ஹிந்தி திரைப்படம்: நோர்வே குழந்தைகள் விவகார நிகழ்வு – பின்னணித் தகவல்களும் சமூக உளவியற் கண்ணோட்டமும்
‘Mrs. Chatterjee vs. Norway’ என்ற ஹிந்திப்படம் நோர்வே ஊடகத் தளத்தில் முக்கிய பேசுபொருளானது. ராணி முகர்ஜி முதன்மைப் பாத்திரத்தில் நடித்த அத்திரைப்படம் மார்ச் 17 இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் திரையரங்குகளில் வெளியாகியது.
இது ஒரு சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் 2011இல் நிகழ்ந்த குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவைக்கும்; இந்தியப் பின்னணியைக் கொண்ட பெற்றோருக்குமிடையிலான முரண்பாடு இதன் பேசுபொருள். இந்தியப் பின்னணியைக் கொண்ட பெற்றோரின் இரண்டு வயது மற்றும் ஐந்து மாதங்களையுடைய இரண்டு குழந்தைகளை நோர்வேயின் குழந்தைகள் பாதுகாப்பு மையம் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுத்தது.
நோர்வேயின் ஸ்ரவாங்கர் நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது. ஸ்வாங்கர் நோர்வேயின் தென்மேற்குப் பிராந்தியத்தில், ஒஸ்லோவிலிருந்து 550 கி.மி தொலைவில் அமைந்துள்ள நாட்டின் நான்காவது பெரிய நகரம். அன்றைய நாட்களில் இவ்விவகாரம் சர்வதேச அளவில் அரசியலாக்கப்பட்டிருந்தது. இந்தியத் தலைநகர் நியூடில்லியில் பெண்கள் அமைப்புகள் போராட்டங்களை நடாத்தின. ’நோர்வே அரசாங்கம் இந்தியப் பெற்றோரின் பிள்ளைகளைக் கடத்திவிட்டது, அது பெரும் மனித உரிமை மீறல், அராஜகம்’ என்பதாகவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் இவ்விவகாரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தியாவுக்கும் நோர்வேக்குமிடையில் இராஜதந்திர முறுகல்நிலைக்கு இட்டுச்சென்றதோடு, இந்திய அரசாங்கத்தினால் நோர்வே மீது பெரும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
Anurup Bhattacharya வேலை நிமிர்த்தம் 2006ஆம் ஆண்டு நோர்வேக்கு குடிபெயர்ந்தவர். இவர் 2007 இறுதியில் கொல்கொத்தாவைச் நேர்ந்த Sagarika Chakrabortyயைத் திருமணம் செய்தார். 2009இறுதியில் அவர்களது 14 மாத முதற்குழந்தையுடன் மனைவி நோர்வேயை வந்தடைந்தார். 2011இல் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதுவே சம்பந்தப்பட்ட இந்தியக் குடும்ப உறுப்பினர்கள் குறித்த சுருக்கமான பின்னணி.
இதன் முழுமையைப் புரிந்துகொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகளின் வாக்குமூலங்களையும் பார்வைகளையும் தகவல் ரீதியாக அறிந்துகொள்வது அவசியம். இந்தத் திரைப்படம் பாதிக்கப்பட்ட தாயின் நிலையிலிருந்து ஒரு பக்கச்சார்பாகச் சித்தரிக்கப்படுவததாக இதன் முன்னோட்டத்தில் காணமுடிகிறது. இதுவிடயத்தில் நோர்வே மோசமாகச் சித்தரிக்கப்படும் என்றும் தோன்றுகிறது.
நான்கு அடிப்படைகளில் இதுவிடயத்தின் முழுமை முன்வைக்கப்பட வேண்டும்:
1) நோர்வேயின் குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையின் செயற்பாடுகளும் அணுகுமுறைகளும்
2) இடம்பெற்ற சம்பவம் தொடர்பான பெற்றோரின் நிலைப்பட்ட முன்வைப்பு, குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையின்; முன்வைப்பு மற்றும் தீர்மானத்திற்கு அடிப்படையான காரணிகள்
3) இதுவிடயம் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர முறுகலுக்கு இட்டுச் செல்லப்பட்ட புறநிலை.
4) இந்தத் திரைப்படத்தின் சித்தரிப்பும் விளைவுகளும்
திரைப்படத்தில் ஒற்றைப் பரிமாணச் சித்தரிப்பு?
