சிங்கள மக்களின் எழுச்சியும் தமிழ் மக்களின் வரலாற்று அனுபவமும்
சிங்கள மக்களின் தற்போதை எழுச்சியானது இளைய தலைமுறையிலிருந்து செயற்திறனும் ஆளுமையும் ஜனநாயகத்தின் பன்மைத்தன்மையை மதிக்கின்ற பண்புமுடைய புதிய அரசியல் தலைமையை அல்லது தலைமைகளை உருவாக்குமாயின் அது இலங்கைத்தீவின் எதிர்கால அரசியலுக்கு வலுச் சேர்க்கக்கூடியது.
1948இற்குப் பின்னர், அதாவது இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னரான 70 ஆண்டு கால வரலாற்றில் அந்நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி இதுவென மேற்கின் ஊடகங்கள் தொடர்ந்து எழுதிவருகின்றன. ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டனர். நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருவதோடு, காலிமுகத்திடலில் ‘Go Home Gotta’ என்ற கோரிக்கையுடன் ராஜபக்சேக்களின் ஆட்சிபீடத்தினைப் பதவிவிலகக்கோரி ஜனநாயகப் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர். இந்தப் போராட்டம் சிங்கள தேசத்தின், அதாவது சிங்கள மக்களின் வரலாற்றில் முக்கியமானது.
நவீன வரலாற்றில் சிங்கள மக்களின் எழுச்சி
இலங்கைத்தீவின் வரலாற்றில் இதற்கு முன் சிங்கள மக்கள் இப்படியாகத் திரண்டதில்லை. நாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டங்களில் மக்கள் திரளவில்லை. இலங்கைத் தீவை எடுத்துக்கொண்டால் குறிப்பிட்ட கோரிக்கைகள், உரிமைகளுக்கான அடையாள, கவனயீர்ப்பு, எதிர்ப்புப் போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இப்படியொரு மக்கள் திரளாகச் சிங்கள மக்கள் தமது ஆட்சியாளர்களுக்கு எதிராக இத்தனை தீவிரமாகத் தெருவில் இறங்கி நாடு தழுவிய ரீதியிலும், குறிப்பிட்ட ஒரு இடத்திலும் பல நாட்களாகத் தங்கியிருந்து – தொடர்ந்து வலிமையான போராட்டங்களை நடாத்தியதில்லை அதுவும் பௌத்த சிங்கள பெருந்தேசியவாதத்தின் உச்சமான பிரதிநிதிகளாகவும் – போர்வெற்றியின் கதாநாயகர்களாகவும் – சிங்கள தேசத்தின் பாதுகாவலர்களாகவும் கருதப்பபட்டவர்கள் ராஜபக்சே சகோதரர்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டவர் கோத்தபாய ராஜபக்ச. இத்தனை பின்னணிகளைக் கொண்டவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த சிங்கள தேசமும் திரண்டிருக்கின்றமைக்கான அடிப்படைக்காரணம் பொருளாதார நெருக்கடி. அடுத்ததாக அந்நெருக்கடிக்கு இட்டுச் சென்ற ஆட்சிபீடத்தின் ஊழல், சர்வாதிகாரம், குடும்ப ஆட்சி என்பனவற்றைக் கூறலாம். அரசியல் காரணங்களைவிட நாளாந்த வாழ்வைப் பாதிக்கின்ற பொருளாதார நெருக்கடிகளே காலிமுகத்திடல் போராட்டங்களுக்கான உந்துதலும் இயங்குசக்தியும் ஆகும்.
தமிழ் மக்கள் பங்கேற்பது சாதகமா?
