ஐரோப்பா எதிர்கொண்டுள்ள அகதிகள் நெருக்கடி: மேற்குலகின் இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவு!

ஐரோப்பாவின் அகதிகள் நெருக்கடிக்கான உடனடிக் காரணம் சிரியாவின் போர் என்றபோதும் அதற்கான தோற்றுவாய் அதுவல்ல. ஈராக், ஆப்கானிஸ்தான், தீர்வின்றி இழுத்தடிக்கப்படும் மத்தியகிழக்கின் இஸ்ரேல்-பலஸ்தீனச் சிக்கல், அரபு நாடுகளின் ஆட்சிமாற்றம் கோரிய வெகுசனப்போராட்டங்களில் (அரபு வசந்தம்) மேற்குலகின் நலன்சார் அணுகுமுறை, என்பனவே இன்றைய நிலைக்குரிய தோற்றுவாய்.

சிரியப்போரின் விளைவாக ஐரோப்பா பெருந்திரளான அகதிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சிரியாவிலிருந்து எல்லைநாடான துருக்கிக்கும் பின்னர் அங்கிருந்து கடல்வழியாக கிரீஸ் நாட்டின் ஊடாக ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் மக்கள் பெருமெடுப்பில் சென்றமையானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்தது. 2015 இறுதிப்பகுதியில் இவ்வாறாக வந்த அகதிகள் எண்ணிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 7000 என்று தரவுகள் கூறுகின்றன.
2016 ஆரம்பத்தில், துருக்கி மற்றும் கீறீஸ் நாட்டின் வழியாக நடைபெற்றுவந்த அகதிகளின் கடல்வழிப்பயணங்களைத் தடுப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் சிரத்தையெடுத்ததைத் தொடர்ந்து லிபியா ஊடாக இத்தாலிக்கும் பின்னர் அங்கிருந்து ஏனைய நாடுகளுக்கான கடற்பயணம் அதிகரித்திருந்தது. அதேவேளை தற்போதைய நிலையில் ஸ்பெயின் நாட்டிற்குள் பிரவேசிக்கும் அகதிகள் தொகையும் அதிகரித்துவருகிறது.

கடந்த ஆண்டினை விட அகதிகள் வருகை இந்த ஆண்டு மிகக்கணிசமாகக் குறைந்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 250 வரையான அகதிகள் மட்டுமே ஐரோப்பாவிற்கு வந்துள்ளனர். தாம் எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றது.
லிபியாவிற்குத் தெற்கில் அமைந்துள்ள நாடு நைஜர். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பெரும் நிதிவளம் உட்பட்ட வளங்களைச் செலவிடுவதன் மூலம் அகதிகள் ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்காதிருப்பதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிய முடிகிறது.

லிபியாவின் கரையோரக் காவற்படைகளுக்கு பயிற்சியளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பெரும்நிதி, படைத்துறை வளங்களைச் செலவிடுகிறது. லிபியாவில் அகதிகளுக்குரிய இடைத்தங்கல்ஃதடுப்பு முகாம்களையும் அதிகப்படுத்தியுள்ளது. அத்தோடு தஞ்சம் கோருவோருக்குரிய அனைத்துலக நிறுவனம் (IOM – International Organization for Migration) தஞ்சம் கோரியவர்கள் ‘சுயமாக’
நாடுதிரும்புவதற்குரிய ஏற்பாடுகளையும் மும்முரமாகச் செய்துவருகின்றது.

அதேவேளை லிபியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களின் நிலை மிக மோசமாகவிருப்பதாகவும் அறிய முடிகின்றது. அகதிகள் மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்படுவதாக ஐ.நா உறுதிப்படுத்துகிறது. வன்முறைகள், கொலை, பாலியல் வன்முறை உட்பட்ட மீறல்களை இடம்பெயர்ந்தோர் எதிர்கொள்கின்றனர். ஏலவே அரசியல், சமூக சிதைவிற்கு உள்ளாக்கப்பட்ட நாடு லிபியா. இந்நிலையில் சிரிய அகதிகளைக் கையாள்வதென்பது அந்நாட்டினால் இயலக்கூடிய காரியமல்ல. கடாபியின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவதென்று சூளுரைத்து அந்நாட்டினை அமெரிக்காவும் அதன் நேசசக்திகளும் முற்றிலும் சிதைவுக்குள்ளாக்கியுள்ளன.

