சோதியாவின் ‘காலப் பெருவலி’ – நோர்வேயில் அறிமுக அரங்கு!

சோதியாவின் (சிவதாஸ் சிவபாலசிங்கம்) காலப்பெருவலி கவிதை நூல் அறிமுக அரங்கு ஒஸ்லோவில் 30-08-20 இடம்பெற்றத. இந்நிகழ்வின் முன்னேற்பாடுகளில் பங்களித்தபோதும் தவிர்க்கமுடியாத தனிப்பட்ட காரணத்தினால் நிகழ்வில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் முழுநிகழ்வினையும் காணொளியில் பார்க்கக்கிடைத்தது. அபிசன் அன்பழகன் துல்லியமான ஒலியுடனான ஒளிப்பதிவினைச் செய்திருக்கின்றார்.

இந்நிகழ்வு இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகின்றது. கொரோனா நெருக்கடி காரணமாக நீண்ட காலமாக பொதுநிகழ்வுகள் இடம்பெறவில்லை. அதிலும் குறிப்பாக கலை-இலக்கிய நிகழ்வுகள் இடம்பெறவில்லை. கொரோனா தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி தளர்த்தப்பட்ட சூழலில், நீண்ட இடைவெளிக்குப் பின் இடம்பெற்ற இலக்கிய நிகழ்வு என்பது இதன் முதலாவது முக்கியத்துவம். நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர், சிவதாஸ் அவர்களின் மூன்றாவது கவிதைத் தொகுப்பாக இது வெளிவந்துள்ளமை இந்நிகழ்வின் இரண்டாவது முக்கியத்துவம். கவிதைத்தளத்தில் அவருடைய இடையறாத இயங்குதலுக்கு இந்தத் தொகுப்பின் வருகை உந்துதலாக அமையக்கூடியது.
சிவதாஸ் அவர்களுக்கு பல பரிமாணங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது அவர் தமிழ்க் கல்வி முன்னோடி. அநுபவநீட்சியும், ஆளுமையும் மிக்க தமிழாசிரியர். தமிழ்மொழிக்கல்வியை நிறுவனமயப்படுத்தி வளர்த்தெடுத்த தலைமைத்து நிர்வாக ஆளுமைகளில் ஒருவர். அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் அவரது வகிபாகம் முக்கியமானது.

அறிமுக உரை, மதிப்பீட்டுரைகள், கவிதா நிகழ்வு, மொழியாக்க கவிதை மொழிவு, இசைப்பாடல் என அரங்கு திட்டமிடப்பட்டிருந்தது. நிகழ்வினை சதானந்தன் மூத்ததம்பி நிகழ்வினை நேர்த்தியாகத் தொகுத்து வழங்கியிருந்தார். கலாநிதி சர்வேந்திரா, கவிஞர் உமாபாலன், ஜெயசிறி விஸ்ணுசிங்கம், கேமச்சந்திரன் மார்க்கண்டு ஆகியோர் மதிப்பீட்டுரைகளை ஆற்றியிருந்தனர்.

நிகழ்விற்குத் தலைமை தாங்கிய சதானந்தன் வழங்கிய அறிமுகக் குறிப்பில் சிவதாஸ் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:
உயிர்ப்பு மிக்கதும் விடுதலை தாகம் கொண்டதுமான பல பாடல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். பல இறுவெட்டுகள், நடன நிகழ்வுகள், நாட்டிய நாடகங்கள், சிறுவர் பாடல், நினைவேந்தல் நிகழ்வுகள் என நல்ல பல பாடல்களை எழுதியிருக்கின்றார். இங்குள்ள அனைத்து மூத்த இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார் மட்டுமல்ல, இளைய வளர்ந்துவரும் இசைக்கலைஞர்கள், இசை கற்றுவரும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் மெட்டுக்கும் இசைக்கும் குரலுக்கும் பல பாடல்களை எழுதியுள்ளார்.

