இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: உயரடுக்கு அரசியற் தலைவர்களைப் பின்தள்ளிய அநுரவின் வெற்றி!

Anura Kumara Dissanayake was declared the winner of the Sri Lankan presidential election in september 2024.

பல்லின மக்களைக் கொண்ட ஒரு தேசமாக இலங்கைத் தீவினை முன்னிறுத்துகின்றமை முற்போக்கான, ஜனநாயகத்துவமான, கவர்ச்சிகரமான கொள்கையாகவும் ஏற்புடையதாகவுமே வெளிப்பார்வைக்குத் தோன்றும். ஆனால் இலங்கைத்தீவின் இனத்துவ அரசியல் வரலாற்று அனுபவங்களுடன் பார்க்கையில் இது சிக்கலானது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, அதிகாரப் பரவலாக்கல், அரசியலமைப்பிலும் அரசிலும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் இல்லாதவிடத்து இலங்கையின் ஜனநாயக அமைப்பு முறையானது பௌத்த சிங்களப் பெருந்தேசியவாதத்தின் மேலாண்மையைப் பேணுகின்ற விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.

செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் 42 வீத வாக்குகளைப் (5 634 915) பெற்று, சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்க ஆகியோரைத் தோற்கடித்து வென்றுள்ளார் தேசிய மக்கள் சக்தி எனும் கூட்டணியின் (National People’s Power – NPP) சார்பில் போட்டியிட்ட ஜே.வி.பி கட்சியின் தலைவர் ((Janatha Vimukthi Peramuna/People’s Liberation Front) அநுர குமார திஸநாயக்கா. இரண்டு பாரம்பரியக் கட்சிகளையும் அரசியற் தலைமைத்துவத்திலிருந்து பின்தள்ளியுள்ளது தேசிய மக்கள் சக்தி அரசியற்கூட்டினது இந்த வெற்றி.

இரண்டு முறை அரசுக்கு எதிராக ஆயுதப் புரட்சி நடாத்திய இயக்கம் ஜே.வி.பி. அரச வன்முறையால் கடுமையாக ஒடுக்கப்பட்டு, அதன் நிறுவனத்தலைவர் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் – தொடங்கப்பட்ட அரை நூற்றாண்டின் பின் ஐனநாக ரீதியில், அரச அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. அரசியலில் ஜே.வி.பி ஒரு பிரதான எதிர்க்கட்சியாகக்கூட இதுவரை இருக்கவில்லை. இலங்கையின் 225 நாடாளுமன்ற ஆசனங்களில் ஜே.வி.பி வெறும் மூன்று ஆசனங்களையே கடந்த அரசாங்கத்திற் கொண்டிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் (2019: கோத்தபாய ராஜபக்ச வென்ற தேர்தல்) அநுர குமார திஸ்சநாயக்கா 3.8 வீத வாக்குகளையே பெற்றிருந்தார்.

தமிழரசுக் கட்சி 2019இலும் இம்முறையும் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்கியது என்ற வகையிற் கணிசமான தமிழ் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு இம்முறையும் சென்றிருக்கின்றன எனலாம். இம்முறை தமிழ்ப் பொதுவேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்தார். அவர் 227 000 வரையான வாக்குகளைப் பெற்றிருந்தார். பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை தொடர்பான அணுகுமுறை பல்வேறு விமர்சனங்கள், ஆதரவுகள் எனவான கலவையான கருத்துகளையும் விவாதங்களையும் தோற்றுவித்திருந்தது.

பின்-சுதந்திர காலத்து (பிரித்தானியாவிடமிருந்து 1948இல் சுதந்திரம்) இலங்கை, ஐக்கிய தேசியக் கட்சி (United National Party-UNP) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (Sri Lanka Freedom Party- SLFP) ஆகிய இரண்டு பௌத்த சிங்கள பெருந்தேசிய மேலாதிக்கவாதக் கட்சிகள் தலைமையிலான கூட்டணிகள் அல்லது அவற்றிலிருந்து பிளவுபட்டும் பிரிந்துசென்றவையுமான கட்சிகளினாற்தான் ஆளப்பட்டு வந்துள்ளன. இந்த இரண்டு அணிகளுமே இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியைத் தீர்மானித்துவந்த சிங்கள ஆளும் வர்க்க உயரடுக்குகள்.

