தலிபானுடனான ஒஸ்லோ பேச்சுவார்த்தை: சர்ச்சைகளும் நியாயப்படுத்தல்களும்!

தலிபான்களுடன் மேற்கு அவசரமாக பேச முன் வந்ததற்கான ஒரு காரணியாக ரஷ்யாவையும் சீனாவையும் தலிபான்களுடன் பேச விடாமல், நெருங்க விடாமல் தடுப்பது என்பதாகவும் கருதலாம். அது மேற்கின் பிராந்திய நலன்சாந்த நகர்வு. ஐரோப்பா எதிர்கொள்ளும் அகதிகள் நெருக்கடியும் துணைக்காரணியாகக் கொள்ளக்கூடியது.

2022 ஜனவரி இறுதியில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்களின் குழு ஒன்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவிற்கு அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. 15 பேர் கொண்ட தலிபான் குழு இப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றிருந்தது. இந்த பேச்சுவார்த்தை சர்வதேச மட்டத்திலும் நோர்வேயின் உள்ளக மட்டத்திலும் பல்வேறு வகையான எதிர்ப்புகளையும் விவாதங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. மூடிய கதவுக்குள் நடத்தப்பட்ட இப்பேச்சுவார்த்தைக்கு உள்நாட்டு மட்டத்தில், குறிப்பாக எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. அதற்கான முதன்மைக் காரணம் தலிபான் மிக மோசமான பயங்கரவாத அமைப்பு, இந்தப் பேச்சுவார்த்தை என்பது அந்த அடிப்படைவாத அமைப்பிற்கு ஓர் அரசியல் அங்கீகாரத்தையும் அது நடாத்தும் ஆப்கானிஸ்தான் நிழல் அரசாங்கத்திற்குரிய சட்ட அங்கீகாரத்தையும் வழங்குகிறது என்பதாகும். தலிபான் பேச்சுவார்த்தைக் குழு தனியார் விமானத்தில் அழைக்கப்பட்டிருந்தது. விமானப் போக்குவரத்து உட்பட இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுப்புக்கான செலவு 7 மில்லியன் நோர்வேஜியன் குரோணர்கள் அதாவது கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்குச் சற்றுக் குறைவான அமெரிக்க டொலர்கள்.

ஆப்கானிஸ்தான் மக்கள் மிகப்பெரியதொரு மனிதாபிமான நெருக்கடிக்குள் சிக்கி இருக்கின்றனர். கடந்த ஆண்டு 2021 ஓகஸ்ட்டில் அமெரிக் தலைமையிலான சர்வதேச படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதையடுத்து தலிபான்; ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த யதார்த்தப் புறநிலையில் மக்களை நெருக்கடிகளிலிருந்து மீட்பதற்கு வெளிநாட்டு உதவிகள் தவிர்க்க முடியாதவை. அதனால் தலிபானுடன் பேசுவது தவிர்க்க முடியாத யதார்த்தம் என்ற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தைகளை நோர்வே அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது.

நோர்வேயின் சமாதான முகம்
உண்மையில் இது நோர்வே அரசாங்கத்தின் தனிப்பட்ட முடிவு அல்ல என்பதை அரசியல் அரிச்சுவடி மட்டும் அறிந்தவர்களே புரிந்துகொள்வர். இது அமெரிக்காவின் முடிவு. சர்வதேச சமூகத்தினுடைய நீண்டகால சமாதான முகம் நோர்வே. தனது பிராந்திய, இராணுவ, பொருளாதார மற்றும் நலன்சார் அரசியலுக்காக நோர்வேயின் சமாதான பிம்பத்தை அமெரிக்கா கையாண்டு வருகின்றமை புதிய தகவலும் அல்ல. இதற்கு கடந்த முப்பதாண்டுக்கும் மேலான வரலாறு உள்ளது. இஸ்ரேல் – பலஸ்தீனம் (1993) முதல் அண்மைய வெனிசுவேலா (2019) வரை நீண்ட பட்டியல் உள்ளது. கவுத்தமாலா, சூடான், இலங்கைத்தீவு, சோமாலியா, நேபால், மியான்மார், பிலிப்பைன்ஸ், கொலம்பியா என்பன அவற்றில் முக்கியமானவை. பெரும்பாலான முயற்சிகள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன அல்லது சமாதான முயற்சிகள் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்த நிலையை விட மிக மோசமான நிலைமையை அடைந்திருக்கின்றன. உதாரணமாக இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாடு மற்றும் இலங்கைத் தீவின் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளின் சிதைவுகளைக் கூறலாம்.

