எழுதிக் கடக்கின்ற தூரம் – அறிவுமதி அணிந்துரை

தூரத்தின் அருகில் ரூபன். அருகின் தூரத்தில் ரூபன்.
புலம்பெயர் வாழ்வின் மணற்கடிகையில்
தலைகீழ் முரணாய்க் கசியும் மணற்துகள் நாள்களால்
காலம் அளக்க வாய்த்த கனவுக்காரர்.

விழிப்பதற்குச் சற்று முந்தையதான கனவுகளில்…
எதார்த்த பகல்… எதார்த்த இரவு
விழிக்கும் எதார்த்தங்களில்… நீளப் பகல்.
நீள நீள நீள நீளப் பகல்.
அப்படித்தான் இரவும்.

“துருவக் குளிரின் உத்தரிப்புகளோடு
மல்லுக்கட்டி
இருளின் திண்மத்திரள்களினூடு
ஒளியின் ஒற்றைக் கீற்று தேடி
கனவின் நிழல் பிடித்து
நிகழ்கிறது தினசரிப் பயணம் ”

என்கிற இவரது தூரத்து அருகாமையில்…

“மைனஸ் இருபது பாகை செல்சியஸ்
தாண்டிய குளிர்
உச்சி முதல் பாதம் வரை
ஊசிமுனை துளைக்க
உறைந்துபோன உணர்வினை
எந்த வெப்பம் கொண்டு
வெளிக்கிளம்பச் செய்வது .. ”

என்கிற அருகாமையின் தூரத்துப் பொங்கலை
அடையாளத் திருநாளாகக் கொண்டாட
இவர் தேடுகிற நெருப்பு.. எங்கிருந்து தெரியுமா..
தாய் மண்ணில்

“முன்னவர் உழைப்பினில்…
மூட்டிய சுவாலையிலிருந்து”

இவரது வரிகளிலேயே சொல்ல வேண்டுமானால்..

“முற்றுப் பெறாத கவிதைக்கான
இறுதி வரிகளை
எழுதிப் போகிறது
அந்தச் சுவாலை”

அந்தச் சுவாலையின் முது மூத்தப் பொறியில் பூத்த
முதல் நெருப்பின் முதல் வெளிச்சத்தில்
முகங்கள் பார்த்துத் திகைத்துத் திணறிக்
குலவையிட்டுக் குரவையாடிய
பூர்வக் குடிகளது

‘ஆதிவேர்கள் பிடித்து
இறங்கிய
தொன்ம ஏக்கத்தின் அழல்’
தான்

அந்த அழலின் தொடர்ச்சிகள்தாம்
இந்தச் சுவாலைகள். ஆம்…
ரூபனின் கவிதைகள்.

“பன்முகங்களைக்
கடப்பதும்
சிரிப்பதும்
வாழ்வின்
பெருங்கலைதான் ”

எனக் கண்டுகொண்டவரது

“ஆழ் சுழியில்
திமிறி யெழுந்து
படிமங்கள்
உருக் கொள்ள.. ”

“தீராத ஏக்கங்களின்
கவிதை ஒன்று
கருக் கொள்கிறது”

இவரது கவிதைகள் பலவும் அப்படித்தான் கருக் கொண்டிருக்கின்றன.

ஒத்தோடியாய் இருந்து
பார்க்கவிரும்பாத எதிர்நீச்சல் மனசர்.

குழப்பம் விளைவிப்பதாக.. தளம் தேடுவதாக..
எவர் இடறியும் விழாத
நெளிவற்ற நேரர்
நெடுங் கனவர்.

