கியூபா:அமெரிக்காவின் பொருளாதாரப் போரும் ஆட்சிக்கவிழ்ப்பு முனைப்புகளும்

ஒருபுறம் அவர்களைப் பல தலைமுறைக் காலங்கள் வறுமைக்குள் தள்ளுகின்ற இழிவரசியலைச் செய்து கொண்டு, மறுபுறம் அவர்களுக்கான ‘சுதந்திரத்தைக்’ கோருவதென்பது அப்பட்டமான அரசியல் போலித்தனம். சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்பனவற்றை அமெரிக்காவும் அதன் தலைமையிலான மேற்கின் சக்திகளும் உலக நாடுகளில் எவ்வாறு கையாள்கின்றன என்பதற்கு வரலாறு நெடுகிலும் பல உதாரணங்கள் உள்ளன.

கியூப அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பான செய்திகள், ஜூலை மாத ஆரம்பத்தில் உலக ஊடகங்களில் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்தன. மக்கள் தெருவில் இறங்கியமைக்கான முதன்மைக்காரணி நாட்டின் பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவான உணவு, மருந்துத் தட்டுப்பாடுகளும், கொரோனாத் தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சவால்களும்; மக்களைக் கோபப்படுத்தியுள்ளது என்பதே ஆர்ப்பாட்டங்களுக்கான உடனடிக் காரணங்கள்.

பொருளாதார நெருக்கடி என்பது அமெரிக்காவினால் கியூபா மீது 60 ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டுவந்துள்ள தடைகளின் விளைவு. உணவுத் தட்டுப்பாடு என்பது கடந்த 30 ஆண்டுகளில் தற்போது மிகவும் மோசமானதாகியுள்ளது என The Economist எழுதுகிறது. 60 ஆண்டுகாலம் நேரடியான தடைகள் மூலம் தொடர்பொருளாதார நெருக்கடிகளைக் கொடுத்துவந்த அமெரிக்கா தற்போது, ஒரு பெருந்தொற்றுக் காலமென்னும் பாராது, கியூபாவில் ஆட்சிக் கவிழ்ப்பிற்குத் தூண்டுகின்றது என்பது வெள்ளிடைமலை.

தலைநகர் ஹவானா உட்பட்ட San Antonio, Palma Soriano, Santiago நகரங்களில் அரசாங்கத்திடம் மாற்றங்களைக் கோரி ஆர்ப்பட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்குக் காவல்துறை இறக்கிவிடப்பட்டது. கைதுகளும் இடம்பெற்றன. கைதுசெய்யப்பட்டவர்வள் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்ற பொருளாதார நெருக்கடியின் விளைவாக 1994இலும் அரசாங்கத்திற்கு எதிரான பேரணிகளை கியூபா சந்தித்திருந்து. அதனை ஓகஸ்ட் 94 எழுச்சி அல்லது Maleconazo uprising என்று அழைக்கின்றனர்.

அக்காலப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான கியூபர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். பலர் மிதப்புப் படகுகள் மூலம் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றனர். கியூபாவிற்கு முக்கிய பொருளாதார உதவிகளைச் செய்துவந்த சோவியத் ஒன்றியத்தின் உடைவின் விளைவாக உதவிகள் நின்றுபோனமை அன்றைய நெருக்கடிகளுக்கான அடிப்படைக் காரணி. தற்பொழுது 27 ஆண்டுகளின் பின்னர் மிக மோசமான நெருக்கடியைக் கியூபா சந்தித்துள்ளது. இன்றைய நிலைக்கான காரணி எனும்போது கொரோனா தொற்றுப்பரம்பலும் அதன் விளைவாக இறுதி மாதங்களில் அதிகரித்த வாழ்வாதார நெருக்கடிகளுமாகும்.

