Cambridge Analytica: சர்ச்சையின் பின்னணியில் Facebook எதிர்நோக்கும் நெருக்கடி!

உலக ஒழுங்கினையும், அதன் அரசியலையும் தீர்மானிக்கும் சக்தியாக தகவல் தொழில்நுட்பம் விளங்குகின்றது. அதற்கு ஈடாக வேவொரு சமூக ஊடகத்தினை இன்றைய புறநிலையில் சுட்டமுடியாது. அதிலும் குறிப்பாக விரல்நுனியில் தகவல்களைப் பரப்பும் பெரும் சமூக ஊடகமாக முகநூல் விளங்குகின்றது. இன்றைய உலகின் அனைத்துவகைக் கருத்துருவாக்கங்களிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தும் வகிபாகத்தினை அது கொண்டிருக்கின்றது. நிறுவனங்களும் அதிகார மையங்களும் முகநூலின் துணையுடன் கருத்துருவாக்கங்களைக் கட்டமைக்கின்றன.

Cambridge Analytica சர்ச்சை முகநூல் நிறுவனர் மார்க்கிற்குப் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. அமெரிக்க கொங்கிரஸ் அவை, பிரித்தானிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் ஆகியன அவரிடம் விளக்கம் கோருமளவிற்கு பூதாகரமான சர்ச்சையாகியிருக்கிறது இந்த விவகாரம். 2018 மார்ச் நடுப்பகுதியில், ‘The New York Times’ ’ மற்றும் ‘The Observer’ ஆகியவற்றினால் முதலில் அம்பலப்படுத்தப்பட்டது.

Cambridge Analyticaஇற்கும் பிரித்தானியாவின் பிரசித்திபெற்ற Cambridge பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பில்லை. இது பிரித்தானியாவை மையமாகக் கொண்ட அரசியல் நோக்கங்களைக் கொண்ட ஒரு தகவல் சேகரிப்பு-பகுப்பாய்வு நிறுவனம். Donald Trumpஇன் முன்னாள் ஆலோசகரும் தேர்தல் பரப்புரைத் தலைவராகவிருந்தவருமான Steve Bannon இந்நிறுவனத்தின் உரிமையாளர். அமெரிக்க குடியரசுக் கட்சி ஆதரவாளரும் அக்கட்சியின் பெரும் நிதிவழங்குனரில் ஒருவருமான Robert Mercer இதன் இணை உரிமையாளர். Trumpஇன் தேர்தல் வெற்றிக்கு பெருந்தொகை நிதியைச் செலவிட்டவர் இவர். தவிர 2006 இலிருந்து அக்கட்சியின் தேர்தல் பரப்புரைகளுக்கு மில்லியன் கணக்கான (35 மில்லியன் டொலர்) டொலர்களை வாரியிறைத்த ஒருவரெனக் கூறப்படுகிறது.

2013இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் லண்டன், வோசிங்டன், நியூயோர்க் நகரங்களில் இயங்குகின்றன. உலகளாவிய ரீதியில் அரசியல் கட்சிகள், பிரமுகர்களின் வெற்றி-தோல்விகளைத் தீர்மானிக்கும் வகையிலான பரப்புரை, விளம்பரங்கள் வாயிலான கருத்துத்திணிப்பு, பொய்யான செய்திகள், சர்ச்சைகளை உருவாக்குதல், அரசியல் பிரமுகர்களை ஊழல் வலையில் வீழ்த்துதல் போன்ற காரியங்களையும் இந்நிறுவனம் செய்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக 2016இல் அமெரிக்கத் தேர்தலில் ரொனால்ட் டிறம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு உதவியமை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துருவாக்கத்திலும் இதன் தலையீடு இருந்ததாகக் கூறப்படுகின்றது.

2014இல், 50 மில்லியன் வரையான முகநூல் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை முகநூலினதும், பாவனையாளர்களினதும் அனுமதியின்றி சேகரித்துள்ளமை அம்பலப்பட்டுள்ளது. அதாவது; தேர்ந்தெடுக்கப்பட்ட 270 000 முகநூல் பாவனையாளர்களிடம் ‘ThisIsYourDigitalLife’ எனும் App மூலம் ஒரு தகவல் சேகரிப்பினை நடாத்தியது. அவர்களின் தனிப்பட்ட ஈடுபாடு, விருப்புகள், பிடித்த விடயங்கள், சமூக, அரசியல் நிலைப்பாடுகள், எதிர்பார்ப்புகள் போன்ற தகவல்களைச் சேகரிக்கும் வகையில் கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக அறியமுடிகிறது.

