பெருங்காதல்! – Stein Mehren

பெருங்காதல்!
பிரிவின் முடிவிலும்
பெருங்காதல் ஒருபோதும் சாவதில்லை
பெற்றுக்கொண்ட ஸ்பரிசங்கள்
மறக்கப்பட்டபின்னும் பீறிட்டுக்கிளம்புவன
ஸ்பரிசங்களின் விதைகள் எண்ணற்றவை
உன் ஸ்பரிசங்களின் சுவடுகளில்
அவை கனிகளும் இலைகளுமாய்
இலையுதிர்கால நிலப்பரப்பைப் போன்று
கருஞ்சுவாலை இரவுகளின் மகிமையினால்
நிரப்பப்படும் நாட்கள் போன்று…
எப்பொழுதுமே காதலரைக் காட்டிலும்
காதல் ஆழம்பரந்து நிலைக்கும்
பார்வையினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒளி
என்னுள் காதலாய் பற்றுவதற்கு முன்பிருந்தே
ஒளிர்ந்திருக்கக்கூடும்
நாம் சந்திப்பதற்கும் நம் அறிமுகம்
நிகழ்வதற்கும் முன்னரே
ஓய்வின்றி எம் பந்தங்களுக்குள்
நாம் அலைந்து திரிந்திருக்கவும்கூடும்
உன் மீதான ஏக்கம்
காலமற்று என்னுள் உலவித்திரியும்
என் விழிகளுக்கான புதியபுதிய
இரகசிய வழிகளை உன் முகம் அறியும்
புயல்களையும் நட்சத்திரங்களையும்
கண்டடையும் வேட்கை நிகழும்
எவரும் தொட்டிராத வீணையின்
நரம்புகளைத் தொட்டு
வயதில் நரைவீழினும்
அதன்மேல்
அந்தியின் இசையைப் பொழியும்
காதல்முகத்தின் ஒளி நித்தியமாகிப் படரும்
பூமியின் வெளிகளில்
காதல்முகத்தினொளி முடிவெய்துவதில்லை
அது ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்
அது நித்திய ஒளி
புதிய மனிதருக்குள்
புதிய காதலருக்குள்
எல்லாக் காலங்களிலும்
***

-மூலம்: Stein Mehren
-தமிழில்: ரூபன் சி

Leave A Reply