தமிழ் மக்கள் பங்கேற்பது தொடர்பாக வெளியிலிருப்பவர்கள் – களத்தில் இல்லாதவர்கள் தீர்மானமெடுப்பதோ, தூண்டுவதோ பொருத்தமில்லை. அது ரிமோட் கொன்றோல் அரசியலாகிவிடும். வடக்குக் கிழக்கிலும், மலையகம், தென்னிலங்கையிலும் வாழும் தமிழ் மக்கள் தமது சமகால நிலைமைகள், கடந்தகால வரலாற்று அனுபவம், போராட்ட அனுபவம் – சிங்கள ஆட்சியாளர்களுடனான பேச்சுவார்த்தை அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களோடு, அரசியல் நலன்கள், எதிர்காலம் குறித்த முடிவுகளை அவர்களாக எடுக்க வேண்டும். அந்த முடிவுகளின் சாதக பாதகங்கள் குறித்த புரிதலுடனான உரையாடல்களில் ஈடுபடுவதும் தார்மீக ஆதரவினை வழங்குவதும் மட்டுமே வெளியிலிருப்பவர்கள், அதாவது புலம்பெயர்ந்த சமூகத்தினால் முன்னெடுக்கக்கூடிய பணிகள்.
தமிழ் மக்கள் தோழமை உணர்வுக்காக பங்குகொள்வது பொருத்தமானது. இருப்பினும் அவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்குகொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த கவனமும் விழிப்பும் அவசியம். பகடைக்காய்களாகவோ அன்றி கருவிகளாகவோ ஆகிவிடக்கூடாது. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமை சார்ந்த போராட்டங்களைப் பௌத்த சிங்கள மேலாதிக்கம் எப்படி அணுகியது, எப்படி மோசமாகச் சிதைத்தது என்ற வரலாற்று அனுபவமும் எச்சரிக்கை உணர்வும் தமிழ் மக்களுக்கு இருப்பதாகவே நம்பப்படுகின்றது. 1956களின் தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிரான சத்தியாக்கிரகப் போராட்டத்திலிருந்து, 2009இல் முடிவுக்கு வந்த ஆயுத விடுதலைப்போராட்டம் வரை அரைநூற்றாண்டுக்கு மேலாக சிங்கள மேலாதிக்க அரசுகள் மிக மோசமாக ஒடுக்கியே வந்துள்ளன. இராணுவ இயந்திரத்தினால் தமிழர்களின் எதிர்ப்பு அரசியல் போராட்டங்கள் எல்லாக் காலங்களிலும் ஒடுக்கப்பட்டிருக்கின்றன.
ராஜபக்சேக்கள் எழுச்சியை அணுகப்போகும் வழிமுறை?
இங்கு முக்கியமான விடயம் ராஜபக்சேக்கள் சிங்கள மக்களின் இந்த எழுச்சியை எப்படி அணுகப்போகின்றனர் என்பதிலேயே அதிகம் தங்கியுள்ளது. இதுவரை மக்கள் எழுச்சியை ஒடுக்குவதற்குரிய முனைப்புகளை அரசாங்கம் காட்டவில்லை. இராணுவத்தையோ காவல்துறையையோ ஏவிவிடவில்லை. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை, தண்ணீர்ப்பீரங்கித் தாக்குதல்கள் மட்டுமே பிரயோகிக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒரு ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டதோடு, ஐவர் காயமடைந்துமுள்ளனர்.
அமைதிப்போராட்டங்களை எத்தனைதூரம் கோத்தா அரசு சகித்துக்கொள்ளும், இராணுவ மற்றும் காவல்துறை இயந்திரத்தினைக் கட்டவிழ்த்துவிட்டு ஒடுக்க முனையுமா, பௌத்த கடும்போக்கு மதவாத மற்றும் பேரினவாத சக்திகள் என்ன செய்யப் போகின்றன என்பன தற்போதைய போராட்டத்தின் விளைவில் தாக்கம் செலுத்தக்கூடியவை. அவ்வாறு நிகழநேர்ந்தால், இனவாத சக்திகள் இதனை இனக்கலவரமாக மடைமாற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதற்கான வரவாற்று நிகழ்வுகளும் அனுபவங்களும் நிறையவே உள்ளன. எனவே தமிழ் மக்கள் தோழமை உணர்வு என்பதைத் தாண்டி ‘அக்ரீவாக’ இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பது தமிழ் மக்களின் அரசியல் நலன்களுக்குச் சேவை செய்யுமா என்பது கேள்விக்குறியே.
