கொரோனா தடுப்பூசி அரசியல்: செல்வந்த நாடுகளின் பதுக்கலும் வறிய நாடுகளின் பரிதாபநிலையும்

உலகின் செல்வந்த நாடுகள் மட்டும் தடுப்பூசிகளைப் போட்டு விடுவதால் தொற்றுப் பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடாது. உலக நாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்புவது என்பதே தொற்றுப்பரம்பலைக் கட்டுக்குள் கொண்டுவருவதென்பதன் உள்ளார்ந்த பொருள். அதுவே தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதில் வினைத்தாக்கம் மிக்க செயற்பாடு. அப்படி நிகழத் தவறினால் நாடுகடந்த பயணங்கள் மீண்டும் மீண்டும் புதியபுதிய தொற்றுஅலைகளைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். இந்தப் பெருந்தொற்றுக்கூட இன்னமும் உலகின் அதிகார சக்திகளுக்கு எதனையும் கற்றுக்கொடுக்கவில்லை என்பதையே ‘தடுப்பூசி அரசியல்’ அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

கொரோனா பெருந்தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர்-சமூக முடக்கங்கள் தொடர்கின்ற அதேவேளை, பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தத் தொடங்கிவிட்டன. கடந்த 2020 டிசம்பரிலிருந்து தடுப்பூசி செலுத்துகின்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. உலகளாவிய மானிடப் பேரவலத்தை ஏற்படுத்திய இந்தத் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியிலும் அரசியல் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது இதிலுள்ள கசப்பான யதார்த்தம். மனிதாபிமான மற்றும் மருத்துவ அடிப்படைகளுடன் நீதியான முறையில் மேற்கொள்ளப்படவேண்டிய – நாடுகளுக்கிடையிலான தடுப்பூசி பங்கீட்டில் – பொருளாதார பலம்மிக்க நாடுகள் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

முந்திக்கொண்ட செல்வந்த நாடுகள்
அதாவது அமெரிக்கா, கனடா, பிரத்தானியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தமது ஒட்டுமொத்த மக்களுக்கும் ‘பல தடவைகள்’ செலுத்துவதற்குத் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளன. உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ள, மற்றும் உற்பத்தியில் உள்ள மொத்தத் தடுப்பூசிகளில் அரைவாசிக்கும் மேல் ஏலவே கொள்வனவு செய்துள்ளதோடு மேலதிக கொள்வனவு ஒப்பந்தங்களையும் இந்நாடுகள் செய்துள்ளன. இந்தச் செல்வந்த நாடுகள் உலகின் மொத்த மக்கட்தொகையின் 15 வீதம் மட்டுமே. இன்னும் விரிவாகச் சொல்வதானால் உதாரணமாகக் கனடாவை எடுத்துக்கொண்டால், நாட்டின் முழு மக்களுக்கும் 6 தடவைகள் வரை போடுவதற்குப் போதுமான தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நான்கு தடவைகளும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் 2 தடவைகளுக்குரிய கொள்வனவுகளையும் செய்துள்ளன. கொள்வனவு என்பது ஏலவே கொள்வனவு செய்யப்பட்டதும் மேலதிக கொள்வனவுக்கான ஒப்பந்தங்களையும் குறிக்கின்றது.

2021 நடுப்பகுதிக்குள் ஒரு நபருக்கு இரண்டு டோசஸ் (Vaccine doses) போடப்பட்டு
நாட்டினை இயல்புநிலைக்குக் கொண்டுவருதல் என்ற இலக்கோடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசித் திட்டத்தினை கையாளுகின்றன. ஆனால் வறிய மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகள் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டிவரும் எனக் கணிப்பிடப்படுகிறது. அதன் பொருள் அந்நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகள் முழுமையாகப் போய்ச்சேர்வதற்கு இன்னும் 2 ஆண்டுகள் வரை எடுக்கும். குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அம்மக்கள் தொற்றுக்களுடன் வாழவேண்டும் என்பதாகும். நவம்பர் 2020 நிலவரப்படி, Pfizer-BioNTech மற்றும் Modernas ஆகிய தடுப்பூசிகளின் 2021ம் ஆண்டின் மொத்த உற்பத்தியின் 80 வீதமானவை செல்வந்த நாடுகளுக்கு விற்கப்பட்டுவிட்டன என்பதை செல்வந்த நாடுகளின் துரித கொள்வனவிற்கு உதாரணமாகச் சொல்லலாம்.