இந்தத் தகவல்கள் கல்வியியல் பாவனைகளுக்கென்ற (Academic use) பெயரிலேயே தவகல்கள் கோரப்பட்டன. அந்த அடிப்படையில் தான் முகநூல் நிர்வாகமும் அனுமதி வழங்கியிருந்தது. கல்வியியல் ஆய்வு நோக்கத்திற்கென பேராசிரியர் Aleksandr Kogan தகவல்களைத் திரட்டி, பின்னர் Cambridge Analytica உட்பட்ட வேறுபல மூன்றாம் தரப்புகளுக்கு விற்றுள்ளார். மேலும் அவை அரசியல் பரப்புரைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் மோசடி அம்பலப்படுத்தப்பட்டு, சர்ச்சையாகியபோது, Cambridge Analyticaஇன் முகநூல் பக்கத்தினை மார்க்-நிர்வாகம் நீக்கியுள்ளது. Mozilla, Tesla ஆகிய நிறுவனங்கள் முகநூலுடனான கூட்டுச்செயற்பாட்டை இடைநிறுத்தி வைத்துள்ளன.

நியூயோர்க்கினைத் தளமாகக் கொண்டியங்கும் தகவல் ஆய்வு நிறுவனமான CubeYou இனையும் முகநூல் நீக்கியுள்ளது. Cambridge Analytica போன்று கல்வியியல் ஆய்வு என்ற போர்வையில் தகவல் திருட்டில் ஈடுபட்ட காரணத்தினால் இந்த நீக்கம் இடம்பெற்றுள்ளது. 270 000 பாவனையாளர்களிடம் நேரடியாக இத்தகவல் சேகரிப்பு இடம்பெற்றது எனினும், அவர்கள் ஒவ்வொருவரினதும் நட்புகள், நடபுகளின் நட்புகளெனப் பரந்து ஒப்புதல் இன்றி 50 மில்லியன் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

முகநூல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட 2007ம் ஆண்டிலிருந்து உலகளாவிய வணிக-உற்பத்தி -நுகர்வு-விளம்பர நிறுவனங்களுக்கு பாவனையாளர் தகவல் மார்க்-நிர்வாகத்தினால் விற்கப்படுகின்றது. தகவல் என்று நோக்குமிடத்து, நுகர்வோரின், விருப்புகள், ஈடுபாடு, உதாரணமாக அதிகம் பயன்படுத்தும் விரும்பும் பொருள் போன்ற இன்ன பிற தகவல் விற்பனையே முகநூலின் முதன்மை வருமானத் தளம். இதுவே உலகின் 5வது பெரும் பணக்காரராக மார்க் சக்கர்பர்க்கினை ஆக்கியுமிருந்தது. தற்போதைய இந்தச் சர்ச்சை பங்குச் சந்தையில் முகநூலுக்கு 70 மில்லியன் டொலர் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் தனிநபர் தகவல்கள் உரிய பாதுகாப்புப் பொறிமுறைகளுடன் பேணப்படவில்லை. Cambridge Analytica விவகாரம் பாரிய அத்துமீறல். அதுசார்ந்து உரிய விசாரணை நடாத்தப்படவேண்டும். முகநூல் பொறுப்புக்கூற வேண்டும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான மோசடிகளுக்குரிய ஊடகக்கருவியாக முகநூல் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையில் பயனாளர்-தகவல்கள் கைமீறிப்போவதைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்புப் பொறிமுறைகளை முகநூல் உறுதிப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

அமெரிக்க கொங்கிரஸ் சபையின் முன்னிலையில் மார்க் விளக்கமளித்துள்ளார். தவிர தனியுரிமைச் சட்ட மீறல் இடம்பெற்றிருக்கின்றதா என்ற கோணத்தில் சட்டரீதியான விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இணைய அரசியல் விளம்பரங்களுக்கு (Online Political Adverts) கூடுதல் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதான வகையில் சட்ட அமுலாக்கம் பற்றியும் பிரஸ்தாபிக்கப்படுகிறது.
மார்க் மன்னிப்புக் கோரியுள்ளதோடு, தகவல் பாதுகாப்பு சார்ந்த பொறிமுறைகளில் உரிய மாற்றங்கள் கொண்டுவரவேண்டியதன் தேவையைத் தாம் உணர்ந்துள்ளதாகவும் இந்தச் சிக்கலின் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் தகவல் பாதுகாப்பினை உறுதிசெய்யக் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது போன்று எதிர்காலத்தில் நடக்காதிருக்கவும் பொறிமுறை மாற்றங்களை மேற்கொள்ளும் முனைப்புக் கொண்டுள்ளதாகவும் பதிவுசெய்துள்ளார்.

