கியூப – அமெரிக்க பகைமை முடிவு: அமெரிக்காவின் தனிமைப்படுத்தல் மூலோபாயம் தோல்வி: பகுதி 2

கியூபாவுடனான அமெரிக்காவின் உறவு புதுப்பிக்கப்படுகின்ற புறநிலையானது, அமெரிக்காவின் அரசியல் அரங்கில் பதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. குறிப்பாக தென்னமெரிக்க நாடுகளுக்கான நுளைவாகவும் அமெரிக்காவிற்கு இந்நிகழ்வு அமையக்கூடியது. இலத்தீன் அமெரிக்க நாடுகள் செல்வாக்கினையும் வகிபாகத்தினையும் அமெரிக்கா மீள நிலைநாட்டுவதற்குரிய சாதகமான சூழலாக இதனைப் பார்க்கலாம்.

நலன்சார் அரசியலும் அனைத்துலக உறவும்
தற்போதைய அனைத்துலக உறவு என்பது எதிரி-நண்பன் என்ற இரட்டைமுனையில் இயங்கவில்லை. தத்தமது அரசியல் பொருளாதார நலன்களுக்கு சாதகமான விவகாரங்களில் ஒத்துப்போவதும் ஒருமித்து நிற்பதான நலன்சார் அணுகுமுறையே நாடுகளுக்கிடையிலான உறவாக கைக்கொள்ளப்படுகின்றன. சோவியத் உடைவிற்குப் பின்னர் அமெரிக்கா ஒற்றை வல்லரசாக பரிணமித்தது. தற்போதைய உலக ஒழுங்கு ஒற்றை வல்லரசு நிலையிலிருந்து மாற்றம் கண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில், ஜேர்மன், ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் என பொருளாதார வலுமிக்க சக்திகள் பலவாகியுள்ளன. தற்போதைய சூழலில் பொருளாதாரத்தில் உச்சங்களைத் தொட்டு, உலகின் முதலாவது பொருளாதார வலுமிக்க நாடென்ற நிலையைச் சீனா எட்டியுள்ளது.

அரசியலில் துருவநிலைப்பட்ட உறவு நிலவிய காலம் மலையேறிவிட்டது. தற்போது தத்தமது நலன்களுக்காக யாருடனும் யாரும் உறவைப் பேணுகின்ற புறநிலை தோன்றியுள்ளது. நலன்களின் அளவுகோல்களே நாடுகளுக்கிடையிலான அனைத்துவகை உறவுகளையும் தீர்மானிக்கின்றன. நீதி, நியாயம், நல்லாட்சி என்பதெல்லாம் பொருளாதார நலனுக்கு அடுத்த பட்சமே.

கொம்யூனிச நாடுகளும் அமெரிக்காவும்
கொம்யூனிச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை அமெரிக்கா மீளப்புதுப்பிப்பது இதுதான் (கியூபா) முதற்தடவையல்ல. 1972இல் சீனாவுடனும், 1995இலிருந்து வியத்னாமுடனும் புதுப்பித்துக்கொண்டது. எனவே இவை வரலாற்றில் திரும்பத்திரும்ப நடைபெறுகின்ற சம்பவங்களென்பதும் கியூப விவகாரத்தில்; நிரூபிக்கப்பட்டுள்ளது. கியூபாவைத் தனிமைப்படுத்துவதிலும் பிடல் கஸ்ரோ ஆட்சியை நலிவடையச் செய்து அகற்றுவதிலும் தன்னாலான அனைத்தையும் முயன்று தோற்ற புறநிலையிலேயே இம்மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது.

சோவியத் உடைவிற்குப் பின்னர் பொருளாதாரத்தில் கியூபா மேலும் நலிவடைந்தது என்பதை கட்டுரையின் முதற்பகுதியில் பார்த்திருந்தோம்.
கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ஏனைய தடை நடவடிக்கைகள் கியூபபாவைப் பலவீனப்படுத்தியதைவிட பலப்படுத்தியதே அதிகமெனப் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது ஒரு பொது எதிரியைக் கையாள்வதற்குரிய மூலோபாயத்தை வகுத்துக் கொள்வதற்கும், கியூப மக்கள் மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்காவின் ‘தடை அரசியல்’ பெரிதும் பங்காற்றியது என்ற கோணத்தில் அவ்வாறு பார்க்கப்படுகின்றது.