மனித மேலாண்மையின் விளைவும் உலகமயமாக்கலும்
உலகளாவிய இந்த பெருந்தொற்று நெருக்கடிக்கான முக்கிய காரணிகளில் ஒன்று உலகமயமாக்கல். இயற்கைக்கு எதிரான மனித மேலாண்மை. தொழில்நுட்பம், பெரும் உற்பத்திகள், பெருநகர அபிவிருத்திகள், போக்குவரத்துகள், வணிகம் என்ற உலகமயமாக்கலின் இன்னபிற கூறுகளை அடுக்கலாம். செல்வந்த நாடுகள் தமது பொருளாதார, படைத்துறை மூலம் தமக்குச் சாதகமான அரசியல் பலத்தையும் அதிகாரத்தையும் கட்டியெழுப்பி வைத்துள்ளன. இந்த அதிகார மற்றும் செல்வாக்குச் செலுத்தல் போக்கின் விளைவுகள் பல. சமகாலத்தில் வெவ்வேறு பிராந்தியங்களில் இடம்பெற்றுவரும் போர்கள் இந்த அதிகாரப் போக்கினது விளைவு.

தடுப்பூசி விடயத்திலேனும் சமத்துவ உணர்வுடன் ஓரளவேனும் பாகுபாடற்ற நீதியான பங்கீடு நடைபெறுமென்ற எதிர்பார்ப்பு சிலமட்டங்களில் இருந்தது. மனிதாபிமான அடிப்படையிலான வேணவா இது என்பது ஒருபுறமிருக்க, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் நீதியான தடுப்பூசிப் பங்கீடு அவசியமானதும்கூட என்பது அத்தகு எதிர்பார்ப்பிற்குரிய அடிப்படை. உலகமயமாக்கல் என்பது சாதாரண கண்களுக்குப் புலப்படாத பல்வேறு அடுக்குகளிலான வலைப்பின்னல்களைக் கொண்டுள்ள அமைப்பு முறைமையும் இயங்கு நிலையுமாகும்.

உலகின் பெரும்பாலான நாடுகள் ஏதோவொரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புகளைக் கொண்டுள்ளன. ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. பொருட்களின் ஏற்றுமதி-இறக்குமதி, நாடுகடந்த பயணங்கள், உற்பத்தி-நுகர்வு என நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் மனித உறவுகளும் தொடர்பாடல்களும் பல அடுக்குகளிலாலான வலைப்பின்னல்களைக் கொண்டுள்ளன. இந்நிலையில் உலகின் செல்வந்த நாடுகள் மட்டும் தடுப்பூசிகளைப் போட்டு விடுவதால் தொற்றுப் பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடாது. உலக நாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்புவது என்பதே தொற்றுப்பரம்பலைக் கட்டுக்குள் கொண்டுவருவதென்பதன் உள்ளார்ந்த பொருள். அதுவே தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதில் வினைத்தாக்கம் மிக்க செயற்பாடு. அப்படி நிகழத் தவறினால் நாடுகடந்த பயணங்கள் மீண்டும் மீண்டும் புதியபுதிய தொற்றுஅலைகளைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். இந்தப் பெருந்தொற்றுக்கூட இன்னமும் உலகின் அதிகார சக்திகளுக்கு எதனையும் கற்றுக்கொடுக்கவில்லை என்பதையே ‘தடுப்பூசி அரசியல்’ அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

தடுப்பூசி: வறிய நாடுகளுக்கு எட்டாக்கனி?
இந்தப் பாகுபாடான பங்கீடு அதிர்ச்சியளிக்கிறது என்று கூறிய உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலர் Teros Adhanom Ghebreyesus, இந்தப்போக்கு பெருந்தொற்றினை அநாவசியமாக நீடிப்பதற்கு வழிகோலும் எனவும் எச்சரித்துள்ளார். ‘ஒரு பெருந்தீயை அணைப்பதற்கான முயற்சியில் தீப்பிழம்புகளின் சில பகுதிகளின் மேல் மட்டும் தண்ணீர் தெளிப்பதற்கு நிகரானது’ என இன்றைய தடுப்பூசிப் பங்கீட்டில் கைக்கொள்ளப்படும் அணுகுமுறையை அவர் சித்தரித்து, உலகளாவிய நீதியான பங்கீட்டினை வலியுறுத்தியுள்ளார்.