‘தேசிய மக்கள் சக்தி’ அரசியற் கூட்டு
‘தேசிய மக்கள் சக்தி’ என்ற கூட்டணியில் ஜே.வி.பி முக்கிய தரப்பாக உள்ளது. சிறிய அரசியற் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட 21 வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கிய ஒரு அரசிற் கூட்டாக 2019இல் இது உருவாக்கப்பட்டது. அரசியல், சமூகத் தளங்களில் கட்சி சார்ந்தும் கட்சி சாராததுமாக பல்வேறு தரப்புகளை உள்வாங்கியுள்ள கூட்டு. அந்த வகையில் இயல்பாகவே முற்போக்கானதும் ஜனநாயகத்துவமானதுமான ஒரு வகிபாகம் அல்லது தோற்றப்பாடு இதற்கு உள்ளது. ஊழலற்ற, சேவையை மையப்படுத்திய, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடைய அரசியற் கலாச்சாரத்தை வளர்ப்பது – நியாயமான வள மற்றும் செல்வப் பகிர்வுக்கான ‘பொருளாதார ஜனநாயகத்தை’ மேம்படுத்துவது – சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவது – ‘இலங்கையர்’ அடையாளத்தை நிலைநாட்டுவது ஆகியவற்றைத் தமது கொள்கைகளாக இக்கூட்டுப் பிரகடனப்படுத்தியிருந்தது.

பல தரப்பட்ட இத்தனை அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு அரசியற்கூட்டினை உருவாக்கி ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றியீட்டியமை இலங்கை வரலாற்றில் சாதனைமிக்க செயல். அமைப்பாகத் திரள்வது மக்களைத் திரட்டுவது எனும் இரண்டு அணுகுமுறைகள் சார்ந்தும் இந்தக்கூட்டினை முன்னுதாரணமாகச் சொல்ல முடியும். அரசியற் கலாச்சாரத்தின் புதிய தொடக்கமாகவும் பார்க்க முடிகிறது. எனவே அமைப்பு ரீதியான இந்தக் கூட்டின் கட்டமைப்பினையும் வெற்றியையும் குறைத்து மதிப்பிட முடியாது. தமிழ்த்தரப்பு அரசியல், சமூக அமைப்புகள், சிவில் சமூகம் இதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் நிறையவே உள்ளன. அரசியல் என்பது உரையாடல், ஊடாட்டம், இராஜதந்திரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் அரசியற் தரப்பு, சிவில் சமூகம் மற்றும் சமூக அமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிற் புதிய ஜனாதிபதி மற்றும் ‘தேசிய மக்கள் சக்தி’ அரசியற் கூட்டுடன் உரையாடல்களை முன்னெடுப்பதும் அவசியமானது.

தமிழக இடதுசாரிகள் மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் வெளிப்படுத்துவதுபோல ஜே.வி.பி ஒரு முற்போக்கான இடதுசாரிக் கொள்கைகளையுடைய கட்சியெனக் கருதுவது அறிதற்குறைபாடு. பெயரிலும் மற்றும் அதன் ஆரம்ப காலத்திலும் லெனினிய – மார்க்கியக் கொள்கைகளை முன்வைத்த அமைப்பு என்பதைத் தாண்டி வரலாற்றில் அத்தகு கொள்கைசார் முன்னெடுப்புகளைக் கொண்ட இயக்கமாக அது இருக்கவில்லை, இயங்கவில்லை. எனவே ஜே.வி.பியின் வரலாற்றுப் பின்னணியை நினைவூட்டுவதற்காக சில மீள்பார்வைகள் இங்கு அவசியமாகுகின்றன.