கியூபாவின் மருத்துவ கல்வித்துறைச் சாதனைகள்
கியூபாவின் பொருளாதாரத்தில் மந்தகதி நிலைவியிருந்தபோதும், பொதுவுடமைச் சிந்தனைக்கமைய சில முற்போக்கான அம்சங்களுக்கு அங்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவசக்கல்வி மற்றும் மருத்துவம் என்பது நடைமுறையில் சிறப்பாக இயங்குகின்றது. இவற்றின் விளைவாக உயர்கல்வி பயின்றோர் எண்ணிக்கை அதிகரித்த நாடாகவும், சிறந்த மருத்துவச் சேவையை வழங்குகின்ற நாடாகவும் கியூபா விளங்குகின்றது. கல்வி, மருத்துவம், ஆண்-பெண் சமத்துவம் ஆகிய விடயங்களில் ஐரோப்பிய சூழலை ஒத்த நிலை கியூபாவில் நிலவுவதாக கூறப்படுகின்றது.

கடந்த 55 ஆண்டுகளாக மூன்றாம் உலக நாடுகளுக்கு கியூப மருத்துவர்கள் அனுப்பப்பட்டு, சேவை வழங்கப்பட்டு வருகின்றது. 2008 இல் வெளிவந்த ஒரு தரவின்படி கியூபா முழுவதுமாக 74500 வரையான மருத்துவர்கள் உள்ளதாகவும், இவர்களில் 5000 மருத்துவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சேவையாற்றிவருவதாகவும் அறியமுடிகின்றது. 200 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் கியூபாவின் மருத்துவத்துறை உள்ளது. தவிர மருத்துவத்துறை சார்ந்த 25000 பணியாளர்கள் ஏனைய நாடுகளில் சேவையாற்றுகின்றனர். வெனிசுவேலாவில் 20 000 வரையான கியூப மருத்துவத்துறைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கியூப ஆசிரியர்கள், கட்டுமானத் தொழிலாளர்களும் மூன்றாம் உலக நாடுகளில் பணிபுரிகின்றனர்.

இவ்வாறாக மருத்துவ, கல்வி மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களை மூன்றாம் உலக நாடுகளில் பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் அந்நாடுகளிலிருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை கியூபா பெற்றுக்கொள்கிறது. கல்வியை மூலதனமாக்கி அதிலிருந்து தனது பொருளாதாரத்தைத் தக்கவைத்துள்ளது எனலாம். கியூபாவிற்கு அந்நியச் செலவாணியை ஈட்டிக்கொடுக்கும் ஒரே துறை அதன் சுற்றுலாப் பயணத்துறையாகும்.

பொருளாதார மறுசீரமைப்பு
சோவியத் உடைவிற்குப் பின்னரும் சவால்களை எதிர்கொண்டு, நிலைத்து நிற்கின்றமைக்கான முக்கிய காரணியாக பிடல் கஸ்ரோவின் அணுகுமுறையும் வலுவான தலைமைத்துவத்தையும் கூறலாம். 2007இல் பிடல் கஸ்ரோவின் ஓய்விற்குப் பின்னர், பதவியேற்ற Raul Castro திறந்த பொருளாதாரக் கொள்கையில் நாட்டமுள்ளவர். அந்த அடிப்படையிலும் கியூப அரசியலில் படிப்படியான மாற்றங்கள் நிகழுமென அன்றைய காலகட்டத்தில் எதிர்வுகூறப்பட்டது. அந்த எதிர்வுகூறலின் எதிரொலியாக நோக்குமிடத்து தற்போது அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவு மீள்மலர்வு பெற்றுள்ளமை முக்கியமானதொரு நகர்வாக கணிக்கத்தக்கது.

இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் யாததெனில், கியூபா மீதான வர்த்தக மற்றும் பொருளாதாரத்தடைஅமெரிக்காவினால் நீக்கப்படவில்லை. ஆனால் குறுகிய காலத்திற்குள் அது நிகழ வாய்ப்புண்டு. சட்டவாக்கத்தின் மூலம் அமுல்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு, அமெரிக்க கொங்கிரஸ் அவையில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள குடியரசுக்கட்சியினரின் ஆதரவு அவசியம். தற்போதைய நிலையில் குடியரசுக்கட்சியினர் கியூபாவுடனான இராஜதந்திர உறவு புதுப்பிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். தடையை நீக்கும் முனைப்பு ஒபாமாவிடம் உள்ளபோதும் நடைமுறையில் அதற்கான சாத்தியப்பாடு குறைவாகக் காணப்படுகின்றது அமெரிக்கர்கள் கியூபாவிற்கு பயணம் செய்வதற்கான தடை நீக்கப்படும் புறநிலையில், மக்கள் மத்தியிலிருந்து பொருளாதாரத்தடை நீக்கத்திற்கான அழுத்தம் எழக்கூடிய வாய்ப்புள்ளது