அரசியல் வெறுமைக்குள் தமிழர் தரப்பு
தமிழ் மக்கள் ஏலவே ஒரு அரசியல் தலைமைத்துவவெற்றிடத்திற்குள் இருக்கின்றனர். தலைமைத்துவ வெற்றிடமென்பதை அரசியல் வெற்றிடமென்றும் பொருள் கொள்ளலாம். தமிழ்க் கட்சிகள் உள்ளன. தேர்தலில் நிற்கின்றன என்பது மட்டும் தலைமைத்துவத்தோடும், அரசியல் களத்தில் செயல்வலுமிக்க நிலையில் தமிழர்கள் உள்ளனர் என்று பொருள்கொள்ளப் போதுமானவை அல்ல. 2009 போர் முடிவுக்கு வந்ததன் பின்னரான தமிழரின் அரசியல் என்பது பெருமளவு செயலுக்குப் போகாத அரசியலே. அதாவது அரசியல் உரிமைகளுக்கான தீர்வு நோக்கிய அழுத்த அரசியலையோ, எதிர்ப்பு அரசியலையோ, நிலவுகின்ற ஜனநாயக வெளிகளுக்கு உட்பட்டேனும் தமிழர் தரப்பு வலிமையாக முன்னெடுக்கவில்லை என்ற பார்வையும் விமர்சனங்களும் பரவலாக உள்ளன. தற்போதைய நெருக்கடியைக்கூட அரசியல் ரீதியாக சாதகமாகக் கையாளக்கூடிய நிலைப்பாட்டினையோ, உத்தியையோ தமிழர் தரப்பு கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ்க் கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி உட்பட்ட ஏனைய சிங்களக் கட்சிகள் எதுவும் பலமான நிலையிலோ அன்றிச் செயற்திறன் கொண்டவையாகவோ இல்லை. ஜனாதிபதியையும் பிரதமரையும் தவிர அதாவது கோட்டாவையும் மகிந்தவையும் தவிர அனைத்து அமைச்சர்களும் (26 அமைச்சர்கள்) ஏப்ரல் 3ம் திகதி பதவி விலகியுள்ளனர். இந்தப் புறநிலையில் அரசாங்கத்தைக் கலைக்கின்ற அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஆட்சியைக் கவிழ்க்கவோ எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். மாற்றங்களுக்குத் தேவையான 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்குரிய அனைத்துக் கட்சிப் பிரதிநிதித்துவத்தைத் திரட்டுவதோ அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதோ சாத்தியமில்லை என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
வெறும் ஆட்சி மாற்றத்திற்கு மட்டும் வழிசமைக்குமாயின் இலங்கைத்தீவின் இனத்துவ பன்மைத்துவத்திற்கோ, ஜனநாயக மேம்பாட்டுக்கோ இட்டுச்செல்லப்போவதில்லை. இனமேலாதிக்க சிந்தனையிலிருந்து விடுபட்ட புதிய அரசியல் சக்திகள் தென்னிலங்கையில் தோற்றம் பெறாதவரை, நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ள பௌத்த, சிங்கள அரச கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படாதவரை, ஆட்சி மாற்றம் நீண்ட கால அடிப்படையிலான தீர்வுகளுக்கு உத்தரவாதத்தினை வழங்கிவிடாது. இது இலங்கைத்தீவின் வரலாற்று அனுபவ யதார்த்தம்.