முகநூல் வழி தமது தனிப்பட்ட தகவல்கள் தவறான இடங்களுக்குப் பரவுவது பற்றிய அச்சம் பாவனையாளர்கள் மட்டத்தில் உள்ளது. விளம்பரத் தேவைகளுக்கு அவை பயன்படுத்தப்படுவதும் பாவனையாளர்கள் மத்தியில் அறியப்படாத புதிய விடயமல்ல. பாவனையாளர்கள் பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்கள், இணைய வெளிகளில் பரவிக்கிடக்கின்றன. நாம் எதனைத் தேடுகின்றோம், எதனைப் பார்வையிடுகின்றோம். ஏதனைக் கொள்வனவு செய்கின்றோம். எதனைப் பகிர்கின்றோம். எதனை அதிகம் விரும்புகின்றோம். என்ன செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுகின்றோம் போன்ற இன்னபிற தகவல்கள் விரவிக்கிடங்கின்றன. நாம் எப்பேர்ப்பட்ட குணாம்சங்களைக் கொண்டவர்களென்ற தோராயமான கணிப்புகளைக்கூட முகநூல், இணையப் பாவனை மூலம் உருவகிக்கப்படுகின்றன
தற்போதைய அம்பலப்படுத்தல் என்பது மக்களின் வெவ்வேறு தெரிவுகளில் ஒரு உளவியல் திணிப்பை முடுக்கிவிடுகின்ற செயலாக கருதப்படுகிறது. பொதுப்புத்தியின் உளவியலைத் தீர்மானிக்கின்ற, முடிவுகளையும் தெரிவுகளையும் திணிக்கின்ற செயற்பாடுகள் என்ற கோணத்தில் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

முகநூல் என்பது மக்களைப் பரவலாக ஆட்கொண்டுள்ள ஒரு நிலைக்கு வந்துவிட்டது. எனவே அதன் வகிபாகம் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. முகநூல் தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குரியது என்ற விமர்சனங்கள் எழுவது இதுதான் முதற்தடவையுமல்ல. இன்று அம்பலப்படுத்தப்பட்ட விவகாரத்தின் அளவு பெரியது என்பதே உலகளாவிய கவனத்தைக் குவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் முகநூல் பாவனையாளர்களின் எண்ணிக்கை 2 பில்லியன்களுக்கு மேலாகும்: இத்தனை பேர் மத்தியில் தகவல் ஊடாட்டத்திற்கான பரந்த தளம் இது. விளம்பரத் முகவர் நிறுவனங்கள், பல்தேசிய வணிகப் பெருநிறுவனங்கள் தமக்குத் தேவையான தகவல்களை, உற்பத்தி ஆய்வுக்குரிய தரவுகளைத் திரட்டும் தளமாக விளங்குகின்றது.

இந்நிறுவனங்கள் எந்தெந்த வகையான நுகர்வாளர்களிடம் தமது விளம்பரங்கள் பொருட்களைக் கொண்டு சேர்க்க வேண்டுகோளுடன் முகநூலை நாடுகின்றனர். அவர்களின் தேவைகளுக்குரிய நுகர்வுத்தகவல்களை முகநூல் வகைப்படுத்தித் தெரிவுசெய்து கொடுக்கின்றது என்ற அடிப்படையில் தொழில்நுட்பப் பொறிமுறை மூலம் பயனாளர்களின் நுகர்வு விருப்புகள் வகைப்படுத்தப்படுகின்றன.
முகநூலின் வணிக அமைப்புவடிவம் என்பதே பாவனையாளர்கள் பற்றிய தகவல்களைத் திட்டமிடப்பட்ட விளம்பரச் செயற்பாடுகளுக்கு ஏனைய நிறுவனங்களுக்கு விற்பதே. எனவே தொடர்ந்தும் அந்தத் தளத்தில், அதே வணிக அமைப்பு வடிவத்தில் தான் அது இயங்கப்போகின்றது. ஆனால் தகவல் பரம்பலில் கட்டுப்பாடுகளையும் அவற்றை எவ்வாறான நிறுவனங்களுக்கு எவ்வாறான நோக்கங்களுக்கு வழங்குவது என்பது தொடர்பான தரநிர்ணயங்களில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.

