’செப்ரெம்பர் 11 – பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’: 10 ஆண்டுகளின் பின்

செப்ரெம்பர் 11, 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலக பொருளாதார மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் வோசிங்ரன் நகரில் அமைந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலகம் ஆகியன விமானங்கள் மூலம் மோதித் தகர்க்கப்பட்டன. இப்பயங்கரவாதத்தாக்குதலின் 10வது ஆண்டு கடந்த மாதம் நிறைவடைந்துள்ளது.

உயிரழிவு, உடமை அழிவு இரண்டிலும் அமெரிக்க வரலாற்றில் மோசமான அழிவாக ’செப்ரெம்பர் 11’ கணிக்கப்படுகின்றது. இத்தாக்குதலில் 3000 வரையான மக்கள் கொல்லப்பட்டனர். அரசியல் அடிப்படைகள், இலக்குகள் அற்ற – இஸ்லாமிய அடிப்படைவாதச் சிந்தனையின் கொடூர வெளிப்பாடாகவே இது உலகத்தால் பார்க்கப்படுகின்றது.
இப்புறநிலையில் செப்ரெம்பர் 11 தாக்குதலின் விளைவான பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உலகளாவிய நிலையில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியதான ஒரு பார்வை பொருத்தமுடையது.

புதிய ’உலக ஒழுங்கு’
செப்ரெம்பர் 11 இற்குப் பின்னர் புதியதொரு ’உலக ஒழுங்கு’ ஏற்பட்டிருந்தது. அமெரிக்கா என்ற ஒற்றை வல்லரசைச் சுற்றியதாக இப்புதிய உலக ஒழுங்கு கட்டமைக்கப்பட்டது. இதன் தீர்மான சக்தியாகவும் மையப்புள்ளியாகவும் அமெரிக்கா உள்ளது. இப்பாரிய தாக்குதல் என்பது, யாரும் எதிர்பார்த்திருக்காத ஒன்றாகும். அதே போல் செப்ரெம்பர் 11 என்ற ஒற்றை நாள் உலக ஒழுங்கினைப் புரட்டிப்போடும் என்பது கூட எவரும் எதிர்பார்க்காத ஒன்றே.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவினது மட்டுமல்ல, உலகின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக ’இஸ்லாமிய பயங்கரவாதம்’ எல்லை மீறியுள்ளது என்ற கருதுகோளின் அடிப்படையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உலகளாவிய நிலையில் முடுக்கி விடப்பட்டது. செப்ரெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து, ’பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பதம் உலக அரசியல் அரங்கில் முதன்மைப் பேசுபொருளாக உருவானது. 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கூட இன்றும் அது அனைத்துலக அரசியலிலிருந்து நீக்கம் பெறாத பதமாகவே உள்ளது.

பயங்கரவாதத் தடுப்பிற்குரிய – முறியடிப்பிற்குரிய பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அப்பால், பெருமெடுப்பிலான போர்களையும் உலகம் சந்தித்துள்ளது. இன்றுவரையும் அந்தப்போர்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. உலக பொருளாதார மையத் தகர்ப்பு – அதில் பலியான மக்கள் – மனித அவலங்கள் தொடர்ச்சியாக உலகப் பேரூடகங்களில் காட்சிப்பொருளாக்கப்பட்டன. அவற்றுக்கூடாக சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான ஆதரவுத்திரட்டல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்
10 ஆண்டு கால பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற மூலோபாய முன்னெடுப்புகள், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் பயன்பட்டதா? உலகின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உதவியதா? அல்லது இவை யாவற்றையும் புறந்தள்ளி உலகின் பாதுகாப்பினையும் அமைதியையும் மேலும் பலவீனப்படுத்தியதா ஏன்ற கேள்விகள் இன்றும் பல மட்டங்களிலும் எழுப்பப்படுகின்றன, அலசப்படுகின்றன.

