நோர்வே: பெண்ணுரிமை சார்ந்த சமூக அரசியல் மாற்றங்கள் ஒரு வரலாற்றுப் பார்வை! பகுதி 2

அரசியல் அதிகார நிறுவனங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் தரத்தினையும் விளைவுத்தாக்கத்தினையும் உறுதிப்படுத்தவும் அது பன்மைத்துவத்தினைப் பிரதிபலிக்கவும் வேண்டும் என்ற கருத்தியல் நோர்வே உட்பட்ட ஸ்கன்டிநேவிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வலுப்பெற்று வருகின்றன. அந்தப் பன்மைத்துவம் என்பது பாலின, இனத்துவ, மொழித்துவ, சமய மற்றும் வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட (LGBT – lesbian, gay, bisexual, and transgender) சமூகங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்ற கருத்தியலாகும்.

உலகப்போர்கள்: பெண்ணுரிமை விவகாரங்கள் பின்னடைவு

நோர்வேயில் பெண்களுக்கான அரசியல் சமூக பொருளாதார உரிமைகள் சார்ந்த சட்ட உருவாக்கங்கள் முக்கியத்துவம் பெற்ற காலம் 1880 தொடக்கம் முதலாம் உலக யுத்தம் வரையான காலமாகும். ஆயினும் இரண்டு உலக யுத்தக் காலங்களும் பெண்ணுரிமை விவகாரங்களை மந்தமாக்கின. பொருளாதார நெருக்கடி மிகுந்த இப்போர்களின் இடைக்காலம் பெண்ணுரிமைகளுக்கும் அவை சார்ந்த போராட்டங்களுக்கும் பின்னடைவைக் கொடுத்தன. ஆண்கள் வேலையில்லாப் பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்தபோது, திருமணமான பெண்களை ஊதியத்துடனான வேலைகளில் அமர்த்துவதில்லை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. அக்காலகட்ட பாலின வகிபாகச் சூழலில் ஆண்கள் பரந்த சமூக அரசியல் இயங்குவெளியினைக் கொண்டிருந்தனர். சில தன்னார்வ நிறுவனங்களைத் தவிர பொதுவெளியிலும் அரசியலிலும் பெண்கள் மிகச் சொற்பமாக அல்லது கண்ணுக்குப் புலப்படாதவர்களாகவே இருந்தனர்.

1970இற்கு முன்னர் பாலின சமத்துவம் சார்ந்த பொது அரசியல் நிலவியதாகச் சொல்லமுடியாது. அரச நிறுவனத்தில் அதற்கான சட்ட ரீதியான உறுதிப்பாடுகள் இருந்த போதும் ‘பெண்ணிய அரசியல்’ என்பது பரந்துபட்ட அளவில் சமூக மயப்படுத்தப்படாமல் இருந்தது. 1970களுக்குப் பின் பாலின சமத்துவம் சார்ந்த புதிய முன்னேற்றங்கள் சாத்தியமாகியமைக்கு பல காரணங்கள் உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொழில் ஆளணிகளின் தேவையை அதிகரித்தது. தொழிற்துறை வளர்ச்சிக்கான வளமாகப் பெண்கள் பார்க்கப்படுகின்ற நிலை இயல்பாகத் தோன்றியது.

கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும்

புதிய கல்விக் கொள்கை பெண்களின் கல்வியை ஊக்கப்படுத்தியதோடு தொழில்வாழ்வில் அவர்கள் ஈடுபடுவதற்கான வெளிகளையும் வழங்கியது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை-கடனுதவி நிதியம் (Norwegian State Educational Loan Fund) என்பன பெற்றோரின் பொருளாதாரத்தில் தங்கியிராது பிள்ளைகள் உயர்கல்வியைப் பெறுவதற்கான வழிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தின. நிதிவசதியற்ற பெற்றோர்களின் பிள்ளைகளும் மேற்படிப்பினைத் தொடர்கின்ற வாய்ப்பு அமைந்தது. அரசின் கல்விக் கடனுதவித் திட்டம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்டு, இன்றுவரை நடைமுறையில் உள்ள திட்டமாகும். இவைபோன்ற திட்டங்களுக்கும் சட்ட அமுலாக்கங்களுக்கும் சமாந்தரமாக பெண்கள் உரிமை சார்ந்த இயக்கங்களின் தீவிர செயற்பாடுகள், விழிப்புணர்வுகள் ஊடாக பாலின சமத்துவம் புதிய எழுச்சியை நோக்கிய நகர்ந்தது.

