கொரோனா வைரஸ் தடுப்பூசி: எப்பொழுது கிடைக்கும்? – மருத்துவ அறிவியல் தகவல் தொகுப்பு!

James Gallagher
(BBC மருத்துவ மற்றும் அறிவியல் நிருபர்)

தமிழில்:
ரூபன் சிவராஜா

பொதுவாக ஒரு தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும். ஆனால் அதே அளவு கால உழைப்பிற்குரிய பெறுபேறுகளைச் சில மாதங்களில் அடையலாமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 2021 நடுப்பகுதியில் புதிய தடுப்பூசி கிடைக்கப்பெறும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

அப்படி நிகழும் பட்சத்தில் அதுவொரு மாபெரும் விஞ்ஞான சாதனையாக இருக்கும். ஆயினும் அது கொரோனா எதிர்ப்புசக்தியை வழங்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏலவே நான்கு வகையான கொரோனா வைரஸ் மனிதர்கள் மத்தியில் பரவிவருகின்றன. அவை காய்ச்சல், தடிமனுக்குரிய பொதுவான அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்குமே எம்மிடம் தடுப்பூசி இல்லை.

கொரோனா வைரஸ் உலகளாவிப் பரவிவருகிறது. ஆனால் இந்த நோயிலிருந்து உடலைப் பாதுகாப்பதற்குரிய எந்தவொரு தடுப்புமருந்தும் இதுவரை கண்டடையப்படவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்கு மருத்துவ விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

ஏன் கொரோனா வைரஸ் தடுப்புமருந்து அவசியம்?

இந்த வைரஸ் மிக வேகமாக எளிதில் பரவுவி உலக மக்களில் பெரும்பாலானவர்களுக்குத் தொடர்ந்தும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதற்குரிய தடுப்புமருந்தென்பது மக்கள் மத்தியில் இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்குரிய எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதன் மூலம், நோய்வாய்ப்பாடமல் இருப்பதற்குரிய ஒருவகைப் பாதுகாப்பினை வழங்கும்.
அதன் மூலம் சமூக ஸ்தம்பிதத்தை தளர்த்துவதற்கும் தனிநபர் இடைவெளியைத் தளர்த்துவதற்கும் வழி கோலும்.

என்ன வகையான முன்னேற்றம் ஏற்பட்டுவருகின்றது?

ஆய்வுகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன. உலகளவில் 80 வரையான மருத்துவ ஆய்வுக்குழுக்கள் தடுப்புமருந்து ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றன. சில ஆய்வுகள் மருத்துவப் பரிசோதனைக்குள் நுழைந்துள்ளன.

• தடுப்பூசிக்கான முதலாவது மனித பரிசோதனை கடந்த மாதம் வோசிங்ரனைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டது. வழமைக்கு மாறாக விலங்குகளில் பரிசோதனை மேற்கொண்டு அதன் பயன்பாட்டுப்பாதுகாப்பு மற்றும் செயற்திறனைப் பரிசோதிப்பதை அவர்கள் தவிர்க்கிறார்கள்.

• பிரித்தானியாவின் ஒகஸ்;பேர்ட் இல் 800 பேருடன் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அரைவாசிப் பேர் கோவிட்-19 இற்கானதும், அரைவாசிப்பேர் மூளைக்காய்சலிலிருந்து பாதுகாக்கும் கட்டுப்பாட்டுத் தடுப்பூசியையும் பெறவுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசி அல்ல.

• மருந்துத் தயாரிப்புப் பெருநிறுவனங்களான Sanofi மற்றும் GSK ஆகியன தடுப்பூசி உருவாக்கத்தில் இறங்கியுள்ளன.

• அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் இரண்டு சாத்தியமான தடுப்பூசிகளை
மரநாய்களுக்குச் (Ferrets) செலுத்தத் தொடங்கியுள்ளனர். இது விலங்குகளில் பரிசோதனையை நடாத்தும் முதலாவது விரிவான முன்மருத்துவ பரிசோதனையாகும். ஏப்ரல் இறுதியில் மனிதர்களில் பரிசோதிக்கும் நிலை எட்டப்படுமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆயினும் இத்தடுப்பூசிகள் எத்தகையை வினைத்திறனுடையவை என்பது எவருக்குமே தெரியாது.

எப்பொழுது கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும்?