ஜனவரி 23 இல் இருந்து 25 வரையான மூன்று நாட்கள் நோர்வே தலைநகரில் அமைந்துள்ள அரசியல் பேச்சுவார்த்தைகளுக்குப் பிரசித்திபெற்ற Soria Moria விடுதியில், தலிபான்களுடான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதில் ஆப்கானிஸ்தானின் சிவில் சமூக பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகள், ஆப்கானிஸ்தானின் புலம்பெயர் சமூகப் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர். நாடுகள் என்று நோக்குமிடத்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் மற்றும் ஐ.நா பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர். ஆகவே இந்த சந்திப்புக்கான ஏற்பாடு அமெரிக்கா தலைமையிலான மேற்கின் பெரிய நாடுகள் என்பதில் சந்தேகமில்லை.

உண்மையில் இது நோர்வே அரசாங்கத்தின் தனிப்பட்ட முடிவு அல்ல என்பதை அரசியல் அரிச்சுவடி மட்டும் அறிந்தவர்களே புரிந்துகொள்வர். இது அமெரிக்காவின் முடிவு. சர்வதேச சமூகத்தினுடைய நீண்டகால சமாதான முகம் நோர்வே. தனது பிராந்திய, இராணுவ, பொருளாதார மற்றும் நலன்சார் அரசியலுக்காக நோர்வேயின் சமாதான பிம்பத்தை அமெரிக்கா கையாண்டு வருகின்றமை புதிய தகவலும் அல்ல.

ஆப்கானிஸ்தான் பொது மக்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகம், ஆப்கானிஸ்தானில் உள்ள சிவில் அமைப்புகள், மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த அமைப்புகளும் பங்களிப்பதற்கு ஏதுவான நிபந்தனைகளைத் தலிபானிடம் முன்வைப்பது இப்பேச்சுவார்த்தையின் அங்கமெனச் சொல்லப்பட்டது. நாட்டின் அரசியல் சூழல் மேலும் மோசமான மனிதாபிமான பேரழிவுகளுக்கு இட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது என்றும் தலிபான்களை அழைத்துப் பேசியமை நியாயப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் சர்ச்சைகளுக்குமான பதிலாக அரசாங்கத்தரப்பு இத்தகைய கருத்துகளையே முன்வைத்தனர்.

2021 ஓகஸ்ட் மாதத்திலிருந்து மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வந்துள்ளன. சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டன. 10 பில்லியன் வரையான சொத்துக்களை அமெரிக்கா முடக்கியது. ஐ.நா தரவுகளின்படி நாட்டின் மொத்த சனத்தொகையில் 55 விழுக்காட்டினர், அதாவது இருபத்திமூன்று மில்லியன் மக்கள் மனிதாபிமான நெருக்கடி எதிர்கொள்கின்றனர் இதனை நிவர்த்தி செய்ய இந்த ஆண்டு (2022) 5 பில்லியன் டொலர் நிதியுதவி உலக நாடுகளிடமிருந்து தேவைப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளினால் முடக்கப்பட்ட நிதியினை விடுவிப்பதும் சர்வதேச நிதியுதவிகளை மீளப்பெறுவதும் தலிபான்களின் இலக்கு.

அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு பூமி
ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குட்பட்டிருந்த இரண்டு தசாப்தங்களில் மட்டுமல்ல. 40 ஆண்டுகளுக்கு மேலாக சோவியத், அமெரிக்கா என அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பு பூமியாக இருந்த தேசம். அரை நூற்றாண்டு காலம் ஒரு யுத்த பூமியாக இருந்து வந்திருக்கின்றது என்ற வகையில் அதனுடைய பொருளாதாரம் தன்னிறைவானது அல்ல. நாட்டின் மொத்தச் செலவின் 80 வீதமான நிதி வெளிநாட்டு உதவி எனும் கதியிலுள்ளது. இந்த நிலையில் அந்த நிதி இருப்பினைத் திடீரென முடக்கியமைதான் இன்றைய பாரிய மனிதாபிமான நெருக்கடிகளுக்கான அடிப்படை. வேலையில்லாத் திண்டாட்டம், உணவு பற்றாக்குறை, சிவில் நிர்வாக ஊழியர்களுக்கான ஊதியம் இன்மை, வறட்சி, இடப்டிபயர்வு எனவாக தற்போதைய மனிதாபிமான நெருக்கடி ஆகியிருக்கின்றது.