அரபு வசந்தம் முன்னுதாரணம்
அரசுகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கென்று வரலாறு நெடுகிலும் முக்கிய பங்கும் முன்னுதாரணங்களும் உள்ளன. சர்வாதிகார, ஊழல் ஆட்சிபீடங்களுக்கு எதிரான மிக அண்மைய கால உதாரணமாக 2011இன் அரபு வசந்தத்தைக் குறிப்பிடலாம். வட ஆபிரிக்காவில் துனிசியா, லிபியா முதல், மத்திய கிழக்கின் எகிப்த், ஜெமன், சிரியா, ஜோர்டான், ஓமான், சவுதி-அரேபியா, குவைத் உட்பட்ட பல நாடுகளுக்குப் பரவிய மக்கள் எழுச்சிகளே ‘அரபு வசந்தம்’ எனப் பெயர்சூட்டப்பட்டன. இவை 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதி கண்ட முதன்மையான மக்கள் திரளின் எழுச்சி என்று மதிப்பிடக்கூடியது. அதாவது மக்கள் தொடர்ச்சியாகப் பல நாட்கள், பல வாரங்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து கிளர்ச்சி செய்தனர். அடிப்படையில் அவை அனைத்தும் சர்வாதிகார, ஊழல் ஆட்சிபீடங்களுக்கு எதிரானவை.
ஆட்சி மாற்றமும் அரசியல் மாற்றமும் கோரி நடாத்தப்பட்ட இப் போராட்டங்கள, துனிசியா, எகிப்த், ஜெமன் போன்ற நாடுகளில் ஆட்சிபீடங்களை ஆட்டம்காண வைத்தன. ஆனால் சிரியா, ஜெமன், லிபியாவில் ஆட்சிபீடங்களுக்கெதிரான மக்கள் கிளர்ச்சிகள், உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்று பாரிய சிதைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இராணுவ ரீதியிலான வெளித்தலையீடுகளும் இந்நாடுகளின் போர்ச்சூழலின் தீவிரத்திற்கான காரணிகள். லிபியாவில் முகம்மர் கடாபியை வீழ்த்த நேட்டோ தலைமையில், ஐரோப்பிய நாடுகள் இராணுவ ரீதியில் கரம்கோர்த்தன. சிரியாவின் போர் மிக மோசமானதொரு இடியப்பச் சிக்கலாக்கப்பட்டுள்ளது. அசாத் ஆட்சிபீடம், கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ் என உள்நாட்டுத்தரப்புகளும் அமெரிக்கா, ரஸ்யா என்ற சர்வதேசத் தரப்புகளும் சிரியப் போரின் தரப்புகளாக உள்ளன. ஜெமனைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆண்ட Ali Abdullah Saleh பதவி விலகுவதற்கு மக்கள் எழுச்சி வழிகோலியது. ஆனால் 2014 – 2015 காலப்பகுதியில் அந்நாடு உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்பட்டுள்ளது. டீயாசயinஇல் மக்கள் எழுச்சி ஆட்சிபீடத்தினால் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டது.
விளைவுகள்: ஆட்சி மாற்றம் – அரசியல் மாற்றம் – உள்நாட்டுப்போர்
அரபு வசந்தத்தின் நேர்மறையானதும் எதிர்மறையானதுமான விளைவுகள் பன்முகப்பட்டவை. ஆகப்பெரிய எதிர்மறை விளைவு உள்நாட்டுப்போர்கள். மட்டுமல்லாது ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள், அரபு எழுச்சியை முன்னெடுத்த நாடுகளில் காலூன்றியும் பலமடைந்துமுள்ளன. துனிசியாவில் மட்டும் அது நிலைகொள் மாற்றத்திற்கும் ஜனநாயகப் பாதைக்கும் இட்டுச்சென்றிருக்கின்றது. நேர்மறையான விளைவு என நோக்கும் போது, நவீன உலக வரலாற்றில் சர்வாதிகார அரசுகளுக்கு மக்கள் திரளின் எழுச்சி மூலம் சவால் விடுப்பது, மாற்றத்தைக் கோருவது, ஜனநாயக ரீதியில் மக்கள் போராடுவது என்பவற்றிற்கான அண்மைய முன்னுதாரணமாக அரபு வசந்தம் விளங்குகின்றது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தினை மையப்படுத்தியதாக இருப்பினும் அதன் தாக்கம் உலகளாவியது. காலிமுகத்திடலின் தற்போதைய மக்கள் போராட்டத்திற்கான அசலான முன்னுதாரணமாக அரபு வசந்தத்தினைக் குறிப்பிட முடியும்.
