பலஸ்தீனம்: அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற உறுப்புரிமை சமாதானத்தீர்வுக்கு வழிகோலுமா?

122 நாடுகள் வரை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் அங்கத்துவம் வகிக்கின்றன. இதன் இயங்குதலுக்கான நிதி பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளினாலும், சில வட ஆசிய நாடுகளினாலும் வழங்கப்படுகின்றன. இஸ்ரேல், அமெரிக்கா, ரஸ்யா, சீனா உட்பட்ட பல நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கவில்லை.

பலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினை அவ்வப்போது அனைத்துலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகுவது வழமையான ஒன்று. 2012 ஆரம்பத்தில் ஐ.நாவில் அவதானிப்பு நாடு என்ற அங்கீகாரத்தினைப் பெற்றது. 2014ஆம் ஆண்டின் இறுதியில் ஐரோப்பியப் பாராளுமன்றம் பலஸ்தீனத்தினைத் தனிநாடாக கொள்கை ரீதியில் அங்கீகரித்தது. பலஸ்தீனப்பிரதேசங்களில் இஸ்ரேலியப் படைகளால் நடாத்தப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பலஸ்தீனம் தீவிரமாக முன்வைக்கத் தொடங்கியது. 2015 ஏப்ரல் 1ஆம் திகதி, அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் 123வது உறுப்பு நாடாகவும் பலஸ்தீனம் இணைந்துள்ளது.

‘ICC’ – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமானது போர்க்குற்றம், மனதத்திற்கு எதிரான குற்றம், இன அழிப்பு ஆகியவற்றிற்குப் பொறுப்பான அரசாங்கத்தினதும், அமைப்புகளினதும் தனிநபர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவும், தண்டனைக்குட்படுத்தவும் நிறுவப்பட்ட ஒரேயொரு அனைத்துலக நீதிமன்றமாகும். இது 2002இல் நிறுவப்பட்டது. எனவே 2002ஆம் ஆண்டுக்கு பின்னர் நிகழ்ந்தேறிய கொடூரங்களையே இந்த அமைப்பு விசாரணைக்கு உட்படுத்தும். இந்நீதிமன்றம் கொலண்ட் நாட்டின் Haagநகரில் அமைந்துள்ளது. ஆனால் வழக்கு விசாரணைகள் உலகின் வேறுபகுதிகளிலும் நடாத்தப்படுவது வழக்கம்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு நாடுகள் வழங்கிவரும் நிதிவளங்களை நிறுத்த வைப்பதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட பிரச்சாரங்களை முடுக்கிவிடப்போவதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. கனடா, ஆவுஸ்திரேலியா, ஜேர்மன் போன்ற தமது நட்பு நாடுகளிடம் அனைத்துலக நீதிமன்றத்திற்கு வழங்கிவரும் நிதிவளத்தினை நிறுத்துமாறு கோரவுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் Avigdor Lieberman கருத்துவெளியிட்டுள்ளார்.

பலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேலிய படைகளினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான முனைப்பினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. ஆரம்பக்கட்ட விவாரணைகளைத் தாம் தொடங்கியுள்ளதாகவும் ICC அறிவித்துள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக அவை முழு அளவிலான போர்க்குற்ற விசாரணைக்கு இட்டுச்செல்லுமாயின் இஸ்ரேல், பலஸ்தீன இருதரப்பும் போர்குற்ற விசாரணைக்கு இட்டுச்செல்லப்படும் சூழல் தோன்றலாம்.

ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய நட்புநாடாகவுள்ள இஸ்ரேல் போர்க்குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படும் நிலை எளிதில் ஏற்படாது என்பதே யதார்த்தம். அவ்வாறானதொரு நிலை நேர்வதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது என்பது அமெரிக்க -இஸ்ரேல் உறவின் இறுக்கத்தை, அமெரிக்கா மீது யூதர்கள் செலுத்தக்கூடிய செல்வாக்கினை அறிந்தவர்கள் நன்கறிவர். பெஞ்சமின் நேதன்யாகுவிற்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையில் அண்மையில் முறுகல் நிலைகள் தோன்றியிருப்பினும் போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா எளிதில் அனுமதிக்கப்போவதில்லை.