அமெரிக்காவிற்கெதிரான பயங்கரவாதத் தாக்குதலானது பாரதூரமானது. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட கொடிய தாக்குதல் சம்பவம் என்ற வகையில் பலத்த கண்டனத்திற்குரியது. மேலும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தல் அவசியமென்ற அடிப்படையில் அதற்குரிய எதிர்வினை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆனால் அதற்கெதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பெருமெடுப்பிலான நடவடிக்கைகள் பாரதூரமானதும் எதிர்மறையானதுமான விளைவுகளுக்கு இட்டுச்சென்றிருக்கின்றது என்பது பல மட்டங்களிலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு
செப்ரெம்பர் 11 நேரடி விளைவுகளையும் மறைமுக விளைவுகளையும் தோற்றுவித்துள்ளது. நேரடி விளைவென்று நோக்குமிடத்து அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்புகளாகும். செப்ரெம்பர் 11’ தாக்குதலைத் திட்டமிட்டு நடாத்திய பின்லேடன் தலைமையிலான அல்-ஹைடா பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது என்ற அடிப்படையில் அமெரிக்காவில் தாக்குதல் நடாத்தப்பட்ட சில வாரங்களுக்குள் அப்கானிஸ்தான் மீது போர் தொடுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் மீதான போருக்கு உலகின் பல முக்கிய நாடுகள் இராணுவ ரீதியாக அமெரிக்காவுடன் கைகோர்த்தன. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந், கனடா ஆகியவற்றோடு டென்மார்க், நோர்வே போன்ற ஸ்கன்டிநேவியாவின் சிறிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் போருக்கு அணிசேர்ந்த நாடுகளின் பட்டியலில் அடங்குகின்றன. 2006ஆம் ஆண்டு முதல் நேட்டோ (NATO) அமைப்பு, ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டுப்படைகளுக்கான தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்தது.

மேலதிக படைகளை அனுப்புவதற்கு மறுப்பு
இன்று பத்து ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் அங்குள்ள தலிபான் படைகளின் கடுமையான தாக்குதல்களுக்கு நேட்டோ படைகள் முகம் கொடுத்தவாறுதான் உள்ளன. நேட்டோ உறுப்பு நாடுகளிலிருந்து மேலதிக படை ஆளணிகளைத் தருமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனபோதும் காலப்போக்கில் மேலதிக படைத்துறை ஆளணிகளை அனுப்புவதற்கு உறுப்பு நாடுகள் பலவும் பின்னடித்தன.

அப்கானிஸ்தான் மீதான படையெடுப்பிற்கு செப்ரெம்பர் 11 தாக்குதல் நடைபெற்ற காலகட்டத்தில் நிலவிய ஆதரவு காலப்போக்கில் படிப்படியாகக் குறைவடைந்தமையே படைகளை அனுப்புவதற்கு உறுப்பு நாடுகள் மறுத்தமைக்கான காரணமாகும். ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படைகள் தொடர்பான நேட்டோ பொதுச்செயலாளரின் கோரிக்கை உறுப்பு நாடுகளால் செவிமடுக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் அமைதியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதெனக் கூறப்பட்ட அமெரிக்காவின் நோக்கம், பத்து ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை சாத்தியமாகவில்லை. இனியும் அது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஈராக் போர்
ஈராக் போரினை எடுத்து நோக்குவோயின், செப்ரெம்பர் 11இற்கு முன்னரே, சதாம் உசேன் ஆட்சியை வீழ்த்துவதென்ற இலக்கும், அதற்கான படையெடுப்புத் திட்டமும் அமெரிக்காவிடம் இருந்தது. ’செப்ரெம்பர் 11’ அந்த இலக்கினை நியாயப்படுத்துவதற்கு ஏதுவான புறச்சூலை புஸ் நிர்வாகத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்தது. நேட்டோ நாடுகளின் எதிர்ப்பு, ஐ.நாவின் எதிர்ப்பினையும் மீறியே ஈராக்கிற்குள் அமெரிக்கா இறங்கியது.

சதாமிடம் இரசாயன பேரழிவு ஆயுதங்கள் உள்ளன. அல்-ஹைடாவுடன் சதாமிற்குத் தொடர்புள்ளது போன்ற குற்றச்சாட்டுகளும் ஈராக் மீதான படையெடுப்பினை நியாயப்படுத்துவதற்கும், உலக நாடுகளைத் தனக்கு ஆதரவாக அமெரிக்கா அணி திரட்டிக் களமிறக்குவதற்கும் துணை புரிந்தன. மேற்படி இரண்டு குற்றச்சாட்டுகளும் ஈற்றில் மெய்ப்பிக்கப்படவில்லை. ஈராக் போருக்கான நியாயப்படுத்தல்களாக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட காரணிகள் சாயம் வெளுத்துப்போயின.

மத்திய கிழக்கில் தளம் அமைத்தல் என்ற அமெரிக்க மூலோபாயமே ஈராக் போருக்கான மூலகாரணியாகும். அந்த மூலோபாயத்திற்குரிய போர்தொடுப்பினை விரைவுபடுத்துவதற்கு ’செப்ரெம்பர் 11’ கன கச்சிதமாகக் கையாளப்பட்டது என்பது பலமட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தர்க்கமாகும்.