ஜே.வி.பியின் தோற்றமும் வன்முறை வரலாறும்
ஜே.வி.பி 1968 இல் உருவான கட்சி. அடிப்படையில் அதுவும் ஒரு இனவாதக் கட்சிதான். பெயரிலும் அரச எதிர்ப்புப் புரட்சியிலும் இடதுசாரிய விடுதலை அரசியற் கொள்கையுடையதான தோற்றப்பாடு வெளிப்படுத்தப்பட்டிருப்பினும், ஜே.வி.பி வரலாற்று ரீதியாக சிங்கள பௌத்தவாதச் சித்தாத்தங்களுடனேயே இயங்கிவந்துள்ளது. அதன் பிரச்சாரங்களும் சொல்லாட்சிகளும் சிங்கள அடித்தட்டு, தடுத்தர வர்க்கத்தின் அதிருப்திகளைப் பிரதிபலித்தது. கிராமப்புற சிங்கள பௌத்த இளைஞர்களின் ஆதரவைப் பெறவும், மேற்தட்டு வர்க்க எதிர்ப்பு உட்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டுவதற்கும் அது பயன்பட்டது.

1971 இல் ஜே.ஆர்.ஜெயவர்தன அரசுக்கும், பின்னர் 1988-89களில் ஆர்.பிரேமதாசாவின் ஆட்சிபீடத்திற்கும் எதிரான ஆயுதக் கிளர்ச்சிகளை ஜே.வி.பி முன்னெடுத்தது. இரண்டிலும் அரச படைகளின் கடும் ஒடுக்குதலுக்கு உள்ளானது. பிரேமதாசாவின் ஆட்சிக்கு எதிரான ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சியும் அதற்கு எதிரான அரசபடைகளின் நடவடிக்கைகளும் இலங்கை வரலாற்றின் மிகப்பாரிய இரத்தக்களரிக் காலகட்டங்களாகும். முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான மானிடப் பேரழிவு அதுவெனலாம்.

பெருமெடுப்பிலான கைதுகள், சித்திரவதைகள், கடத்தல்கள் மற்றும் படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டுக் கிளர்ச்சியைக் கொடூரமாக நசுக்கியது பிரேமதாசாவின் அரச இயந்திரம். அதிற் குறைந்தது 60,000 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலான ஜே.வி.பி உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள், அதன் நிறுவனத் தலைவரான ரோஹன விஜேவீரவும் என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டார். ஜே.வி.பி.யினரும் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றிருக்கின்றனர். அரசியல் எதிரிகள், புத்திஜீவிகள், கலைஞர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகளும் ஜே.வி.பியினராற் படுகொலை செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

வறிய, நடுத்தர வர்க்க இளைஞர்களின் அதிருப்தி

இவ்விரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளும் பின்-கொலனித்துவ காலத்தில் தென்னிலங்கை எதிர்கொண்ட குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வுகளாகக் கணிக்கப்படுகின்றன. கிராமப்புறங்களின் சமூகத்தின் வறிய, நடுத்தர வர்க்க இளைஞர்களின் அதிருப்தியே இந்த இரண்டு கிளர்ச்சிகளினதும் அரசியல் சமூக அடிப்படைகள். இன்னொரு வகையில் இது சமூக அமைப்பில் நிலவிய ஒரு கட்டமைப்புசார் சிக்கலின் விளைவுமாகும். அத்தோடு இளைஞர்கள் மத்தியில் வளர்ந்துவந்த சமூக, பொருளாதார, அபிவிருத்திசார் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத அரச நிர்வாகத்தின் இயலாமை இந்த கட்டமைப்பு ரீதியான பிரச்சனையின் மையமாக இருந்தது.

1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் இடம்பெற்ற ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சியானது, தென்னிலங்iகியன் பல பகுதிகளில் உள்ள காவல்நிலையங்கள், அரச இயந்திரத்தின் மீதான மோசமான ஆயுத வன்முறையாக நிகழ்த்தப்பட்டது. 1988 – 89 காலப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது கிளர்ச்சி ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது கிளர்ச்சியின் தாக்கம் மூன்று காரணங்களின் அடிப்படையில் மிகவும் தீவிரமானது. ஓன்று, 1971 கிளர்ச்சி போலல்லாமல் இது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இரண்டு, ஜே.வி.பி பயன்படுத்திய தந்திரோபாயங்கள் 1971 உடன் ஒப்பிடும்போது மிகவும் இரக்கமற்றவையாகவும் பயங்கரவாதமாகவும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அரசியல் எதிரிகள் மட்டுமல்லாமல், அதன் கட்டளைகளை நிறைவேற்றத் தயங்கிய, மறுத்த சாதாரண மக்களும் கொல்லப்பட்டனர். மூன்று, கிளர்ச்சிக்கு எதிரான அரசின் (பிரேமதாசா அரசாங்கம்) நடவடிக்கைகளும் மிகவும் கொடூரமானவை.