பொதுவாக ஒரு தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் எடுக்கும். ஆனால் அதே அளவு கால உழைப்பிற்குரிய பெறுபேறுகளைச் சில மாதங்களில் அடையலாமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 2021 நடுப்பகுதியில் புதிய தடுப்பூசி கிடைக்கப்பெறும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

அப்படி நிகழும் பட்சத்தில் அதுவொரு மாபெரும் விஞ்ஞான சாதனையாக இருக்கும். ஆயினும் அது கொரோனா எதிர்ப்புசக்தியை வழங்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏலவே நான்கு வகையான கொரோனா வைரஸ் மனிதர்கள் மத்தியில் பரவிவருகின்றன. அவை காய்ச்சல், தடிமனுக்குரிய பொதுவான அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்குமே எம்மிடம் தடுப்பூசி இல்லை.

தற்பொழுது செய்யவேண்டியது என்ன?

பல்வேறு ஆராய்ச்சிக்குழுக்கள் சாத்தியமான தடுப்பூசிகளை வடிவமைத்துள்ளன. இருப்பினும் இன்னும் செய்யவேண்டியவை அதிகம் உள்ளன:

• தடுப்பூசி பாதுகாப்பானது என்பதைப் பரிசோதனைகளில் கண்டடைய வேண்டும். நோயைவிட அதிக எதிர்விளைவுகளை ஏற்படுத்துமாயின் அதில் பயனில்லை

• தடுப்பூசியானது நோயெதிர்ப்பு சக்தியினைத் தூண்டி மனிதர்கள் நோய்வாய்ப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவதை மருத்துவப் பரிசோதனைகள் காட்ட வேண்டும்

• உருவாக்கப்படும் தடுப்பூசி பில்லியன் கணக்கான மக்களுக்குப் போதக்கூடிய முறையில் சாத்தியமான பாரிய கொள்ளளவில்ல் உற்பத்தி செய்யப்படவேண்டும்

• பயன்பாட்டுக்கு முன்னர் மருந்துக் கட்டுப்பாட்டாளர்களின் சார்ந்த அனுமதி பெறப்படவேண்டும்

• இறுதியில் உலக சனத்தொகையில் பெருமளவிலானோருக்கு தடுப்பூசியைச் செலுத்துவதில் பாரிய ஒருங்கிணைப்பு நிர்வாகச் சவால்கள் உள்ளன.

இன்றைய சமூக முடக்கம் இந்தச் செயற்பாட்டில் வேகத்தடையை உண்டாக்கக்கூடும். எண்ணிக்கையில் குறைவானோர் தொற்றுக்குள்ளாகியிருப்பின், தடுப்பூசி உரிய முறையில் செயற்படுகின்றதா என்பதை அறிய அதிக காலம் எடுக்கும்.

மனிதர்களுக்கு தடுப்பூசியைச் செலுத்தி, நோயை வலிந்து தொற்றச் செய்வதன் மூலம் (சவால் ஆய்வு என அறியப்படுகின்ற முறைமை – மழெறn யள ய உhயடடநபெந ளவரனல) விரைந்த பதிலைக் கண்டடைய முடியும். ஆனால் அதற்குரிய அறியப்பட்ட சிகிச்சை (மாற்றுச்சிகிச்சை) இல்லாத நிலையில் அது மிகவும் ஆபத்தானது.

எவ்வளவு தொகை மக்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும்?

தடுப்பூசியின் வினைத்திறனை அறிவதற்குமுன் எத்தனை பேருக்கு போடப்பட வேண்டுமென்பதைத் தீர்மானிப்பது கடினம்.

இந்த வைரஸ் பரம்பல் வேகமாகப் பரவுவதைத் தடுப்பதற்குரிய எதிர்ப்பு சக்தியை உண்டுபண்ணுவதற்கு (கூட்டு எதிர்ப்புசக்தி) 60 – 70 வீதமான மக்களுக்கு தடுப்பூசி போடப்படவேண்டும்.
ஆனால் தடுப்பூசி உரிய வினைத்திறனைக் கொண்டிருப்பின் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடவேண்டியிருக்கும்.

தடுப்பூசியை எப்படி உருவாக்குவது?

தடுப்புமருந்துகள் பாதிப்பற்றமுறையில் வைரசுகள் மற்றும் பக்ரீரியாக்களை (மிகச் சிறிய அளவிலான துணிக்கைகளைக் கூட) நோயெதிர்ப்பு மண்டலத்திற்குத் தெரியப்படுத்துகின்றன. உடலின் தற்காப்பு இயக்கிகள் அதனை ஒரு தாக்குதல் சக்தியாக அடையாளம் கண்டு, அதனை எதிர்த்துப் போராடப் பழகிக் கொள்கின்றன.