இந்த நீதியற்ற அணுகுமுறையைச் சரிசெய்வதற்கும் வறிய மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளுக்கு தடுப்பூசி பகிரப்படுவதையும் அந்த நாடுகளின் மக்களுக்கு அவை சென்றடைவதைத் துரிதப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் Covax – (COVID-19 Vaccines Global Access) என்றொரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO), மற்றும் தடுப்பூசி – நோய்த்தடுப்பு மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு (Global alliance for vaccines and immunization, Gavi) அகியன இந்த அமைப்பினை 2020இல் உருவாக்கியுள்ளன. Gavi அமைப்பின் நோக்கம் பரந்த அளவிலும் விரைவாகவும் தேவை அதிகமுள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு தடுப்பூசிகள் சென்றடைவதற்கான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதாகும். இந்த அமைப்பு பல்வேறு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

உலகநாடுகளின் கொரோனா தடுப்பூசிவகைகள்
கொரோனாவுக்கு எதிரான உலக நாடுகளின் தடுப்பூசிகள் என்று பார்க்கும் போது V451 எனும் பெயரிலான தடுப்பூசி அவுஸ்ரேலியத் தயாரிப்பாக சந்தைக்கு வந்துள்ளது. இது அவுஸ்ரேலிய Queensland ஆய்வுப் பல்கலைக்கழகமும் (University of Queensland) CSL மருந்து நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்ற தடுப்பூசி. பிரித்தானிய – சுவீடன் பல்தேசிய மருந்தக மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான AstraZeneca அதே பெயரில் கொரோனா தடுப்பூசியினைத் தயாரித்துள்ளது. இந்தியாவின் Serum Institute உலகின் முதலாவது பெரிய தடுப்பூ தயாரிப்பு நிறுவனம். இது மேற்சொன்ன பிரித்தானிய-சுவீடன் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா எதிர்ப்புத் தடுப்பூசித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. Moderna, Pfzer, Novavax மற்றும் Inovia ஆகியன ஆகியன அமெரிக்க பல்தேசிய நிறுவனத் தயாரிப்புகள். Curevacs தடுப்பூசி ஜேர்மன் தயாரிப்பு. Sinopharm சீனத் தயாரிப்பாகும்.

Covax கூட்டமைப்பு: நீதியான பங்கீடு அவசியம்
மேற்சொன்ன Covaxகூட்டமைப்பு 2021 இறுதிக்குள் 1,3 பில்லியன் தடுப்பூசிகளை வறிய-நடுத்தர வருமான நாடுகளுக்குச் சேர்ப்பிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால் அதற்குரிய நிதிவளம் மற்றும் ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துவதில் அவ்வமைப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலக சுகாதார அமைப்பு Microsoft நிறுவனர் Bill Gatesஇன் நிதி ஆதரவுடைய இரண்டு இலாபநோக்கற்ற நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக 92 வறிய நாடுகளுக்கான ஒரு பில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. இன்னும் ஒரு பில்லியன் தடுப்பூசிகளை நில நடுத்தர வருமான நாடுகளுக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gavi இன் பொறுப்புக்கு உட்பட்ட பணி கொள்வனவு ஒப்பந்தங்களை முன்னெடுப்பது. நாடுகளுக்குரிய பங்கீடுகளை ஒருங்கிணைப்பது. அவற்றைத் தாண்டி, நாடுகளுக்கு அனுப்புவது உட்பட்ட விநியோகச் செயற்பாட்டினை அந்த அமைப்பு கையெடுக்கவில்லை. அதன் குறுகியகால இலக்கு என்பது விலைகுறைந்த மற்றும் அதீத குளிரூட்டியில் வைத்து ஏற்றுமதி செய்யவும் பராமரிக்கவும் தேவையில்லாத தடுப்பூசிவகைகளை கொள்வனவு செய்வதாகும். அதேவேளை அந்த முனைப்புக்கூட சவால்கள் நிறைந்தது. பரிசோதனைகளில் சிக்கல், பக்கவிளைவுகள் பற்றி வெளிவரும் தகவல்கள், பாவனைக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதில் கேள்விக்குறி போன்ற பல சவால்கள் உள்ளன.

