கியூப மருத்துவத்துறையும் சர்வதேசியப் பங்களிப்பும்
கொரோனா நெருக்கடியை முன்வைத்து..!
கியூப மருத்துவத்துறை சர்வதேச நாடுகளில் பங்களிப்பதென்பது அதன் உலகளாவிய மனிதாபிமான செயற்பாட்டின் ஒரு நீண்டகால நிலைகொள் வடிவம். இந்தப் பங்களிப்பிற்கு ஒரு நீண்ட வரலாற்றுப் பக்கம் உள்ளது. அந்த வரலாறு கியூப வெளியுறவுக் கொள்கையோடு தொடர்புபட்டது. பொதுவான வெளியுறவுக் கொள்கை மரபுகள் நலன்சார் இராஜதந்திர உறவுகளை மையப்படுத்தியது. கியூபாவின் மருத்துவப் பங்களிப்பு அதன் வெளியுறவுக் கொள்கையோடு தொடர்புபட்டதாயினும் அதன் அடிப்படை கொலனித்துவ எதிர்ப்பு, மனிதாபிமான விழுமியங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும்.
கொரோனா நெருக்கடியில் உலகில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவ நிபுணத்துவ உதவிகளை வழங்குவதற்கு கியூப மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இது பெரும் கவனத்தை ஈர்த்த மனிதாபிமான நிகழ்வாக உலக ஊடகங்கள் மற்றும் சமூகத் தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் பரம்பலால் பெரும் நெருக்கடிகளையும் அதிகரித்த மரணங்களையும் கண்டுவருகின்ற தேசம் இத்தாலி. இந்நெருக்கடிச் சூழலில் மருத்துவரீதியில் உதவுவதற்கு கியூப மருத்துவக் குழு இத்தாலியின் வேண்டுகோளின் பேரில் அங்கு சென்றுள்ளது. சீனா, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் மருத்துவர்களும் இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கொரோனா மருத்துவத்திற்காக வெனிசுவேலா, ஜமைக்கா, சுரிநாம், கிரெனடா ஆகிய நாடுகளுக்கும் கியூபா தனது மருத்துவத்துறை ஆளணிகளை அனுப்பியுள்ளது.
மனிதாபிமான மருத்துவம்
கியூபாவின் இத்தகைய மருத்துவப் பங்களிப்புகள் புதியவை அல்ல. கியூபப் புரட்சி காலத்திலிருந்து கியூபா மருத்துவத்தில் மட்டுமல்ல, கல்வித்துறையிலும் ஏனைய நாடுகளுக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வந்துள்ளது. உலக நாடுகளுக்கான கியூபாவின் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துப் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. போர்ச்சூழல் நாடுகள், வறிய நாடுகள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கழகங்களின் உருவாக்கம் என அதன் பங்களிப்பு வரலாறு நீண்டது. குறிப்பாக லத்தீன் அமரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் நெருக்கடியான காலகட்டங்களில் நிறைந்த பங்களிப்பினை வழங்கி வந்துள்ளது. பல்வேறு மூன்றாம் உலகநாடுகளின் வறிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை வழங்கியும் வந்துள்ளது. கண் அறுவைச்சிகிச்சை உட்பட்ட பல்வேறு சிகிச்சைகளை, ‘ஒபரேசன் மிறாக்கல் – Operation Miracle’ எனப் பெயரிடப்பட்ட மனிதாபிமான மருத்துவ உதவித்திட்டத்தின் கீழ், 39 நாடுகளில் மேற்கொண்டுள்ளனர்.
அரசியல் கொள்கை முரண்பாடுடைய நாடுகளுக்குக்கூட மனிதாபிமான அடிப்படையில் மருத்துவக்குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக முறையே 1960, 1972, 1990 ஆகிய வருடங்களில் சிலே, நிக்கரகுவா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்க அழிவுகளுக்குப் பின்னான மருத்துவப்பணிகளில் உதவியிருந்தன. இப்பொழுது கொரோனா நெருக்கடிச் சூழலில் 37 நாடுகளில் கியூப மருத்துவர்கள் பங்களித்துவருகின்றனர்டதாக அறியமுடிகின்றது.