உலகளாவிய ரீதியில் கியூபாவைத் தனிமைப்படுத்தல்
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே நெருக்கடிக்கான காரணம் என்று கூறியுள்ளதோடு, எதிர்ப்புப் பேரணிகளும் அமெரிக்காவினால் திட்டமிட்டுத் தூண்டப்பட்டது என்றிருக்கின்றார் கியூப அரச தலைவர் Miguel Diaz-Canel . அதற்கான ஆதாரங்களும் உள்ளன. சோசலிச கியூபாவைச் சிதைக்கும் நோக்கில் 1992இல் கியூப ஜனநாயக சட்டம் (Cuban Democracy Act – Torricelli Act of 1992) மற்றும் The Cuban Liberty and Democratic Solidarity Act of 1996 (Helms-Burton Act of 1996). 1996 இல் கொண்டுவரப்பட்ட இந்தப் புதிய சட்டம் கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மேலும் வலுப்படுத்தி, விரிவுபடுத்தித் தொடர்வதற்கான நோக்கத்தினைக் கொண்டதாகும்.

இச்சட்டங்கள் உலக நாடுகளிலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் கியூபாவுடன் வணிக உறவுகளைக் கொண்டிருப்பதைத் தடுக்கின்ற சட்டங்கள். அதுவும் சோவியத் உடைவினால், அதன் உதவிகள் நின்றுபோய் பொருளாதார மந்தநிலையில் கியூபா இருந்தபோது அமெரிக்கா இவ்வணிகத் தடைச் சட்டங்களை அமுல்ப்படுத்தியது. மட்டுமல்லாது அமெரிக்கப் பிரஜைகள் கியூபாவிற்குப் பயணம் செய்யவும், கியூபாவிலுள்ள குடும்ப உறவினர்க்கு அமெரிக்காவிற்கு இடம்பெயரந்த கியூபர்கள் உதவிப்பணம் அனுப்பவும் இச்சட்டம் மூலம் தடை விதித்திருந்தது. இவற்றுக்கிடையில் அதிநவீன மற்றும் பலமுனைகளினாலான ‘ஆட்சி மாற்ற’ திட்டங்கள் தொடர்ச்சியாக அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டுவந்தன. அவற்றில் முன்னாள் ஜனாதிபதிகளான Bill Clinton இனுடைய ‘People-to-people’ திட்டங்கள் George Bushஇன் ‘Commission for a Free Cuba’ வரையான திட்டங்கள் அடங்குகின்றன. 1990களின் நடுப்பகுதியிலிருந்து 2015வரை, இத்திட்டங்களுக்காக, அதாவது அமெரிக்காவின் சொற்பிரயோகத்தில் (முதலாளித்துவ) ‘ஜனநாயகத்தை’ கியூபாவில் கொண்டுவருவதற்கு 284 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகவலை Scotland Glasgow பல்கலைக்கழக சிரேஸ்ர விரிலுரையாளர் (பொருளாதாரம் மற்றும் சமூக வரலாற்றுத் துறை) Helen Yaffe, The Gaurdian இதழில் (04-08-21) எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கியூப ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அமெரிக்க இலக்கு
சமீபத்திய ஆண்டுகளில் மற்றுமொரு முக்கிய கருவி சமூக ஊடகங்கள். 2018இல் கியூபாவில் தமக்குச் சாதகமான தகவல்களைப் பகிரவும் பரப்பவும் ஏதுவாக இணையக்குழுவொன்றினை டிரம்ப் உருவாக்கினார். கட்டற்ற தகவற் பரம்பல், கருத்துரிமை, ஜனநாயகம் என்ற மதிப்புமிகு லேபல்களின் பெயரில் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. கைத்தொலைபேசிகளில் இணைய இணைப்பினைப் பரவலான மக்களுக்கு இத்திட்டம் மூலம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நடுப்பகுதியில் மியாமியைத் தளமாகக் கொண்ட கருத்துருவாக்கிகள் மற்றும் யூரியூப்பர்கள் (YouTubers) கியூப மக்களைத் தெருவுக்கு இறங்குவதை ஊக்கப்படுத்தும் வகையிலான சமூக ஊடகப் பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. கடந்த ஜுலையில் கியூபாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் தன்னிச்சையான மற்றும் உண்மையானதாகத் தோன்றினாலும், அதன் பின்னால் அமெரிக்க நிதி மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளது என்பது ஆதாரபூர்வமானது.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில் கியூபாவுடனான இராஜதந்திர உறவு மற்றும் பொருளாதார உறவுகள் சற்று இலகுபடுத்தப்பட்டதோடு இருதரப்புச் சந்திப்புகளும் இடம்பெற்றன. ஆனால் 2016 இல் பதவிக்கு வந்த றொனால்ட் டிரம்பினால் மீண்டும் வணிகத் தடைகள் அமுல்படுத்தப்பட்டன. டிரம்ப் நிர்வாகம் 243 புதிய கட்டாயத் தடைநடவடிக்கைகளைக் கொண்டுவந்திருந்தது. சர்வதேச வணிக, முதலீட்டு, நிதியீட்டல் வாய்ப்புகளை அடைக்கின்ற தடைநடவடிக்கைகள் அவை. அதிலும் கியூபாவின் அபிவிருத்தி மூலோபாயத்தில் வெளிநாட்டு முதலீடுகள் முக்கியத்துவம் பெற்றுவந்த காலகட்டத்தில் டிரம்ப் நிர்வாகம் அத்தகைய தடைநடவடிக்கைகளைப் பதிதாக அமுல்ப்படுத்தியிருந்தது. புதிய ஜனாதிபதி, ஜோ பைடன் தெரிவு தளர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்போதும் அவ்வாறு நிகழவில்லை. தடைகள் தக்கவைக்கப்பட்டுள்ளன.