சர்வேந்திரா உரை:
‘தமிழர் வாழ்வுரிமைக்களத்தில் சோதியாவின் தடங்கள்’ எனும் தலைப்பில் கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம் சோதியாவின் சமூக வகிபாகமும் கவிதை, பாடல்களின் பேசுதளமும் குறித்த விரிவான பார்வையைப் பகிர்ந்து கொண்டிருந்தார்:

தாயக விடுதலைப் போராட்ட களம், புலம்பெயர் சூழல் என இருதளங்களில் கவிதை, இசைப்பாடல்களை எழுதியிருக்கின்றார். கோட்பாட்டு ரீதியில் பார்த்தால், ‘நாடுகடந்த சமூகவெளி’ எனும் கருதுகோள் ஒன்று இருக்கின்றது. அதாவது தாயகத்திலுள்ள மக்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களும் தமக்கிடையிலான உறவைப் பேணிக்கொண்டு வாழுகின்ற வெளி, ‘நாடுகடந்த சமூகவெளி’ எனப்படுகிறது. அந்த வெளியில் வாழ்வதற்கு ஒருவர் புலம்பெயர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாயகத்தில் வாழ்ந்தபடி அவர் புலம்பெயர் சமூகத்தோடு உறவைப் பேணுபவராக இருத்தல் அதற்குப் போதுமானது. அதேவேளை புலம்பெயர்ந்து வாழும் ஒருவர் தாயக சமூகத்துடன் தொடர்பைப் பேணாது இருப்பாராயின் அவர் நாடுகடந்த சமூகவெளியைப் பேணுபவராகக் கருதப்படமாட்டார். இவை நாடுகடந்த சமூக வெளி தொடர்பான கோட்பாட்டு ரீதியான புரிதல்கள்.

சிவதாஸின் கவிதைகளும் பாடல்களும் தாயகமும் புலம்பெயர் சூழலும் இணைற்த நாடுகடந்த சமூக வெளிக்குரிய பேசுபொருளையும் பாடுபொருளையும் கொண்டுள்ளன என்பதை இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் காணமுடிகிறது என்றார் சர்வேந்திரா.
அவர் மேலும் கூறுகையில்,

தேசவிடுதலை, சமூகநீதி, பெண், இனவெறிக்கொதிரான பார்வை, புலம்பெயர் வாழ்வு, போலித்தனங்கள்-சிறுமைத்தனங்களைப் பரிகசித்தல் என்பதான கவிதைகளை இத்தொகுப்பில் இனங்காண முடியும். அவரது வெளிப்படுத்தல் முறையில் பொறுப்பும் நிதானமும் இருக்கும்.

பொதுவாகவே கலையின் பங்கு என்பது ஐவகை விளைவுகளைக் கொண்டது. அவையாவன, அறிவூட்டல், உணர்வூட்டல், மகிழ்வூட்டல், தம்நிலை உணர்த்துதல் (பிரதிபலிப்பு), ஆற்றுப்படுத்தல். சிவதாஸ் கவிதைகள், பாடல்களில் இந்த ஐந்து தன்மைகளையும் காணமுடியும்.

தாயகத்திற்கு வெளியில் வாழ்ந்துகொண்டு பொறுப்பற்ற முறையில் கருத்துச் சொல்கின்ற, செயற்படுகின்ற நிலை தேசியவாதிகள் மத்தியில் உள்ளதான விமர்சனங்கள் நிலவுகின்றன. தொலைதூரத் தேசியவாதம் சார்ந்த சார்ந்த கோட்பாட்டு ரீதியான கருத்தியலை முன்வைத்த அறிஞர் Benedict Anderson கூற்றினை மேற்கோள்காட்டி, சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட சர்வேந்திரா, சிவதாஸின் கவிதைகள் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட கவிதைகளாக அடையாளப்படுகின்றன என்றார்.

தூரம் தருகின்ற பொறுப்பற்ற தன்மைகளை அவரது எழுத்தில் காணமுடியாது. தாயகத்தில் இடம்பெற்ற போராட்டத்திற்கான ஆதரவுக்குரலாக எழுந்த கவிதைகளிலும் தன்னிலை உணர்ந்த பொறுப்புணர்வு பிரதிபலிக்கின்றது. தூரம் தருகின்ற ஆற்றாமையை, குற்றவுணர்வை, பாரத்தை, சோகத்தைத் தன்னிலைப்படுத்தி – சிந்தித்து – பொறுப்ணர்வுடன் எழுதுகின்ற பண்பு அவரிடம் இருக்கின்றது. இதனை அவரது எழுத்துகளில் அடையாளம் காணமுடியும் என்று தனதுரையில் சர்வேந்திரா சுட்டிக்காட்டினார்.