நியாயமற்ற பங்கீடு தொடருமானால்…
தடுப்பூசிப் பகிர்வில் நியாயமற்ற போக்குத் தொடருமானால் மூன்றாம் உலக நாடுகள், தொற்றுத்தடுப்பு நடவடிக்கைகளை நீண்டகாலத்திற்குக் கடைப்பிடிக்க வேண்டிவரும். இது அந்தந்த நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகளாவிய பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன. மூன்றாம் உலக நாடுகளுக்கான தடுப்பூசித் திட்டம் தாமதமாகுமெனில், வைரஸ் இன்னும் பலவடிவங்களில் உருமாறிப் பரவுவதற்கான ஆபத்து அதிகரிக்கும். உருமாறிய வைரஸ்கள் ஏலவே கொரோனாத் தொற்று ஏற்பட்டுக் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்றவும்கூடும். அதேவேளை தடுப்பூசி விளைவுத்தாக்கம் குறைந்துபோகவும், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்குத் தொற்றவும் வாய்ப்புண்டு.

வறிய-மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் தொற்று நீடிக்குமெனில் அது கட்டுக்குள் கொண்டு வந்த நாடுகளில் மீண்டும் தொற்றுப்பரம்பலை ஏற்படுத்துகின்ற ஆபத்துகளுக்கும் இட்டுச்செல்லலாம். எனவே இதிலுள்ள செய்தி என்னவெனில் செல்வந்த நாடுகள் வறிய நாடுகளுக்குரிய தடுப்பூசிகளை வழங்குவதென்பது செல்வந்த நாடுகளின் பொருளாதார நலனுக்கும் சாதகமானது.

உலக ரீதியில் 178 நாடுகள் COVAXஉடன் இணைந்துள்ளன. அமெரிக்காவும் ரஸ்யாவும் இணையவில்லை. கனடா, பிரான்ஸ் மற்றும் நோர்வே போன்ற நாடுகள் மேலதிக தடுப்பூசிகளை வறிய நாடுகளுக்குப் பகிர்வதற்கு முன்வந்துள்ளன. தடுப்பூசியைப் பொறுத்தவரை சீனா மூன்றாவது பெரிய உற்பத்தித்திறன் கொண்ட நாடு. தனது தயாரிப்பான Sinopharmஇனை வளர்முக நாடுகளுக்கு விநியோகிப்பதில் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நாடுகள் குறைந்தபட்சம் இவ்வாறு அறிவித்துள்ளன. இந்நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய செல்வந்த நாடுகளும் தொடருமானால் மூன்றாம் உலக நாடுகள், 2024 வரை காத்திருக்கவேண்டியதைத் தவிர்க்கலாம் என்ற கருத்து நிலவுகின்றது.

இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் தயாரிப்பு நாடு. ஆனால் கடந்த மார்ச், ஏப்ரலிலிருந்து அங்கு தொற்றுப்பரம்பல் மிகத்தீவிரமடைந்து வந்துள்ளது. இந்நிலையில் தமது உள்நாட்டு நெருக்கடியைக் கையாள்வதற்கு இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ளது. இதனால் Covax மேலும் சவால்களை எதிர்கொள்கின்றது. தாமதமாதலும் பற்றாக்குறையும் மேலும் அதிகரித்துள்ளது.