கியூப நெருக்கடிகளின் சமகாலக் காரணிகள்
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக சோவியத் உடைவிற்குப் பின்னரான 30 ஆண்டுகளாக அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்குத் தாக்குப்பிடித்த கியூபாவில் தற்போது மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடும் அளவிற்குப் பொருளாதார நெருக்கடி சென்றமைக்கான காரணம் என்ன என்பதாகும்?

நாட்டின் முக்கிய வருமானங்களில் ஒன்று அதன் சுற்றுலாப் பயணத்துறை. 2019இல் நான்கு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் கியூபாவிற்குச் சென்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுப் பயண முடக்கங்களால் 2020இல் அந்த எண்ணிக்கை 1 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளதாக என வுhந நுஉழழெஅளைவ குறிப்பிடுகிறது. அதன் விளைவாகப் பொருளாதாரம் பொருளாதாரம் 2020இல் 11 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2021 முதல் ஆறு மாதங்களில் இது மேலும் 2 வீதத்தால் சரிந்ததாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதேவேளை பெருந்தொற்றுத் தொடங்கிய கடந்த 18 மாதங்களில் இறக்குமதி ஏறத்தாழ 40வீதத்தால் குறைந்துள்ளது. அத்தோடு இறுதி மாதங்களில் கொரோனாத் தொற்றுகளும் அதிகரித்துள்ளன. பெருந்தொற்றுக் காரணமான கியூபாவின் நேரடி வருமான இழப்பு ஈடுசெய்ய முடியாதது. சுற்றுலாத்துறையில் 3 மில்லியன் பயணிகள் குறைவதென்பது பயணிகளால் அரசாங்கம் ஈட்டுகின்ற வருமானமென்பதைத் தாண்டி, அத்துறையில் பல படிநிலைகளில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் வேலையிழப்பு, வருமான இழப்பினையும் உள்ளடக்கியுள்ளது.

2020 இல் கொரோனாத் தொற்றுப் பரவத்தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக கியூபா தொற்றுத்தடுப்பு நடவடிக்கைகளைச் சிறப்பாக முன்னெடுத்துவந்தது. இறுதிக் காலங்களில் பொருளாதார நெருக்கடியைச் சரிக்கட்டும் நோக்கில் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்றுப்பரம்பல் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகக் கூறப்படுகின்றது. நீண்ட காலங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமையும் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைகளாகவும் சுட்டப்படுகின்றன.