மொத்தத்தில் இது அரசியல் பேச்சுவார்த்தை இல்லை. மனிதாபிமான நெருக்கடிகளைத் நீக்குவதற்கான நிபந்தனைகளையும் அழுத்தங்களையும் தலிபான்கள் மீது கொண்டுவருதல் அல்லது அந்த நிபந்தனைகளுக்கு தலிபான்களை சம்மதிக்க செய்தல் என்பதாக இது நோர்வே அரசாங்கத்தினால் வியாக்கியானப்படுத்தப்படுகின்றது. பேச்சுவார்த்தைகள் தலிபானை அங்கீகரிப்பதும் அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதும் அல்ல. ஆனால் நாட்டின் நிழல் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அவர்களுடன் பேசுவது தவிர்க்க முடியாதது என்று வெளியுறவு அமைச்சர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஆனால் தனி விமானத்தில் ஐரோப்பிய நாடொன்றுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதென்பது தலிபான் தரப்பில் அதற்கான ஒரு அரசியல் அதிகாரத்தின் முதல் படியாக பார்க்கக் கூடியது. அது அப்பத்தான் பார்க்கின்றது என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு ஒரு தரப்பாக அழைத்திருக்கின்றமை அரசியல் அழுத்தத்தில் நடைமுறை யுத்தத்தில் அங்கீகாரம்தான். தலிபானுக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை எந்த உலக நாடுகளின் அரசாங்கங்களும் இதுவரை வழங்கவில்லை. இருப்பினும் உலக மட்டத்தில் தலிபான்களுடன் பல்வேறு நாடுகள் பல்வேறு மட்டங்களில் உறவுகளைக் கொண்டுள்ளன.

பிசாசுடனும் பேசத் தயார்
ஒரு மில்லியன் சிறுவர்கள் பட்டினியை எதிர்நோக்கி இருக்கின்ற ஒரு காலகட்டத்தில் தலிபான்களை நிராகரிக்க முடியாது. உதவி பெறுவதற்கு அல்லது உதவி வழங்குவதற்கு தலிபான்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். தலிபான்களைத் தாம் ஏற்றுக் கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. ஆனால் அந்த முரண்பட்ட அரசியல் நிலைப்பாடுகளும் இடைவெளிகளும் ஆப்ககான் பொதுமக்களைப் பாதிப்பதை பார்த்துக்கொண்டிருப்பதன்னூடாக நிரூபிக்க முடியாது என தலைமை அமைச்சர் Jonas Gahr Støre கூறியிருந்தார். தலிபான்களை நிர்ப்பந்திக்க வேண்டும். அவர்கள் மீது இராஜதந்திர அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். அதுவே நடைமுறை அரசியல் என்றும் தெரிவித்திருந்தார். மட்டுமல்லாமல் அவர் இன்னுமொரு படி மேலே போய் இவ்வாறு கூறியிருக்கிறார்: ‘அப்பாவி பொது மக்களைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் பிசாசுடன் பேச வேண்டிய நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும்’.

அமெரிக்கா தலைமையிலான ஆப்கானிஸ்தான் போருக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது படைகளை அனுப்பியிருந்தன. நோர்வேயும் தலிபான்களுக்கு எதிரான போருக்குத் தனது படை ஆளணிகளையும் இராணுவத் தளவாடங்களையும் அனுப்பிய நாடு. பேச்சுவார்த்தை தொடங்கிய முதல்நாள், ஜனவரி 23, ஞாயிறு அன்று நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் முன்பாக தலிபான்கள் அழைக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. தலிபான் என்பது முன்னரைப் போலவே அதே மோசமான பயங்கரவாத அமைப்புத்தான். அவர்கள் மாறவில்லை, மாறப்போவதும் இல்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது மிக மோசமான செயல் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புடன் பெண்ணுரிமை, மனித உரிமை பேசுவது அபத்தமானதும் அபத்தமானமானதுமான நம்பிக்கை. நோர்வே மக்களின் வரிப்பணத்தில் இப்படியான செயல்களுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவவிடுவது முறைகேனானது என்பதாக எதிர்க்கட்சிகள் விசனம் தெரிவித்திருந்தன.

பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறை
தலிபான்கள் அண்மையில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். சுகாதார மற்றும் கல்வித்துறை சார்ந்த பல பணிகளிலிருந்து பெண்கள் விலக்கப்பட்டு, தடை விதிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பிற்கு மேல் கல்விகற்பதற்குப் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிஜாப் கட்டாயம் அணியவேண்டுமென்று பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மனிதஉரிமைக் குழுக்களையும், பத்திரிகையாளர்களையும் ஊடகங்களையும் குறிவைத்துத் தாக்கிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், பலவந்தமாக காணாமல் போதல்கள், ஊடக அடக்குமுறைகள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் பெண்கள் உரிமை, பெண் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் ஆண்துணை இல்லாமல் பயணம் செய்வதற்கான பெண்களின் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களின் ஆபத்தான அதிகரிப்பைத் தடுக்க தலிபான்கள் இணங்கவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டதாக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அமெரிக்க-ஐரோப்பிய கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு – வளங்களைக் கையகப்படுத்துதல்
அமெரிக்காவினுடைய அதிகார நலன்சார்ந்த அரசியல் நகர்வுகளில் பொயக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாடுகளை ஆக்கிரமிப்பது, குண்டுவீசித் தாக்கியழிப்பது, உட்கட்டுமானங்களையும் சொத்துகளையும் சிதைப்பது, பின்னர் அத்தேசங்களினுடைய வளங்களைக் கையகப்படுத்துவது என்பன புதியவையல்ல. ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் நிதி முடக்கம் நிகழ்ந்த காலச் சூழல் என்பது மிகப்பெரிய ஒரு மனிதாபிமான நெருக்கடிக் காலம். அதாவது 20 வருட ஆக்கிரமிப்புப் போர், அதனுடைய பாரதூரமான விளைவுகள், பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் இந்த முடக்கம் நிகழ்ந்தது.

அமெரிக்காவினுடைய அதிகார நலன்சார்ந்த அரசியல் நகர்வுகளில் பொயக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாடுகளை ஆக்கிரமிப்பது, குண்டுவீசித் தாக்கியழிப்பது, உட்கட்டுமானங்களையும் சொத்துகளையும் சிதைப்பது, பின்னர் அத்தேசங்களினுடைய வளங்களைக் கையகப்படுத்துவது என்பன புதியவையல்ல.

அந்த நிதியில் அரைவாசி, அதாவது மூன்றரை பில்லியன் டொலர்கள் 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ‘செப்டம்பர் 11’ தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கான நிதியம் ஒன்றுக்கு வழங்குவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்தது. மீதி மூன்றரை பில்லியன் டொலர் ஆப்கானிஸ்தான் மக்களுடைய மனிதாபிமான உதவிக்கு வழங்கப்படுவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும் அதாவது செப்டம்பர் 11 தாக்குதலுக்கான விமானக் கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர்கூட ஆப்கானியர்கள் இல்லை. அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சவுதி அரேபிய குடியுரிமையைக் கொண்டிருந்தவர்கள். அல்-கைடாவும் ஒசாமா பின்லேடனும் தலிபானின் முக்கிய விருந்தாளிகள். தலிபான்கள் கொள்கை ரீதியாக அல்-காய்தாவை ஆதரித்தவர்கள். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அல்கைதா மற்றும் தலிபான் பயங்கரவாதத்தோடு தொடர்பற்ற அப்பாவிப் பொதுமக்களைத் தண்டிப்பதென்பது இழிவரசியல். அப்பட்டமான பொருளாதார சுரண்டல்.