‘எவ்வளவு அதிகமான குழந்தைகளை அவர்கள் (நோர்வே குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை) வளர்ப்பு இல்லங்களுக்கு (Foster homes) அனுப்புகின்றார்களோ அவ்வளவு அதிக பணத்தினை அவர்கள் சம்பாதிக்கின்றார்கள்’ என்ற உரையாடல் திரைப்பட முன்னோட்டத்தில் ஒலிக்கின்றது. இது பிள்ளைகளைக் ‘கடத்தி விற்றல்’ என்பதான சித்தரிப்பினைக் கொடுக்கின்றது. குழந்தைகள் பறித்தெடுக்கப்பட்ட ஒரு தாயின் உணர்வுபூர்வமான போராட்டமாகவும், பறித்தெடுத்த நோர்வேயின் அரசாங்க அமைப்பினைக் கோரமான தரப்பாகவும் சித்தரிக்கின்றது என்பதை முன்னோட்டக் காட்சிகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. கழிவிரக்கம் ஏற்படுத்தும் வகையில் தாய்மை எப்பொழுதும் நுண்ணுணர்வுக்குரியது. ‘ஒரு முழுத் தேசத்தையே உலுக்கிய ஒரு தாயின் போராட்டத்தின் கதை’ என்பதாகவும் முன்னோட்டத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கலைவெளிப்பாட்டில், அதுவும் திரைக்கலையில் இப்படியொரு விவகாரம் உணர்வுபூர்வமான அனுபவத்தைக் கொடுக்கக்கூடியது. ஆனால் இதன் மறுபக்கம் எப்படியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குரியதே.
இந்தச் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் (2011 – 2012) ஸ்வாங்கர் நகர குழந்தைகள் நல பாதுகாப்புச் சேவையின் தலைவராகப் பொறுப்பிலிருந்தவர் Gunnar Toresen. தற்பொழுது ஓய்வு பெற்றவராக இருக்கின்றார். அவர் இந்தச் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியிலும் தற்போது திரைப்படம் தொடர்பான சர்ச்சைகளின் பின்னும் ஊடகங்களுக்குத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். முன்னர் உத்தியோகபூர்வமாகவும் தற்போது தனிநபராகவும் தனது அனுபவங்களையும் கருத்துகளையும்; பகிர்ந்து கொண்டிருக்கின்றார். இக்கட்டுரையில் இரு காலகட்டங்களிலும் அவர் பகிர்ந்த கருத்துகள் இடம்பெறுகின்றன. வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, இரகசியம் காக்கவேண்டிய கடப்பாடு தனக்கிருந்ததாகவும், ஆனால் இப்போது பத்தாண்டுகளுக்கு மேற் கடந்துவிட்ட நிலையிற் சில விடயங்களை உடைத்துப் பேசியுள்ளார்.
குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை எதிர் இந்தியப் பெற்றோர்
திரைப்பட முன்னோட்டத்தில் சித்தரித்திருப்பது போன்று இந்த விவகாரம் நடைபெறவில்லை. ஆனால் இந்த விவகாரம் குடும்பத்தினரிடையேயும் இந்தியாவிலும் ஏற்படுத்திய மிகையான உணர்வலைகளை முன்னோட்டம் பிரதிபலிக்கின்றது என்றார்;. இந்தத் திரைப்படக் குழுவினர் ஸ்ரவாங்கர் குழந்தைகள் நல பாதுகாப்புச் சேவையினையோ, அல்லது அந்த விவகாரங்களைக் கையாண்ட தன்னுடனோ தொடர்பு கொண்டு எவ்விதத் தகவல்களையும் பெறவில்லை என்றும் Toresen தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பு சேவை குடும்பத்துடன் தொடர்பில் இருந்த காலத்தில், பெற்றோருக்கிடையே முரண்பாடுகளும் மோதல்களும் நிலவிவந்தன. இதனால் காவற்துறை வரவழைக்கப்பட்ட சம்பவமும் உண்டு. இதனையடுத்தே குழந்தைகளைத் தற்காலிகமாக அவசரகால வளர்ப்பு இல்லத்திற்கு கொண்டுசெல்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் இதுவிடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தினை எட்டுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நலன் பாதுகாப்புச் சேவை குழந்தைகளைப் பொறுப்பெடுப்பதற்கு முன்னர் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான தொடர்பாடல் தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியா, நோர்வே முறுகலும் அழுத்தமும்
அன்றைய நாட்களில் இந்த விவகாரத்தில் நோர்வேக்கும் இந்தியாவுக்குமிடையிலான அரசியல், வணிக உறவு பாதிக்கப்படுமென்ற அச்சுறுத்தல்கள்கூட அழுத்தங்களில் வெளிப்பட்டன. இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர முறுகல் என்பதற்கும் அப்பால் சர்வதேச அளவில் ஊடகக் கவனம் குவிக்கப்பட்டது. 2012இல் பல இந்திய ஊடகங்களின் செய்தியாளர்கள் ஸ்ரவாங்கர் நகருக்குப் பயணம் செய்து, பல நாட்கள் அங்கு தங்கியிருந்து இதுவிவகாரம் தொடர்பான செய்திகளைத் தமது ஊடகங்களுக்கு வழங்கினர். எத்தகைய பெரும் ஊடகக்கவனம் இதற்கு இருந்தது என்பதற்கான எடுத்துக்காட்டுகளில் இதுவொன்றாகும். இந்திய அரசாங்கம் சிறப்புத்தூதுவர் ஒருவரைச் ஸ்ரவாங்கருக்கு அனுப்பியது. சட்ட மரபுக்கு மாறாக பின்கதவுத் தீர்வுக்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் Toresen குறிப்பிடுகின்றார். தீர்வினைக் கண்டடைவதற்கான அரசியல் அடுத்தம் பிரயோகிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்ற வகையில் நோர்வே அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் தன்னைத் தொடர்புகொண்டதாகவும் நினைவுகூருகின்றார்.