கியூபாவின் உலகளாவிய மருத்துவப் பங்களிப்பிற்கு அடிப்படையான காரணிகள் இரண்டு. ஒன்று உலகம் வியக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட திறமைமிக்க வைத்தியர்களையும் உயிரியல் தொழில்நுட்ப (BioTech) நிபுணத்துவமும் மிக்க கியூபாவின் மருத்துவத்துறை. மற்றையது மருத்துவம் என்பது அடிப்படை மனித உரிமை என்ற கியூபாவின் கொள்கைநிலைப்பாடு.
பாகுபாடற்ற சேவை
11 மில்லியன் சனத்தொகையுடைய கியூபாவில் 90 000 வைத்தியர்கள் உள்ளனர். அதாவது 125 பேருக்கு ஒரு வைத்தியர். இதேவேளை அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் 400 பேருக்கு ஒரு வைத்தியர் என்ற நிலையே உள்ளது. (இது உலக வங்கியின் 2015ஆம் ஆண்டு தகவல்).மக்களுக்கான மருத்துவசேவை இலவசம் என்பதோடு, அதனை முக்கிய அடிப்படை மனித உரிமையாக கியூப அரசியலமைப்புச் சட்டத்திலும் உள்ளடக்கியுள்ளது. 1959 இல் 6000 மருத்துவர்களை மட்டுமே கியூபா கொண்டிருந்தது.
உயிரியல் தொழில்நுட்பத்தில் (BioTech) கியூபா பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. பயோடெக் சார்ந்த 24 ஆய்வு மையங்கள் மற்றும் 58 வரையான உற்பத்திக்கூடங்களை கியூபா உருவாக்கிக் கொண்டுள்ளது. நோய் முன்தடுப்பு மருத்துவத்திற்கு முன்னுரிமை வழங்கி வருகின்றது. 452 வெளிநோயாளர் கிளினிக்குகள் நாடுமுழுவதும் உள்ளன. தேசிய வருமானத்தில் கிட்டத்தட்ட 11 வீதம் மருத்துவத்துறைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது உலகளாவிய சராசரியை விடவும் கூடுதலானது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பார்க்க சிறந்ததொரு மருத்துவத்துறையைக் கியூபா கட்டியெழுப்பியிருந்தது. சோவியத்தின் உடைவிற்குப் பின்னரும் (உடைவிற்கு முன்னர் சோவியத்தின் கணிசமான நிதியுதவி கியூபாவிற்கு இருந்தது) – அமெரிக்காவின் அறுபதாண்டு காலப் பொருளாதாரத் தடைகளைத் தாண்டியும் அத்துறையை மேம்படுத்தி வந்ததென்பதும் முக்கிய அம்சம். வளர்ச்சியடைந்த பல நாடுகள் பொறாமை;படும் அளவிற்கு நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுக்குள் ஒரு வலுவான மருத்துவத்துறையைக் கியூபா கட்டியெழுப்பியிருக்கின்றது என American Journal of Public Health இதழில் 2012 இல் வெளிவந்த ஆய்வில் கூறப்பட்டிருந்தது.
ஒரு வகையில் பொருளாதார மற்றும் வணிகத் தடைகளும் கியூப மருத்துவத்துறையின் அதியுச்ச வளர்ச்சிக்குத் துணைபுரிந்துள்ளதெனலாம். குறிப்பாக மருந்துப் பொருட்கள் வெளியுலகத்திலிருந்து கிடைக்காத நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் அதிகபட்ச பயனைப் பெறுவதற்கான புத்தாக்க முயற்சிகளுக்கு தடைகள் உந்துதலாக அமைந்துவிடுகின்றன.