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் கியூப விவகாரமும்
அமெரிக்காவைப் பொறுத்தவரை கியூபா விவகாரமமென்பது அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். மியாமி மாநிலத்தில் புலம்பெயர் கியூபர்கள் மத்தியில் வலிமையான கஸ்ரோ எதிர்ப்பு பரப்புரை இயந்திரம் இயங்குகின்றது. குடியரசுக்கட்சிக்குள்ளும் செல்வாக்கு மிக்கதாக அது உள்ளது. கடுமையான தடைகளே கஸ்ரோ-சகோதரர்களின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்யுமென்ற கருத்து குடியரசுக்கட்சி மட்டத்தில் புரையோடியுள்ளது. 55 ஆண்டுகால வரலாறு அதனைப் பொய்ப்பித்திருக்கின்றது என்ற யதார்த்தத்தை மீறிய வகையில் அக்கருத்து ஆழ வேரோடியுள்ளது.

2016இல் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அமெரிக்கா சந்திக்கவுள்ள நிலையில், தேர்தலுக்கான பேசுபொருளாக இவ்விவகாரத்தினையும் இணைத்துக்கொள்ளும் முனைப்பு ஜனநாயகக் கட்சியிடம் இருப்பதாக கூறப்படுகின்றது. கியூபப்புரட்சிக்குப் பின்னர் பெருவாரியான கியூபர்கள் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தனர். தற்போது கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கியூபப்பின்னணியுடைய மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். Florida மாநிலம் பெரும்பான்மை கியூப மக்களைக் கொண்டுள்ளது. எனவே கியூப- அமெரிக்க இராஜதந்திர உறவின் மீள்மலர்வினை ஒரு தேர்தல் அரசியல் விவகாரமாகக் கையாள்வதனூடாக ஜனாதிபதித் தேர்தலில் தமது வெற்றிவாயப்பை உறுதிப்படுத்தும் முனைப்பு ஜனநாயகக் கட்சியிடம் உள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கிலரி கிளின்ரன் களமிறங்குவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமுள்ள நிலையில், தடைநீக்கத்தில் அவரும் முனைப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 1996இல் Bill Clinton ஆட்சியின் போது கியூபா மீதான பொருளாதாரத் தடை சட்டமூலமாக்கப்பட்டது. தற்போது கிலறி கிளின்ரன் தடைநீக்கத்தில் முனைப்புக் காட்டக்காரணம், கியூபா தொடர்பான அவரது மனமாற்றம் அல்லது அபிப்பிராய மாற்றம் என்பதற்கு அப்பால் 2016 ஜனாதிபதித் தேர்தல் வியூகங்களில் ஒன்றென்பதுதான் யதார்த்தம்.

நல்லொண்ண நடவடிக்கைகள்
கியூபாவின் பாரிய மனிதாபிமான மற்றும் பொருளாதாரக் காயங்களுக்கு மூலமாகவுள்ள அமெரிக்காவின் தடை நீக்கப்பட வேண்டுமென Raul Castro கோரியுள்ளார். இருநாட்டு உறவு புதுப்பித்தல் இணக்கப்பாட்டின் தொடர்ச்சியாக ஹவானாவில் அமெரிக்கத்தூதரகம் திறக்கப்படவுள்ளது. உளவாளிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட 5 கியூபர்களில் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது குறியீட்டு ரீதியிலான நல்லெண்ண நடவடிக்கையாகப் பார்க்கக்கூடியது.

வர்த்தகத் தடைநீக்கம்
கொங்கிரசின் பெரும்பான்மை ஆதரவின்றி கியூபா மீதான பொளாதாரத்தடையை அகற்ற முடியாதெனினும் யதார்த்தம் நிலவுகின்ற போதும், ஒபாமா நிர்வாகத்தின் தீர்மானம் அதை நோக்கிய நகர்வினை இலகுபடுத்தியுள்ளது எனலாம். அமெரிக்காவிலுள்ள கியூபப் (கியூப அமெரிக்கர்கள்) பின்னணியைக் கொண்ட மக்கள் தாயகத்திலுள்ள தமது உறவினர்கள், நண்பர்களுக்கு பணம் அனுப்புவதற்கு ஏதுவான சூழல் ஏற்பட்டுள்ளமை கியூபப் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்துவதற்கு வழிகோலுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு வெளிநாட்டு முதலீடுகள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளில் கியூப அரசு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய சூழலுக்கும் இட்டுச்செல்லும். பணம் அனுப்புதல் (remittance) அதிகரிக்கும் போது கியூபாவில் புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள தனியார் முதலீடுகளில் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பேணவும் மேம்படுத்தவும் முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்னமெரிக்க பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு
தென் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தில் சீனா பெரும் செல்வாக்கினைச் செலுத்தி வருகின்றது. பெரும் முதலீடுகளைச் செய்து, தென்னமெரிக்க நாடுகளின் முதன்மையான வர்த்தகப் பங்காளியாக சீனா விளங்குகின்றது. அவேளை இந்தப் பிராந்தியத்தின் இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் ரஸ்யா ஈடுபட்டுள்ளது.