கிட்டத்தட்ட ஒரு வயதிலிருந்து பாடசாலை தொடங்கும் வரையான ஐந்தாண்டு காலம் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான முன்பள்ளி பராமரிப்பு மையங்கள் நோர்வேயில் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தவும் ஊக்குவிக்கவும் முக்கியமான திட்டமாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைக்கு ஒருவயது ஆன பின்னர், வேலையைத் தொடர்வதற்கான வாய்ப்பினை இத்திட்டம் இலகுபடுத்தியது. தவிர பேறுகால விடுப்பு, குழந்தை பெறுவதற்கு முன்னர் 3 மாதங்களும் குழந்தை பிறந்த பின்னர் 12 மாதங்களும் குழந்தை பராமரிப்பிற்கான விடுப்புக் காலம் ஆகியன பெண்களின் தொழில்வாய்ப்பில் முக்கிய சட்ட ரீதியான உத்தரவாதங்கள். ஊதியத்துடனான விடுப்புகள் இவை. குழந்தை பிறந்த பின்னரான ஒரு வருட காலத்திற்குள் தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும் 16 வாரங்கள் விடுப்பு உள்ளது. குழந்தை வளர்ப்பில், தந்தையின் பங்கினை நடைமுறையில் ஊக்குவிக்கின்ற அணுகுமுறை இது. 1970களில் பெண்கள் மத்தியில் தொழில்முனைப்பு அதிகரித்து வந்தபோதும் போதியளவு குழந்தைகள் பராமரிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. தாய்மார்கள் தமது வேலை, குழந்தைகள் என்ற இரண்டினையும் சமாளிப்பதென்பது சவால்மிக்கது. 1980களின் நடுப்பகுதியில் 30 வீதமான குழந்தைகளுக்குரிய பராமரிப்பு வளங்களையே நோர்வே கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறார் பராமரிப்பு வளங்களை அதிகரிப்பதற்கும் முழுமைப்படுத்துவதற்குமான திட்டங்கள் முனைப்புப் பெற்றன.

பதிய இடதுசாரியப் போக்கு: பெண்கள் உரிமை சார்ந்த மாற்றங்கள்

1960 – 1970 காலப்பகுதி என்பது பெண்களின் உரிமை சார் போராட்டங்களோடு, மேற்கின் இன்னபிற முக்கிய அரசியல் நடவடிக்கைகள், உரிமை வலியுறுத்தல்களின் காலமுமாகும். ஓர் பதிய இடதுசாரியப் போக்கு (The New Left) உருவான காலமும் அதுவாகும். புதிய பல சமூக, பொருளாதார, அரசியல், கலை, பண்பாட்டு போக்குகளும் இயக்கங்களும் உருவாகின. அணுவாயுத எதிர்ப்பு, அமெரிக்காவின் வியட்நாம் போருக்கு எதிரான குரல்கள், கறுப்பினப் போராட்டம், மாணவர் எழுச்சிகள், பெண் விடுதலை என பல்வேறு காத்திரமான போராட்டங்கள் மேற்கின் புதிய இடதுசாரியப் போக்கின் அங்கமாகின. வெவ்வேறு தளங்களிலான போராட்டங்கள் எனும் போதும் சிந்தனையும் மொழிப்பிரயோகமும் பொதுவான அடிப்படைகளைக் கொண்டிருந்தன. ஒடுக்குமுறைகளைத் தகர்த்தல், விடுதலை நோக்கிச் செயற்படுதல் என்பதே அவற்றின் அடிநாதம்.