நியூயோர்க் சிற்றி – வோல்ஸ்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம்
அரபு வசந்தத்தின் உந்துதலால் தோற்றம்பெற்ற வோல்ஸ்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் (Occupy wall street demonstrations) முக்கியமானது. இது அமெரிக்காவின் நியூயோர்க் சிற்றியில் செப்ரெம்பர் 17, 2011 இல் தொடங்கப்பட்டது. கனடிய சமூகசெயற்பாட்டுக்குழுவான Adbusters அரபு வசந்தத்தினால் உந்தப்பட்டு இந்த ஆர்ப்பாட்டத்தினைத் தொடங்கியது. அடிப்படையில் சமூக-பொருளதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானதும், வங்கிகளினதும் பெருவணிக நிறுவனங்களினதும் ஆதிக்கத்தை எதிர்ப்பது, அரசுக்கும் பெருவணிக நிறுவனங்களுக்குமிடையிலான ‘உட்கூட்டை’ எதிர்ப்பதோடு அரசாங்கத்தின் மீது பெருவணிக நிறுவனங்கள் செலுத்துகின்ற செல்வாக்கினைக் கேள்விக்குள்ளாக்குவது உள்ளிட்ட இன்னபிற கோரல்களுடன் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ‘Occupy wall street movement’ ஒரு இயக்கமாகவும் அது பரிணாமம் பெற்றது. செப்ரெம்பர் 2011 நியூயோர்க் சிற்றியில் தொடங்கப்பட்ட இப்போராட்டம், ஒரு மாதத்திற்குள் அமெரிக்காவின் 70 வரையான நகரங்களுக்குப் பரவியது. மட்டுமல்லாமல் இதனால் உந்தப்பெற்று, உலகின் ஏனைய நாடுகளிலும் வணிக உயரடுக்குகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிரானவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர். இத்தாலி, பிரித்தானிய, ஜேர்மன் போன்ற நாடுகளின் பல நகரங்களிலும் இத்தகு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பிரான்ஸ் – மஞ்சள் அங்கிப் போராட்டம்
இதன் வரிசையில் பிரான்சில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற மஞ்சள் அங்கிப் போராட்டமும் (Yellow vests movement) குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்புச் சட்டங்களுக்கு எதிராக, பொருளாதார நீதியைக் கோரி தொடர் போராட்டங்களை இந்த இயக்கம் நடாத்தியது. மே 2018 Change.org எனும் இணையவழிக் கையெழுத்துப் போராட்டமாகத்தான் இந்த இயக்கத்தின் செயற்பாடு முதலில் தொடங்கியது. அதே ஆண்டு நவம்பர் 17, முகநூல் பிரச்சாங்கள் மூலம், எரிபொருள் விலையேற்றத்திற்கும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கும் எதிரான நாடுதழுவிய வீதி மறியல் போராட்டங்களுக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டன. பின்னர் நாடு தழுவிய ரீதியில் ஜனாதிபதி Emmanuel Macronஇற்கு எதிரான அரசியல் கிளர்ச்சியாகவும் 2017இல் அவரால் கொண்டுவரப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பிற்கு எதிரான அரசியல் கிளர்ச்சியாகவும் விரிவடைந்தது. ஆரம்பத்தில் தலைநகர் பாரிசிலும் ஏனைய நகரங்களிலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வீதிமறியல் போராட்டமாகத் தொடங்கியது. செல்வந்தர்கள் கூடுதல் வரி செலுத்தவேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் ஒன்று. பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலும் இதனால் உந்தப்பட்ட இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன.
