கூண்டுப்பறவை எதற்காகப் பாடுகின்றது? – Maya Angelou

சுதந்திரப்பறவை
காற்றின் திசையறிந்து
விர்ரெனப் பறக்கிறது
பூமியின் தற்போதைய முனைவரை
அதனால் கீழ்நோக்கி மிதக்கவும் முடிகிறது
செம்மஞ்சள் சூரியக் கதிர்களுக்குள்
தன் இறக்கைகளை உட்செலுத்துவதும்
அதற்குச் சாத்தியமாகிறது
வானத்தைப் பிரகடனப்படுத்தவும்
அது துணிகிறது.
சிறு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட
இன்னொரு பறவையால்
எப்பொழுதேனும் ஒருமுறைதான்
கூண்டுக் கம்பிகளுக்கு வெளியில்
பார்க்க முடிகிறது
அதன் இறக்கைகள் வெட்டப்பட்டு
கால்கள் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளன
ஆதலால் பாடுவதற்காக
அது தன் குரல்வளை திறக்கின்றது
தெரியாத விடயங்களைப் பற்றிய
அச்சத்துடனும் தடுமாறும் தாளகதியுடனும்
கூண்டுப்பறவை பாடுகின்றது
ஆயினும் தன் பாடல்
தொலைதூரப் பள்ளத்தாக்குகளிலும்
கேட்கவேண்டுமென்ற
ஏக்கங்களை இன்னமும்
சுமந்தபடி அது பாடுகின்றது
ஏனெனில்..
கூண்டுப்பறவை இசைப்பது
‘விடுதலையின் பாடலை’
சுதந்திரப்பறவையின் நினைவுகள்
இன்னொரு காற்றினைப் பற்றியவை
இசைப்பாடலை மீட்டிக்கொண்டிருக்கும் மரங்களிடை
காற்றின் பயணம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது
கொழுத்த புழுக்கள்
ஒரு விடியலின் பிரகாசமான புல்வெளியில்
காத்திருக்கின்றன
வானத்திற்கு அவை தம் பெயர்களைச் சூடிக்கொள்கின்றன
கூண்டுப்பறவை
கனவுகளின் சமாதியில் நிற்கிறது
அதன் நிழல்
ஒரு கொடுங்கனவின் கூச்சலாகிறது
அதன் இறக்கைகள் வெட்டப்பட்டு
கால்கள் இறுகப்பிணைக்கப்பட்டுள்ளன
ஆதலால் பாடுவதற்காக
அது தன் குரல்வளை திறக்கின்றது
தெரியாத விடயங்களைப் பற்றிய
அச்சத்துடனும் தடுமாறும் தாளகதியுடனும்
கூண்டுப்பறவை பாடுகின்றது
ஆயினும் தன் பாடல்
தொலைதூரப் பள்ளத்தாக்குகளிலும்
கேட்கவேண்டுமென்ற
ஏக்கங்களை இன்னமும்
சுமந்தபடி அது பாடுகின்றது
ஏனெனில்…
கூண்டுப்பறவை இசைப்பது
‘விடுதலையின் பாடலை’

– தமிழில்: ரூபன் சிவராஜா

Leave A Reply