பிறிதொரு கட்டத்தில் உடல் உண்மையாக வைரஸ் தாக்குதலுக்கு உட்படும்போது எப்படி எதிர்கொள்வதென்பது முன்னரே தெரிந்த விடயமாகிவிடுகிறது.
தசாப்பங்களாக நிலவிவரும் தடுப்பூசிக்கான முதன்மை முறைமை என்பது மூலவைரசைப் (original virus) பயன்படுத்துவதாகும்.

தட்டம்மை தாளம்மை மணல்வாரி (The measles, mumps and rubella – MMR) ஆகியவற்றுக்குரிய தடுப்பூசியானது பலவீனமாக்கப்பட்ட செய்யப்பட்ட – முழுஅளவிலான தொற்றுக்கு இட்டுச்செல்லாத வைரஸ்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.

கொரோனா வைரசுக்குரிய புதிய தடுப்பூசி உருவாக்கத்தில், குறைந்தளவு பரிசோதிக்கப்பட்ட ‘‘plug and play’ என அழைக்கப்படும் அணுகுமுறையில் பணிகள் முன்னெடுக்கப்புடுகின்றன. ஏனெனில் புதிய கொரோனா வைரசின் மரபணுக் குறியீடு ‘Sars-CoV-2’ என்பது அறியப்பட்ட ஒன்று. அதை உருவாக்குவதற்கான முழுமையான நீல அச்சுப்படி உள்ளது.

ஏனைய ஆராய்ச்சிக்குழுக்கள் மூல மரபணுக் குறியீடுகளின் பகுதிகளைப் (DNA அல்லது RNA, அவர்களுடைய அணுகுமுறையைப் பொறுத்து மாறுபடும்) பயன்படுத்துகின்றனர். அந்த முறைக்கமைய உடலுக்குள் தடுப்பூசி செலுத்தப்படுவதன் மூலம், அவை சிறிய புரதங்களை உற்பத்தி செய்து, எதிர்த்துப் போராடுவதற்குரிய சக்தியை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மீண்டும் கற்றுக்கொடுக்கும்.

ஒக்ஸ்பேர்ட் ஆய்வாளர்கள் அதன் மரபணுக் குறியீட்டின் சிறு பகுதிகளைப் பலவீனமான வைரசுக்குள் செலுத்தி சிம்பன்சிகளுக்கு (மனிதக்குரங்குகள்) தொற்றவைத்துள்ளனர். நோயெதிர்ப்பு வினையாற்றலைப் பெறுவதற்குரிய வகையில் கொரோனா வைரசைப் போலத் தோற்றமளிக்கும் பாதுகப்பான ஒரு வைரசைத் தாம் உருவாக்கிவிட்டதாக அவர்கள் நம்புகின்றனர்.

அனைத்து வயதுப் பிரிவினரையும் தடுப்பூசி பாதுகாக்குமா?

வயோதிபர்களுக்கு குறைந்தளவு பாதுகாப்பினையே வழங்கும் என்பது தவிர்க்கமுடியாதது. ஏனெனில் வயதான நோயெதிர்ப்பு மண்டலம் வலுவான எதிர்ப்பு சக்தியுடன் இயங்கமாட்டாது. வருடாந்த காய்ச்சல், தடிமன் நிலைமைகளில் இதனைக் காண்கிறோம்.

தடுப்புமருந்தின் அளவினை அதிகப்படுத்திக் கொடுப்பது அல்லது எதிர்ப்பு மண்டலத்திற்கு மேலதிக பலத்தினைக் கொடுக்கக்கூடிய துணையூக்கி ((adjuvant) என அழைக்கப்படும் வேதியல் மருந்தினைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் இதனை வெல்வதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

யாருக்கு தடுப்பூசி கிடைக்கும்?

தடுப்பூசி உருவாக்கப்படுமாயின், குறைந்தபட்சம் ஆரம்பத்தில் அதன் வழங்கல் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். அத்தோடு யாருக்கு முதலில் வழங்குவது என்ற முன்னுரிமை சார்ந்த விடயத்திற்கு முக்கியத்துவம் இருக்கும்.

கோவிட்-19 நோயாளர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கக்கூடிய மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்குவது பட்டியலில் முதலிடம் வகிப்பர்.
வயதானவர்களுக்கு இந்நோய் மிக ஆபத்தானது. எனவே உருவாக்கப்படும் தடுப்பூசி வயோதிபர்களுக்கு போதிய வினைத்திறன் கொண்டதென்பது உறுதிப்படுத்தப்புடுமாயின் அவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இருப்பினும் வயதானவர்களுடன் வசிப்பவர்கள் அல்லது வயதானவர்களைக் கவனிப்பவர்களுக்கும் முன்னுரிமையளிப்பது பயனுடையது.

Leave A Reply