனைகளிலும் தனக்குச் சாதகமான வெற்றியாக்கியுள்ளது ரஸ்யா. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற அமெரிக்காவின் கோஷத்தைத் தத்தெடுத்தவாறு சிரியாவிற்குள் கால் வைத்தது. சிரியப் போரின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக ரஸ்யா உருவெடுத்துள்ளது என்பது மிகையல்ல.
சிரியப் போரின் சிக்கல்கள் மற்றும் அதன் சர்வதேசப்பரிமாணம் தொடர்பாக இதற்கு முன்னைய கட்டுரையில் பார்க்கப்பட்டிருந்தது. நீடித்துவரும் சிரியாவின் போர்ச்சூழல் மேலும் தீவிரமடைந்துள்ள புறநிலையில், சிரியாவின் நேசசக்தியான ரஸ்யா அங்கு நேரடியான தாக்குதல்களில் இறங்கியுள்ளது. 2015 செப்ரெம்பர் 30ம் திகதியிலிருந்து சிரியாவிற்குள், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உட்பட்ட யுளளயன ஆட்சிபிடத்திற்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான தாக்குதல்களை முடுக்கிவிட்டிருந்தது ரஸ்யா.
சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான வான்படைத்தாக்குதல்களை அமெரிக்கா தலைமையிலான அணி 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து நடாத்தியது. அதனையடுத்து அமெரிக்க நலன்களுக்கு நேரெதிரான நலன்களைக் கொண்டுள்ள ரஸ்யா களமிறங்கியுள்ளது. இதன்மூலம் அனைத்துலக வல்லரசுகளின் போர்களமாக சிரியா மாறியுள்ளது.
சிரியாவின் Assad ஆட்சிபீடத்தினைப் பாதுகாக்கும் முனைப்புடன் தொடர்ச்சியாகப் படைத்துறை உதவிகளை ரஸ்யா வழங்கி வந்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பிரகடனத்துடன் ஒரு பக்கமும், Assad இன் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருதென்ற போர்வையில் (“சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்களுக்கு” இராணுவப்பயிற்சி மற்றும் ஆயுத உதவிகள்) இன்னொரு பக்கமுமாக சிரியாவிற்குள் அமெரிக்கா ஏலவே களமிறங்கியிருந்த நிலையில், ரஸ்யாவின் அதிரடியான தலையீடு அமெரிக்காவிற்குப் பெரும் தலையிடியாகியுள்ளது என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும், அவற்றினது மத்தியகிழக்கு நேசசக்திகளும் தத்தமது நலன்களை முன்னிறுத்தி சிரியா விவகாரத்தைக் கையாள்கின்றன. போர்ச்சூழலைத் தணிப்பதற்கு மாறாக இவற்றின் அணுகுமுறை அதனைக் கூர்மைப்படுதத்தி இடியப்பச்சிக்கலை ஒத்த நிலைக்குள் தள்ளியிருக்கின்றது.
சிரியா விவகாரத்தில் அமெரிக்க அணுகுமுறையின் மூலோபாயத் தோல்வியைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ரஸ்யா, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற அமெரிக்காவின் கோஷத்தைத் தத்தெடுத்தவாறு சிரியாவிற்குள் கால் வைத்தது. சிரியப் போரின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக ரஸ்யா உருவெடுத்துள்ளது என்பது மிகையல்ல.
அமெரிக்க அணுகுமுறை தோற்றுப்போன தருணத்தைத் தக்கமுறையில் கையாள்வதன் மூலம், Assad ஆட்சியைப் பாதுகாப்பது, மத்திய கிழக்கில் தனக்கென ஒரு செல்வாக்கினை உருவாக்கிக் கொள்வது என்பவற்றிற்கு அப்பால் அனைத்துலக அரசியலில் தவிர்க்க முடியாத தீர்மான சக்தியென்ற அந்தஸ்தினை அடைதல் என்ற நோக்கமும் ரஸ்யாவிற்கு உள்ளது.