குழந்தைகளின் தாயாரின் பெற்றோர் இந்திய அரசியலில் உயர்மட்டத் தொடர்புகளையும் செல்வாக்கினையும் கொண்டிருந்தனர். நோர்வேயிலுள்ள இந்தியத்தூதரகம் நோர்வே குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு இதுவிடயம் தொடர்பாக விசாரித்துள்ளது.
இறுதியில் தந்தையின் குடும்பத்தில் குழந்தைகளை ஒப்படைப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. அதாவது பிள்ளைகள் பெற்றோருடன் வாழ முடியாதென்ற இணக்கப்பாட்டுடன் இந்தியாவில் வசிக்கும் (குழந்தைகளின்) சித்தப்பா மற்றும் தந்தைவழிப் பேரன் பேத்தியிடம் குழந்தைகளின் பராமிப்பிற்கான பொறுப்பு வழங்கப்பட்டது. இந்திய தூதரகத்தால் பதிவு செய்யப்பட்ட தனியார் சட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம் வழக்கினை விலக்கிக் கொண்டது. 2012 மே மாதம் குழந்தைகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். அடுத்த ஆண்டு, அதாவது 2013 குழந்தைகளின் தாயாரின் குடும்பத்தினர் இணக்கப்பாட்டினை மீறி, தந்தையின் குடும்பத்தினரின் பராமரிப்பிலிருந்த குழந்தைகளைக் கடத்தினர். அதன் பின்னர் நடந்தவை பற்றிய தகவல்கள் பொதுவெளிக்கு வரவில்லை.
சர்வதேச விவகாரமாக்கப்பட்ட பின்னணி
‘Ny Tid’ என்ற நோர்வேஜிய சஞ்சிகை இந்த வழக்குத் தொடர்பாக விரிவானதொரு செய்திக்கட்டுரையைப் பிரசுரித்தது. அதுவே ஊடகக் கவனக்குவிப்பிற்குரிய மூலம். அக்கட்டுரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகின் பல ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்தியத்தூதரகத்தினைத் தொடர்பு கொண்டதோடு, அங்கிருந்து சர்வதேச அளவிலான பரப்புரை தொடங்கப்பட்டதான தகவல்களும் உள்ளன.
இதனை இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், இராஜதந்திர விவகாரமாக்கியதில் முதன்மைக் காரணி, குழந்தைகளும் பெற்றோரும் நோர்வேஜியக் குடியுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்பதாகும். இவர்கள் நோர்வேக் குடியுரிமை உடையவர்களாக இருந்திருப்பின், இந்தியாவின் தலையீடு இருந்திருக்க வாய்ப்பும் இல்லை, அதற்கான சட்ட ரீதியான வெளியும் இல்லை. அது முற்றிலும் நோர்வேச் சட்டத்திற்கு உட்பட்ட விவகாரமாகவே பார்க்கப்பட்டிருக்கும். உள்நாட்டில் ஊடகக் கவனத்திற்குரியதாக ஆகியிருக்கக்கூடும். ஆனால் வெளித்தலையீடுகள் இருந்திருக்காது.
குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து பொறுப்பெடுத்தமை தொடர்பான குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையினது தொழில்முறை மதிப்பீடுகள் சரியானவை என்ற கருத்தினைத் தான் இன்றும்; கொண்டிருப்பதாக Toresen கூறுகின்றார். ஆனால் ஒரு குழந்தை நல விவகாரம் குறுகிய காலத்தில் சர்வதேச பேரரசியல் விவகாரமாக மாறும் என்பதைத் தாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம் என்றும் கூறுகின்றார். குழந்தைகள் நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்களைக் கையாளும்போது இந்த அனுபவத்தினைப் பாடமாகக் கொள்ளவேண்டுமென்பதைப் பின்னாட்களில் தான் பங்குபெறும் கருத்தமர்வுகளில், உரைகளில் குறிப்பிட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக வெளிவந்த தகவல்களின் அடிப்படையிற் பார்க்கும் போது குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை குழந்தைகளைப் பொறுப்பெடுத்தமைக்கான நியாயமான காரணங்கள் இருந்தமை வெளிப்பட்டுள்ளது. அவற்றில் முதன்மையானது மூத்த பிள்ளையின் சவால்மிக்க நடத்தை (Behavioral difficulties). தாயாரின் உளநலப் பிரச்சினைகள், குடும்பத்தின் உறவுச் சிக்கல்கள் குறித்தும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது பிள்ளை வளர்ப்பு, பராமரிப்பு, பாதுகாப்பு, வளர்ச்சி சார்ந்து நோர்வேஜியத் தரத்திற்கும் விதிமுறைகளுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய வீட்டுச்சூழல் நிலவவில்லை என்பதாகும். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அக்குடும்பச் சிக்கல் தொடர்பான மேலதிக தகவல்களை இங்கு பகிர்வதை இக்கட்டுரையாளர் தவிர்த்துக் கொள்கின்றார். ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகிருக்கின்றன. Anurup Bhattacharya இன் செவ்விகள் வெளியாகியிருக்கின்றன. அதில் அவர் மனைவியின் உளவியல் சிக்கல்கள் குறித்தும், மணமுறிவு பற்றியும் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்.