122 நாடுகள் தற்போது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் அங்கத்துவம் வகிக்கின்றன. இதன் இயங்குதலுக்கான நிதி பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளினாலும், சில வட ஆசிய நாடுகளினாலும் வழங்கப்படுகின்றன. இஸ்ரேல், அமெரிக்கா, ரஸ்யா, சீனா உட்பட்ட பல நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கவில்லை.

அனைத்துலக நீதிமன்றில் அங்கத்துவ நாடாக இணைவதற்கான விண்ணப்பம் பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தின் ஜனாதிபதி மஃமுட் அப்பாஸினால் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டு, அவரால் ஏற்கப்பட்டு. ஏப்ரல் 1ஆம் திகதி (2015) பலஸ்தீனத்தின் அங்கத்துவம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஊஊயின் 123வது அங்கத்துவ நாடாக பலஸ்தீனம் இணைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இணைவு தொடர்பாக விண்ணப்பித்தபோது, ‘அரசுகளை’ மட்டும்தான் இணைக்க முடியுமென்று பலஸ்தீனத்தின் விண்ணப்பம் ICCஇனால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாட்டுக்குள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை உள்ளிளுப்பதானது பயங்கரவாதத்திற்கு எதிராகத் தம்மைத் தற்காத்துக்கொள்ளும் தமது உரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கை என இஸ்ரேல் காட்டமாகத் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தது. போர்க்குற்ற விசாரணைகள் மீதான இஸ்ரேலின் எதிர்ப்பிற்கு அமெரிக்கா முழுமையான ஆதரவினைத் தெரிவித்துள்ளது.

அரசியல் ரீதியான தீர்வினை எட்டுவதற்குப் பலஸ்தீனத் தன்னாட்சி நிர்வாகம் அனைத்துலக அளவிலான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது. அமெரிக்கா வாயளவில் பேச்சுவார்த்தை, சமாதான முயற்சி பற்றி முனைப்புக்காட்டி வருவதான தோற்றம் தெரிந்தாலும், அது முற்றுமுழுதாக இஸ்ரேலிற்கு ஆதரவாகவே செயற்பட்டுவருகின்றது. இந்தப் புறநிலையில் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய அனைத்துலக சக்திமிக்க கட்டமைப்புகளை நேரடியாக நாடுகின்ற முயற்சிகளில் பலஸ்தீனம் (அப்பாஸ் தரப்பு) இறங்கியுள்ளது.

2012 இறுதியில் ஐ.நா மன்றத்தில் “அவதானிப்பு நாடு” என்ற அந்தஸ்தினை விண்ணப்பித்துப் பெற்றிருந்தது பலஸ்தீனம். நடைமுறை அர்த்தத்தில், ’அவதானிப்பு நாடு’ எனும் அங்கீகாரமானது மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளையே கொண்டிருக்கின்றது. ஐ.நா அவையின் கூட்டத்தொடர்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்பதற்குரிய உரிமை இதன் மூலம் வழங்கப்படுகின்றது. அத்தோடு ஐ.நாவின் கிளை அமைப்புகளில் உறுப்புரிமை பெறுவதற்குரிய வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால் தனிநாடென்ற அனைத்துலக அங்கீகாரம் பெறப்படும் வரை ஐ.நாவில் முன்வைக்கப்படும், நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது வாக்களிக்கின்ற உரிமை பலஸ்தீனத்திற்கு வழங்கப்படமாட்டாது.

இஸ்ரேல்-பலஸ்தீனத்திற்கிடையில் நெடுங்காலமாகக் கிடப்பிலுள்ள சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சியானது, மீளத் தொடங்கப்பட்டு, தனிநாட்டுக்கான இறுதித்தீர்வு எட்டப்படும் பட்சத்தில் முழுமையான உரிமைகளுடனான ஐ.நா உறுப்புரிமை பலஸ்தீனத்திற்குச் சாத்தியமாகும். பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதுமாக பெரும் இழுபறி தொடர்கின்றது.