ஜே.வி.பியின் தோற்றுவாய் மற்றும் அதன் கடந்தகால வரலாற்றுப் பின்னணி சார்ந்து அது இந்தியாவின் பூகோள அரசியலின் போட்டி சக்தியான சீன ஆதரவு இயக்கம்ஃகட்சி என்ற பார்வை நிலவுகின்றது. ஆனால் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முனைப்புகளின் அடிப்படையில் பிராந்திய சக்தியான இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவதோடு அதன் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முனைப்பினை அநுர திஸாநாயக்க தரப்பு அண்மைக்காலமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது.

பொருளாதார நெருக்கடி – மக்கள் எழுச்சி – அரசியல் அதிகாரம்
இலங்கையின் பாரிய பொருளாதார நெருக்கடியின் விளைவாக கோத்தபாயவை பதவிவிலகக் கோரி காலிமுகத்திடலில் 2022ஆம் ஆண்டு மக்கள் எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. (சிங்களத்தில் ‘அரகலய’ | தமிழில் ‘போராட்டம்’). அந்தப் போராட்டம் ராஜபக்ச சகோதரர்களை ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்றியது. ரணில் விக்ரமசிங்க மேற்கின் ஆதரவுடன் ஜனாதிபதியாக அவ்வெற்றிடத்தைத் தற்காலிகமாக நிரப்பினார். அரகலய போராட்டம் தன்னெழுச்சியான மக்கள் போராட்டமாக ராஜபக்ஷ ஆட்சிபீடத்தினை வெளியேற்றியது, அப்போராட்ட ஒருங்கிணைப்பு அல்லது தலைமைத்துவத்திற்கு எந்த அமைப்பும் உத்தியோகபூர்வமாக உரிமை கோரவில்லை. ஆயினும் ஜே.வி.பி முக்கிய பங்கினை வகித்ததாக நம்பப்படுகின்றது. காலி முகத்திடலில் கூடாரங்களை அமைத்து, பொது வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைத்து, நாளாந்தம் போராட்டங்களை நடத்துவதில் ஜே.பி.வியின் பங்கு கணிசமாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

அம்மக்கள் போராட்டத்தின் குழந்தைதான் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலின் அநுர குமார திஸாநாயக்காவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் வெற்றி. அரகலயவில் ஜே.வி.பி தனது வகிபாகத்தை மறுத்தாலும், தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்து கடந்த இரண்டு வருடங்களாக, அரகலயாவில் வெளிப்படுத்தப்பட்ட அதிருப்தி, விரக்தியை ஜே.வி.பி சாதுரியமாகப் பயன்படுத்தியுள்ளது. அந்த அரசியற்கூட்டு மிகவும் காத்திரமான பரப்புரைகள் மூலம் மக்கள்திரளை தம்வசப்படுத்தியுள்ளது. அரகலய வெகுஜன எதிர்ப்பியக்கத்தின் பின்னர்,; திஸாநாயக்கவின் புகழும் அதிகரிக்கத் தொடங்கியது.

அரகலய போராட்டமும் அதன் நேரடி மற்றும் உடனடி அறுவடையான ராஜபக்ச சகோதரர்கள் பதவியிறக்கத்தினால் உருவான அதிகார வெற்றிடம், தேசிய மக்கள் சக்தியின் மாற்றத்திற்கான அழைப்பினைப் பரந்த அளவில் விரிவுபடுத்துவதற்கான பாதையை அமைத்துக்கொடுத்தது. சமூகநீதி, ஊழலுக்கு எதிரான அவர்களின் கருத்துகள் பொருளாதார நெருக்கடி மற்றும் முன்னைய ஆட்;சிபீடத்தின் மீது நம்பிக்கையிழந்தும் ஏமாற்றமடைந்துமிருந்த நாட்டு மக்களை இயல்பாக ஈர்த்தது. விளிம்புநிலையிலிருந்த ஜே.வி.பி நம்பகமான, பெரிய அரசியல் சக்தியாக வளர்வதற்கு வழிகோலியுள்ளது.