கருவிலிருந்து இறப்புவரை
இரண்டு வயதுக்குட்பட்ட 98 வீதமான குழந்தைகளுக்குரிய அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுவிடுகின்றன. 95 வீதமான கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னரேயே உரிய மருத்துவப் பராமரிப்புகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. ஆயிரம் பிரசவங்களில் ஐந்திற்கும் குறைவான இறப்பு விகிதங்கள் எனும் நிலை பேணப்படுகின்றது. உலகளாவிய சராசரி இறப்பு ஆயிரம் பிரசவங்களுக்கு 42,5 என்பது 2015இல் உலக வங்கி வெளியிட்ட தரவு. நீடித்தகால நோய்களுக்கான பரிசோதனைகள் (chronic disease control), குறைந்தது வருடத்திற்கு ஒருமுறை கிட்டத்தட்ட அனைத்து மக்களுக்குமான குருதி அழுத்தப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
குழந்தை கருவிலிருக்கும் போது தொடங்கி வாழ்வு முடியும் வரை நாட்டு மக்களின் நலவாழ்வு சார்ந்த மருத்துவச் செயற்பாடுகளுக்கு கியூபா எவ்வளவு கரிசனைமிக்க முக்கியத்துவம் அளிக்கின்றது என்பதனை மேற்படி ஆய்வு உறுதிப்படுத்துகின்றது. கியூபா மக்களின் சராசரி ஆயுட்காலம் 79.1 வயது என்பது உலக சுகாதார அமைப்பின் (2015) தரவு. அமெரிக்காவின் சராசரி ஆயுட்காலம் 79.3 வயது.
எச்.ஐ.வி (HIV) தொற்றுள்ள ஒரு தாயிலிருந்து பிறக்கும் குழந்தைக்கு அந்நோய் தொற்றினை அகற்றும் மருத்துவத்தை நடைமுறையில் கொண்டுள்ள நாடாக 2015இல் உலக சுகாதார நிறுவனம் கியூபாவை அங்கீகரித்தது. வைரஸ் பரம்பலை நீக்குவதென்பது மிகப்பெரிய மருத்துவச் சாதனை என உலக சுகாதார அமைப்பின் அன்றைய பொதுச் செயலர் Margaret Chan குறிப்பிட்டிருந்தார். எச்.ஐ.வி மற்றும் பாலியல் தொற்றுநோய்களுக்கெதிரான நெடிய போராட்டத்தில் இது மிகப்பெரும் வெற்றி என்பதோடு எயிட்ஸ் நோயற்ற தலைமுறையை உருவாக்குவதற்கான முக்கிய படியாகும் எனவும் அவர் கூறியிருந்தார்.
சர்வதேசப் பங்களிப்பு- நீண்ட வரலாறு
கியூப மருத்துவத்துறை சர்வதேச நாடுகளில் பங்களிப்பதென்பது அதன் உலகளாவிய மனிதாபிமான செயற்பாட்டின் ஒரு நீண்டகால நிலைகொள் வடிவம். இந்தப் பங்களிப்பிற்கு ஒரு நீண்ட வரலாற்றுப் பக்கம் உள்ளது. அந்த வரலாறு கியூப வெளியுறவுக் கொள்கையோடு தொடர்புபட்டது. பொதுவான வெளியுறவுக் கொள்கை மரபுகள் நலன்சார் இராஜதந்திர உறவுகளை மையப்படுத்தியது. கியூபாவின் மருத்துவப் பங்களிப்பு அதன் வெளியுறவுக் கொள்கையோடு தொடர்புபட்டதாயினும் அதன் அடிப்படை கொலனித்துவ எதிர்ப்பு, மனிதாபிமான விழுமியங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதாகும்.
கியூபப் புரட்சியைத் (1959) தொடர்ந்து 1963 இலிருந்து இது தன் தேச எல்லைகளுக்கு வெளியேயான மருத்துவப் பங்களிப்பினைக் கியூபா முன்னெடுக்கத் தொடங்கியது. அதன் முதற்கட்டம் அல்ஜீரியாவில் தொடங்கியது. பிரெஞ் கொலனித்துவத்திலிருந்து அல்ஜீரியா விடுபட்ட தருணத்தில் ஏற்பட்ட மருத்துவப் பற்றாக்குறையை கியூபா நிவர்த்தி செய்தது. தொடர்ச்சியாக அங்கோலா, நிக்ரகுவா நாடுகளிலும் 1970களின் பிற்பகுதியில் அந்நாடுகளின் மருத்துவத்துறைக்கு அரிய பங்களிப்பினை வழங்கியது. பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கியூப மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வியைப் பெற்று மருத்துவர்களாக ஆகியிருக்கிறார்கள்.