மக்களின் பரந்துபட்ட ஆதரவு இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக இப்போராட்டங்கள் நடைபெற்றன. அரசியல் கட்சிகளினாலோ அல்லது தொழிற்சங்கங்களினாலோ இந்த இயக்கத்தை கட்டுப்படுத்தவோ அல்லது கட்டுப்பாட்டில் எடுக்கவோ முடியவில்லை. சமூக ஊடகங்கள் இப்போராட்டத்திற்கான முக்கிய அணிதிரட்டல் கருவியாகவும், போராட்டக்காரர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்ற ஊடகமாகவும் பங்கு வகித்தன. ஆயினும் காலப்போக்கில் போராட்டக்காரர்களுக்கும் ஆயுதம் தரித்த காவல்துறையினருக்கும் இடையே வன்முறை மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்ததால் பொதுமக்களின் ஆதரவு குறைந்தமை குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் அங்கிப் போராட்டக்காரர்கள் அடிப்படையில் உழைக்கும் மக்கள் எனினும் அவர்கள் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்களில் வேலையில்லாதவர்கள், ஓய்வூதியம் பெறுவோர், விவசாயிகள், தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் எனப் பல்வேறு தொழில்சார் பின்னணிகளைக் கொண்டவர்களாக இருந்தனர்.
சென்னை ஜல்லிக்கட்டுப் போராட்டம், டில்லி விவசாயிகள் போராட்டம்
2017இல் சென்னையில் மெரீனா கடலோரத்தில் முன்னெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டமும், இந்தியத் தலைநகர் டில்லியில் நடந்து வெற்றியடைந்த விவசாயிகளின் போராட்டமும்கூட இத்தகைய மக்கள் எழுச்சிகளுக்கான சமகால முன்னுதாரணங்கள். இந்திய மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்ரெம்பர் 2020ஆம் ஆண்டு பஞ்சாபில் தொடங்கிய போராட்டம், 2020 நவம்பர் டெல்லியை மையம்கொண்டது. அங்கு சாலைகளை மறித்து சிங்கு, டிக்ரி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நிரந்தரமாகத் தங்கியிருந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஓராண்டுக்கு மேலாகப் போராட்டம் தொடர்ந்த நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் நவம்பர் 2021 அறிவிக்கப்பட்டது.
இத்தகைய மக்கள் போராட்டங்களின் முதன்மைக் கோரிக்கை ஆட்சிமாற்றம், அரசியல் மாற்றம், ஜனநாயக மேம்பாடு, ஊழல் நீக்கம் என்பனவாகும். இலங்கையின் மக்கள் எழுச்சிக்கான காரணங்களை அரபு வசந்தத்தோடு ஒப்பிடுகையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆட்சிபீடத்தினை நீக்குவது, அரசியல் பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவருவது என்பவையே அக்கோரிக்கைகள். ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது அறியப்பட்ட தலைமையோ இப்போராட்டத்தின் வழிநடத்தல்களுக்குப் பின்னால் இல்லை. மக்கள் தன்னியல்பாகத் திரண்டுள்ளமை போன்ற தோற்றப்பாடே வெளித்தெரிகின்றது.
