என்னைக் கடந்து – Stein Mehren.

பல்லாண்டுகளாக நீ என் கண்களில் படவேயில்லை
அந்தப் பேரூந்து மிகமெதுவாக
என்னைக் கடந்து
வளைந்து சென்ற அக்கணம்
அதன் ஜன்னலோரம் மின்னலாய்
உன்னைக் கண்டேன்
உனதந்தப் பார்வை…
அதில் சட்டென உன் சுயம்
அதீதமாய்த் தோன்றிற்று
எம்மைப் பிரித்த இத்தனை ஆண்டுகாலம்
நான் என்னோடு காவித்திரிகின்ற
உன் உருவப்படத்திலிருந்து
முற்றிலும் வேறான தோற்றத்தில் நீயிருந்தாய்
என்னால் அடையாளம் காணமுடியாதபடி
நான் ஒரு அந்நியமாகிப்போன
முகத்தினைத் தரிசித்தேன்
இதுவரை நான் அறிந்திராத ஒரு புறநகருக்கு
என் பார்வையை
தன்னோடு எடுத்துச்சென்றது அம்முகம்
இருப்பினும் இத்தனை ஆண்டுகளாக
ஒரே நகரத்திலேயே நீயும் நானும் வாழ்ந்திருக்கிறோம்.
உனதந்தக் கண்கள்…
பெரும் பரிதவிப்போடு விரிந்திருந்தன
ஒருபோதும் எமக்கு வாழக்கிட்டாத
வாழ்க்கையின் ஏக்கத்தை
என்னுள் காட்டுவது போல்
அன்றேல்…
ஏதோவொரு வாழ்க்கையிலிருந்து
நீ விலகிப் போவது போல்
அல்லது..
ஒருபோதும் வாழ முடியாத,
சமரசமற்ற உன் ஏக்கத்தோடு
புதியதொரு வாழ்வினுள் நகர்வது போல்..

நோர்வேஜிய மூலம்: Stein Mehren.
தமிழில்: ரூபன் சிவராஜா

Leave A Reply