உக்ரைனின் ஒரு சுயாட்சிப் பிராந்தியமாகவிருந்த கிருமியா குடாவினைக் கடந்த ஆண்டு தன்னோடு இணைத்தமை, அதனைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைன் நெருக்கடியில்; ரஸ்யாவின் தலையீடும் வகிபாகமும் காரணமாக மேற்குலகத்தின் தனிமைப்படுத்தல் முனைப்புகளுக்கும் பொருளாதாரத் தடைகளுக்கும் ரஸ்யா முகம்கொடுக்க நேர்ந்தது. இவ்வாறான தனிமைப்படுத்தல் நெருக்கடிகளிலிருந்து வெளிவருவதற்கும், அவற்றைத் திசைதிருப்புவதற்கும் சிரியாவை ஒரு வாய்ப்பான களமாக ரஸ்யா கையாளுகின்றது.
சிரிய ஆட்சியாளர் தொடர்பாக சர்வதேசத்திற்கு எத்தகைய கருத்துகள் இருந்தாலும், ஒரு நாடாக சிரியாவை ஐ.நா உட்பட்ட அனைத்துலக அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவது Assad ஆட்சிபீடம் என்பது யதார்த்தம். இந்த யதார்த்த அணுகுமுறையைக் கையிலெடுத்தவாறு ரஸ்யா தனது காய்களை நகர்த்துகிறது. அந்த வகையில் Assad ஆட்சிபீடத்திற்கு எதிரான அனைத்துத் தரப்புகளையும் பயங்கரவாதக் குழுக்களாக ரஸ்யா சித்தரிக்கின்றது. ஐ.எஸ் மீது மாத்திரமல்ல, அனைத்துக் கிளர்ச்சிக்குழுக்கள் மீதும் ரஸ்யா தாக்குதல்களை நடாத்துகின்றது.
தற்போதைய சூழலில் இதுவரை அமெரிக்காவும், ரஸ்யாவும் ஒருவரோடொருவர் நேரடியான போரில் ஈடுபடவில்லை என்றபோதும், அமெரிக்கா போர்ப்பயிற்சி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிவரும் கிளர்ச்சிக்குழுக்களுக்கு எதிரான தாக்குதல்களை ரஸ்யா நடாத்திவருகின்றது. எனவே ஒருவகையில் பார்க்கப்போனால் அமெரிக்காவும் ரஸ்யாவும் மறைமுகமான போரில் ஈடுபட்டுள்ளன. ஆனால் போரின் போக்கு எத்தகு மாற்றங்களை அடையக்கூடும் என்று ஊகிக்கின்றபோது, இருதரப்பும் நேரடியாக மோதுகின்ற நிலை தோன்றாதென்று கருதுவதற்கு உறுதியான காரணங்களும் இல்லை.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் துருக்கி நாட்டின் எல்லை வழிப்பாதையூடாகவே பெருமளவில் சிரியாவிற்குள் சென்றுள்ளனர். அத்தோடு அந்த அமைப்பின் சட்டவிரோத நிதிப்பரிமாற்றமும் துருக்கி ஊடாகவே நடைபெற்றுவந்துள்ளது. அமெரிக்காவிற்கு இது ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தபோதும், கண்டும்காணாமல் விடப்பட்டதென்பதே உண்மை.
அனைத்துலக வல்லரசுகள் சிரியாவிற்குள் நேரடியான போர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன, சிரியப்போரின் விளைவாக அந்நாட்டு மக்கள் சொல்லொணாத்துயங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். இது ஒருபுறமிருக்க அமெரிக்காவும், ரஸ்யாவும் களமிறங்கியுள்ள இப்போரின் பின்னணியில் இரு தரப்புகளின் நலன்களை முன்னிறுத்திய ஒரு தகவல் போரும் (ஊடகப்போர்) பெருமெடுப்பில் பலமுனைகளில் முன்னெடுக்கப்படுகின்றன.