2015இல் அகதிகள் நெருக்கடி (Refugee crisis) ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்த பாரிய சிக்கலாகத் தோற்றம்பெற்றது. கிரேக்க, இத்தாலிய உல்லாசப் பயணத் தீவுகளுக்குக் கடல்வழியாகச் சென்றனர். அங்கிருந்து ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுக்குள் தொகைதொகையாகப் பிரவேசித்தனர். மனிதாபிமான அடிப்படையிலான புகலிட தஞ்சம் கோரினர்.
சிறு கப்பல்களில் ஆழ்கடல் பயணத்தில் மூழ்கி உயிரிழந்தோர், காணாமற்போனோர், கணக்கிலில்லாமற்போனோர், தரைவழிப் பயணத்தில் பலியானோர் என அகதிகளாக ஐரோப்பாவிற்கு வெளிக்கிட்ட மக்களில் பலர் பாதிவழியில் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

2ம் உலகப்போரின் பின்னர், சிரியப்போர் மிகப்பாரிய இடப்பெயர்வுகளை உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பா எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி இது. 11 மில்லியன் வரையான மக்கள் உள்நாட்டிலும், அயல்நாடுகள் மற்றும் ஐரோப்பா உட்பட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
குறுகிய காலத்திற்குள் கட்டுக்கடங்காத தொகையில் இடம்பெற்ற இந்த இடப்பெயர்வுகளால் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இந்த நெருக்கடியைக் கையாளும் திறனற்றுத் திணறின. அகதிகள் விவகாரத்தின் இன்றைய நெருக்கடி குறுகியகாலத் தீர்வுகளையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானமெடுக்கும் சக்திகளுக்கு நிர்ப்பந்திக்கிறது. ஐரோப்பிய நாடுகள் தம்மளவிலும், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கூட்டமைப்பாகவும் எல்லைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றன.

அகதிகள் விவகார அரசியல் தொடர்பாகக் கட்டியமைக்கப்பட்ட பிம்பம் என்பது, அரசியல் காரணங்களால் – போர் அவலங்களால் – மனிதாபிமான நெருக்கடிகள் காரணமாக குடிபெயர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி புகலிட தஞ்சம் வழங்குதல் என்பதாகும். அதாவது உலகளாவிய ரீதியில் மிகப் பலமான தாராளவாத ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பென்ற பிம்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் கட்டமைத்துவைத்துள்ளது. மனித உரிமைகளுக்கு உச்சபட்சப் பாதுகாப்பு அளிக்கும் பேரமைப்பு என்ற அபிப்பிராய பிம்பத்தினைத் தக்கவைப்பதில் அது முனைப்புக் கொண்டுள்ளது. எனவே இவ்வாறான காரணிகளுக்காக தஞ்சம் கோருவோரை நிராகரிப்பதென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘நற்பெயருக்கு’ களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நிலமைகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய அரசியலின் கையாலாகாத்தனம் அம்பலப்பட்டுள்ளது.

இவை மூலம் குடிபெயர்வோர் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கும் அரசியலின் பலவீனங்கள் அம்பலப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் கூர்மைப்படுத்தியுள்ளது. ஏலவே பிரித்தானியாவின் வெளியேறல் (Brexit) உட்பட்ட கட்டமைப்பு, பொருளாதார, அரசியல் சிக்கல்களுக்கு முகம்கொடுத்தவாறிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். இந்நிலையில் அகதிகள் நெருக்கடி அதன் ஒருமைப்பாட்டினை மேலும் நலுவுறச்செய்துள்ளது.

மேலும் இந்த நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு முக்கிய பாதுகாப்பு உடன்படிக்கைகளைப் பாதித்துள்ளது. ஓன்று செங்கன் உடன்படிக்கை (Schengen Agreement), மற்றையது டப்ளின் உடன்படிக்கை – (Dublin Agreement). இது ஏற்கனவே வேறொரு ஐரோப்பிய நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அகதிகளைக் கையாள்வது தொடர்பான உடன்படிக்கை.
இதில் ஜேர்மன் மட்டும் சற்று நெகிழ்வுப் போக்குடன், கூடுதலானவர்களுக்கு இறுதி ஆண்டுகளில் புகலிட தஞ்சம் வழங்கி வந்துள்ளது. டப்ளின் உடன்படிக்கையைத் தள்ளிவைத்துவிட்டு – சிரிய அகதிகள் அனைவருக்கும் புகலிட தஞ்சம் வழங்குவதாக அறிவித்திருந்தது. ஐரோப்பாவிற்கு வந்த அகதிகளில் 70 வீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளே தஞ்சம் வழங்கின.

