கவிஞன்: ஒரு இராப்பாடி! – Kalil Gibran

சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான தொடுப்பு
என்றானவன் கவிஞன்
தாகமுற்ற எல்லா ஆன்மாக்களும்
பருகக்கூடிய தூய வசந்தம் அவன்
எழில்மிகு நதியிலிருந்து பாயும்
நீரில் வளரும் மரம் போன்றவன்
பசித்த இதயங்கள் வேண்டிநிற்கும்
பழக்கூடை என்றானவன்
அவன் ஒரு இராப்பாடி
குமையும் ஆன்மாக்களின்
சோர்வைத் தன் இதமான
மெட்டுக்களால் தூரம் துரத்துபவன்
அவன் அடிவானத்தில் தோன்றும்
ஓர் வெண்மேகம்
உச்சிவானின் முகம்
நிரம்பும் வரையில் மேலெழுந்து
வளர்ந்து செல்லும் மேகமாகி
வாழ்வுநிலங்களில்
விழுந்து சொரிபவன்
வெளிச்சம் உட்புக அனுமதித்து
வாழ்வின் ஒவ்வொரு
இதழ்களையும் திறப்பவன்.
அவன் எளிமையினதும்
இரக்கத்தினதும்
பிடியில் தனித்திருப்பவன்
தனக்கான உத்வேகத்தை கண்டடைய
இயற்கையின் மடியில் குந்தியிருப்பவன்
இரவின் பேரமைதியில் தங்கியிருந்து
ஆன்மாவின் வருகைக்காக
காத்திருப்பவன்

-மூலம் கலீல் ஜிப்ரான்
-தமிழில்: ரூபன் சிவராஜா

Leave A Reply