உமாபாலன் உரை
கவிஞர் உமாபாலன், காலப் பெருவலி தொகுப்பிலுள்ள 52 கவிதைகளிலிருந்து 6 கவிதைகளைத் தேர்தெடுத்து அவற்றின் பேசுபொருள், சொல்முறை குறித்த தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார். கவிதையை அழகுபடுத்த கற்பனையும் ஆழப்படுத்த சிந்தனையும் அவசியம். சிவதாஸிடம் இரண்டும் இருக்கின்றது என்பதற்குச் சான்றாக அவரது கவிதைகள் உள்ளன என்றார்.

‘தொலைந்து போன கவிதை’, ‘யாரொடு நோவேன்’, ‘வேள்விகளும் வேண்டுதல்களும்’ ஆகிய தலைப்புகளில் அமைந்த கவிதைகள் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. ‘அம்மனுக்கு அரோகரா’ என்ற கவிதை சாதிக்கெதிராகப் பேசுகின்றது. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலையைச் சொல்லும் ‘நலம்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’ எனும் கவிதை, சொற்சிக்கனத்திற்கும் அர்த்த அடர்த்திக்கும் எடுத்துக்காட்டாகக் கொள்ளக்கூடியது. ‘அன்பு அப்பாவும் ஆசை மாமாவும்’ எனும் கவிதை 2009இற்குப் பின்னான குழுவாத அரசியலைப் பிரதிபலிக்கின்றது என்றும் கூறினார்.

கேமச்சந்திரன் உரை
புதுக் கவிதைகள் எத்தகையை வடிவ, உள்ளடக்க, வெளிப்பாட்டு முறையையைக் கொண்டவை என்பதோடு அவற்றின் பல்பரிமாணத்தன்மை தொடர்பான புரிதலுக்குரிய கருத்துகளை முன்வைத்து சிவதாஸின் கவிதைகள் பற்றிய விமர்சனப் பார்வையினை கேமச்சந்திரன் மார்க்கண்டு முன்வைத்தார்.

நவீன கவிதைகள் ஒற்றைப் பரிமாணம் கொண்டவை அல்ல. வெவ்வேறு கருத்தியலாளர்களும், கவிதை பற்றிய வெவ்வேறு அணுகுமுறை கொண்டவர்களும் இயங்குகின்ற ஒரு பரந்த தளமாக நவீன கவிதைகள் விளங்குகின்றன. இந்தப் பரந்த தளத்தில் சிவதாஸின் கவிதைகளுக்கான பங்கு என்ன? நவீன கவிதைகளுக்குரிய சில கூறுகளைக் கொண்டிருந்தாலும், மொழி அலங்காரங்களும் பிரச்சாரத் தொனியிலுமமைந்தவையாக சிவதாஸின் கவிதைகளை மதிப்பிடுவது சரியாக இருக்குமா? ஏனற கேள்வியை எழுப்பிய கேமச்சந்திரன், அதனை மதிப்பிடுவதற்கு அடிப்படையாக நவீன கவிதைகள் பற்றிய புரிதல் அவசியம் என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில்,
நவீன கவிதை என்றால் என்ன என்பதனை விளக்குவது கடினம். உதாரணமாக நவீன ஓவியம் ஒன்று இருக்கின்றது என வைத்துக்கொண்டால், அதனைப் பார்க்கின்ற பத்துப்பேரும் அதனைப் பத்துவிதமாக விளங்கிக் கொள்ளலாம். அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். பார்ப்பவரின் அரசியல் சார்பு நிலைகள், புரிதல்கள், மனநிலை, சமூகப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் புரிதல்கள் மாறுபடும். அதனைப் போன்றதுதான் நவீன கவிதைகளும்.

நவீன கவிதைகள் என்பவை ஒரு தளத்தில் இயங்குபவை அல்ல. அவை பல்பரிமாணத் தன்மை கொண்டவை. நவீன கவிதை என்பது உருவத்தால் ஏற்பட்ட மாற்றம் என்று சிலர் கருதக்கூடும். அதாவது வரிகளை ஒன்றின் கீழ் ஒன்றாக முறித்துப் போட்டால் அது நவீன கவிதை என்று. ஆனால் அது அப்படி அல்ல. உண்மையில் அது உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டு முறையிலும் ஏற்பட்ட மாற்றம். நவீன கவிதைகளில் படிமங்கள் முக்கியமானவை.