2012இல் தேசியத் தொலைக் காட்சி ஒரு விபரணம்
இந்த விவகாரம் தொடர்பாக நோர்வேத் தேசியத் தொலைக் காட்சி Migrapolis எனும் நிகழ்ச்சியில் ஒரு விபரணத்தினைத் தயாரித்து 18.04.2012 வெளியிட்டிருந்தது. இப்பொழுதும் அவ்விபரணம் தொலைக்காட்சியின் இணைய ஆவணப் பக்கத்திற் காணக்கிடைக்கின்றது. கணவன், மனைவி மற்றும் ஸ்ரவாங்கர் குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையின் ஸ்ரவாங்கர் தலைவராக அக்காலப்பகுதியில் பொறுப்புவகித்த மற்றும் அதிகாரிகளின் கருத்துகள் அதில் பதிவாகியுள்ளன. நோர்வே தேசியத் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஒருவருமான ராஜன் செல்லையா அவ்விபரணத்தினை உருவாக்கி, வெவ்வேறு தரப்பினருடனும் உரையாடல்களை நடாத்தியிருந்தார்.
கலாச்சார வேறுபாடே குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை தம்மிடமிருந்து பிள்ளைகளைப் பிரித்தெடுக்கக் காரணமென்று பெற்றோர் கூறினர். குழந்தைகளுக்கு கைகளால் உணவு ஊட்டியமை, குழந்தைக்குத் தனியறை ஒதுக்காமல் தந்தையோடு ஒரேயறையில் ஒரே கட்டிலில் மூத்த குழந்தை இரவில் உறங்குகியமை போன்ற காரணங்களால் பிள்ளைகள் தம்மிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டதாகப் பெற்றோர் இருவரும் அவ்விபரணத்தில் கூறினர்.
குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையின் அன்றைய தலைவர் Gunnar Toresen மற்றும் துறை மேலாளர் Sigrun Madland ஆகியோரும் அவ்விவரணத்திற் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். பெற்றோர் குறிப்பிடுவதுபோல் கலாச்சார வேறுபாடுகள் சார்ந்த காரணங்கள் தமது தீர்மானத்திற்குப் பின்னால் ஒருபோதும் இருக்கவில்லை. கைகளால் உணவூட்டுவது, பெற்றோருடன் ஒரே கட்டிலில் குழந்தை உறங்குவது போன்ற விடயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தீர்மானத்திற்கான அடிப்படையாக அவை எடுத்துக்கொள்ளப்படவில்லை. நாளாந்தத்தின் வேறுபட்ட பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், கலாச்சார வேறுபாடுகள் குறித்த புரிதல் தம்மிடம் உள்ளது. குறிப்பிட்ட இந்தக் குடும்பத்தின் விடயத்தில் பிள்ளைகளை அவர்களிடமிருந்து மீட்பதற்கான நிபந்தனைகள் சந்தேகத்திற்கிடமின்றி இருந்ததாக அவர்கள் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.
குழந்தைகளின் நலவாழ்வு, வளர்ச்சி சார்ந்து ஆபத்தான வீட்டுச்சூழல், பராமரிப்பில் புறக்கணிப்புகள், உடல், உள ரீதியான துஸ்பிரயோகங்கள், வன்முறைகள் போன்றனவே குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்தெடுத்து அரசின் வளர்ப்பு இல்லங்களிலும், வேறு குடும்பங்களுடனும் இணைக்கும் தீர்மானங்களுக்கான பொதுவான அடிப்படைகளாகும்.
சமூக உளவியற் கண்ணோட்டம்
அந்த விபரணப்படத்தில் உளவியல் நிபுணரும் குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை வழக்குகள் சார்ந்த நீண்டகால அனுபவம் மிக்கவருமான சுனில் லூணா சமூக உளவியற் கண்ணோட்டத்தில் சில கருத்துகளையும் முன்மொழிவுகளையும் பகிர்ந்திருந்தார்.