ஆரம்பகாலத்திலும், அமெரிக்கா மற்றும் நோர்வேயின் நேரடி அனுசரணையுடன் பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடங்கப்பட்ட 90களின் காலகட்டங்களிலும் யாசீர் அரபாத் தலைமையிலான பலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைமையின் கீழ் பலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட அக-புறச் சூழ்நிலைகள் இருந்தன. யாசிர் அரபாத்தின் மறைவிற்குப் பின்னர், ஹமாஸ் அமைப்பு பலம்பெறத் தொடங்கியது. 2006ஆம் ஆண்டு நடைபெற்ற பலஸ்தீன தேர்தலின் பின்னர் நடந்தேறிய நிகழ்வுகளின் விளைவாக காசா பிரதேசம் ஹமாஸ் அமைப்பின் மேலாண்மைக்குள் கொண்டுவரப்பட்டது.

தற்போதைய நிலையில் பலஸ்தீன மக்கள் பிரதேச ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாஃதா (PLOவின் அரசியல் அமைப்பு) மற்றும் ஹமாஸ் என இரண்டு அமைப்புகளின் கீழ் பிளவுபட்டுள்ளன. காசா பிரதேசம் ஹமாஸ் அமைப்பின் கீழும், மேற்குக் கரை பாஃதா தலைமையிலான பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன.

போர்க்குற்ற விசாரணைகள் சார்ந்த நடவடிக்கைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் முன்னெடுக்குமாயின் பலஸ்தீனப் பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய சாதகமான நகர்வுகளுக்கு ஒரு அழுத்தமாக அமைய இடமுண்டு. ஏலவே பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டுள்ள ர்யஅயள அமைப்பினைப் பலவீனப்படுத்தப்படும் நிலையும் இதன் மூலம் தோன்றலாம். மஃமூட் அப்பாஸ் (PLO – Fatah) தலைமைக்கும் Hamas அமைப்பிற்குமிடையில் அதிகாரப் போட்டியும் முரண்பாடுகளும் நிலவிவருகின்ற புறச்சூழலில் ர்யஅயள அமைப்பினைப் பலவீனப்படுத்தும் உள்ளார்ந்த விருப்பம் அப்பாஸ் தலைமைக்கு இருக்க வாய்ப்புண்டு.

பலஸ்தீன மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காது உறுதியோடு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது Hamas என்ற அபிப்பிராயம் பலஸ்தீன மக்கள் மத்தியில், குறிப்பாக காசா பிரதேச மக்கள் மத்தியில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை மஃமூட் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகம், முற்றுமுழுதான மிதவாத அரசியல் வழிமுறைகளுக்குள் சென்று நீண்டகாலங்கள் கடந்துவிட்டதென்பதோடு அது செயற்திறன் அற்றுவிட்டதான கருத்துகளும் மேலோங்கியுள்ளது.

பேச்சுவார்த்தைகளை மீள உயிர்பெறவைப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இஸ்ரேல் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அதற்கு பாதகமான புறநிலைகளை ஏற்படுத்துவதிலேயே மாறிமாறி ஆட்சிக்கு வந்த இஸ்ரேல் தலைவர்கள் முனைப்புக் காட்டிவந்துள்ளனர். பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான தற்போதைய இஸ்ரேல் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலேயே முனைப்புக் காட்டுகின்றது.

2014 டிசம்பர் 17ஆம் நாள் ஐரோப்பிய பாராளுமன்றம் பலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்துள்ளது. இது ஒரு கொள்கை ரீதியான அங்கீகாரமாகும். அந்த வகையில் 2012ஆம் ஆண்டு ஐ.நாவில் அவதானிப்பு நாடு என்ற அங்கீகாரம் போன்று இதற்கும் குறியீட்டு ரீதியிலான முக்கியத்துவம் உள்ளது. கொள்கை ரீதியாக சமாதானப் பேச்சுக்களை முன்தள்ளுவதற்கான உந்துதலாகவும், தனிநாட்டுத் தீர்வுக்கு ஆதரவளிக்கும் வகையிலுமே இந்தத் தீர்மானம் அமைந்துள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றம்; தெரிவித்துள்ளது.