சிரியாவிற்குள் ரஸ்யாவின் நேரடிப் பிரசன்னம் ஒருபோதும் அமெரிக்காவிற்கு உவப்பானதாக இருக்கப்போவதில்லை. சிரியச் சிக்கலைக் கையாள்வதில் ஏலவே கைகளைப் பிசைந்து நின்ற அமெரிக்காவிற்கு ரஸ்யாவின் முடிவு திணற வைத்துள்ளது. அமெரிக்காவின் கைகளை மீறிப் போய்விட்டதென்பதே யதார்த்தம். சிரியா விவகாரத்தைக் கையாள்வதில் முக்கிய தரப்பாக ரஸ்யாவை ஏற்றுக்கொள்ளவதைத் தவிர அனைத்துலக சக்திகளுக்கு வேறு தெரிவில்லை என்பதையே சமகாலம் உணர்த்துகின்றது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறைகள் அனைத்துலக அரசியலில் காத்திரமான, தீரமானகரமான அரசியலை முன்னெடுக்கும் வகையிலான இயங்குதிறனை அல்லது நடைமுறைகளைக் கொண்டவவையல்ல என்ற விமர்சனம் பல மட்டங்களில் நிலவுகின்றது. அவை ஒரு அரசு சார நிறுவனம் (NGO) போன்ற செயல்களையே முன்னெடுக்கின்றன என்ற அந்த விமர்சனத்தில் உண்மையில்லாமல் இல்லை. அனைத்துலக அரசியல் விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்க முடிவுகளுக்குப் பின்னால் இழுபடுகின்றன என்பது நீண்டகாலமாக நிகழ்ந்து வருகின்ற ஒன்றாகும்.
ரஸ்யா பெரும் திட்டமிடலோடு உள்ளதாகக் கூறப்படுகின்றது. போர்விமானங்கள், டாங்கிகள், தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரஸ்ய இராணுவத்தினருடன் சிரியாவில் களமமைத்துள்ளது. ஐ.எஸ் பலமாகவுள்ள Raqqa மீது ரஸ்யா தாக்குதல்களை நடாத்தியது. அமெரிக்கா தலைமையிலான மேற்கு செய்ய விரும்பாத அல்லது மேற்கினால் செய்ய முடியாததைச் செய்து காட்டுவதனூடாக அனைத்துலக அரங்கில் தனது இராணுவ வகிபாகத்தினை நிரூபிப்பதும் ரஸ்யாவின் நோக்கங்களில் ஒன்றாகும்.
இத்தனை ஆண்டுகளாக Assadஐ அகற்றவோ அன்றி சிரியா விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவோ அமெரிக்காவால் முடியவில்லை என்பது அமெரிக்க அணுகுமுறையின் தோல்வியேயன்றி வேறல்ல. அரசியல், இராஜதந்திர, இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் இது அமெரிக்காவிற்குப் பெருந்தோல்வி. அமெரிக்காவின் தோல்வியினைச் சமயம் பார்த்துப் பல முனைகளிலும் தனக்குச் சாதகமான வெற்றியாக்கியுள்ளது ரஸ்யா.
உள்நாட்டுப் போர்களில் உலக வல்லரசுகள் அதில் தலையிடுவதும் போரில் ஈடுபட்டிருக்கும் எதிரெதிர் தரப்புகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் உதவுவதும் வரலாற்றில் புதியதல்ல. பனிப்போர் காலகட்டத்திலும் இது நிகழ்ந்துள்ளது. வியட்னாம் போரின் போது, அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் முறையே தென்-வியட்னாமிற்கும் வட-வியட்னாமிற்கும் ஆதரவாக நின்றன. 1930 களில் ஸ்பானிய உள்நாட்டுப் போரின் போதும் இதனையொத்த நிலை காணப்பட்டது. சோவியத் ஒன்றியம் ஸ்பானிய அரசாங்கத்தரப்பிற்குப் படைத்துறை உதவிகளை வழங்கியது. ஜேர்மன், இத்தாலி, போர்த்துக்கல் போன்றன Francisco Franco தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கு உதவின. 1980களில் ஆப்பானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகப் போராடிய கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவியது.