2022இல் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச்சென்ற ராஜபக்ஷ குடும்பத்தின் கட்சியினது (பொதுஜன பெரமுனவின் – SLPP) ஆதரவுடனேயே ரணில் விக்ரமசிங்க ஆட்சி நடந்தது. நாட்டின் பொருளாதார மீட்சிக்கான சுமையைச் சமூகத்தின் நலிந்த பிரிவினர் மீது சுமத்துவதாக விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகள் உள்ளன. அதாவது நலிந்த மக்களைப் அதிகம் பாதிக்கின்ற வகையிற் சமூக நலத்திட்டங்களில் வெட்டுக்களை அமுல்படுத்தியுள்ளமை மீது விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (International Monetary Fund – IMF) விக்கிரமசிங்க செய்துகொண்ட உடன்படிக்கை மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கச் செய்துள்ளதாகத் அநுர திஸாநாயக்காவும் விமர்சித்துள்ளார்.

அநுர குமார திஸநாயக்காவின் பின்னணி
அநுர ஒரு சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். இம்முறை ஜனாதிபதித் தேர்தலிற் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களில் அநுர தவிர்ந்த அனைவரும் இலங்கை அரசியலில் மேலாண்மை செலுத்திய பாரம்பரியம்மிக்க குடும்பங்களின் பின்னணிகளைக் கொண்ட முகங்கள். முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசா. ரணில் விக்ரமசிங்க (ஐக்கிய தேசியக் கட்சி) ஆறு முறை பிரதமராகப் பதவி வகித்தவர். அத்தோடு நாட்டின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மருமகன் ஆவார். நாமல் ராஜபக்ஷ, (இலங்கை பொதுஜன முன்னணி) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து உருவான கட்சியே சஜித் தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’. ரணில் அரசாங்கத்தின் எதிர்க்கட்சியும் அதுவே.

அநுர ஒரு சிங்களக் கிராமத்தின் (அனுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம கிராமம்) நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். களனி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர். தந்தை ஒரு சாதாரண அரச அலுவலக ஊழியர். பல்கலைக் கழகப் பட்டப்படிப்பின் போது, ஜே.வி.பியின்பால் ஈர்க்கப்பட்டு, ஜே.பி.வியின் ஆயுதக்; கிளர்ச்சி மற்றும் படுகொலைகள் தொடர்ந்த 1980 களின் இறுதியில் அதன் மாணவர் பிரிவிற் சேர்ந்தார். கட்சி ஆயுத வன்முறையைக் கைவிட்டு தேர்தல் ஜனநாயகத்தை நோக்கிய பாதைமாற்றத்தின் போது திஸாநாயக்க அதன் மத்திய குழுவின் கொள்கைவகுப்புப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். 2014இல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார், அதன் பின்னர் கட்சியின் வன்முறைசார் கடந்தகாலத்திலிருந்து புதிய போக்கில் அதன் விம்பத்தை மறுவடிவமைப்பதில் முனைப்புடன் செயற்பட்டுள்ளார்.

வரலாற்று ரீதியில் ஜே.வி.பி ஒரு தீவிர சிங்கள பௌத்த கட்சியே
வரலாற்று ரீதியில் ஜே.வி.பி ஒரு தீவிர சிங்கள பௌத்த கட்சியாக இருந்து வந்துள்ளது, தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான பல செயற்பாடுகளிலும் கடந்த காலத்தில் ஈடுபட்டுவந்துள்ளது. வடக்கு கிழக்குத் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் தொடர்பான எந்தவொரு சாதகமான முன்மொழிவுகளையும் எதிர்த்து வந்துள்ளது. ஈழத் தமிழர்கள் விடயத்தில் (1987 ஜூலை) இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராகச் செயற்பட்டது. அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்றும் இந்திய விரிவாக்கத்திற்கு வழிசமைக்கும் என்றும் பிரச்சாரங்களை முன்னெடுத்துவந்தது.

இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கினை உள்ளடக்கிய தமிழர் தாயகத்தை நீதிமன்றத் தீர்ப்பு மூலம் சட்ட ரீதியாகப் பிரித்ததில் (2006) ஜேவிபியினரின் கரங்கள் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளன. 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி பேரழிவிற் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் புனர்வாழ்வு உட்பட்ட மீள்குடியேற்றச் செயற்பாடுகளுக்கான கட்டமைப்பு ஒன்று நோர்வேயின் அனுசரணையுடன் 2005 பெப்ரவரியில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்டது. சுனாமிக்குப் பின்னான மீள் கட்டமைப்புச் சார்ந்த உடன்படிக்கை அது (Post – Tsunami Operational Management Structure : P – TOMS). அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதனைச் செயலிழக்கச் செய்தது ஜே.வி.பி. மலையகத் தமிழ் மக்களுக்கான குடியுரிமை வழங்கலையும் எதிர்த்திருக்கின்றனர்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டினை ஜே.வி.பி நீண்ட காலமாகக் கொண்டிருந்தது. தமிழர்களின் அரசியல் உரிமைசார் தேசிய விடுதலைப் போராட்டத்தினையும் ‘பிரிவினைவாதம்’ என்ற ஒற்றைப் புரிதலோடு அணுகியதோடு மட்டுமல்லாமல், அதனை இந்தியாவின் செல்வாக்குடன் தொடர்புடையதாகவும் அது கருதிவந்துள்ளது. இந்தியா (1987 – 1990) தனது படைகளை (இந்திய அமைதி காக்கும் படைகள்) இலங்கைக்கு அனுப்பித் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிக்க முனைந்ததோடு பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ்மக்களையும் படுகொலை செய்தது. தமிழீழ மக்களின் தனிநாட்டுக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தினை இந்தியா ஆதரிக்கவில்லை என்பதே அதன் பொருள்.

தமிழர் விடுதலைக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு
சிறிலங்கா அரச மேலாதிக்கத்திற்கு எதிராக ஆயுமேந்திய கிளர்ச்சியை நடாத்தியபோதும், கொள்கை சார்ந்தும் நடைமுறை சார்ந்தும் ஜே.வி.பி தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தது. 2005இல் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவிற்பு ஆதரவளித்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையைப் பாதுகாக்கவும் போரை நடத்தவும் மகிந்தவிற்கு ஆதரவளித்தது ஜே.வி.பி என்பதும் அதன் அண்மைய வரலாறு. புலிகளுக்கு எதிரான ராஜபக்ச அரசாங்கத்தின் போரை ஆதரித்ததற்காகத் தாம் வருத்தப்படவில்லை என்று திஸாநாயக்க கூறியுள்ளார்.

அத்தோடு உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், இன அழிப்பு, மனிதத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும், சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேணஇ;டும், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்குப் பரிகார நீதி வழங்கப்படவேண்டும் என்று ஈழத்தமிழர்களும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உட்பட்ட சில சர்வதேச தரப்புகளும் கடந்த ஒன்றரைத் தசாப்தங்களாகக் கோரி வருகின்றனர். ஆனால் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அத்தகைய விசாரணையை நிராகரித்துள்ளது. உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தண்டனையை நிராகரித்துள்ளார் திஸாநாயக்கா. மாறாக, உள்நாட்டுப் போரின் போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய தென்னாப்பிரிக்காவின் ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வினை ஒத்த ஒரு பொறிமுறையை நிறுவுவதையே அவர் பரிந்துரைத்துள்ளார்.

1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைய அரசியலமைப்பின் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்துவது தொடர்பான இணக்கம் எட்டப்பட்டது. அது மாகாணங்களுக்கு சில அதிகாரங்களைப் பகிர்வதை நோக்கமாகக் கொண்டது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இலங்கை அரசியலில் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான தீர்வு குறித்த ஒவ்வொரு பேச்சுகள், தேர்தல் காலங்கள் உட்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் 13வது திருத்தம் பேசுபொருளாக இருந்து வருகின்றது. ஈழத் தமிழருக்கான தீர்வு சார்ந்து அதிகம் உச்சரிக்கப்பட்ட அரசியற் சொல்லாடல் அதுவாகத்தான் இருக்கும். தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கான (வடக்குக் கிழக்கு மாகாணங்கள்) காவல்துறை, காணி அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது 13வது திருத்தத்தின் மையம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தினால் அது தமிழீழத் தனிநாடு உருவாக்கப்படுவதற்கான அடிகோலாக அமைந்துவிடுமென்ற அச்சத்தில் கடந்த 40 ஆண்டுகளில் எந்தவொரு அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