இந்தச் சிந்தனைப் போக்கு அமைப்புகள், இயக்கங்களை உருவாக்கியது. இயக்கங்கள்; கருத்தியல் ரீதியில் மக்களை ஒன்றுதிரட்டின. அரசியல் மயப்படுத்தின. சமூகத்தின் அடித்தட்டு (Grass root) மக்கள் அமைப்புகளாக இணைந்தனர். உரிமைகள், ஒடுக்குமுறைக்கூறுகள், தடைகள், சவால்கள் தொடர்பான பரந்த அளவிலான விவாதங்கள் இடம்பெற்றன. வீதிகளில் இறங்கி எதிர்ப்புப் போராட்டங்கள், கவனயீர்ப்புகளை நிகழ்த்துகின்ற, மாற்றங்களைக் கோருகின்ற-அவற்றுக்கு அரசியல், சட்ட அங்கீகாரங்களைக் கோருகின்ற நிலை ஏற்பட்டது. எழுத்தாளர்கள், கலைஞர்கள் தமது பங்களிப்பினை வழங்கினர். இவை அனைத்தும் அரசியலிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தாக்கம் செலுத்துகின்ற புறநிலைகள் உருவாகின. பெண்கள் அமைப்புகளின் அழுத்தம் விவகாரங்களை அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவந்தன. பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் அரசியல் தளங்களில் அதிகாரம் மிக்க பொறுப்புகளுக்கு வந்தனர்.

ஜனநாயக பிரதிநிதித்துவத்தில் முன்னேற்றம்
1967இல் மாநகர மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு, ஒரு நெறிப்படுத்தப்பட்ட திட்டம் மூலம் பெண்களின் அரசியல் பங்கேற்பு மற்றும் ஜனநாயக பிரதிநிதித்துவத்தின் வளர்ச்சிக்கான முன்னுரை எழுதப்பட்டது. அன்றைய தலைமை அமைச்சர் Per Borten தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளிலிருந்தும்; பல்வேறு பெண்கள் அமைப்புகளிலிருந்தும் உறுப்பினர்ளைக் கொண்டதாக அக்குழு அமைக்கப்பட்டது. பத்திரிகை, வானொலி, பாடசாலைகள், கட்சிகளின் ஊடாகப் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. பெண்களை அதிகமாக மாநகர-உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வேட்பாளர்களாக பங்கேற்கச் செய்வது அப்பரப்புரைச் செயற்பாட்டின் இலக்கு. அதன் விளைவாகப் பல மாநகர சபைகளில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

1977 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 24 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண்கள். இந்த எண்ணிக்கை 1985 இல் 34 வீதமாக உயர்ந்தது. பெண்களின் வாக்குகளைத் தம்வசப்படுத்த கட்சிகளுக்கிடையில் போட்டி எழுந்ததன் விளைவாக வேட்பாளர் பட்டியலில் பெண்களை நிறுத்த வேண்டிய நிலை கட்சிகளுக்கு ஏற்பட்டன. 1987 வரை 5 வீதத்திற்கும் குறைவான பெண்களே மாநகர சபை மட்டத்தில் மேயர் போன்ற அதிகாரம்மிக்க தலைமைத்துவப் பதவிகளைக் கொண்டிருந்தனர். 1991 தேர்தலின் மேயர்களாகப் தெரிவானவர்களில் 11 வீதத்தினர் பெண்கள் எனத் தரவுகள் கூறுகின்றன.

கட்சிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடும் பிரதிநிதித்துவ அதிகரிப்பும்

அரசியல் கட்சிகள் பெண்களுக்கான பிரிவுகளை கொண்டிருந்தன. சோசலிச இடதுசாரிக்கட்சி பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு விதிகளை (கட்சி நிர்வாகக் கட்டமைப்பு, வேட்பாளர் பட்டியல், ஜனநாயகப் பிரதிநிதித்துவம்) 1974இலும், இடதுசாரிக்கட்சி 1975 இலும் கொண்டு வந்தன. சோசலிச இடதுசாரிக்கட்சி குறைந்தது 40 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்சியின் அனைத்துக் கட்டமைப்புகளிலும் உள்ளடக்கப்பட வேண்டுமென்பதைத் தீர்மானமாகக் கொண்டுவந்தது. தொழிற்கட்சி 1993இல் தான் இத்தகையை தீர்மானத்தைக் கொண்டுவந்தது. 1989 – 1993 காலப்பகுதியில் தான் மத்திய கட்சி, கிறிஸ்தவமக்கள் கட்சி ஆகியன பெண்களுக்கான ஒதுக்கீட்டு முறைமைகளைக் கட்சிக்குள் கொண்டுவந்தன. இதுவிடயத்தில் முன்னோடி சோசலிச இடதுசாரிக் கட்சி.