‘தவறுதலாகப் புகைக்கூண்டின் வழியே
வீட்டுக்குள் வந்துவிட்ட ஓணானுக்கு
எந்த நிறம் மாற்றிக் கொள்வதென்று
தெரியவில்லை’

மேற்கூறியது தமிழகக் கவிஞர் கலாப்ரியாவின் கவிதை. இது ஓணான் பற்றிய கவிதை என்று சிலர் நினைக்கக்கூடும். நான் அதனை மனிதர்கள் பற்றிய கவிதை என்று புரிந்துகொள்கிறேன். நாளை எந்தக் கட்சிக்குத் தாவுவது என்ற யோசித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிக்கு இது தன்னைப் பற்றிய கவிதையாகத் தோன்றக்கூடும். அதேபோல் வெவ்வேறு கருத்துநிலை கொண்டவர்களுக்கு வெவ்வேறு விதமாக இந்தக்கவிதை பற்றிய புரிதல் ஏற்படலாம்.

நவீன கவிதைகள் புரிவதில்லை, இருண்மையானவை என்று சொல்பவர்களும் உண்டு. இருண்மை என்பது கவிஞன் சொல்லாமல் விட்ட, கவிதைக்குள் பொதிந்துள்ள, படிமங்களூடாகப் புரிந்துகொள்ளப்படுகின்ற பொருள், கேள்வி, சிந்தனை என்பவையாகும். நவீன கவிதைகளில் கவிஞன் என்பவன் ஒரு கருவி மட்டும் தான். கவிஞன் துருத்திக் கொண்டு தெரியமாட்டான். கவிதை எழுப்புகின்ற கேள்வி, சிந்தனை, கிளர்ச்சி, சலனம் என்பவைதான் நவீன கவிதைகளில் முக்கியமானவை.

இந்தப் புரிதலோடுதான் சிவதாஸின் கவிதைகளை அணுகுகிறேன். அப்படி அணுகுகையில் அவருடைய கவிதைகளின் தனித்த அம்சங்களாக இரண்டு விடயங்களைக் குறிப்பிட முடியும். காலத்தையும் அதன் வலிகளையும் சிவதாஸ் பாடுவது ஒன்று. அவற்றைக் காட்சிப் படிமங்களாக அவர் விபரிப்பது இரண்டாவது அம்சம்.

தான் வாழுகின்ற சமூகத்தின் அவலங்களை, அதிகாரத்திற்கும், சமூக அநீதிக்கும் எதிராக வரலாறு நெடுகிலும் கவிஞர்கள் பாடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்தக் கவிஞர்களில் ஒருவராக சிவதாஸைப் பார்க்கிறேன். சமூகத்தில் அக்கறை கொண்டவராக, சமூகத்தின் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கின்ற கவிஞராக அவர் இருக்கின்றார். நாம் வாழும் காலத்து வலிகளின் சாட்சியமாக நாங்கள் இருக்கிறோம். அந்த வலிகளைக் கவிதைகளூடகச் சிவதாஸ் பேசுகிறார். எல்லாக் கவிதைகளும் ஏதோவொரு வகையில் அதிர்வைத தருகின்றன.
இந்தத் தொகுப்பில் சிவதாஸ் 36 வருடங்களாக வாழும் நோர்வே மண்ணைப் பற்றிய, அதன் பெருமிதங்கள், இயற்கை பற்றிய கவிதைகள் ஒன்றையுமே காணமுடியவில்லை. பிறந்த தேசம் பற்றியும், பிரிந்து வாழ்தலின் நெருக்கடிகள் பற்றியும்தான் சிவதாஸ் தொடர்ந்து எழுதிவருகின்றார்.

‘நினைவுகளில் காடுள்ள மிருகத்தினை எளிதில் பழக்க முடியாது’ என்பதற்கான எடுத்துக்காட்டாகச் சிவதாஸ் இருக்கின்றார். அவன் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், இன்னும் தன் நினைவுகளின் காட்டையும் அதன் நிறத்தையும் வாசத்தையும் ஒலிகளையும் கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒருவன். எனவேதான் அவன் தொடர்ச்சியாக காடு பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றான். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அதற்குச் சாட்சி. சிவதாஸ் கையாளுகின்ற மொழி மிக எளிமையானது. ஏளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. கவிஞன் எதை எழுதுகிறான், எதற்காக எழுதுகிறான் என்பதே கவிதையின் மொழியைத் தீர்மானிக்கின்ற விடயம். தாயகத்தை, மக்களை, வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசுகின்றார். அதற்கான மொழி அவரிடம் இருக்கிறது.