மாற்றம் குறித்த வாக்குறுதிகள்
பொருளாதாரம், வாழ்க்கைச் செலவு சார்ந்த அதிருப்திகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளன. இந்தப் புறச்சூழலில், அரசாங்கத்திலும் அதன் ஆட்சிநிர்வாக அலகுகளிலும் ஊழலை இல்லாதொழிக்கப் போவதான திஸாநாயக்காவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் வாக்குறுதிகள் சிங்களச் சமூகத்தின் பெரும் பகுதியினர் மத்தியில் கவனிப்பினைப் பெற்றிருக்கின்றது.

குடும்ப அரசியல் அல்லது பாரம்பரிய கட்சி அல்லது அரசியல் உயரடுக்குப் பின்னணிகள் எதுவுமில்லாத, ஆனால் கல்விப் பின்னணியுடைய பெண்ணான ஹரினி அமரசூரியவைப் பிரதமராக நியமித்திருக்கின்றார். அவர் ஜே.வி.பி.யின் உறுப்பினரும் அல்ல. மிதவாத இடதுசாரி கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை வரலாற்றில் சிங்களப் பெருந்தேசியவாதம் மேலாண்மையும் இனவாதமும் கோலோச்சியபோதும் சிங்களத் தரப்பு இருபெரும் அரசியல் முகாம்களாகப் பிளவுபட்டே இயங்கின. 2022இன் மக்கள் எழுச்சி ஆட்சிபீடத்திற்கு எதிரான கொந்தளிப்பான சூழலை உருவாக்கியதோடு சிங்கள மக்களை அரசியல் ரீதியாக மாற்றத்திற்கான அணியாகத் திரட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியே தேசிய மக்கள் சக்தியும் அதன் தேர்தல் வெற்றியும்.

தமிழ்த்தரப்பு அரசியல் என்பது உள்ளடக்கப் பெறுமதியின்றி கோசம் மேவிநிற்கின்ற போக்கினையே அதிகம் கொண்டிருக்கின்றது. தேசியம் என்ற சொல்லைத் தமிழர்களைப் போன்று அர்த்தமற்றதாக ஆக்கிய மக்கள் உலகில் வேறெங்கும் இருக்க வாய்ப்பில்லை. அரசியல் உரையாடல், கோரல், நிர்ப்பந்தித்தல், ஜனநாயக வழிமுறைகளிற் போராடுதல் முதலான தொலைநோக்குப் பார்வையுடனான அரசியற் செயற்திட்டம் தமிழர் தரப்பிடம் போதாமையாகவுள்ளது. அரசியல் வெளி, வாய்ப்புகளை எவ்வாறு மாற்றத்தை நோக்கிய சாத்தியம்மிக்க கருவிகளாகக் கையாள்வது – வசப்படுத்துவது – செயற்திட்டங்களை வகுப்பது – நிறைவேற்றுவது – இலக்கை நோக்கி நகர்வது என்பதற்கு ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சமகால நடவடிக்கைகள் பாடமாக அமைந்துள்ளன. தமிழ்த் தரப்பு அதிலிருந்து கற்றுக் கொள்ள நிறையப் பாடநுணுக்கங்கள் உள்ளன.

ஒரு தேசமாக இலங்கைத் தீவினை முன்னிறுத்தும் அணுகுமுறை
‘இனம், மதம், வர்க்கம், சாதி எனவாகப் பிளவுபட்டுள்ள சகாப்தத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும், இலங்கையின் பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வேலைத்திட்டங்களை நாங்கள் தொடங்குவோம்’ என்று அண்மைய உரையொன்றில் தெரிவித்துள்ளார். திஸாநாயக்கா பொதுவெளிப் பிரசன்னம் எளிமையும் தன்னடக்கமுமாக வெளிப்படுகின்றது. புதிய தலைவர்கள் இவ்வாறான ஒருமைப்பாட்டுச் சொல்லாட்சியிற் பேசுவது புதிய விடயமல்ல. ஆயினும் 2019இல் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, தனது பதவியேற்பு உரையில் சிங்களப் பேரினவாதத்தை உமிழ்ந்தார் என்பதோடு ஒப்பிடுகையில் அநுர அரசியல் நாகரீகத்தோடு மட்டுமல்லாமல் அரவணைப்பு மொழியிலும் பேசுகின்றார். இத்தகு அணுகுமுறைகள் அரசியற் கலாச்சாரத்தில் நேர்மறையான புதிய மாற்றமாகவும், பல்லின ஒருமைப்பாடு, பன்மைத்துவம் உள்வாங்கல் போன்ற தோற்றப்பாடுகளைக் கொடுக்கக்கூடியன. ஜனவசீகரம் மிக்கமையும்கூட.