லூணாவின் கருத்துப்படி, வளர்ந்த ஒரு மனிதன் ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்திற்கு புலம்பெயர்வது அம்மனிதனின் வாழ்வில் நிகழக்கூடிய மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று. பிறந்ததிலிருந்து வாழ்ந்த சூழலை விட்டு இன்னொரு புதிய சூழலுக்குள் தன்னைப் பழக்கிக்கொள்வதென்பது சாதாரணமான விடயமல்ல. பல பழைய நடைமுறைகளைக் கைவிடவேண்டும். புதிய பழக்கவழக்கங்கள், வழமைகள், நடைமுறைகள், சிந்தனைமுறைகளை உள்வாங்கிப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை ஒரு நிறுவனமாக ஏன் இரண்டு தொழிற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது முன்தடுப்புத் திட்டங்களுக்கான தொழிற்பாட்டினையும் கட்டுப்படுத்தல் அல்லது தலையிடுதல் என்பதான இரண்டு வெவ்வேறு தொழிற்பாடுகளை ஏன் குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை கொண்டிருக்கவேண்டும் என்பதாகும். இதுவே அடிப்படையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற அமைப்பு முறை என்பது அவரது கருத்து. முன்தடுப்பு செயற்திட்டங்கள் மூலம் பெற்றோர் மத்தியில் பிள்ளை வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் அறிவூட்டல்களையும் ஏற்படுத்தவேண்டும். அதேவேளை அவசரநிலை மற்றும் ஆபத்தான சூழல்களைக் கையாள்வதற்கெனத் தனியான கட்டுப்படுத்தல் நிறுவனம் தொழிற்பட வேண்டும். நோர்வேச் சட்டம் முதன்மைப்படுத்தப்படுத்த வேண்டும், அதேவேளை வெளிநாட்டுப் பின்னணியுடைய பெற்றோரின் அணுகுமுறைகளை உரிய கவனத்துடன் பொருள்விளங்குவதற்குரிய வெளி இருக்க வேண்டும் என்ற வாதத்தினை அவர் முன்வைத்திருந்தார்.
தீர்மானத்திற்கான பொறிமுறைகளும் செயல்வழிகளும்
நோர்வே குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை தொடர்பான சில தரவுவுகளை இங்கு பகிர்வது பொருத்தமாகும். கடந்த 2021 இல் மொத்தமாக குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை கையாண்ட அக்கறைமுறையீடுகளின் (Concern notice) எண்ணிக்கை 53 468. அதே அண்டு 66 வீதமான குழந்தைகள் வீட்டிலேயே சூழ்நிலைச் சீர்ப்படுத்தல் உதவித்திட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். வளர்ப்பு இல்லங்களில் கிட்டத்தட்ட 8,300 குழந்தைகள் வாழ்கின்றனர். இவர்களில் 2,600 பேர் தங்களுக்கு முன்பே தெரிந்த குடும்பங்களில் வாழ்கின்றனர். 550 வரையான குழந்தைகள் அவசரகால முகாம்களில் வாழ்கின்றனர். நோர்வேயின் மொத்தக் குழந்தைகளில் ஒரு வீதமானவர்கள் குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையின் பராமரிப்பில் வாழ்கின்றனர்.
சிறார் பராமரிப்பு மையங்கள், முன்பள்ளிகள், பாடசாலைகள், மருத்துவ மையங்கள் அல்லது அயலவர் போன்ற தரப்புகளிடமிருந்து அக்கறையின் பாற்பட்ட ஒரு முறைப்பாடு (Concern Notice) அனுப்பப்படுவதுதான் இத்தகைய விவகாரம் குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையினால் எடுத்துக்கொள்ளப்படுவதற்கான தொடக்கம். அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்புகளின் பங்கேற்பு, பல படிநிலைகளிலான அவதானிப்புகள், விசாரணைகள், உரையாடல்கள், மதிப்பீடுகள், நிலைமையைச் சீர்செய்வதற்கான உதவித் திட்டங்கள், பரிந்துரைகள் முன்னெடுக்கப்படுவது வழக்கம். பெற்றோரால் பிள்ளைகளை உரிய முறையிற் பராமரிக்க முடியாதென்ற தீர்மானமானது, மாற்றுத்திட்டங்களுக்கான எந்தவித வாய்ப்பும் சூழலும் இல்லாத பட்சத்திலேயே இறுதி முடிவாக எட்டப்படுகின்றது. அதாவது பெற்றோரிடமிருந்து பிரித்தெடுத்து பராமரிப்பு இல்லங்கள் அல்லது வேறு குடும்பங்களின் பொறுப்பில், நலன்பாதுகாப்புச் சேவையின் அவதானிப்பின் கீழ் பராமரிப்பதென்ற முடிவு அதுவாகும்.
வெளிநாட்டுப் பின்னணியுடைய குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து, வேறு நோர்வேஜியக் குடும்பங்களின் பராமரிப்பில் விடும்போது, அவர்களுடைய மொழி, பண்பாடு, அடையாளங்கள் இழக்கப்படுகின்றன என்ற விமர்சனங்களும் உள்ளன. ஆனால் அதிலும் ஒருவகையில் சுமூகமான பொறுமுறைகள், வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதே மொழி, தேசப் பின்னணிகளைக் கொண்ட வெளிநாட்டுக் குடும்பத்தினரின் பராமரிப்பில் குழந்தைகள் விடப்படுகின்ற நடைமுறைகளும் உள்ளன. இது அந்தந்த பிரதேசங்களின் வசதிகள், வளங்களைப் பொறுத்தது. கலாச்சார வேறுபாடுகள் நுண்ணுணர்வோடும் புரிதலோடும் அணுகப்படவேண்டுமென்ற பிரக்ஞை தொடர்ச்சியாகப் பல மட்டங்களில் வலியுறுத்தப்பட்டே வருகின்றன.