வறிய நாடுகளின் பொருளாதார, சமூகச் சிதைவு
வறிய நாடுகளின் சமூக முடக்கம் நீடிப்பதென்பது அவற்றின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது கல்வி மற்றும் சமூக ரீதியான பெரும் பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும். உதாரணமாக உகண்டாவில் 1.3 மில்லியன் சிறுவர்கள் கடந்த ஒருவடருடமாகப் பாடசாலைக்குச் செல்லவில்லை. இச்சூழல் சிறுவயதுத் திருமணங்கள், பதின்மவயதுப் பெண்கள் கர்ப்பம் தருக்கும் நிலை, வீடுகளில் வன்முறை அதிகரிப்பு எனப் பல்வேறு சமூக ரீதியான சிதைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன. பாகிஸ்தான், மலாவி மற்றும் பல நாடுகளிலும் இதனையொத்த சமூக ரீதியிலான சிதைவுகள் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. நேபால் நாட்டில் இளம்பெண்கள் மத்தியில் தற்கொலை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

2020 பின் கோடை காலத்திலிருந்து தடுப்பூசி கொள்வனவு தொடர்பான செய்திகள் வெளிவரத்தொடங்கியதிலிருந்தே செல்வந்த-வறிய நாடுகளுக்கிடையிலான பாரிய இடைவெளி அவதானிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இன்றுவரை அந்த இடைவெளி அதிகரித்தே வந்துள்ளது. கணிசமான பெருந்தொகைத் தடுப்பூசிகள் தொடர்ந்தும், குறிப்பாக 2021 இறுதிவரை செல்வந்த நாடுகளுக்கே செல்லும் என்கிறார்; ‘உலக சுகாதார புத்தாக்க மையம் – Global Health Innovation Center’ எனும் அமெரிக்காவின் Duke பல்கலைக் கழக ஆய்வு மையத்தைச் சேர்ந்த Andrea Taylor

இடைவெளிகளும் பற்றாக்குறைகளும்
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து உலகின் பெரும்பான்மையான பிராந்தியங்களுக்கு தடுப்பூசிகள் கிட்டியுள்ளன. ஆனால் பங்கீட்டு அளவு (கிடைக்கப்பெற்ற எண்ணிக்கை), வளம், மருத்துவ வசதி, தடுப்பூசிகளை உரிய முறையில் பேணுவதற்கான வசதிகள், தொழில்நுட்பம் சார்ந்த பாரிய இடைவெளிகளும் பற்றாக்குறைகளும் நிலவுகின்றன. இந்த வறிய மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளின் மக்கள் உலகின் மொத்த மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 75 வீதமானவர்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு உறுதிசெய்யப்பட்ட தடுப்பூசியின் அளவு 25 வீதத்திற்கும் குறைந்ததே. செல்வந்த நாடுகள் 2020இன் நடுப்பகுதியிலேயே முந்திக்கொண்டு தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்யத்தொடங்கிவிட்டன.

இங்கு மற்றுமொரு விடயம் கவனத்திற்குரியது. தடுப்பூசிக்கான முதலீடுகளை செல்வந்த நாடுகளே செய்தன. அதாவது கொரோனா என்ற இந்தப் புதிய வகை வைரசிற்கான தடுப்பூசிகள் தொடர்பான மருத்துவ ஆய்வுகள், உயிரியல் தொழில்நுட்ப ஆய்வுககள், பரிசோதனைகள், உற்பத்திகளுக்கான முதலீடுகளை செல்வந்த நாடுகளே செய்தன. இந்தத் துரித முதலீடுகள் தான் இன்று வினைத்தாக்கம் மிக்க பல்வேறு தடுப்பூசிவகைகளைக் குறுகிய காலத்திற்குள் கண்டடைய வழிவகுத்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளை பெரும் நிதிமுதலீடு என்பது முன்கூட்டிய கொள்வனவு ஒப்பந்தம், முன்னுரிமையை இந்நாடுகளுக்கு வழங்கியுள்ளன.