மருத்துவத்துறையின் சர்வதேசியத்துவம்
கியூப மருத்துவத்துறையின் சாதனைகள் உலகம் அறிந்த ஒன்று. மனிதாபிமான மருத்துவத்துறையின் சர்வதேசியத்துவம் என்ற கருத்தியலை கியூபாவை முன்வைத்தே பேசமுடியும். வினைத்தாக்கம் மிக்க கோவிட் தடுப்பூசி மருந்தினைக் கியூப மருத்துவத்துறை தயாரித்துள்ள போதும், அமெரிக்கத் தடை ஏற்படுத்தியுள்ள ஊசிகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்கள், சாதனங்களின் பற்றாக்குறை தடுப்பூசி செலுத்தலின் நிர்வாகச் செயற்பாடுகளைப் முடக்கிப்போட்டுள்ளது. இன்னொரு வகையில் சொல்வதானால் கியூப நெருக்கடிகள் வோசிங்ரனால் உருவாக்கப்பட்டவை.

தொழில்நுட்பம், சர்வதேச ரீதியில் மருத்துவ சாதனைகளில் கியூபா தனியிடத்தைத் தக்கவைத்து வந்துள்ளது. பெருந்தொற்று என்பது உலகளாவிய நெருக்கடி எனும் போதும் உலகமயமாக்கல் கட்டமைப்பில் வணிக உறவுகளைக் கொண்டுள்ள நாடுகள் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து ஓரளவு தம்மைத் தக்கவைக்க முடிகின்றது. ஆனால் அமெரிக்காவின் வணிக மற்றும் பொருளாதாரத் தடைகள், சுற்றுலாப் பயணத்துறை வீழ்ச்சி என்பன கியூபாவை மேலும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன.
டெல்ரா வகை கொவிட் தொற்று (Delta variant covid infection) அலையானது நாட்டின் மருத்துவத்துறையை மீறியும் நாட்டின் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தையும் சிதைத்துள்ளதால் தமக்கு பாரிய உதவிகள் தேவைப்படுகின்றமையை கியூபா ஒப்புக்கொண்டுள்ளது. கியூபா எதிர்கொள்கின்ற பாரிய நெருக்கடியானது சீனா, ரஸ்யா, மெக்சிக்கோ, வியட்நாம் போன்ற நாடுகளை உதவத் தூண்டியுள்ளது.

பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கியூபாவில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைவு. இருந்தபோதும் தொற்றுப்பரம்பல் அதிகரித்து வருகின்ற புறநிலை மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான அடிப்படைக்காரணம் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு. ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் காலையிலிருருந்து மாறிமாறி குடும்ப உறுப்பினர்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக கடைகளில் வரிசைகளில் நிற்கவேண்டிய இக்கட்டு நிலவுகின்றது. இதனால் மக்கள் மத்தியில் விரக்தியும் அதிருப்தியும் ஏற்பட்டிருப்பது ஆச்சரியத்திற்குரியதில்லை என்று Helen Yaffe மேலும் எழுதுகிறார். கியூபா தொடர்பான அமெரிக்கத் தடைகள் காலநீட்சியுடைய பல முனைகளில் விரிவுபடுத்தப்பட்டவை. நவீன வரலாற்றில் ஒருதலைப்பட்சமாக ஒருநாட்டினைத் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்துகின்ற உலகின் வல்லாதிக்க சக்தியின் முனைப்பிற்கு உதாரணமாக கியூபா உள்ளது.