G8-நாடுகளின் மொத்தப் பங்களிப்பினைக் காட்டிலும், வளர்முக நாடுகளுக்கு கியூபா தன்னந்தனியாக வழங்கிய மருத்துவப் பங்களிப்பு அதிகம். 2008 வெளிவந்த தகவலின் படி முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கியூப மருத்துவ ஆளணிகள் எழுபது உலக நாடுகளில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கியூப சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின் படி 1960களிலிருந்து இதுவரை கியூப மருத்துவர்கள் 164 நாடுகளில் 600 000 மருத்துவச் செயற்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர். சமகாலத்தில் 67 வரையான நாடுகளில் கியூப மருத்துவத்துறை இயங்கிவருகின்றது.
இடர்காலப் பங்களிப்பும் தொற்றுத்தடுப்பும்
2010 காலப்பகுதியில் Haitiஇல் கொலரா தொற்றுப் பரவியபோதும், 2013இல் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் எபோலா பரவியபோதும் கியூப மருத்துவ ஆளணிகள் முன்னணி வகித்து காத்திரமான சேவையை வழங்கியிருந்தன. ஆதே ஆண்டு ஆரம்பத்தில் Haitiஇல் ஏற்பட்ட பூமியதிர்வில் நூறாயிரம் பேர் வரை பலியாகினர். 400 வரையான கியூப மருத்துவர்கள் காயப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கான பணிகளில் துரிதமாக இறங்கினர். பேரிடர் காலத்தில் மருத்துவச் சவாலை எதிர்கொள்ளும் ஐரோப்பிய நாடொன்றுக்கு கியூப மருத்துவ அணி அனுப்பப்படுவது இதுவே முதற்தடவை.
இத்தாலியின் அழைப்பிற்கு முன்னதாக, 2020 மார்ச் நடுப்பகுதியில் பிரித்தானியப் பயணிகள் கப்பல் ஒன்று கரிபியன் தீவுகளின் துறைமுகங்களில் தரிக்க அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டபோது தன் துறைமுகத்தில் கியூபா அனுமதி வழங்கியது. பயணிகளைப் பாதுகாப்பாக கரைசேர்க்கவும் ஹவானா விமானநிலையத்திலிருந்து பிரித்தானியாவிற்குத் திரும்புவதற்கும் கியூபா அனுமதி வழங்கியது. கப்பலில் பயணம் செய்த 682 பயணிகளில் 28 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்டிருந்தது.
4 சிறப்பு விமானங்கள் மூலம் பயணிகள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். கொரோனா தொற்றுக்கு உட்பட்ட பயணிகள் தனி விமானத்திலும் அனுப்பிவைக்கப்பட்டனர். பயணிகளுக்கான மருத்துவ உதவிகளும் விமானத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பயணம் செய்வதற்குரிய உடல்நிலை அற்றிருந்தவர்களுக்குரிய சிகிச்சை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. கியூபாவின் இந்த துணிச்சல்மிகு மனிதாபிமான உதவிக்கு பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் Dominic Raab நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிரியல் தொழில்நுட்பத்தில் முன்னணி – Interferon alfa 2b
கியூப உயிரியல் தொழில்நுட்பத்துறையினால் (Cuban biotech industry) உருவாக்கப்பட்ட Interferon alfa 2b எனும் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுவருகின்றது. இது அடிப்படையில் டெங்குக்காச்சலை எதிர்கொள்வதற்கு 1981 காலப்பகுதியில் கியூப மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது. இதற்கு முந்தைய தொற்றுப்பரம்பல்களான டெங்குக் காய்ச்சல், HIV/AIDS, எபோலா போன்றவற்றுக்கான சிகிச்சைகளில் குறிப்பிடத்தக்க பயனை அளித்துள்ளன எனப்படுகிறது. 2002 இல் பரவிய சார்ஸ் வைரஸ், 2012 இல் பரவிய மெர்ஸ் ஆகியவற்றின் தொற்றுக்குள்ளானவர்களுக்கு Interferon alfa 2b வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு சீனா பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. ஸ்பெயின், சிலி உட்பட்ட பல நாடுகள் இந்த மருந்தினைப் பெற முயன்று வருகின்றன. Covid-19 வகையைச் சேர்ந்த -ஒத்த தன்மைகளைக் கொண்ட கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய மருந்தாக Interferon Alpha 2b உள்ளதாகவும் கூறப்படுகின்றது. 2003 இலிருந்து சீன-கியூபக் கூட்டுத் தயாரிப்பாக உற்பத்தி செய்யப்பட்டுவந்துள்ளது. டெங்கு வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்தி அழிப்பதற்காக இன்டர்பெரோனை 1981 இல் உருவாக்கிப் பயன்படுத்திய அந்த அனுபவமே இன்று உலக அளவில் முன்னணி வகிக்கும் கியூபாவின் உயிரியல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிக்கு உந்துதலாய் அமைந்தது எனக் கணிக்கப்படுகின்றது.