அவருடைய கவிதைகளில் பிரச்சனை இல்லையா? இருக்கின்றது. சந்தங்களுக்காக மொழியை வளைத்துப் போடுகின்ற அல்லது எதுகை மோனைக்காக வார்த்தை அலங்காரங்களைக் கொண்ட மொழியமைப்பு பல கவிதைகளில் இருக்கின்றன. கவிதை கோருகின்ற வார்த்தைகளுக்கு அதிகமாக வார்த்தைகளைப் பயன்படுத்துதல், அற்புதமானதொரு இடத்தில் கவிதை முடிந்த பின்பும் நீட்டிச் செல்வது போன்ற விடயங்களைத் தவிர்க்க வேண்டும்.

நவீன கவிதைகளில் அறைகூவல்கள், வார்த்தை ஜாலங்கள், மொழியை வளைக்கின்ற தன்மைகள் எந்தவித சலனங்களையும் ஏற்படுத்துவதில்லை. அவை நவீன கவிதைகளுக்கு எதிரானவை. சிவதாஸின் கவிதைகளில் பல நவீன கவிதைகளுடன் நெருங்கி வரக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளன. எனவே இது போன்ற சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களைத் தவிர்ப்பது நல்லது எனத் தான் கருதுவதாகவும் கேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

ஜெயசிறி விஸ்ணுசிங்கம் உரை
இலக்கிய வகைமைகளில் கவிதை மற்றும் சிறுகதை வடிவங்களின் முக்கியத்தும் பற்றி ஜெயசிறி விஸ்ணுசிங்கம் குறிப்பிட்டார். அவை வாசக மனங்களை இலகுவில் சென்றடையும் தன்மையுமுடையவை எனும் கோணத்தில் தனது பார்வையைப் பகிர்ந்தார்.
சக மனிதரைப் புரிந்துகொள்ள, உலகைப் புரிந்துகொள்ள, மனதை ஆசுவாசப்படுத்த, மகிழ்ச்சிப்படுது;த இலக்கியங்கள் துணைபுரிகின்றன. அரச இயந்திரங்கள் திட்டமிட்ட முறையில் சமூகநீதிக்கு எதிராக இயங்குகின்றன. கலை,இலக்கியங்களே சமூகநீதிக்கான பங்களிப்பினை வீரியமாகச் செய்யமுடியும். சிவதாஸ் அவர்களின் கவிதைகள் உணர்வுபூர்வமானவை என்று கூறிய அவர் சிவதாஸ் அவர்களின் தமிழ் ஆசிரியப் பணி குறித்தும், இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கான தமிழ் கல்வியூட்டல் செயற்பாட்டில் அவரது பங்களிப்பினை விதந்துரைத்தார்.

மேலும் அவர்,
சோமாலிய மற்றும் பாகிஸ்தானியப் பின்னணியைக் கொண்ட நோர்வேயில் வாழும் இளையவர்கள் அவர்களைப் பாதிக்கின்ற விடயங்கள் தொடர்பாக எழுதுகின்றனர். தமது வேர், அடையாளம் பற்றி எழுதுகிறார்கள், இன, நிற வெறி பற்றி, பாரபட்சம் பற்றி எழுர்கிறார்கள். தமிழ் இரண்டாம் தலைமுறையினர் கவிதை, சிறுகதை போன்ற இலக்கிய ஈடுபாடு குறைந்தவர்களாகவும் எழுத்தார்வம் குறைந்தவர்களாகவும் இருப்பதாகக் கவலை வெளியிட்டார்.

புலம்பெயர் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தாம் வாழும் புலம்பெயர் சூழல் பற்றித் தமது படைப்புகளில் எழுதுவதில்லை. மாறாக தாயகத்தைப் பற்றியே அதிகம் எழுதுகின்றனர் என்ற குற்றச்சாட்டு, தமிழக எழுத்தாளர்களினால் முன்வைக்கப்படுகின்றது. அதுவொரு விவாதமாக இருந்துவருகின்றது. வாழும் சூழல் பற்றிய படைப்புகள் வரும்போது ஈழ இலக்கியப் பரப்பு விரிவடையும் என்ற நோக்கத்தில் அவர்கள் அப்படிச் சொல்கின்றனர் என்றும் ஜெயசிறி குறிப்பிட்டார்.