பஞ்சத்தின் விளிம்பில் ஆப்கான்
பஞ்சத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு தேசத்து மக்களின் பொதுச்சொத்து மீதான அபகரிப்பு, ‘செப்ரெம்பர் 11’ தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதியாக ஒருபோதும் அமையாது. உலகின் மிகப்பெரிய செல்வந்த நாடு உலகின் வறிய மற்றும் மனிதாபிமான பேரழிவைச் சந்திக்கின்ற ஒரு தேசத்தின் நிதியை கையகப்படுத்துகிறது என்றால் அது எத்தகைய மனிதாபிமானமற்ற செயலென்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.

ஈராக் மீது ஆக்கிரமிப்பினை நடாத்துவதற்கு அமெரிக்கா தயாராகிக் கொண்டிருந்த போது, சதாமிடம் உயிரழிவு ஆயுதங்கள் உள்ளன, சதாமிற்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளது என ஆக்கிரமிப்பிற்கான பொய்க்காரணங்களை அடுக்கியது. தாம் தாக்கியழிக்கப்போகும் நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான வளங்கள் குறித்து, அன்றைய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட ஆலோசகராகவிருந்த Richard Perle இப்படிக்கூறினார்: ‘ஈராக் மிகவும் வளமான நாடு. பெரிய எண்ணெய்வளத்தினைக் கொண்டுள்ளது. அதனைக்கொண்டு தங்கள் சொந்த நாட்டின் புனரமைப்பிற்கான நிதியை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும்’ என்று ஜூலை 2002இல் அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு தாக்குதல் நிதர்சனமாகியபோது, பாதுகாப்பு அமைச்சர் Donald Rumsfeld அதே பல்லவியை மீண்டும் கூறினார். ஈராக் புனரமைப்புப் பற்றி Rumsfeld கூறுகையில், அமெரிக்க நிர்வாகம் முதலில் ஈராக் அரசாங்கம், அதன் வளங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தை அணுகிய பின்னர்தான் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தின் பக்கம் திரும்பும் என்றார். இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ஈராக்கை அழித்த பிற்பாடு, அதாவது அமெரிக்கக் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் அழிவுற்றதை மீளுருவாக்குவதற்கு, ஈராக்கின் எண்ணெய் நிதியத்தினை பயன்படுத்துதல் என்பதாகும். ஈராக்கின் எண்ணெய் வளம் மீதான கையகப்படுத்தல் அதன் மீது அமெரிக்கா போர் தொடுக்க முக்கிய காரணங்களில் ஒன்று.

தலிபானுடன் பேசுவதற்கான காரணம்
மேற்கு அவசரமாக பேச முன் வந்ததற்கான மற்றும் ஒரு காரணியாக ரஷ்யாவையும் சீனாவையும் தலிபான்களுடன் பேச விடாமல், நெருங்க விடாமல் தடுப்பது என்பதாகவும் கருதலாம். அது மேற்கின் பிராந்திய நலன்சாந்த நகர்வு. ஐரோப்பா எதிர்கொள்ளும் அகதிகள் நெருக்கடியும் துணைக்காரணியாகக் கொள்ளக்கூடியது. சிரியா, லிபியா போன்ற போர்களின் விளைவாக 2015-ல் இருந்து ஐரோப்பா பெரும் அகதிகள் நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றது. கடற்பயணத்தின் மூலம் அகதிகள் வருகை அதிகரித்துவந்திருக்கின்றது. இத்தகைய சூழலில் ஆப்கானிஸ்தானில் இருந்தும் பெருமெடுப்பில் ஐரோப்பா நோக்கி அகதிகள் படையெடுப்பு நிகழும் என்ற அச்சமும், அதனூடாக தலிபான்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவக்கூடும் என்ற அச்சமும் ஐரோப்பாவிற்கு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே இவ்வாறான ஒரு பேச்சுவார்த்தை மூலம் உரிய அங்கீகாரத்தை அல்லது தலிபான்களுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை கட்டுப்படுத்துவதற்கு உரிய செயற்பாடுகளை நடைமுறைகளை வகுப்பது கூட இந்த பேச்சுவார்த்தையை பின்னால் மறைந்திருக்கக் கூடிய நலன் சார்ந்த அரசியல் நகர்வாக இருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

காக்கைச் சிறகினிலே, April 2022

Leave A Reply