விமர்சனங்களும் குறைபாடுகளும்
நோர்வே குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை தொடர்பான விமர்சனங்கள் உள்ளன. பொதுவாகவே இத்தகைய குடும்ப நிறுவனம், மனித உறவுகள் விவகாரங்களைக் கையாளுகின்ற அரச நிறுவனங்கள் மீது விமர்சனங்கள் எழுவது புதிதல்ல. இயல்பானதும்கூட. இஙகு மனித உறவுகளுக்கும் சட்ட நியமங்களுக்குமிடையிலான முரண்பாடுகளாகவும் மாறுபட்ட நோக்குநிலைகளாகவும் அவை தோற்றம்பெறுகின்றன. இன்னொரு வகையிற் சொல்வதானால் உணர்வுகளுக்கும் சட்டங்களுக்கும் இடையிலான முரண்பாடு எனவும் சொல்லலாம். அதிலும் குழந்தைகள் விவகாரம் மிக நுண்ணுணர்வுக்குரியது. சவால்கள்ஈ குறைபாடுகள் நிலவுகின்ற போதிலும் குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையின் அவசியத்தினைக் குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது. மிக அவசியமான ஒன்று. வெளிநாட்டவர்கள் மத்தியில் ஒரு வலிந்த கருத்துப் பரவலாக உள்ளது. அவர்கள் பிள்ளை பறி காரர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்ற கருத்து அது. உண்மையில் எடுத்த எடுப்பில் அவ்வாறு நிகழ்வதில்லை. அதுவொரு நீண்ட படிநிலைச் செயற்பாடுகளைக் கொண்டிருக்கின்றது.
உங்கள் குழந்தைகள்
உங்களுடையவை அல்ல!
அவர்கள் உங்களின் ஊடாக வந்தவர்கள்..
உங்களிடமிருந்து வந்தவர்கள் அல்ல!
உங்களோடு இணைந்திருப்பதால்
அவர்கள் மீது
நீங்கள் உரித்துடையவர்கள் என்று பொருளல்ல!
உங்களின் பேரன்பை
அவர்கள் மீது
நீங்கள் செலுத்தலாம்
ஆனால்..
உங்கள் எண்ணங்களை அல்ல!
என்பது கலீல் ஜிப்ரானின் குழந்தைகள் பற்றிய கவிதையின் தொடக்க வரிகள்
நோர்வே போன்ற நாடுகள் குழந்தைகள் நலன், உரிமை, பாதுகாப்பிற்;குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தினை இந்தக் கவிதையினூடாகவும் விளங்கிக் கொள்ளலாம். பெற்றோரின் ஊடாக இந்த உலகிற்கு வந்தவர்களெனினும் குழந்தைகள் அவர்களுடைய உடமைகள் அல்ல. அவர்களின் மகிழ்வும், பாதுகாப்பும், வளர்ச்சிக்கு உகந்த சூழலையும் கொடுக்க முடியாத வீட்டுச் சூழலிலிருந்து பிள்ளைகளை மீட்டெடுத்து வளமான வளர்ப்புச்சூழலை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்குரியதாகப் பேணப்படுகின்றது.
கலாச்சார வேறுபாடு தொடர்பான அறிதற்குறைபாடு நிறுவன மற்றும் பணியாளர்கள் மட்டத்தில் உள்ளது. ஆனால் அதுவும் தொடர்ச்சியான பேசுபொருளாக்கப்பட்டு படிப்படியான மாற்றங்கள் நிகழாமல் இல்லை. குடும்ப அமைப்பு, கலாச்சாரம், தனிமனித சுதந்திரம், சிந்தனைமுறை, மனநிலை சார்ந்து மேற்கிற்கும் கீழைத்தேச சிந்தனைமுறை, நடைமுறைகளுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக குழந்தை வளர்ப்பு சார்ந்த நடைமுறைகளில் அந்த வேறுபாடுகள் வெகுவாகப் பிரதிபலிக்கக்கூடியன.
சர்ச்சைக்குரிய உண்மைச் சம்பவத்தினை முன்வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் இது (documentary)ஆவணப் படம் அல்ல. புனைவுத் திரைப்படம் (fiction). நோர்வேயின் குழந்தை நலன் பாதுகாப்புச் சேவை முற்றிலும் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறது. மிகைப்படுத்தல்களையும் தகவற் தவறுகளையும் அதிகம் கொண்டிருக்கிறது. பிள்ளைகளை மீட்கும் தாயின் போராட்டமாக மட்டுமே படத்தின் சித்தரிப்பு நகர்த்தப்பட்டுள்ளது. அதிலும் உணர்வுபூர்வமான ஒட்டுதலை உணர முடியவில்லை. இந்திய அரசியலில் தாயின் பெற்றோரின் உயர்மட்டச் செல்வாக்குக் குறித்த தகவல்களின் அறிதலோடு இத்திரைப்படத்தினைப் பார்க்க வேண்டும். அதாவது அன்றைய நாட்களில் இது இந்தியா – நோர்வே இடையிலான இராஜதந்திர -அரசியல் விவகாரமாக்கப்பட்ட பின்னணியிலும் பார்க்கலாம்.