கவிதா நிகழ்வு – மொழியாக்க மொழிவு – இசைப் பாடல்
‘காலப் பெருவலி’ அறிமுக அரங்கில், சோதியாவின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் தெரிவு செய்யப்பட்டு, ‘கவிதா நிகழ்வாக’ ஆற்றுகை செய்யப்பட்டது. அதற்கான கவிதைகளைத் தேர்வுசெய்து நெறிப்படுத்தியிருந்தவர்; கவிஞர் இளவாலை விஜயேந்திரன். அவருடன் இணைந்து கவிஞர் கவிதா லட்சுமி மற்றும் ஜீவா திருநாவுக்கரசு ஆகியோர் ஆற்றுகை செய்திருந்தனர். அதற்குப் பொருத்தமான பின்னணி இசை ஒலிக்கவிட்டிருப்பின் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

தொகுப்பில் இடம்பெற்ற ‘எழுவது மட்டுமல்ல, அழுவதும் தொழுவதும்கூட தவறே’ என்ற கவிதை நோர்வேஜிய மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு மொழியப்பட்டது. அக்கவிதையை சஹானா சதானந்தன் மொழிபெயர்த்து மொழிந்தார். இவர் நோர்வேயில் பிறந்து வளர்ந்தவர். தமிழில் ஆளுமை மிக்க இளைய தலைமுறையினரில் ஒருவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணிக்கான கல்வித்துறையில் பயின்று வருகின்றார்.

சோதியாவின் பாடல் ஒன்றினை மெட்டமைத்துப் பாடியிருந்தார் ஜகதுர்க்கா ஜெயக்குமாரன். பாடலுக்கான வயலின் இசையினை அதிசயன் சுரேஸ் இசைத்திருந்தார்.
சோதியாவின் ஏற்புரையோடும், சபையோருக்கான நூல் வழங்கலுடனும் நிகழ்வு நிறைவுபெற்றது.

2001ஆம் ஆண்டு சோதியாவின் முதலாவது கவிதைத் தொகுப்பு ‘அறுவடை நாள்’ எனும் தலைப்பில் வெளிவந்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடு, போராளிகளின் ஈகம், மக்களின் அவலம், போரின் வடுக்கள், போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு, புலம்பெயர் வாழ்வியல் என அத்தொகுப்பின் பேசுபொருட்கள் அமைந்திருந்தன.
இரண்டாவது கவிதைத் தொகுப்பு 2004இல் ‘உயிர் விதைப்பு’ எனும் தலைப்பில் வெளிவந்திருந்தது. தலைப்பு எழுத்தியம்புவது போல அத்தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் விடுதலைக் களத்தில் நின்ற போராளிகளையும் மாவீரர்களையும் அவர்களின் தியாகங்களையும் பேசுபொருளாகக் கொண்டிருந்தன.

‘காலப் பெருவலி’ என்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் 2004 முதல் 2018 வரையான 15 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள கவிதைகள் பல்வேறு பேசுபொருளைக் கொண்டிருக்கின்றன. தாயக நிலைமைகள் பற்றிய கவிதைகள் உள்ளன. புலம்பெயர் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற சில கவிதைகள் உள்ளன. 2009 இற்குப் பின்னரான தாயகத்தினதும் புலம்பெயர் தேசத்தினதும் கையறு நிலை பற்றிய கவிதைகள் உள்ளன. இப்படியாக 52 கவிதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

‘நான் வாழும் காலத்தின் மகிழ்ச்சி, துயரம், துரோகம், அன்பு, வெற்றி, ஈகம், தோல்வி போன்ற இன்னோரன்ன காரணங்கள் பலரைப் போலவே என்னையும் பாதித்தன. அவற்றை எனக்குத் தெரிந்த அல்லது விரும்பிய கவிமொழியில் பதிவு செய்ய முனைந்திருக்கிறேன்’ என்று சோதியா இத்தொகுப்பில் ‘தன்னுரையில்’ கூறியிருக்கின்றார்.

Leave A Reply