மக்கள் எழுச்சிகளின் உள்ளகக் காரணிகளும் வெளித்தரப்பு நோக்கங்களும்
ஒவ்வொரு மக்கள் எழுச்சிக்கும் பின்னால் உள்ளகக் காரணிகள் பெரியனவாக இருப்பதோடு அதற்றுக்கு வெளியகத் தாக்கங்களும் உள்ளன. அவை பெரிதும் உள்ளக வரலாறு, அரசியல், பண்பாட்டு, சமூக, பொருளாதாரப் புறநிலைகளிலிருந்து தோற்றம் பெறுகின்றன. துனிசியா, எகிப்த், ஜெமன் போன்ற நாடுகள் பெரும்வன்முறைச் சூழலுக்குள் செல்லாமல், அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்தன. அதேவேளை சிரியா, லிபியா வன்முறை, உள்நாட்டுப்போர், சர்வதேச இராணுவப் பிரசன்னம் என சிதைவுக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. உண்மையில் இந்த அரபு வசந்தம் என்ற சொல்லாடல் மேற்குலக ஊடகங்களின் உருவாக்கம். மேற்குலக ஊடகங்கள் எனும் போது அது அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் போக்கினைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளத்தக்கது. 2003இல் ஈராக் ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து மத்தியகிழக்கு நாடுகளை ஜனநாயகப் பாதைக்குத் திருப்புவது என்பது மேற்கின் நிகழ்ச்சி நிரலில் இருந்த விவகாரம். அந்த ஜனநாயகம் என்பது மேற்கு ஆதரவு அரசாங்கங்களை நிறுவுவது என்பதாகும்.
காலி முகத்திடல் போராட்டத்திற்கு சர்வதேச ஆதரவு, குறிப்பாக அமெரிக்க மற்றும் மேற்குலகின் ஆதரவு உள்ளது. ராஜபக்சேக்கள் அடிப்படையில் அமெரிக்கா தலைமையிலான மேற்கிற்கு உவப்பானவர்கள் இல்லை. அவர்கள் சீனாவின் செல்வாக்கு தீவு முழுவதிலும் ஆழமாகப் பதியவும் வழிகோலியவர்கள். அவர்களை ஆட்சிபீடத்திலிருந்து நிரந்தரமாக அகற்றுவதற்குரிய போராட்டத்தை மேற்கு ஆதரிக்காமல் விடப்போவதில்லை என்பது அரசியல் அரிச்சுவடி.
ஆட்சிமாற்றம் VS அரசியல் மாற்றம்
பொருளாதார நெருக்கடி இன-மத-மொழி பேதமின்றி இலங்கைத்தீவின் அனைத்து மக்களையும் பாதிக்கின்ற நெருக்கடி. கருத்தியல் ரீதியாகப் பார்க்கும் போது காலிமுகத்திடல் ‘Go Home Gotta’ போராட்டத்தில் தமிழ் மக்கள் பங்கேற்பது முற்போக்கானது. தோழமை உணர்வுக்கானது. ஆனால் ஒப்பீட்டளவில் தமிழ்மக்கள் இணைந்து போராடுவதில் ஆபத்துகள் உள்ளன.
சிங்கள மக்கள் போராடுவது ஆட்சிமாற்றத்திற்கானது. குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கானது. தமிழ் மக்களுக்கு ஆட்சி மாற்றம் மட்டும் போதுமானதல்ல. பௌத்த சிங்கள அரச கட்டமைப்பு, அதன் அரசியல் யாப்பு தமிழ், முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்கு எதிரானது. எனவே ஆட்சி மாற்றமென்பது சிங்கள மக்களின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குக்கூட தற்காலிகத் தீர்வாக மட்டுமே அமையும். பொருளாதார நெருக்கடிக்கான நிலைகொள் விளைவுக்கும், சீரான பொருளாதார மறுசீராக்கத்திற்கும் ஆட்சிமாற்றம் மட்டும் போதாது. அது தீர்வு நோக்கிய பாதையின் முதற்படி மாத்திரமே. அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அரசியலமைப்பு மறுசீரமைப்புடனான அரசியல் மாற்றங்கள் அவசியப்படுகின்றன.