“கனவெனில் அது பெரும் கனவு
அந்தக் கனவுக்கு
உயிர் இருந்தது.
உணர்வில் தகித்த
அந்தக் கனவுக்காக
அவர்கள் உயிரையும் கொடுத்தார்கள்

அந்தக் கனவிற்கு
அவர்கள் விசுவாசமானவர்கள் ”

அந்த விசுவாசமானவர்களது
ஈகச் சுடர்களது தூய்மையின் வெப்பத்தில்…
கூறுபோட நினைப்பவர்களது
எல்லாக் கயமையும் துரோகமும்
மக்கிய சருகுகளாய் எரிந்து சாம்பலாகும்.

அந்தப் பொதுமுகம் அதைப் பார்த்துக் கொள்ளும்
ஆம்….
அதன் கனவுக்கு உயிர் இருக்கிறது.

“தலைக்கு மேல்
விரிந்திருக்கும் வானம்
எல்லையென்றான பின்
கால்களின் கீழ் பூமி
பொருட்டல்ல

பறவைக்கு”
என்கிறார் ரூபன்.

“கனவில் விரிந்ததொரு
கவிதைப் பெருங்காடு
மூடிய கண்களுக்குள்
பிரபஞ்சப் பேரொளியாய்த் தெறித்தது”

என்பதுவும் இவர்தான்

கோடி கோடிப் பறவைகள் கூடிப் பறப்பதற்கான
ஆதிப் பெரு வெளிதான்
வானத்துப் பெருஞ் சுழியம்
அதன் உயர உயரத்திலிருந்து இறங்குகிற
பிரபஞ்சப் பேரொளியின் இறக்கைகள் கட்டிய
பறவைகளாகவே இவரது சொற்கள்….
அனைத்துக் கவிதைகளிலும்.

ஆம்…இவர் யார் தெரியுமா…

“வெப்ப வலயம் நோக்கிப்
பயணப் படாமல்
உறைபனியிலும் வாழ்தலுக்காக
தவம் இயற்றும் சின்னக் குருவி”

இது…

“திசையைக் கணிக்கும்
உயரப் பறக்கும்
உலகைத் தரிசிக்கும் ”

தரிசிக்கும் தருணங்களில்…கடுங்கொலைகள் பார்க்கையில்…
கொதிநிலை கூடிய வெப்பப் பிசினாய்….
இவரது தமிழ்.

“காம வெறியும்
பெண்ணுடலைக் கிழிக்கிறது
இனவெறியும்
மதவெறியும்

நேற்று நிர்பயா
இன்று ஆசிஃபா

இன்று அவள் என் மகள்
இனி அவள்
பிரபஞ்சக் குழந்தை”

“சிரிய தேசத்தின்
அஞ்சு வயதுக் குழந்தை ஒம்றான்”

“சாம்பலிலும்
புழுதியிலும்
குருதியிலும்
தோய்ந்த உன் தோற்றம்
ஓங்கி அறைகிறது
சமாதான தேவதைகளின்
முதுகுகளிலும்
ஜனநாயகப் போலிகளின்
முகங்களிலும்.”



“ஈழத்திலும் பலஸ்தீனத்திலும் சிரியாவிலும்
உலகின் வஞ்சிக்கப்பட்ட
நிலங்களெங்கும் காணாமற்போனவர்கள்
எங்கிருக்கின்றார்கள்…தேடுங்கள்”

குற்றவாளிகளே நீதிபதிகளாய்
நியமிக்கப் பட்டிருக்கும்
அரசியல் வியாபார அரங்கிலா
உங்களைத் தொலைத்தவர்களுக்கான
நீதி கிடைக்கப் போகிறது..? ”

எல்லா இடுக்குகளிலிருந்தும் நசுங்கி
வெளியேறி நடுங்கா அறத் தெறிப்பில்
குரலெழுப்புகின்றன…இவரது
ஆக்காட்டிச் சொற்கள்.

இழந்த நாட்டின் வலி…இழந்த வாழ்வின் வலி..
கவித்துவ மென்மை மனசுக்குள்
என்ன என்னவெல்லாம் செய்கின்றன
என்பதை ரூபனின் பல கவிதைகள் பதிவுசெய்துள்ளன.