ஈராக் மக்கள் மீதும், குர்தீஸ் மக்கள் மீதும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட சர்வாதிகாரி சதாம் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் சதாம் காலத்தை விட அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் ஈராக் நிலைமைகள் படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அரசியல் வெறுமைக்குள் ஈராக், ஆப்பானிஸ்தான்
ஈராக், ஆப்கானிஸ்தான் நிலைமைகளைப் பொறுத்த மட்டில், அமெரிக்கா உள்ளே வைத்த காலை வெளியே எடுக்க முடியாத நிலையிலும் அதேவேளை தொடர்ச்சியாக அங்கு நிலைகொண்டிருப்பதிலும் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டு நிலைக்குள் தள்ளப்பட்டது.

ஒபாமா நிர்வாகம், கடந்த ஆண்டு, ஈராக்கிலிருந்து தனது படைகளை மீள அழைத்தது. 50 000 அமெரிக்கப் படைத்துறை ஆளணிகள் தொடர்ச்சியாக ஈராக்கில் நிலைகொண்டுள்ளன. ஈராக் படைத்துறை மற்றும் காவல்துறையைப் பயிற்றுவிப்பதற்கும் கட்டியெழுப்புவதற்குமாக அங்கு தொடர்ச்சியாக நிலைகொண்டிருப்பதாக அமெரிக்கத் தரப்பால் கூறப்பட்டது.

ஈராக் மீதான அமெரிக்காவின் படை நடைவடிக்கைகளால் 200 000இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலைகளுக்கு உள்ளாகியுள்ளிதாக அமெரிக்காவின் Brown பல்கலைக் கழகம் மேற்கொண்ட ’போரின் விலை’ எனும் ஆய்வின் கணிப்பு தெரிவிக்கின்றது. ஈராக் ஒரு உள்நாட்டுப் போருக்குள்ளும் அரசியல் வெறுமைக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளது. வெவ்வேறு இனக்குழுமங்கள் மதக் குழுமங்களுக்கிடையில் மோதல்கள் முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளன.

ஒபாமாவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய கடந்த ஆண்டு ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் அதிகாரபூர்வமாக வெளியேறியன. ஆனபோதும் இதுவரை ஈராக்கில் நேர்மையான தேர்தலோ அன்றி இயங்குசக்தி கொண்ட அரசாங்கமோ அமைக்கப்படவில்லை.

2014இல் அப்கானிஸ்தானிலிருந்து படைகள் மீள அழைப்பு
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின்னர், அல்-ஹைடாவிற்குத் தளம் அமைத்துக் கொடுத்த தலிபான் அரசாங்கம் புறமொதுக்கப்பட்டமை மற்றும் ஜனநாயகத் தேர்தல் மூலம் அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டமை அமெரிக்காவின் வெற்றியாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால் மக்களின் சமூக வாழ்வில் மேம்பாடோ அன்றி, உண்மையான ஜனநாயக முறைமையிலான நல்லாட்சியோ ஏற்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. தொடர்ச்சியாக கடுமையான போர் இடம்பெற்று வருகின்றது.

2014இன் இறுதிக்குள் அங்கிருந்து படைகளைத் திருப்பியழைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது. ஆனால் ஈராக் எவ்வாறு ஒரு நிரந்தர அரசியல் வெறுமைக்குள்ளும், முரண்பாடுகளின் கொதிநிலைகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளதோ, அதேபோன்ற நிலையே ஆப்கானிஸ்தானுக்கும் ஏற்படப் போகின்றது என்பது புறநிலைகளும் பட்டறிவும் எடுத்துரைக்கும் உண்மையாகும்.

ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகளாக நிலை கொண்டிருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் படைகள் மத்தியில் போர் தொடர்பான களைப்பு ஏற்பட்டிருக்கின்றது. தமது சொந்த நாடுகளுக்குத் திரும்புதில் அவர்கள் அதீத விருப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வரலாற்றுப் பட்டறிவு
எந்தவொரு பலம்வாய்ந்த இராணுவமும் பரிட்சயமற்ற – தூர தேசங்களில் போரை நடாத்துவது, வெற்றி காண்பது இலகுவானதல்ல என்பதற்கான சமகால பாடமாக ஈராக்கும் ஆப்கானிஸ்தானும் உள்ளன. வியத்னாம், சோமாலியா என வரலாற்றில் முன்னரும் மோசமான பட்டறிவை அமெரிக்கா பெற்றிருந்த போதும், அவற்றைப் பாடமாகக் கொள்ளவில்லை என்பதுதே ஈராக், ஆப்கானிஸ்தான் விளைவுகளாகும்.

இந்தப் போர்களுக்காக பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது, தொடர்ச்சியாகச் செலவிடப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக உருவாகியுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கும், அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் வேலைவாய்ப்பின்மை உட்பட்ட பெரும் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் இப்போர்களும் மூலகாரணிகளெனச் சுட்டப்படுகின்றது.