சிரியாவிலிருந்து தரைவழியாகத் துருக்கிக்கும் பின்னர் கடல்வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும் சிதறி வந்துகொண்டிருந்த அகதிகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய உதவியினைத் துருக்கியிடமும் ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருந்தது. இதற்காக பெரும் நிதியை; துருக்கி, மற்றும் போர் நெருக்கடி நிலவும் நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு ஜேர்மன் வழங்கியது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் பால்கன் குடா (Balakan War) போர்களின் போது அகதிகளைக் கையாள்வதில் ஐரோப்பா வேகமும் தேர்ந்த ஒருங்கிணைப்பினையும் கொண்ருந்தது. தற்போது அகதிகள் விவகாரத்தில் ஒவ்வொரு நாடுகளும் எண்ணிக்கை, நிதியுதவி தொடர்பான முரண்பாடுகளையும் முரண்டுபிடிப்புகளையும் கொண்டுள்ளன.
அந்தந்த நாடுகளின் தேசிய வருமானம், சனத்தொகை, வேலையில்லாதோர் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அந்தந்த நாடுகளுக்குரிய புகலிட தஞ்சமளிக்கக்கூடிய எண்ணிக்கை, நிதியுதவிக்கான பங்கீடு வகுக்கப்படுவது வழமை.

சிரியாவிலிருந்தும் ஏனைய மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பா செல்பவர்களில் மிகப்பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள். இங்கே மேற்கின் இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை பற்றியும் பேசாமல் செல்ல முடியாது. இஸ்லாமியர்களின் பரம்பல் தமது தனித்துவ இருப்பிற்கு அச்சுறுத்தலென்ற கருத்து ஐரோப்பிய அரசுகளின் மட்டங்களில் உள்ளன. பொது மக்கள் மத்தியிலும் அந்த அபிப்பிராயம் உண்டு. தவிர அகதிகளின் திடீர் அதிகரிப்பு தமது நாடுகளில் வன்முறை, சட்டஒழுங்குப் பிரச்சினை, வேலையிற்றோர் சிக்கலை அதிகரிக்குமென்ற பல்வேறு அச்சங்களும் இந்நாடுகளுக்கு உள்ளன.

அடிப்படையில் இந்தப் பாரிய இடப்பெயர்வுகளுக்கான மூலம் என்ன? எங்கிருந்து மக்கள் ஐரோப்பிய தேசங்களுக்குள் பிரவேசிக்கின்றனர்.?
தற்போதைய நெருக்கடிக்கான உடனடிக் காரணம் சிரியாவின் போர் என்றபோதும் அதற்கான தோற்றுவாய் அதுவல்ல. ஈராக், ஆப்கானிஸ்தான், தீர்வின்றி இழுத்தடிக்கப்படும் மத்தியகிழக்கின் இஸ்ரேல்-பலஸ்தீனச் சிக்கல், அரபு நாடுகளின் ஆட்சிமாற்ற முனைப்பில் (அரபு வசந்தம்) மேற்குலகின் நலன்சார் அணுகுமுறை, என்பனவே இன்றைய நிலைக்குரிய தோற்றுவாயும் விளைவுகளும்.

செப்ரெம்பர் 11 இற்குப்பிறகு ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான படைகளை இறக்கி அங்கெல்லாம் பேரழிவுகளைத் தோற்றுவிப்பதற்குரிய ‘இராணுவ முனைப்பினை’க் கொண்டிருந்தன மேற்குலக நாடுகள், அந்த இராணுவ அணுகுமுறையின் விளைவாக நிகழ்ந்த அகதிகள் நெருக்கடிக்குரிய தீர்வினைக் காண்பதற்குரிய பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் ‘அரசியல் முனைப்பு’ அற்றவர்களாக இன்று உள்ளன. இது சர்வதேச அரசியலின் போக்கினை வெளிச்சம்போட்டுக்காட்டுகின்றது.
அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பின் நேரடி விளைவே இஸ்லாமிய அரசு எனப்படும் ஐ.எஸ். அமெரிக்க முந்நாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இதில் அமெரிக்காவிற்கிருந்த பங்கினை ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அல்-ஹைடாவின் நேரடி வழித்தோன்றலே ஐ.எஸ் எனவும் ஈராக் மீதான தமது படையெடுப்பின் விளைவு அதுவென்ற கருத்துப்பட ஒபாமா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தாம் கணிக்கத்தவறிய விளைவெனவும் அவர் கூறியிருந்தார்.
இன்றைய அகதிகள் நெருக்கடிக்குரிய முழுமுதற்காரணம் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பொங்குதமிழ் இணையம், செப்ரெம்பர் 2017

Leave A Reply