தடுப்பூசிக்கான பெருந்தொகை முதலீடுகள்
தடுப்பூசி தயாரிப்புக்கான மருத்துவ ஆய்வு, பரிசோதனை மற்றும் உற்பத்திக்காக பல பில்லியன் டொலர் நிதியினை அமெரிக்கா முதலீடு செய்துள்ளது. ஐந்து வரையான தடுப்பூசிகள் அமெரிக்க முதலீட்டில் கண்டடையப்பட்டுள்ளன. இந்த நிதி முதலீட்டுக்குப் பிரதிபலனாக நிபந்தனைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. அதாவது தான் முதலீடு செய்த தடுப்பூசித் தயாரிப்புகளுக்கான முன்னுரிமை தனக்குத் தரப்படவேண்டும் என்பதாகும். உலக நாடுகளுக்கிடையிலான இதுவரை தடுப்பூசிப் பங்கீட்டின் ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக அமெரிக்கா இதுவரை எவ்வித அக்கறையினையும் காட்டவில்லை. Covaxஇற்கு உதவவும் முன்வரவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப் தடுப்பூசி கையாளலிலும் ஒரு கடும்தேசியவாதப் போக்கிற்குத் தூபமிட்டுச் சென்றுள்ளார் எனப்படுகின்றது.

செல்வந்த நாடுகளின் இலக்கு
அமெரிக்கா உட்பட்ட பல மேற்கு நாடுகள் 2021 கோடைக்கு முன்னர் தமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளைச் செலுத்தி முடித்து சமூக முடக்கத்திலிருந்து இயல்புக்குத் திரும்புவதை இலக்காகக் கொண்டுள்ளன. ஆனால் அதன் பொருள் அதற்குப் பின்னர் இந்நாடுகள் மேலதிகமாக வைத்திருக்கும் தடுப்பூசிகள் மூன்றாம் உலக நாடுகளுக்குக் சென்றுசேரும் என்பதல்ல. தாம் கொள்வனவு செய்த அல்லது கொள்வனவு ஒப்பந்தம் செய்த தடுப்பூசிகள் வைரசின் அடுத்தடுத்த கட்டங்களுக்காகச் சேமித்து வைப்பதிலேயே செல்வந்த நாடுகள் முனைப்புக் காட்டக்கூடும். அத்தோடு, வைரசின் அடுத்தடுத்த உருமாற்றங்களைக் கருத்திற்கொண்டு புதிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குரிய மருத்துவ ஆய்வுகளுக்கும் தடுப்பூசி உற்பத்திகளில் கவனம் செலுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

மருத்துவக் கட்டமைப்புகள் உயர் தரத்தில் உள்ள செல்வந்த நாடுகளே பல்வேறு புறக்காரணிகளினால் தடுப்பூசித் திட்டத்தில் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவக் கட்டமைப்பு பலவீனமாகவும் பற்றாக்குறைகளையும் கொண்டுள்ள நாடுகளில் தடுப்பூசிகள் கிடைத்தாலும் அந்நாடுகளின் உள்ளகச் சூழல்கள் உரிய முறையில் மக்களுக்குச் சென்றடைவதில் சிக்கல்கள் உள்ளன. நோர்வே போன்ற நாடுகளிற்கூட இன்றும் தடுப்பூசி தொடர்பான பிரதேசங்களுக்கான பங்கீடு, முன்னுரிமை அதாவது எந்தப் பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற விவாதங்கள் ஊடகங்களில் இடம்பெற்றுவருகின்றன.

தவிர மேற்குநாடுகள் பலவற்றில் Astrazeneca தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பாக எழுந்த அச்சங்கள், அவற்றின் தடுப்பூசித்திட்டத்தில் தாமதத்தை ஏற்படுத்தியிருந்தன. Astrazeneca தடுப்பூசி இரத்தக்கசிவு உட்பட்ட சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இறந்துமுள்ளனர். இந்தப் பின்னணியில் ஐரோப்பிய நாடுகள் பல Astrazeneca தடுப்பூசியை இடைநிறுத்தியிருந்தன. அதன் பக்கவிளைவுகள் மிகச் சிறிய அளவிலானவை என்று மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியதை அடுத்து பல நாடுகள் மீண்டும் அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளன. நோர்வே, டென்மார்க் போன்றன அதனை முற்றுமுழுதாக நிறுத்தியுள்ளன. Astrazenecaவின் பக்கவிளைவுகள் தொடர்பாக வெளிவந்த செய்திகளும் முன்னெடுக்கப்பட்ட விவாதங்களும் அதன் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் பொதுவாக இழக்கச் செய்துள்ளன.