ஐ.நா தீர்மானம்: 29 ஆண்டுகளாக அமெரிக்கா நிராகரிப்பு
ஜூன் மாத இறுதியில் (23.06.21) ஐ.நா பொதுச் சபையில் 184 நாடுகள் கூட்டாக கியூபா மீதான அமெரிக்கத் தடைகளை நீக்குமாறு தீர்மானம் நிறைவேற்றின. தொடர்ச்சியாக 29 ஆண்டுகளாக ஐ.நாவில் இத்தீர்மானமும் அழைப்பும் விடுக்கப்பட்டுவருகின்றது. ஆனால் அமெரிக்காவினால் இவ்வழைப்பு செவிசாய்க்கப்படவில்லை. தாம் விதித்துள்ள தடைகள் ‘வெளியுறவுக் கொள்கை, தேசிய பாதுகாப்பு மற்றும் பிற தேசிய மற்றும் சர்வதேச நோக்கங்களை அடைவதற்கான உகந்த வழி எனவும் கியூபா தொடர்பான தமது பரந்த முயற்சியில் இதுவொரு ஒரு கருவி” என்றும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

அமெரிக்கத் தடை என்பது, கியூப மக்களிள் மனித உரிமைகளைப் பாரிய அளவிலும் மிகக் கொடுமையாகவும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமான முறையில் மீறுகின்ற செயல் என மேற்சொன்ன வாக்கெடுப்பின் போது பிரசன்னமாகியிருந்த கியூப வெளியுறவு அமைச்சர் Bruno Rodríguez Parrilla ஐ.நா சபையில் கூறியிருந்தார். கோவிட் -19 தடுப்பூசிகள் உட்பட்ட உற்பத்திக்கான கருவிகளை உருவாக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களைப் பெறுவதையும் இந்தத் தடைகள் மேலும் கடினமாக்கியுள்ளனவெனவும் அவர் தெரிவித்தார்.

பெருந்தொற்று நெருக்கடியிலும் அமெரிக்கத் தடைகள்
பெருந்தொற்று நெருக்கடியின் உச்ச விளைவுகளுக்கு மத்தியிலும் கியூபாவிற்கான மருந்துப்பொருட்கள், செயற்கைச் சுவாசக்கருவிகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை உட்பட்ட பரிமாற்றங்களைத் தடுக்கின்றது. கியூபாவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி Swiss manufacturer IMT Medical மற்றும் Ventilator company Autronic ஆகிய இரண்டு நிறுவனங்களும் அமெரிக்க Vyaire Medical நிறுவனத்தின் பங்காளர்களாக உள்ளடக்கப்பட்டதையடுத்து கியூபாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்க முடியாதென இவ்விரு நிறுவனங்களும் 2020ம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் அறிவித்திருந்தன.

எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவு
நடைபெற்ற மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் ஒருபுறம், கியூப ஆட்சியின் ஸ்திரத்தன்மை மீது கேள்வியெழுப்புவதற்கான வாய்ப்பாகியுள்ளது. மறுபுறம் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் எதிர்காலத்திலும் நிகழலாம் என்ற அழுத்தத்தினை அரசாங்கத்திற்குக் கொடுத்துள்ளது. அத்தோடு அமெரிக்க பொருளாதாரத் தடைகளை மீறி நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது.