பாவனையாளர்களின் எண்ணிக்கையும் விளம்பரதாரர்களும் வீழ்ச்சியடைதல் என்பது மறுவளமாக முகநூலின் வீழ்ச்சியுமாகிவிடும். பாவனையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் மத்தியில் தன்மீதான நம்பிக்கையைப் பேணுவதும் மேம்படுத்துவதும் முகநூலின் இருப்பிற்கு முக்கியம். அதன் பின்னணியிலேயே மார்க்கின் மன்னிப்புக்கோரல், பொறுப்புக்கூறல் அணுகுமுறை வெளிப்பட்டுள்ளது.

முகநூலும் கூகிள் நிறுவனமுமே இணைய டிஜிட்டல் விளம்பரத்தில் ஏகபோக நிலையைக் கொண்டிருக்கின்றன. முகநூலின் ஆண்டு வருவாய் 40 பில்லியன் டொலர். அதேவேளை கூகிளின் விளம்பர வருமானம் ஆண்டொன்றுக்கு 74 பில்லியன் டொலர்கள். eMamarketer எனும் டிஜிட்டல் ஆய்வு மையத் தகவலின்டி, இந்த இரண்டு நிறுவனங்களின் ஊடாகவே 70 வீதமான இணையப் பிரசுரங்கள் நிகழ்கின்றன. இன்று அதிக பாவனைக்குட்படுத்தப்படும் குறந்தகவல், உரையாடல் ஊடகமான WhatsApp மற்றும் ஒளிப்பட-நிகழ்வுப் பகிர்வு ஊடகமான Instragram ஆகியனவும் முகநூலுக்குச் சொந்தமானவையே. அதேவேளை பாரிய காணொலித் தளமான YouTube கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

முகநூல், கூகிள், அமேசன், ஆப்பிள் மற்றும் மாக்றசொப்ற் ஆகியனவே சமூக ஊடக, தேடுதல் மற்றும் இணையவணிகம் மற்றும் டிஜிட்டல் விளம்பரத் தளங்களை ஆட்சி செய்கின்றன.
இன்றைய காலம் தகவல் தொழில்நுட்பத்தின் பலம் ஓங்கியுள்ள யுகத்தில் வாழ்ந்துகொணடிருக்கின்றோம். உலக ஒழுங்கினையும், அதன் அரசியலையும் தீர்மானிக்கும் சக்தியாக தகவல் தொழில்நுட்பம் விளங்குகின்றது. அதற்கு ஈடாக வேவொரு சமூக ஊடகத்தினை இன்றைய புறநிலையில் சுட்டமுடியாது. அதிலும் குறிப்பாக விரல்நுனியில் தகவல்களைப் பரப்பும் பெரும் சமூக ஊடகமாக முகநூல் விளங்குகின்றது.

இன்றைய உலகின் அனைத்துவகைக் கருத்துருவாக்கங்களிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தும் வகிபாகத்தினை அது கொண்டிருக்கின்றது. ஜனநாயகமென்பதே பல்வேறு பலவீனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அப்படியிருக்க, ஜனநாயக மோசடிக்கு வழிகோலுகின்ற தகவல் பரம்பலுக்கு வழிகோலுகின்ற செயல்களையே Cambridge Analytica போன்ற நிறுவனங்களும் அதிகார மையங்களும் முகநூலின் துணையுடன் செய்கின்றன்.

2015 இல் மார்க் -நிர்வாகத்திற்கு Cambridge Analytica அத்துமீறல் தொடர்பாகத் தெரியவந்துள்ளது. ஆனபோதும் பாவனையாளர்களுக்கு இந்த விடயம் தொடர்பாக எந்தவிதத் தகவலையும் வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்கவில்லை. இதுகூட தகவல் பாதுகாப்பு மீறல், ஊடக அறமீறல் சார்ந்ததுதான்.

அரசியல் களநிலைமைகளில் ஜனநாயக விழுமியங்களை மீறும் வகையிலான தாக்கங்களை ஏற்படுத்த இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு முகநூல் உட்பட்ட சமூக ஊடகங்கள் தளமாக அமைகின்றன என்பது இன்றை சர்ச்சையின் மையப் பேசுபொருள். சமூக ஊடக பாவனையாளர்களின் தனியுரிமை பாதிப்பு என்பது இதன் மீதான இன்னொரு விமர்சனம். இந்த அடிப்படைகளில் இந்த விவகாரம் சமகால முக்கியத்துவம் மிக்க விவாதத்தினை எழுப்பியிருந்தது.

தினக்குரல், காக்கைச் சிறகினிலே, தமிழர் தளம், ஏப்ரல் 2018

Leave A Reply