புதிய சவால்கள் பற்றிய அச்சம்
2021 இறுதியில் அல்லது, குறுகிய காலத்திற்குள் புதிய சவால்கள் உருவாகலாம் என்ற அச்சமும் உலகளவில் நிலவுகின்றது. தடுப்பூசிகளின் எதிர்ப்புசக்தியின் தொழிற்பாட்டுக்காலம் எவ்வளவு என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. நீண்ட கால எதிர்ப்புசக்தியை ஏற்படுத்துவதற்கு இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் தடுப்பூசியை ஒரு நபருக்குச் செலுத்த வேண்டி வருமா என்பதும் அறியப்படவில்லை. வழமையான இன்புளுவன்சா காய்ச்சலுக்கு (Seasonal influenza) எதிரான தடுப்பூசி போல வருடாவருடம் கொரோனா எதிர்ப்புத் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்ற கருத்துகளும் நிலவுகின்றன. மேற்படி சூழல் ஏற்படுமாயின் செல்வந்த நாடுகள் இன்னும் பன்மடங்கு தடுப்பூசிகளைத் தம்வசப்படுத்திக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டப்போகின்றன. வறிய நாடுகளின் நிலை இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லப்படும்.

உற்பத்திக்குரிய மருத்துவ அறிவியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப வளங்களும் மனித வளங்களும் அமெரிக்கா உட்பட்ட மேற்கிடம் அதிகம் உள்ளன. ஆபிரிக்க, தென்.அமெரிக்க, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகைய மருத்துவ அறிவியல் வளங்கள் பெரும்பற்றாக்குறையாக உள்ளன. இந்தப் பிராந்தியங்களுடன் ஒரு உற்பத்தி இணைப்பு மையங்கள் உருவாக்கப்படவேண்டுமென ‘உலக சுகாதார புத்தாக்க மையத்தின்’ ஆய்வு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அதிக காலம் எடுக்கும். அது குறுகிய எதிரகாலத்தில் சாத்தியமில்லை. இந்த விடயத்தினை இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் உலக சுகாதார அமைப்பின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளன என்றும் கூறப்படுகின்றது.

தடுப்பூசிகளின் நியாயமான பங்கீடு அவசியம்
செல்வந்த நாடுகள் ஒருவகைப் பதுக்கலை மேற்கொள்கின்றன. அந்தப் போக்கினைத் தவிர்த்து வறிய மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளுடன் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை போன்றக அழுத்தமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ‘எயிட்ஸ் பெருந்தொற்றின் போது, செல்வந்தர்கள் மருத்துவச் சிகிச்சை பெற்றதையும் அதேவேளை வளம் குறைந்த நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் இறக்க நேரிட்டதைக் கண்டிருக்கின்றோம். அதே தவறு மீண்டும் நிகழ்வதை நாம் அனுமதிக்கக்கூடாது’ என்று எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொடர்பான ஐ.நா திட்டத்தின் (UNAIDS) நிர்வாக இயக்குனர் Winnie Byanyima தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருந்துதயாரிப்பு நிறுவனங்களுடன் பெரிய இருதரப்பு ஒப்பந்தங்களை நேரடியாகச் செய்ததைத் தவிர்க்குமாறும், அனைத்து நாடுகளுக்குமான நீதியான பங்கீட்டினை உறுதிப்படுத்துவதற்கான உலகளாவிய செயல்முன்னெடுப்புகளுக்கு ஆதரவு வழங்குமாறு செல்வந்த நாடுகளை சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. அத்தோடு மருந்துப்பொருட்களைத் தயாரிக்கும் பெருநிறுவனங்கள் தமது காப்புரிமைக்கு அல்லாது மனிதஉயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டுமெனவும் கோரியுள்ளது.