“கட்டடங்களே எங்கும்
வானளந்து நிற்கின்றன
பொருட்களே எங்கும்
கண்ணில் பட்டுத் தொலைகின்றன”

“பொருளுலகின் பெருவிரிப்பினால்
ஆக்ரமிக்கப்பட்ட மூளைகள்
நவீனம் புகுந்த வெற்றுடம்புகள்
திக்கறியாத பயணத்தில் மனிதர்கள் ”

“கண்ணாடிச் சுவர்களின்
வானளக்கும் கட்டடங்களின்
மூச்சுத் திணறல்கள்..”

“இரைச்சல்கள் இசையென்று
இரசனை மாற்றம் செய்யப்படுகின்றன”

“எத்தகு வேகமெடுத்து
ஓடினும் குறையாத தூரம்
இயந்திரத் தனங்களின்
இம்சைகள் படிந்த கணங்கள்
சலிப்பையும்
குற்றவுணர்வையுமே
விட்டுச் செல்கின்றன”



“நுட்பத் தொழில்களே
வளர்ச்சியென்று
வாய் பிளந்தோம்
வளங்களை அழித்துப்
பெருந்தொழில் நிறுவி
பேராசைப் பேய்களாய்
வலம் வந்தோம்

வருமுன் காக்கவும்
வக்கற்றுப் போனது
வந்தபின் மீட்கவும்
திறமற்றுப் போனது..”

பழக்கப் பழக்க…மனசுக்குள் தூரங்களைத்
தாண்டிய ஒரு குறிஞ்சி நிலப் பாட்டியின்
கேவல் காடதிர…மலைகள் எதிரொலிக்கக் கேட்கிறது.

உடல் கிழிக்கும் ஊசிக் குளிரிலும்
உலகக் கந்தலை உருட்டித் தைக்கும்
ஊசியாய் உங்கள் எழுதுகோலைப் பயன்படுத்திய
பொறுப்புணர்வு என்னை நெகிழச் செய்கிறது.

‘ஒரு வீடு ஈருலகு’ என்ற கவிதையில்
போய் வாழ்கிற….பிறந்து வாழ்கிற
மனசுகளுக்குள் நுழைந்து நீங்கள்
வெளிக் கொணர்கின்ற உளவியல் வழிப்புணர்வு..
பனி
அவர்களுக்கு விருப்பமாகிறது
போனவர்களுக்குச் சலிப்பாகிறது.

‘ஒரே வீடு
இரு வேறு உலகங்கள்’

நுட்பமாய் மற்றொன்று

ஒரே நாடு.
இருவேறு தலைமுறைகள்.

இதில் மறக்கக்கூடாதது
உப்புக் கஞ்சி என்பதுதான்

இரைச்சலற்ற…அமைதியில்
இசை கேட்க
விரும்புகிற
ஒரு மெல்லிய மனசின்
கவிதைக் காரர்தான் ரூபன்.

“காலத்தின் தூரம் கடந்து
பெருஞ் சொற்களைக்
காவித் திரிகிறது
வெளிகளே
கதியென்றான பறவை”

சொற்களாய் இக்கவிதைத் தொகுப்பு நெடுக
பறக்கிற பறவை என் இனிய ரூபன் தான்.

இனித்தத் தமிழில் இசைப்பாடல்கள் எழுதுவதிலும்
சிறப்புச் செழுமை பெற்றவர்
நாட்டின் அரசியல்…உலகின் அரசியல் என
வாழ்வை அழகுசெய்ய விழையும்
அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும்
அறத் தெளிவு கொண்டவர்

ரூபனின் இக்கவிதைப் பயணம்
ஒளி சூடிச் சிறக்கத்
தாய்மையில் வாழ்த்தும்
அண்ணன்


அறிவுமதி

23.05.2020
கீணனூர்
இரவு 2:20

Leave A Reply