காசாவின் பெற்றோர் அந்தப் பின்-நிசப்தத்தை எப்படித் தாங்குவர் ? – ஜொகான் சண்முகரத்தினம்
காசாவின் பெற்றோர் அந்தப் பின்-நிசப்தத்தை எப்படித் தாங்குவர் ?
குழப்படிகாரக் குழந்தைகளின் கூச்சல்
ஜொகான் சண்முகரத்தினம்
நோர்வேஜிய நாளிதழ் [Class Struggle/Klassekampen] | 26.10.2023
கடந்த சில வாரங்களாக நான் வழமைக்கு மாறாக குழந்தைகளை ஏசுவதை நிறுத்தியிருந்தேன். நித்திரையிலிருந்து மகள் பிந்தி எழும்பியதால் பள்ளிக்கூடத்திற்குத் தாமதமாகச் சென்றபோதும், பேருந்து எடுத்திருக்க வேண்டிய நேரத்தில் கண்ணாடிக்கு முன் நின்று கொண்டிருந்த போதும் நான் கடிந்துகொள்ளவில்லை. மகளோ மகனோ பக்கத்தில் குப்பைவாளி இருக்க பாவித்த க்யூரிப்ஸ்களை (Q-tips) குளியலறை நிலத்திற் போட்டபோதும் நான் அவர்களை ஏசவில்லை. சில மணித்தியாலங்கள் நான் வீட்டில் இல்லாத போது, மகன் பதின்மவயது நண்பர்களால் வீட்டினை நிறைத்து அயலவர்கள் எரிச்சலடையும் அளவிற்கு அமளிப்படுத்திய போதும்கூட நான் கண்டிக்கவில்லை.
அவர்கள் மீது ஆத்திரம்கொள்ள என்னால் முடியவில்லை. ஏனென்று எனக்கும் தெரியும்:
குருதியும் தூசும் சாம்பலும் தோய்ந்த சின்னஞ்சிறு குழந்தைகள் வயதான போர் வீரர்களைப் போல் நடுங்கும் காணொளிக் காட்சிகள்தான் அதற்குக் காரணம். அவர்கள் என் பிள்ளைகள் போலத் தோற்றமளிக்கின்றனர், காலணிகள்கூட ஒரேமாதிரியாக – (சிறுவர்கள்) இராணுவத்தின் மீது கல்லெறிவதுவும் அதற்குப் பதிலடியாகத் தலையில் ஒரு தோட்டா பாய்வதற்கும் முன்னர் ஒரு அமைதியான தருணத்தின் காட்சி அதிற் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
எதற்காக நான் கோபப்பட?
குழந்தைகள் பால்பற்களைக் காட்டியபடி நிற்கும் பாடசாலைப் படங்கள் குளிர்சாதனப் பெட்டிக்கதவில் ஒட்டப்பட்டுள்ளன. உட்பெட்டியில் (Inbox) சற்று நீட்டிக்கொண்டிருக்கும் பற்களையும் பல்லிறுக்கியையும் (Braces) மறைக்க வாயை மூடியபடி உள்ள படங்கள் உள்ளன.
எல்லாம் முடிந்த பின், மோசமான ஒன்று காத்திருக்கிறது: அது நிசப்தம்!
ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதலுக்கான பழிவாங்கலிற் தனது தரப்பிற் கொல்லப்பட்ட மொத்த மக்கட் தொகையை விட அதிகமான பலஸ்தீனக் குழந்தைகளை ஏற்கனவே இஸ்ரேல் கொன்றுவிட்டது. இப்பொழுது அதிக வேதனையைத் தருவது மேற்சொன்ன இந்தக் காட்சிப்பதிவுகள் அல்ல, ஆனால் ஒரு கவிதை. இதற்குமுன் 2014இல் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடாத்தியபோது பலஸ்தீனக் கவிஞர் Khaled Juma எழுதிய கவிதை, Ola Bog அதனை நோர்வேஜிய மொழியாக்கம் செய்திருந்தார்:
ஓ…காசாவின் குழப்படிகாரக் குழந்தைகளே
நீங்கள் தான் ஓயாமல்
என்னைத் தொந்தரவு செய்தீர்கள்
என் ஜன்னலுக்கு வெளியே
கத்திக் கூச்சலிட்டீர்கள்
ஒவ்வொரு காலையையும்
இரைச்சல்களாலும் இம்சைகளாலும்
நிரப்பினீர்கள்
என் பூச்சாடியை உடைத்து
பால்கனியில் இருந்த
ஒரேயொரு பூங்கன்றையும்
பறித்துச்சென்ற என் குழந்தைகளே
திரும்பி வாருங்கள்
கத்திக் கூச்சலிடுங்கள்
எல்லாப் பூச்சாடிகளையும்
உடையுங்கள்
எல்லாப் பூங்கன்றுகளையும்
எடுத்துச் செல்லுங்கள்
திரும்பி வாருங்கள்!
திரும்பி வாருங்கள்!!
முன்னர் ஒவ்வொரு முறையும் காசாவினதும் பலஸ்தீனர்களினதும் எதிர்காலம் நசுக்கப்பட்டபோது எனது எதிர்வினை போபமாக இருந்தது. ஆனால் இப்பொழுது வேறு ஏதோவொன்றாக இருக்கின்றது. என் கோபம் ஒரு கருந்துளையால் விழுங்கப்பட்டிருக்கின்றது.
சில வேளைகளில் அதற்கான காரணமாக இது இருக்கலாம்:
தமது சொந்தப் பாதுகாப்புக்காக காசாவின் தென்முனைக்கு நகருமாறு மக்களைக் கட்டாயப்படுத்தியிருக்கிறது இஸ்ரேல். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிறந்த நாடான இலங்கையில் நடந்தேறிய ஒரு சம்பவத்தை என் நினைவுக்குக் கொண்டுவருகிறது.
2009 வேனிற் காலத்தில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான மோசமான போர் இறுதிக்கட்டத்தில் இருந்தது. 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்களை, தாக்குதற் தடை வலையம் (No fire zone) என்ற பெயர் சூட்டப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு அரசாங்கம் வலியுறுத்தியது. அந்த அறிவிப்பின் படி பலர் அப்பகுதிகளுக்கு நகர்ந்தபோது, இராணுவத்தினர் கடுமையான பீரங்கித்தாக்குதல்களை நடாத்தினர். பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டனர். இறுதியில் அந்த வலையம் தீவின் வடகிழக்கில் ஒரு சிறு கடற்கரைத்துண்டாகச் சுருங்கியது. அங்கு கடைசிக்கட்டப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. புலிகளின் தலைவரின் 12 வயது மகனும் அங்கு படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர்.
குற்றக்களங்கள் ஒரே மாதிரியானவை அல்ல என்றபோதும் குற்றங்கள் ஒத்திருக்கின்றன. அவை எங்கு நிகழினும் தமது குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்மார்கள், தந்தைமார்களின் குருதி வழிகின்ற, வெற்றுக் கண்கள் ஒரே மாதிரியானவை.
எல்லாம் முடிந்த பின் பெற்றவர்கள் எதிர்கொள்ள வேண்டிய மிக மோசமான நிலையொன்று காத்திருக்கின்றது: அது நிசப்தம்
தங்கள் குழந்தைகளுக்கு புதுப் பல் முளைப்பதை அவர்கள் மீண்டும் ஒருபோதும் காணப்போவதில்லை. சுவர் வழியாக அவர்களின் சிரிப்பைக் ஒட்டுக் கேட்பது நிகழப்போவதில்லை. நித்திரை கொள்ளும்;போது அவர்களின் சுவாசத்தை ஒருபோதும் உணர முடியாது.
இவற்றையெல்லாம் எந்த ஒரு மனிதராற் தாங்கிக்கொள்ள இயலும்?
தமிழில்: ரூபன் சிவராஜா