2014 ஒக்ரோபரில் சுவீடன் பலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்திருந்தது. பிரான்ஸ், பிரித்தானியா, அயர்லாந் ஆகியனவும் நிபந்தனைகளுடன் பலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்துள்ளன. அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளும் அங்கீகரிக்க வேண்டுமென்ற நிலைப்பாடு ஐரோப்பிய பாராளுமன்ற இடதுசாரி உறுப்பினர்கள் மட்டத்தில் முன்வைக்கப்பட்டுவருகின்றது

இறுதித்தீர்வுக்கான கோரிக்கைகள் அடங்கிய தீர்மான முன்மொழிவொன்றினை 2014ஆம் ஆண்டு இறுதியில், ஐ.நா மன்றத்திற்குப் பலஸ்தீனம் சமர்ப்பித்திருந்தது. ஒரு ஆண்டுக்குள் இறுதித்தீர்வுக்குரிய இணக்கப்பாடு எட்டப்படவேண்டும் என்றும், 2017 இறுதிக்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனப் பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறவேண்டும் எனவும் தீர்மான வரைபில் கோரப்பட்டுள்ளது. பலஸ்தீன நிர்வாகத்தின் சார்பில் ஜோர்டான் அரசாங்கத்தினால் மேற்படி வரைபு ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலான உள்ளடக்கத்துடன் தீர்மான முன்மொழிவு வரையப்பட்ட போதும், ஐ.நாவின் போதிய ஆதரவின்றி அத்தீர்மானம் செயலிழந்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐ.நா பாதுகாப்பு மையத்திற்கு கொண்டுசெல்வதற்குரிய ஆதரவினைப் பெறமுடியவில்லை. பாதுகாப்பு மையத்திற்கு கொண்டுசெல்லப்படுவதற்கு குறைந்தது 9 நாடுகளின் ஆதரவு அவசியமாகும். பிரான்ஸ், ரஸ்யா, சீனா, அர்ஜென்டீனா, Tsjad, சிலி, ஜோர்டான், லக்சம்பேர்க் ஆகிய 8 நாடுகள் மட்டும் ஆதரவாகவும், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியன எதிராகவும் வாக்களித்தன. ஏனைய நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காது விலகியிருந்தன.

ஓஸ்லோ உடன்படிக்கைக்கு அமைய, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் “நீதியான, நிலைத்துநிற்கக்கூடிய, தீர்க்கமான சமாதானத் தீர்வு மூலம் பலஸ்தீனத் தனியரசை அமைப்பதென்ற அடிப்படையில் அத்தீர்மானம் வரையபட்டதாகக் கூறப்படுகின்றது.

ஐ.நா தீரமானத்தின் ஊடான சமாதானப்பேச்சுக்களை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக யூதக்குடியேற்றங்களை வெளியேற்றுவது தொடர்பாகக் காலக்கெடு விதிப்பதில் அமெரிக்காவிற்கு உடன்பாடு இல்லை. நீண்டகாலமாகவே இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்பு மையத்தில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது.

பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன் ஆகிய பாதுகாப்பு மைய அங்கத்துவ நாடுகள் பலஸ்தீனப்பிரச்சினையை ஐ.நா நிகழ்ச்சி நிரலில் சமகால முக்கியத்துவப்படுத்துகின்றன. இம்மூன்று நாடுகளும் இணைந்து தனியாகவொரு தீர்மானத்தை முன்வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 2 ஆண்டுகளுக்குள் தீர்வினை எட்டுவதென்ற அடிப்படையில் அத்தீர்மானம் அமையுமெனவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக இங்கு ஒரு விடயத்தை அவதானிக்க முடியும். அதாவது இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையில் பலஸ்தீனத்தின் கோரிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டத்தில் ஒப்பீட்டளவில் ஆதரவுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் மிதமிஞ்சிய முண்டுகொடுப்புத்தான் உண்மையில் ஒஸ்லோ உடன்படிக்கை எட்டப்பட்டு, 25 ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையிலும் சமாதானத் தீர்வு இழுத்தடிக்கப்படுவதற்கான முதன்மைக் காரணியாகும்.