சேகுவேராவின் சிந்தனை
பிடல் கஸ்ரோ அல்லது கியூபா பற்றிப் பேசும்போது எப்படி சே குவேரா தவிர்க்க முடியாத பெயரோ அதேபோல் கியூப மருத்துவத்துறை பற்றிப்பேசும் போதும் சேகுவேரா தவிர்க்க முடியாத பெயர். சே அடிப்படையில் ஒரு மருத்துவத்துறை மாணவர். கியூப மருத்துவ மற்றும் பொருளாதாரக் கொள்கைவகுப்பு அணுகுமுறைக்குப் பின்னால் ‘சே’ இன் பங்கும் முக்கியமானது.
பிடல் கஸ்ட்ரோவைச் சந்திப்பதற்கும் கியூபப் புரட்சியில் பங்கேற்பதற்கும் அவருடைய மோட்டார் சைக்கிள் பயணங்கள் முக்கியமானவை. 1950இல் அர்ஜென்டீனாவிற்குள் 4500 கி.மீ பயணத்தினையும் – 1 பின்னர் 1952இல் தென் அமெரிக்க நாடுகளுக்கான 6 மாத காலப்பயணமும் – 1953 இல் இரண்டாவது முறையாக மத்திய அமெரிக்க நாடான Gautamala விற்கான பயணமும் முக்கியமானது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் மோசமான யதார்த்தங்களை நேரில் பார்த்த அனுபவங்கள் அவரைப் நாடுகடந்து அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட வைத்த முக்கிய காரணிகள். மக்களின் அவலங்கள், அந்நாடுகளின் மருத்துவத்துறைகளின் குறைபாடுகள், மருத்துவர்களுக்கும் நோயாளர்களுக்குமிடையிலான பாரிய இடைவெளி என்பனவ அனுபவங்கள் பின்னாளில் கியூப ‘அரசுருவாக்கத்தில்’ கவனம் செலுத்தப்பட்ட அம்சங்களுக்கான உந்துதலாக அமைந்தன.
இந்த முன்னுதாரண அணுகுமுறை கியூபாவின் மருத்துவ சேவையினை அடிப்படை மனித உரிமையயை முன்னிறுத்தியது. மக்கள் மத்தியில் நோயெதிர்ப்பு சக்தியை வளர்ப்பதோடு, நோய் முன்தடுப்புக்கும் வழிகோலுகின்றதென்ற அடிப்படையில் நாட்டின் உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அதீத கவனம் செலுத்தப்பட்டது.
உயிரியல் மருத்துவத்தை ஒரு முன்னுதாரணமான சமூக மருத்துவமாக மாற்றுவது மக்களின் சுகாதாரத் தேவைகளுக்கான தீர்வாக அமையுமென்ற சிந்தனை ‘சே’இன் அனுபவங்களிலிருந்து கண்டறியப்பட்ட தீர்வு.
08.ஏப்ரல் .2020