பூட்டப்படாதிருக்கிறது ஒரு கதவு – Kolbein Falkeid

உன்னை நினைத்தவாறிருக்கிறேன்
என் உடலுக்குள் பூட்டப்படாத கதவுடன்
ஒரு அறை
அங்கு
உன் எல்லாப் பொருட்களும்
உன் சொற்ப வாழ்வின் எல்லாத் தடங்களும்
பனியின் நிழல்களாகி
நிலவொளியில் படர்ந்திருக்கின்றன

திறப்பு என்னிடமுள்ளது
விநாடிகளின் இடைவெளிகளுக்கொருமுறை
உட்செல்கிறேன்
எல்லாவற்றையும் தொட்டுப் பார்கிறேன்
சொற்களற்றுப் பேசுகிறேன்
வெறுமையுடன்
நிரந்தரச் செவியொன்றுடன்

உன் நினைவில் ஏங்குகிறேன்
அதிகபட்சம் என்னைப் போலவே
நீயும் இருந்ததும் அதற்கொரு காரணம்
நீ இல்லாத இக்கணங்களில்
பிரமை பிடித்துத் தனித்தலைகிறேன்
எனக்குள் ஒளிர்ந்திருந்த அனைத்தும்
இப்போ மறைந்தொழிந்தன
ஒரு அழகான முன்றிவிப்புடன்
அனைத்தையும் ஒரு முன்கோடை நாளாய்
நீ சுமந்து சென்றிருக்கின்றாய்

தருணங்களில்
நாம் முரண்பட்டிருக்கிறோம்
எம் காலநிலைக் கணிப்புகள்
மாறுபட்டிருக்கின்றன
முகிற்பேழ் மழையும் கடற்காற்றும்
முட்டிக்கொண்டிருக்கின்றன
ஆயினும் பெரும்பாலும் உடன்பாடுகளுடன்
எமது நாட்கள் நகர்ந்திருக்கிறன
சங்கிலியில் கோர்க்கப்பட்ட முத்துக்கள் போல்

உன்னை நினைத்தபடி இருக்கிறேன்
காலநிலையோ நாட்களோ
மாற மறுக்கின்றன
வெறுமை எதற்கான பதிலையும்
ஒருபோதும் வைத்திருப்பதில்லை!

Leave A Reply