2015 ஒக்ரோபர் மாதம் சிரிய அரசதலைவர் திடீர் ரஸ்யப் பயணம் மேற்கொண்டிருந்தார். ரஸ்ய அரசதலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 2012 இல் ஐரோப்பிய ஒன்றியம் பயணத்தடை விதித்ததை அடுத்து மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப்பயணம் இது. Assadஇனுடைய இந்த ரஸ்யப்பயணம் பல சேதிகளை அமெரிக்காவிற்கும் அதன் ஏனைய நேச சக்திகளுக்கும் சொல்லி நின்றது. Assad பலமடைந்துள்ளமையை வெளிப்படுத்தியது. தனது அதிகாரத்தைத் தக்கவைப்பது தொடர்பான புதிய நம்பிக்கை ஏற்பட்டிருப்பது இப்பயணத்தின் இரண்டாவது செய்தியாகப் பார்க்கக்கூடியது. அத்தோடு சிரியா விககாரத்தில் ரஸ்யாவின் வகிபாக முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டியதாகவும் இந்தப்பயணம் பார்க்கக்கூடியது.
ரஸ்யாவின் இலக்கு இராணுவத்தீர்வு அல்ல என்றும் அது சாத்தியமற்றது என்றும் சில மட்டங்களில் கருதப்படுகிறது. சிரியாவில் நடைபெறுவது கெரில்லா யுத்தம். பல்வேறு ஆயுதக்குழுக்கள் மோதுகின்றன. இந்நிலையில் தரைவழித் தாக்குதல்களில் நேரடியாக இறங்காமல் இராணுவ வெற்றியைச் சாத்தியமாக்குவது ரஸ்யாவால் முடியாத ஒன்று. எனவே களத்தில் தரப்புகளுக்கிடையிலான படைவலுச்சமநிலையை மாற்றியமைப்பதன் மூலம், பேச்சுவார்த்தைகளுக்கான புறநிலையைத் தோற்றுவிப்பதும் அதன் மூலம் Assadஐ பேச்சுவார்த்தையின் பலமானதொரு தரப்பாக்குவதே ரஸ்யாவின் முதன்மை இலக்கென்பது வெளிப்படை. ரஸ்யாவும் ஈரானும் Assad ஆட்சியில் நீடிப்பதையே விரும்புகின்றன. அதற்குரிய வகையில் களநிலைமைகளை மாற்றியமைப்பதே அவையிரண்டினதும் இலக்குகளாகும்.
சிரியா விவகாரத்தைப் பொறுத்தமட்டில், அமெரிக்காவினதும் ரஸ்யாவினதும் தலையீடுகளுக்கான நோக்கங்கள் வெவ்வேறுபட்டவை. ஐ.எஸ் பயங்கரவாதத்தை அழிப்பதென்று பகிரங்கமாகக் கூறப்பட்டாலும், இவற்றின் நலன்சார் உள்நோக்கங்கள் வேறுபட்டவை. Assadஐ ஆட்சியிலிருந்து அகற்றுவது அமெரிக்காவின் விருப்பம். Assad ஐ பாதுகாப்பதும் பதவியில் நிலைக்கச் செய்வதும் ரஸ்யாவின் முனைப்பு.
இப்பிராந்தியத்தில் சிரியாவிற்கு அடுத்தபடியாக ஈரானுடனும் குறிப்பிடத்தக்க நல்லுறவினைக் கொண்டுள்ளது ரஸ்யா. ஈரானின் சிறப்புத் தரைப்படைக்கு வான் வழி ஒத்துழைப்பினை வழங்கி சிரியாவில் தாக்குதல்களை நடாத்தியது. ஆத்தோடு ஈராக்குடனும் உறவினைக் கட்டியெழுப்பும் முனைப்பிலும் ரஸ்யா உள்ளது. ஐ.எஸ் படைகளை எதிர்கொள்வதற்கு ரஸ்யாவிடம் ஈராக் உதவிக்கரம் கோரியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் மத்திய கிழக்கில் தனது காலடியைப வலுவாக ஊன்றிக் கொள்ளும் கதவுகள் ரஸ்யாவிற்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இது மத்தியகிழக்கில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பெரும் சறுக்கலைக் காட்டுகின்றது. தான் நினைத்தவாறு மத்தியகிழக்கைக் கையாளும் வாய்ப்பு அnமிரிக்காவிடமிருந்து தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது என்பது இதிலுள்ள மற்றுமொரு யதார்த்தமாகும்.
<பொங்குதமிழ் இணையம், ஒக்ரோபர்.2015