இஸ்ரேலில் இடம்பெற்ற அண்மைய தேர்தலின் போது பிரதமர் நேதன்யாகு பலஸ்தீனத் தனியரசிற்கு எதிரான கூற்றுகள், அமெரிக்காவிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தமை தொடர்பான பார்வையை முன்னைய கட்டுரை ஒன்றில் பார்த்திருந்தோம். அந்தப் பின்னணியில், 1967இல் “7 நாள் போர்” மூலம் பலஸ்தீனப் பிரதேசங்கள் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பலஸ்தீனத் தனியரசை அமைப்பதற்கான “ஐ.நா பாதுகாப்புச்சபைத் தீர்மானம்” ஒன்றிற்கு ஆதரவளிப்பதற்கு அமெரிக்கா முனைவதான தகவல்களும் வெளியாகியிருந்தமையும் உற்றுநோக்கத்தக்கது.

ஜப்பான் பிரதமர் Shinzo Abeஅண்மையில் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், மேற்கு ஐரோப்பிய வர்த்தகச் சந்தையில் தங்கியிருப்பதைக் குறைத்துக் கொண்டு, வட ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவினை அதிகரிக்கவுள்ளதான செய்தியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஜப்பான் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனத்தின் நியாயமான கோரிக்கைக்குத் தார்மீக ஆதரவினை நீண்ட காலமாக வழங்கி வருகின்றன என்பதோடு, ஐரோப்பிய நாடுகள் சில பலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்துள்ளன. இந்தப் பட்டியல் நீண்டுசெல்லும் வாய்ப்புகள் உளளன. அத்தோடு ஐரோப்பியக் கட்டமைப்புகள் பலவற்றிலும் பலஸ்தீனத்தை உள்வாங்கி வருகின்றன. எனவே ஐரோப்பிய நாடுகளின் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டிற்கான பதிலடியாகவே இஸ்ரேல் பிரதமரின் வர்த்தக உறவு சார்ந்த கூற்று நோக்கப்படுகின்றது.

ICC – விவகாரத்தை தனக்கான ஒரு அரசியல் பேரம்பேசும் வாய்ப்பாகக் கைக்கொள்ளும் முனைப்பு அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீனத் தரப்பிற்கு உள்ளது. மேற்குக்கரையில் யூதக்குடியேற்றங்கள் நிறுவப்படுவதைத் இஸ்ரேல் நிறுத்தும் பட்சத்தில், போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்துவதைக் கைவிடத் தயாராகவுள்ளதான சமிக்ஞையை அவர்கள் வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

கிழக்கு ஜெருசலேம் உட்பட்ட மேற்குக்கரைப் பிரதேசங்களில் 700 000 வரையான யூதர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில் திட்டமிட்ட யூதக்குடியேற்றங்களை வெளியேற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ICCயின் விசாரணைக்கான குற்றச்சாட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவில் அவதானிப்பு நாடு என்ற அங்கீகாரம், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தனிநாட்டுக்கான அங்கீகாரம், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவமும் போர்க்குற்ற விசாரணைக்கான சமிக்ஞை என்பன பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமை, தாயக உரிமைககான இறுதித்தீர்வு அல்ல என்பது அனைத்துத் தரப்பும் அறிந்த உண்மை. ஆனால் பலஸ்தீனத்தின் அரசியல் தேக்கநிலையிலிருந்து வெளிவருவதற்கான முக்கிய திறவுகோலாக இவை கணிக்கப்படுகின்றன. அரசியல் இராஜதந்திர நிலையிலும் முக்கிய நகர்வாக பார்க்கப்படக்கூடியது.

பொங்குதமிழ், மே 2015

Leave A Reply