1973 – 1983 வரையான அரசாங்கங்களில் 20 – 25 வீதமான அமைச்சர்கள் மட்டுமே பெண்கள். 1990இல் Gro Harlem Brundtland இன் 3வது அரசாங்கத்தில் 47 வீதமான அமைச்சுப் பதவிகளைப் பெண்கள் கொண்டிருந்தனர். 1980இற்குப் பின்னர் தான் அரசியல் அதிகாரம் மிக்க பொறுப்புகளில் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தினைப் பெண்கள் பெறத்தொடங்கினர். கருக்கலைப்பு தொடர்பான முடிவினைப் பெண்கள் சுயமாக எடுப்பதை அனுமதிக்கின்ற-உறுதிப்படுத்துகின்ற சட்டம் 1976 இல் நடைமுறைக்கு வந்தது. பாலினச் சமவுரிமைச் சட்டம் 1978இல் கொண்டுவரப்பட்டது. இதன் அடிநாதம் என்பது சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பாலின ஒடுக்குமுறைகளைத் தடுப்பதாகும்.
பாலின சமத்துவ மையம்

பெண்களின் உரிமைகளையும் நலன்களையும் மேம்படுத்துவதற்குரிய தேசிய ஆணையகங்களை உருவாக்க வேண்டுமென ஐநாவின் சமூக பொருளாதார ஆணையம் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தியதன் உந்துதலில் 1972 இல் பாலின சமத்துவ மையம் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பானது அரச நிர்வாகக் கட்டமைப்புகள், தொழிற்துறைத் தரப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், பொதுவெளி எனப் பரந்த தளத்தில் பெண்களின் உரிமைகள், நலன்கள் சார்ந்த சவால்கள், சிக்கல்கள், முரண்பாடுகளுக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கும் மையமாக அமைந்தது. இந்த மையம் அரசின் நிதியுதவியுடன் இயங்கியபோதும், சுயாதீனமான துறைசார் பொறுப்புகள், முன்னுரிமைகள் மற்றும் பெறுபேறுகளை இலக்காகக் கொண்ட கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் தான் பாலின சமத்துவ செயற்பாடுகள் அரசியல் மயப்பட்டுப் பின்னர் நிறுவன மயப்படுகின்றன. 3 தளங்களில் இந்த நிறுவனமயப்படுதல் ஒருங்கிணைக்கப்படுகின்றது. இதன் ஒருங்கிணைப்பு அலகாக குடும்ப மற்றும் நுகர்வோர் அமைச்சகமும், அதற்கான ஆலோசனை-வழிகாட்டல் அலகாக சமத்துவ ஆணையமும் ( The Gender Equality Council)), நிறைவேற்று அலகாக பாலின சமத்துவ முறையீட்டு ஆணையமும் The Gender Equality and Anti-Discrimination Ombud) தொழிற்படுகின்றன. அரச மட்டத்தில் பாலின சமத்துவ அரசியல் கனதியான முன்னுரிமையைப் பெற்றுவிட்டதற்கான எடுத்துக்காட்டாக இதனைக் கொள்ளலாம்.

பாலின சமவுரிமை ஆணையம் என்பது தகவல் பரம்பல், கண்காணிப்பு மற்றும் சமவுரிமைச் சட்டத்தின் விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவதோடு, முறைப்பாடுகளைக் கையள்கின்ற பொறுப்பினையும் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் அதாவது 1971இல் குடும்ப மற்றும் நுகர்வோர் அமைச்சகத்தின் கீழும், பின்னர் குழந்தைகள் மற்றும் குடும்ப அமைச்சகம் எனப் பெயர் மாற்றம் பெற்ற அமைச்சகத்தின் கீழும், இன்றைய நாட்களில் கலாச்சார மற்றும் பாலின சமத்துவ அமைச்சகம் என்ற தனி அமைச்சகத்தின் கீழும் உள்ளது.