அந்த வகையில் இத் திரைப்படம் ஒற்றைப் பரிமாணத்தை மட்டுமே கொண்டுள்ளது. நோர்வே குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை ஒரு நிதி இலாபமீட்டும் அமைப்பாகச் சித்தரிக்கப்படுகின்றது. எவ்வளவு அதிகமான குழந்தைகளை அவர்கள் (நோர்வே குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை) வளர்ப்பு இல்லங்களுக்கு (Foster homes) அனுப்புகின்றார்களோ அவ்வளவு அதிக பணத்தினை அவர்கள் சம்பாதிக்கின்றார்கள்’ என்ற உரையாடல் வருகின்றது. இது பிள்ளைகளைக் ‘கடத்தி விற்றல்’ என்பதான சித்தரிப்பினைக் கொடுக்கின்றது.
***
குழந்தைகள் விவகாரம் எந்தத் தருணத்தில் குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையின் தலையீட்டிற்கு இட்டுச் செல்கின்றது, அதில் எந்தந்தரப்புகள் உள்ளடக்கப்படுகின்றன, எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த சில கேள்விகளை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேஜியப் பாடசாலைகளில் பொதுச் சுகாதார சேவையில் கடமையாற்றிவரும் துசி கணேச்சந்திராவிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:
குழந்தைகள் சார்ந்த விவகாரம் செல்லும் போது எந்தத் தரப்புகள் உள்ளடக்கப்படுகின்றன.?
இப்படியான சிக்கல்களில் எந்தெந்தத்தரப்பு உள்ளடக்கப்படுவதென்பது அந்தந்தப் பிரச்சனைகளின் தன்மைகளையும் குடும்ப நிலவரங்களையும் இன்னபிற அம்சங்களையும் பொறுத்தது.
ஒரு குழந்தை மீது வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் அல்லது நலவாழ்வுக்கு அச்சுறுத்தலான தெளிவான காரணங்கள் இருப்பின், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் அக்கறைமுறைப்பாடு குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவைக்கு அனுப்பப்படும். குழந்தைகள் நலன் பாதுகாப்பு காவல்துறையை ஈடுபடுத்தி விசாரணைகளுக்கு வழியேற்படுத்தும்.
உதாரணமாகப் பெற்றோரால் குழந்தைக்குப் உரிய பராமரிப்பை வழங்க முடியவில்லை, அவர்களால் சரியான எல்லைகளை அமைக்க முடியவில்லை, பாடசாலை விடயத்தில் சரியான வழிகாட்டல் மற்றும் கவனிப்பினை வழங்க முடியவில்லை, அல்லது அவர்களுக்கு போதுமான சத்துணவை வழங்க முடியவில்லை ஆகிய சூழ்நிலைகள்; நிலவினால் பெற்றோருக்கு அறிவித்துவிட்டு குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவைக்கு முறைப்பாடு அனுப்ப முடியும். அப்படிச் செய்வதன் ஊடாக குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை மூலம் பெற்றோருக்குரிய வழிகாட்டுதல், அறிவூட்டல் மூலம் குடும்பத்திற்கு உதவி கிட்டுவதற்கான பொறிமுறைகள் கண்டடையப்படும்.
குழந்தை தானாக முன்வந்து தனது பிரச்சினைகளைச் சொல்கின்ற பட்சத்தில், பாடசாலையின் சுகாதாரச் சேவையினால் அதன் தீவிரத்தன்மை மதிப்பிடப்பட்டு, குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவைக்கு முறைப்பாடு அனுப்பப்படும். தொடர்ந்து உரிய தொழில்சார் தரப்புகளின் கூட்டு மற்றும் ஒத்துழைப்பிற்கூடாக தீர்வு நோக்கிய பொறிமுறைகள் முன்னெடுக்கப்படும்.
அக்கறை முறைப்பாடு எங்கிருந்து அனுப்பப்படுவது வழக்கம்?
எங்கிருந்தும் அனுப்பப்படலாம். பெயர் குறிப்பிடாத அநாமதேய முறைப்பாடாகவும் அனுப்பப்படலாம். குழந்தை நலன் பாதிக்கப்பட்டிருக்கின்றதென்று கவலைப்படுபவர் யாராகவும் இருக்கலாம். அல்லது குழந்தை/சிறார்/இளையவரைத் அறிந்தவர்கள், தொடர்பில் இருப்பவர்களிடமிருந்தும் அனுப்பப்படலாம்.
குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவைக்கு கொண்டுசெல்லப்படும் வழக்குகளில் மிகப்பெரிய சவால்கள் எவை?