இறுதிக்காலங்களில் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கேற்பவும், புதிய உலக சூழல்களுக்கு ஏற்றவாறும் கியூபா பல்வேறு மாற்றங்களைச் செயற்படுத்தியுள்ளது. Raul Castro பதவியேற்றதையடுத்து பொருளாதாரம் சார்ந்த குறிப்பிடத்தக்க மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மிக அமைதியாக ஒரு வகைக் கலப்புப்பொருளாதாரத்தை நோக்கி கியூபா சென்று கொண்டிருப்பதாகவும் கருதப்படுகின்றது.

எண்ணெய் விலையில் தளம்பல் ஏற்பட்டதன் விளைவாக கியூபாவுடன் நீண்டகால வர்த்தக உறவினைப் பேணிவரும் வெனிசுவேலாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்புறநிலையில் மாற்றுவழிகளைக் கண்டறிய வேண்டிய தேவை கியூபாவிற்கு உள்ளது. வெனிசுவேலாவின் பொருளாதாரச் சிக்கல்கூட, அமெரிக்காவுடன் கியூபா உறவைப் புதுப்பிப்பதற்கான முடிவினை எடுத்தமைக்கான பின்னணிகளில் ஒன்றாக ஊகிக்கப்படுகின்றது.

செல்வாக்கினை மீள்நிலைநாட்டும் அமெரிக்க முனைப்பு
பொதுவாகவே தென் அமெரிக்க நாடுகளுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் நல்லுறவு இல்லை. கொலம்பியா மட்டுமே அமெரிக்காவுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. அதிலும் வெனிசுவேலா அதிகமதிகம் அமெரிக்க எதிர்ப்பு அரசியலைக் கடுமையாகத் தொடர்ந்து வருகின்றது. அமெரிக்காவும் வெனிசுவேலாவைத் தனிமைப்படுத்தும் அரசியலையே தொடர்ச்சியாகப் பேணிவருகின்றது. கியூபா தொடர்பான அணுகுமுறை மாற்றத்தை அறிவிப்பதற்கு முதல் நாள் வெனிசுவேலா மீதான பொருளாதாரத்தடைத் தீர்மானத்தில் ஒபாமா கைச்சாத்திட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய உலகின் ஆகப்பெரும் பொருளாதார வல்லரசாக வளர்ந்துள்ள சீனாவினதும், உலகப்பொருளாதார மையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ள பிரேசில் நாட்டினதும் செல்வாக்கு இந்நாடுகளில் அதிகரித்துள்ளமை அமெரிக்காவிற்குப் பெரும் தலையிடி. தென்னமரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் சீனா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கியூபாவுடனான அமெரிக்காவின் உறவு புதுப்பிக்கப்படுகின்ற புறநிலையானது, அமெரிக்காவின் அரசியல் அரங்கில் பதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. குறிப்பாக தென்னமெரிக்க நாடுகளுக்கான நுளைவாகவும் அமெரிக்காவிற்கு இந்நிகழ்வு அமையக்கூடியது. இலத்தீன் அமெரிக்க நாடுகள் செல்வாக்கினையும் வகிபாகத்தினையும் அமெரிக்கா மீள நிலைநாட்டுவதற்குரிய சாதகமான சூழலாக இதனைப் பார்க்கலாம்.

கியூபா தொடர்பான தனது அரசியல் மூலோபாயம் தோற்றுவிட்டதென பகிரங்கமாக அமெரிக்கா ஒத்துக் கொண்டுள்ளமை கியூபாவிற்குக் கிடைத்துள்ள பெரும் இராஜதந்திர வெற்றியாகும். காலவோட்டத்தில் மேலும் பல மாற்றங்கள் ஏற்பட இது வழிகோலும். இந்த மாற்றங்கள் கியூப-அமெரிக்க உறவு சார்ந்தவையாக மட்டுமல்ல. அந்தப்பிராந்தியம் சார்ந்தவையாக அமையும். குறிப்பாக தென்னமெரிக்கப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வகிபாகம் சார்ந்ததாக அமையும்.

பொங்குதமிழ், பெப்ரவரி 2015

Leave A Reply