பாலின சமத்துவம் கல்வியியல் ஆய்வுகள்
பெண்களின் உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம் சார்ந்த முன்னேற்றத்திற்கு ஆய்வுச் செயற்பாடுகளும் கணிசமான பங்கு வகித்தன. அரசியலிலும் சமூகத்திலும் தொழிற்துறையிலும் கல்வியிலும் பெண்களின் பிரசன்னக் குறைவினை ஆவணப்படுத்தி கல்வியியல் ஆய்வுகள் வெளிவந்தன. அவை பெண்கள் பற்றிய பாரம்பரிய அறிவுக்குருட்டுத்தனத்தை, கோட்பாடுகளைச் சரிசெய்யத் துணைநின்றன. 1970களின் இறுதியில் பெண்கள் மற்றும் பாலின சமத்துவ ஆய்வுச் செயற்பாடுகள் தொழில்முறைக் கனதியைப் பெறத்தொடங்கின. 1977இல் பெண்கள் விவகார ஆய்வுக்கான தனியான சமூக அறிவியல் செயலகம், நோர்வே பொது அறிவியல் ஆய்வு மையத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. அதுவொரு பரீட்சார்த்த முயற்சியாகத் தொடங்கப்பட்டிருப்பினும், ஸ்கன்டிநேவியாவில் பாலின சமத்துவ விவகார ஆய்வுகள் நிறுவனமயமாவதற்கான முன்னோடித்திட்டமாக அதுவே உள்ளது. 1991இலிருந்து நிரந்தர பெண்ணியப் பல்துறைமை ஆய்வுச் செயலகமாகச் செயற்பட்டுவருகின்றது.


அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம்

1990களின் பின்னான பாலின அரசியல் என்பது சமத்துவமும் பாலின முன்னோக்குகளும் அனைத்து மட்டங்களிலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதாக மாறத்தொடங்கியது. அதன் நடைமுறை அர்த்தம், முடிவுகள் எடுக்கப்படும் அனைத்துக் துறைகளிலும் பெண்களின் தாக்கத்தினை வலுப்படுத்துவது. அரசியலில் மட்டுமல்ல. தொழிற்துறை, கல்வி, ஊடகம், நீதித்துறை என அனைத்திலும் தீர்மானங்களை எடுப்பதில் அவர்களின் பங்கேற்பினை உறுதிப்படுத்துவது தொடர்பானது. இன்றைய சூழலில் பாலின சமத்துவம் முற்றுமுழுதாகச் சாத்தியமாகிவிட்டதெனச் சொல்ல முடியாது. பெண்களுக்கு எதிரான பல்வேறு பாரபட்சங்கள் வெவ்வேறு அளவில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அடைய வேண்டிய இலக்குகளும் மாற்றங்களும் நிறையவே உள்ளன என்ற புரிதலும் மாற்றங்களை நோக்கிய செயற்பாட்டு வெளிகளும் நோர்வே அரசியல், சமூக, பொருளாதார மற்றும் ஊடகச் சூழலிலில் உள்ளன.

அரசியல் அதிகார நிறுவனங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் தரத்தினையும் விளைவுத்தாக்கத்தினையும் உறுதிப்படுத்தவும் அது பன்மைத்துவத்தினைப் பிரதிபலிக்கவும் வேண்டும் என்ற கருத்தியல் நோர்வே உட்பட்ட ஸ்கன்டிநேவிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வலுப்பெற்று வருகின்றன. ஜனநாயக அரசியல் அதிகார நிறுவனங்கள் எனும் போது அரசாங்கம், நாடாளுமன்றம், நகரசபை, உள்ளூராட்சி சபை ஆகியவற்றைக் குறிக்கின்றது. அவற்றுக்கு அப்பால் சமூகத்தின் அனைத்து சேவை நிர்வாக நிறுவனங்கள், தொழிற்துறை, பொருளாதாரக் கட்டமைப்புகளிலும் பன்மைத்துவப் பிரதிபலிப்பு வலியுறுத்தப்படுகின்றது. அந்தப் பன்மைத்துவம் என்பது பாலின, இனத்துவ, மொழித்துவ, சமய மற்றும் வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட (LGBT – lesbian, gay, bisexual, and transgender.) சமூகங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்ற கருத்தியலாகும்.

தகவல்/தரவுகள் ஆதாரம்:

பெண்கள் அரசியல் வரலாறு

நாடாளுமன்றத்தில் பெண்கள்

தாய் வீடு,
டிசம்பர் 2021
தினக்குரல்
ஜனவரி 2021

Leave A Reply