ஆட்சிமாற்றங்களும் அனுபவப்பாடங்களும்
முன்னரும் பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இலங்கை அரசியல் வரலாற்றில் இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆட்சி மாற்றங்களால் நேர்ந்த நன்மைகள் உள்ளனவா என்ற கேள்விகளை கடந்த கால அனுபவப் பாடங்களிலிருந்து இயல்பாக எழுப்பமுடியும். அதற்கு வரலாற்றில் மிக அதிகமாகப் பின்னுக்குப் போகவேண்டியதில்லை. மிக அண்மையில் 2015 மேற்குலகின் ஆசீர்வாதத்தோடும் தமிழ் மக்களின் ஆதரவோடும் ஆட்சிக்கு வந்த மைத்திரி பால சிறிசேன தலைமையிலான ‘நல்லிணக்க அரசாங்கம்’ எந்தவிதமான நன்மைகளையோ நல்லிணக்கத்தையோ கொண்டுவரவில்லை என்ற அனுபவத்தைச் சற்று மீட்டுப்பார்த்தாலே போதுமானது.
காலிமுகத்திடலில் போராடிக்கொண்டிருக்கும் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை-அரசினதும் அதன் படைகளினதும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்- இனப்படுகொலைக்கான நீதிகோரல் – அரசியல் தீர்வு என்பன தொடர்பாகப் போராட்டக்காரர்களுக்கு நிலைப்பாடுகள் இருக்கின்றனவா என்ற தெளிவுகள் ஏதும் இல்லை. தமிழ் மக்களின் நோக்குநிலையிலிருந்து இதனை வெறும் பொருளாதாரப் பிரச்சினையாக மட்டும் அணுகவோ கையாளவோ முடியாது.
2009இற்குப் பின்னரான தமிழ் மக்களின் போராட்டங்கள் பெரும் திரளாக நிகழவில்லை எனினும் கேப்பாபுலவு காணிகளிலிருந்து இராணுவத்தினை வெளியேறக் கோரி அவ்வூரின் மக்கள் தொடர்ச்சியாக வருடக்கணக்கில் ஓரிடத்தில் கொட்டகைகளை அமைத்துப் போராடி வந்திருக்கின்றனர். அதேபோல காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளையும், கணவன்மாரையும் தேடித் தாய்மார்களும் பெண்களும் தொடர்போராட்டங்களை நடாத்தி வந்துள்ளனர். இவ்விரு போராட்டங்களும் மக்கள் பெரும்திரளாக ஒன்றிணையாத போராட்டங்களாக இருப்பினும் அரசியல் ரீதியிலும் உணர்வு ரீதியிலும் மிக முக்கியமானதும் அழுத்தமானதுமானவையுமாகும். இவற்றின் அரசியல் பெறுமதியும் உணர்வுப் பெறுமதியும் பெரியவை.
சிங்கள மக்களின் தற்போதை எழுச்சியானது இளைய தலைமுறையிலிருந்து செயற்திறனும் ஆளுமையும் ஜனநாயகத்தின் பன்மைத்தன்மையை மதிக்கின்ற பண்புமுடைய புதிய அரசியல் தலைமையை அல்லது தலைமைகளை உருவாக்குமாயின் அது இலங்கைத்தீவின் எதிர்கால அரசியலுக்கு வலுச் சேர்க்கக்கூடியது. அன்றி அது வெறும் ஆட்சி மாற்றத்திற்கு மட்டும் வழிசமைக்குமாயின் இலங்கைத்தீவின் இனத்துவ பன்மைத்துவத்திற்கோ, ஜனநாயக மேம்பாட்டுக்கோ இட்டுச்செல்லப்போவதில்லை. இனமேலாதிக்க சிந்தனையிலிருந்து விடுபட்ட புதிய அரசியல் சக்திகள் தென்னிலங்கையில் தோற்றம் பெறாதவரை, நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ள பௌத்த, சிங்கள அரச கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படாதவரை, ஆட்சி மாற்றம் நீண்ட கால அடிப்படையிலான தீர்வுகளுக்கு உத்தரவாதத்தினை வழங்கிவிடாது. இது இலங்கைத்தீவின் வரலாற்று அனுபவ யதார்த்தம்.
தாய்வீடு
மே 2022