விடுதலைப் போராட்டங்களுக்கும் பயங்கரவாத முலாம்
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வரையறைக்குள்ளும், அதன் விளைவான கடுமையான நடவடிக்கைகளுக்குள் விடுதலைப் போராட்டங்களும் சிக்கவேண்டிய இக்கட்டான புறநிலைகள் ஏற்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிதாகும். அரசியல் அடிப்படைகள், இலக்குகள் அற்ற பயங்கரவாத அமைப்புகளும், உண்iயான அரசியல் உரிமைகளுக்கான அடிப்படைகளுடன் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளும் ஒரே தராசில் வைக்கப்பட்டன. ஒரே அளவுகோல் கொண்ட அணுகுமுறைகளுக்கு உட்பட்டன.

உலகின் பாதுகாப்பிற்கானதும், பயங்கரவாதத்தடுப்புக்கானதுமான நடவடிக்கைகள் என்ற முலாம் பூசப்பட்ட நடவடிக்ககளுக்கு உண்மையான அரசியல் இலக்கோடு முன்னெடுக்கப்பட்ட உரிமைப் போராட்டங்கள் முகம்கொடுக்க வேண்;டி வந்தமைக்கு எடுத்துக்காட்டாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினைக் கூறலாம். சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை உலக அரங்கில் பயங்கரவாத அமைப்பாகச் சித்தரிக்கவும் அதற்கெதிரான கண்மூடித்தனமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ’அமெரிக்காவினது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ கனகச்சிதமாகக் கைக்கொள்ளப்பட்டது.

உலக பொருளாதார நெருக்கடி
இன்றைய சமகாலத்தில் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகள் தத்தமது நாடுகளில் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிகளுக்கும் (Global financial crisis) அதன் விளைவான அரசியல் ஈடாட்டங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இப்புறநிலையில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தமது படைத்துறைப் பிரசன்னத்தை முழு அளவில் பேணுவது பொருளாதார – அரசியல் அடிப்படைகளில் நோக்குமிடத்து சிக்கலானது. அங்கிருந்து படிப்படியாகவோ முழுமையாகவோ வெளியேறுவதைத் தவிர வேறு மூலோபாயம் இருக்கப்போவதுமில்லை.

’செப்ரெம்பர் 11’ இற்குப் பின்னரான தன்னிச்சையான கொள்கை முன்னெடுப்பிற்கான மூலகாரணகர்த்தா முன்னாள் அமெரிக்க அரசதலைவர் ஜோர்ஜ் புஸ் ஆவார். ஆனபோதும் அடுத்துப் பொறுப்பேற்ற ஒபாமாவினால், ஏலவே தெரிவு செய்யப்பட்ட வெளியுறவுக் கொள்கையை அடியோடு மாற்றியமைப்பதென்பது இயலாத காரியமே ஆகும்.

அமெரிக்காவின் ஈராக் போர், மத்திய கிழக்கு முழுவதற்குமே பிராந்திய அடிப்படையில் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய கிழக்கின் தலைவர்கள் கருத்து வெளியிட்டதாக 2006 ஆம் ஆண்டு, காலப்பகுதியில் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் தெரிவித்திருந்தமை இங்கு நினைவூட்டத்தக்கது. பிராந்தியத்தின் திடத்தன்மைக்கு குந்தகமாக ஈராக் போர் அமைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

பின்லேடன் கொலை: பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி?
செப்ரெம்பர் 11இற்குப் பின்னர், பல முனைகளிலும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தவறான அணுகுமுறைகளால் உலகம் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அடிப்படையில் மத்திய கிழக்கில் அமெரிக்க எதிர்ப்புணர்வைக் கூர்மையடையச் செய்துள்ளது.

2011 மே 2ஆம் நாள் பாகிஸ்தானின் Abbottabad இல் வைத்து அமெரிக்க சிறப்புப் படையினரால் உசாமா பின்-லேடன் கொல்லப்பட்டதோடு, உலகம் தழுவிய ’இஸ்லாமிய அடிப்படைவாதப் போர்’ பலவீனமடைந்துள்ளதாக அமெரிக்கத் தரப்பு கருத்து வெளியிட்டுள்ளது. ஆனால் பின்-லேடன் பிரதிநிதித்துவப்படுத்திய சிந்தனைப்போக்கு (Ideology) படைபலத்தின் மூலம் அழிக்கப்படுமா என்ற கேள்வி தொடர்ந்தும் நிலவிவருகின்றது.

தினக்குரல், பொங்குதமிழ் இணையம், செப். 2011

Leave A Reply