பல்லின மக்களைக் கொண்ட ஒரு தேசமாக இலங்கைத் தீவினை முன்னிறுத்துகின்றமை முற்போக்கான, ஜனநாயகத்துவமான, கவர்ச்சிகரமான கொள்கையாகவும் ஏற்புடையதாகவுமே வெளிப்பார்வைக்குத் தோன்றும். ஆனால் இலங்கைத்தீவின் இனத்துவ அரசியல் வரலாற்று அனுபவங்களுடன் பார்க்கையில் இது சிக்கலானது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, அதிகாரப் பரவலாக்கம், அரசியலமைப்பிலும் அரசிலும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் கொள்கைசார், நடைமுறைசார் திட்டங்கள் இல்லாதவிடத்து இலங்கையின் ஜனநாயக அமைப்பு முறையானது பௌத்த சிங்களப் பெருந்தேசியவாதத்தின் மேலாண்மையைப் பேணுகின்ற விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.

ஒடுக்குமுறையின் கொடூர வரலாறும் அதன் வடுக்களும்
இன, நில, மொழி, அரசியல், சமூக, பண்பாட்டு ரீதியாகப் பெருமெடுப்புகளில் ஒடுக்கப்பட்ட, இன அழிப்பிற்கு உட்படுத்தப்பட்ட, இரத்தக்களரியை ஏற்படுத்திய போர் இயந்திரம் ஏவிவிடப்பட்ட, அரச பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்ட மக்களை ஒரு தேசம், ஒரு மக்கள் என்ற வெற்றுச் சொற்கட்டுகளின் கீழ் வென்றெடுக்க முடியாது. அது நடைமுறைச் சாத்தியமற்றது. ஒடுக்குமுறையின் கொடூர வரலாறும் அதன் வடுக்களும் கோசங்களால் ஆற்றமுடியாதவை. சுயநிர்ணய உரிமை, அதிகாரப் பரவலாக்கம் உட்பட்ட உகந்த அரசியல் உரிமைகளுக்கான உறுதியான தீர்வுத் திட்டங்களைக் கண்டடையும் அணுகுமுறைகளே அதற்கு அவசியமானவை. இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றுப் போக்கிலும் சமகால யதார்த்தத்திலும் நோக்கும் போது ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் ஒடுக்கப்படும் மக்களுக்கான தீர்வுகள் சாத்தியமற்றவை. அதிகாரப் பரவலாக்கத்தை உரிய முறையிற் சாத்தியப்படுத்துவதற்கு அடிப்படையாகக் கட்டமைப்பு சார்ந்த மாற்றமே அவசியமானது.

தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினைக்குரிய தீர்வுசார் திட்டங்கள் முன்வைப்பதற்கு இடம்பெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலோ, இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளோ உந்தித் தள்ளப் போவதில்லை. அதற்குரிய சமிக்ஞைகள் ஏதும் தென்படவில்லை. நிலமைகள் மேற்சொன்னவாறிருக்க இம்மாதம் (நவ.14) நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. அதன் பெறுபேறுகள் திசாநாயக்காவை எந்தவகையிற் பலப்படுத்தப் போகின்றது, எத்தகைய அரசாங்கம் அமையப் போகின்றது என்பதிலும் பல விடயங்கள் தங்கியிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள அரசாங்கம், அதன் ஆட்சிநிர்வாகப் போக்கு, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட ‘மாற்றம்’ எனும் வாக்குறுதிகளுக்கு நேரவுள்ள விளைவுகளை வைத்துமே புதிய ஜனாதிபதியை முழுமையாக மதிப்பீடு செய்ய முடியும்.

பிரசுரம்: காக்கைச் சிறகினிலே, நவம்பர் 2024

Leave A Reply