– என் கருத்துப்படி, பல குடும்பங்கள் குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவையுடன் போதுமான அளவு திறந்த மனதோடு வெளிப்படையாக இருப்பதில்லை. குழந்தைகள் நலச் சேவைகளின் உதவியை ஏற்றுக்கொள்வதைப் பல பெற்றோர் அவமானமாகக் கருதுகின்றனர். எடுத்தவுடன் தற்காப்பு அணுகுமுறையுடன் சிக்கல் தொடர்பான உண்மைக்கு மாறான சித்திரத்தையே காட்ட முனைகின்றனர்.
இது குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவை மற்றும் குழந்தைகள் சார்ந்து இயங்கும் பிற நிறுவனங்கள் பெற்றோர் சொல்பவை மீது ஒருவகை நம்பிக்கையீனத்திற்கு இட்டுச் செல்கின்றது. இதனால் ஒத்துழைப்பின்மை ஏற்படுகின்றது. பெற்றோர் என்ன விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும், குழந்தையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்திப்பதற்கு மாறாக, தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்கான பிரயத்தனங்களே அதிகம் வெளிப்படுவதுண்டு.
அத்தோடு, குழந்தைகள் நலச் சேவைகளுக்கு பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்துகொள்வதற்கும், அவர்கள் எப்படிச் சிந்திக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அதன் அடிப்படையில் வழிகாட்டுதலை வழங்குவதற்கும் சவால்கள் உள்ளன.
பிள்ளை வளர்ப்பு, பராமரிப்புக் குறைபாடுகள் சார்ந்து பொதுவான மற்றும் நன்கு அறியப்பட்ட காரணங்கள்-சிக்கல்கள் எவை?
இது இடத்திற்கு இடம் வேறுபடக்கூடியது. குடும்பத்தின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளினாலும் வேறுபடக்கூடியது. பெற்றோருக்கு அவர்களின் சொந்த சவால்கள் நிறையவே உள்ளன. அதாவது அவர்களால் குழந்தைகளை உரியமுறையில் எதிர்கொள்ளவோ அல்லது போதுமான கவனிப்பை வழங்கவோ முடிவதில்லை. அத்தோடு மன-உடல் ரீதியான சிரமங்கள், நோய்கள், பொருளாதார பிரச்சனைகள் எனப் பலதரப்பட்ட புறச்சூழல்கள் பெற்றோர் தமது குழந்தைகளுக்காகப் போதுமான நேரத்தை ஒதுக்கமுடியாமைக்கான காரணங்களாக இனங்காணமுடியும்.
விவாகரத்து, குழந்தைகள் மீது அதிக அழுத்தங்களும் எதிர்பார்புகளும், உடல்-உள வன்முறை, சமூகக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு எனவும் காரணங்களை இனங்காணமுடியும். எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளின்; உணர்வுகளை உள்வாங்கவும் மதித்துத் தேற்றவும் ஆறுதலும் ஆலோசனையும் வழங்கவும் அவர்களை அவர்களினுடைய உலகத்தினூடாகவும் உணர்வுகளுடனும் எதிர்கொள்ளுவதற்கு பெரியவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது இதிலுள்ள மிகப்பெரிய சவாலாகும்.
குழந்தை வளர்ப்பில் வெளிநாட்டுப் பின்னணியுடைய சமூகங்கள் மத்தியில் குழந்தைகள் நலன் பாதுகாப்புச் சேவைக்குச் கொண்டுசெல்லப்படும் விவகாரங்களை அதிக சவாலுக்கு உள்ளாக்கும் காரணிகள் எவை?
கலாச்சார வேறுபாடுகள், மொழி சார்ந்த சிக்கல்கள், வன்முறை, பாடசாலை விடயங்களில் கவனக்குறைவு, சமூக-பொருளாதார காரணங்களைக் குறிப்பிடலாம். அத்தோடு குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருக்கக்கூடிய ஒரு வலைப்பின்னல் இல்லாமையையும் குறிப்பிடலாம்.
பொதுவாக குழந்தைகளின் நலவாழ்வு சார்ந்த முன்டுப்புச் செயற்பாடுகளின் தோல்விக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? முன்தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள மிகப்பெரிய தடைகள்,சவால்கள் யாவை?
– அரசாங்கத்தின் நிதிஒதுக்கீட்டில் ஏற்படுகின்ற பற்றாக்குறை. அதாவது முன்தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் போதி நிதி ஒதுக்கப்படுவதில்லை. அமைப்பு சார் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், தனிநபர்களுடனும் குடும்பத்துடனும் போதிய நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. அதிக பணி அழுத்தம், பணியாளர் பற்றாக்குறை, சமூகத்தில் அதிகரித்துவரும் சவால்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
**
காக்கைச் சிறகினிலே | ஏப்ரல் 2023
**
தகவல் ஆதாரம் (உசாத்துணை):
• NRK migrapolis
• Fontene.no
• Aftenposten
• Sol
• The hindu
• India Today
• Bufdir