கியூபாவில் ஒரு மென் ஆட்சிக் கவிழ்ப்பினை (Soft coup)) தூண்டுவதற்கு அமெரிக்கா முயற்சி செய்ததாக 2018இல் ரவுல் காஸ்ட்ரோவிடமிருந்து ஆட்சிப்பொறுப்பினைப் பொறுப்பேற்ற தற்போதைய கியூப ஜனாதிபதி Miguel Díaz-Canel, குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கியூபாவின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். கியூப அரசாங்கம் பெருந்தொற்றுக் காலத்தில், அதாவது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அவசரகால நிலையைப் பிரபகடனப்படுத்தி, தடுப்பூசி உற்பத்தி, உணவு உற்பத்தியோடு, அரச நிறுவனங்களின் பரவலாக்கம் மற்றும் தனியார் துறையின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாகக் கூறியது. ஆனால் மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயற்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்கின்றது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க இலக்கு
ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கியூபாவின் கொம்யூனிச அரசைச் சிதைப்பதும், அதனூடாக தனக்குச் சாதகமான சக்திகளை ஆட்சிபீடத்தில் இருத்துவதுமே அமெரிக்காவின் இலக்கு. கடந்த 60 ஆண்டுகளாக இதே மூலோபாய இலக்குடனேயே கியூபாவை அமெரிக்கா அணுகிவருகின்றது. அமெரிக்காவின் அனைத்துவித இராணுவ, பொருளாதார, அரசியல், இராஜதந்திர அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு அவற்றுக்குத் தாக்குப்பிடித்து வந்திருக்கின்றது கியூபா. லத்தீன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்கா நீண்ட காலமாக காய்களை நகர்துதிவருகின்றது. அந்தந்த நாட்டில் உள்ளக முரண்பாடுகளைத் தூண்டி, சமூகக் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்குச் சாதகமான வலதுசாரி, இராணுவ மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்களைப் பதவிக்குக் கொண்டுவருவதற்குரிய சதித்திட்டங்களில் அமெரிக்கா முனைப்புக் கொண்டுள்ளது. பொலிவியா, பிரேசில், எகுவாடோர் உட்பட்ட சில நாடுகளில் அமெரிக்க இலக்கு சாத்தியமாகியுள்ளது.

கியூப மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கொம்யூனிசத்திலிருந்து ‘விடுதலை’க்கான எதிர்ப்பு என்று விழித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன். உண்மையில் அறுபது ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துத் தமது விடுதலையைத் தக்கவைத்த தேசம் கியூபா. 29 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வோராண்டும் கியூபா மீதான பொருளாதாரத்தடையைக் நீக்கக் கோருகின்ற ஐ.நா தீர்மானங்களை உதாசீனப்படுத்திவருவதுதான் அமெரிக்காவின் ஏகாதிபத்திய முகம்.

ஜனநாயகப் போர்வையும் அரசியல் போலித்தனமும்
பெரும்பாலான மேற்குலக ஊடகங்களும் அரசியல் சக்திகளும் கியூப ஆர்ப்பாட்டங்களை ஒட்டுமொத்த சோசலிச எதிர்ப்பு மற்றும் கியூப அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாக முன்னிறுத்தின. அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. உண்மையில் ஒரு நாட்டில் இவர்கள் சொல்கின்ற ஜனநாயகத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும், மனித உரிமையையும் மேம்படுத்தவேண்டுமென்ற உயர்ந்த நோக்கம் இருக்குமெனில் அந்நாட்டின் அரசாங்கத்துடனும், சிவில் சமூகத்துடனும் உரையாடவேண்டும், உறவினை விரிவுபடுத்தவேண்டும். தடைகளை விதித்துக் கொண்டு இவற்றை வலியுறுத்துவது அரசியல் போலித்தனம். அமெரிக்காவும் மேற்கும் வலியுறுத்துகின்ற ஜனநாயகம், கருத்துச்சுதந்திரம், மனித உரிமைகள் என்பன நேர்மையான அக்கறையின் பாற்பட்டவையோ, மனித நேயத்தின்பாற்பட்டவையோ அல்ல, அவை நலன்சார் நோக்குநிலைகளின் பாற்பட்டவை என்பதற்கு உலகளாவிய உதாரணங்கள் உள்ளன.

ஒருபுறம் அவர்களைப் பல தலைமுறைக் காலங்கள் வறுமைக்குள் தள்ளுகின்ற இழிவரசியலைச் செய்து கொண்டு, மறுபுறம் அவர்களுக்கான ‘சுதந்திரத்தைக்’ கோருவதென்பது அப்பட்டமான அரசியல் போலித்தனம். சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்பனவற்றை அமெரிக்காவும் அதன் தலைமையிலான மேற்கின் சக்திகளும் உலக நாடுகளில் எவ்வாறு கையாள்கின்றன என்பதற்கு வரலாறு நெடுகிலும் பல உதாரணங்கள் உள்ளன.

தாய்வீடு
தினக்குரல்
ஓகஸ்ட் 2021

Leave A Reply