காப்புரிமையில் விதிவிலக்குக் கோரல்
புதிய மருந்துப்பொருட்கள் உட்பட்ட தடுப்பூசிகள் தயாரிக்கும் போது தயாரிப்பு நிறுவனங்கள் அதற்குரிய காப்புரிமையைத் (தனியுரிமை) தமதாக்கிக்கொள்கின்றன. அதன் அர்த்தம் குறிப்பிட்ட அந்த நிறுவனம் மட்டுமே, குறிப்பிட்ட காலத்திற்கு குறித்த அந்தப் பொருளை உற்பத்தி செய்கின்ற சட்ட ரீதியான உத்தரவாதத்தைப் பெறுகின்றது என்பதாகும். மட்டுமல்லாமல் அதற்குரிய விலையையும் நிர்ணயிக்கும் உரிமையைப் பெறுகின்றது, செய்முறை தொடர்பான தகவல்களையும் அந்நிறுவனம் இரகசியமாகப் பேணுவது காப்புரிமை சார்ந்த நடைமுறை. கொரோனா தடுப்பூசி உலகளாவிய மக்களுக்ச் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, காப்புரிமை தொடர்பான விதிமுறைகளில் விதிவிலக்குகளைத் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் செய்ய முன்வரவேண்டும். அதன் மூலம் ஏனைய நாடுகள் தமக்கான தடுப்பூசியைத் தயாரிப்பதற்குரிய தகவல்களைப் பெறுவதற்கு ஆவனசெய்யவேண்டும் என்பதே மன்னிப்புச் சபையின் கோரிக்கைக்கான அடிப்படை.

அத்தகைய காப்புரிமை விதிவிலக்கினை உலக சுகாதார அமைப்பின் ஊடானதொரு தீர்மானத்தின் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவரமுடியும். ஆனால் செல்வந்த நாடுகள் பல இதுவரை அத்தகைய தீர்மானத்தை எதிர்த்து வந்துள்ளன. தடுப்பூசி ஆய்வு, தயாரிப்பு, பரிசோதனை, பாவனைக்கான ஒப்புதல் பொறிமுறைகள் பெரும் நிதியைக் கோருகின்ற செயல். தகவல்களை நாடுகளுடன் பரிமாறுவது தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்திவிடும் என்பது எதிர்ப்பிற்கான காரணமாக முன்வைக்கப்படுகின்றது.

உலகளாவிய தலைமைத்துவமின்மை
கென்யா, மியான்மார், நைஜீரியா, பாகிஸ்தான், உக்ரைன் உட்பட்ட 67 நாடுகளில் மொத்தமாக ஒன்றரை மில்லியன் மக்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதான தரவுகள் வெளிவந்திருந்தது. ஆனால் தற்போதைய தடுப்பூசி அணுகுமுறை இதேகதியில் தொடருமானால் இந்நாடுகளின் பத்து வீதமான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கிடைக்கும் எனப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கணிப்பீட்டின்படி உலகளாவிய ‘கூட்டு எதிர்ப்புசக்தியை (Community immunity)’ அடைவதற்கு எழுபது வீதமான உலக மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படவேண்டும்.

தடுப்பூசித் திட்டத்தினை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்குரிய உலகளாவிய தலைமைத்துவம் தற்போதைய சூழலில் இல்லை என்பதே யதார்த்தம். வலியவன் வாழ்வான் என்ற அணுகுமுறையைத்தான் பெரும்பாலான சக்திமிக்க நாடுகள் கடைப்பிடிக்கின்றன. இந்த நிலைமைகளைச் சீர்செய்வதற்கான நம்பிக்கை மிக்க அமைப்புகளாக உலக சுகாதார அமைப்பும், அது உருவாக்கிய Covax ஒருங்கிணைப்புத் திட்டமும் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. அத்தோடு சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற உலகளாவிய அழுத்தக்குழுக்களும் நீதியான தடுப்பூசிப் பங்கீடடின் அவசியத்தினை வலியுறுத்திவருகின்றன.


தினக்குரல், மே 2021
தாய்வீடு, மே 2021
காக்கைச் சிறகினிலே ஜூன் 2021
காண்பியம் இணையம், மே 2021

Leave A Reply