மண்டேலா: அடக்குமுறைக்கு எதிரான குறியீடு

பல பத்து ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாகவும், அடிமைப் படுத்திய சமூகமாகவும் இருந்த ஒரு தேசத்தை மீண்டும் பகை முரண்களுக்குள் இட்டுச் செல்வதை முற்றிலும் தடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புணர்வோடுதான் கறுப்பின மற்றும் வெள்ளையின மக்களுக்கிடையிலான நல்லிணக்கம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அதனால் தான் நல்லிணக்கத்திற்கான முக்கிய குறியீடாகவும் மண்டேலா மேற்குலகத்தால் போற்றப்படுகின்றார்.

தென்னாபிரிக்காவில் நிலவிவந்த வெள்ளையர்களின் நிறவெறி மேலாதிக்க ஆட்சிக்கு (Apartheid regime) எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவரும், அந்நாட்டின் முன்னாள் அரசதலைவருமான நெல்சன் மண்டேலா அவர்கள்; 05.12.13 அன்று தனது 95வது வயதில் காலமாகி விட்டார். இறப்பதற்கு முன்னர் பல மாதங்களாக நுரையீரல் தொற்றுக் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மண்டேலா அவர்கள் ஒட்டுமொத்த உலகத்தாலும் ’விடுதலைவின் குறியீடாக’ ஓம்பப்படுகின்ற மாபெரும் தலைமைத்துவ ஆளுமைக்குச் சொந்தக்காரர். உலகத் தலைவர்கள், அரசியல், சமூக, போராட்டத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண குடிமக்களுக்குமான ஒரு உந்துதல் சக்தியாக மண்டேலா விளங்குகின்றார்.
கிளர்ச்சியாளராக தனது பொதுவாழ்க்கையை ஆரம்பித்த அவர் தேசத்தின் தந்தையைக வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.

1918இல் தென்னாபிரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான Transkeiஇன் Mvezo எனும் கிராமத்தில் பிறந்த மண்டேலா அவர்கள், சட்டத்துறையில் கல்வி பயின்றவர்.

1948 காலப்பகுதியில் நிறவெறி மேலாதிக்கத்திற்கெதிரான போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது. சிறுபான்மையினராக (மொத்த மக்கட்தொகையின் 13 விழுக்காட்டினராக) இருந்த வெள்ளையினத்தவர்களின் ஆட்சியின் கீழ், பெரும்பான்மைக் கறுப்பின மக்கள் மீது அனைத்து வகையிலும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. சட்டங்கள் வாயிலாக சமூக, பொருளாதார நிலைகளில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அனைத்து நிலைகளிலும் கறுப்பின மக்கள் ஒமுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இப்புறநிலையில் நிறவெறி ஆட்சிபீடத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் மண்டேலா தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றார். 1943 இல் ஆபிரிக்க தேசிய அவையின் (African National Congress, ANC) இளையோர் அமைப்பில் இணைந்து கொண்டார்.

1956 இல் மண்டேலாவும், 155 போராளிகளும் முதன்முதலாக கைதாகினர். தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் 5 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு, 1961இல் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான அதே ஆண்டு ANC போராட்ட அமைப்பின் ஆயுதப் பிரிவிற்கான முதன்மைக் கட்டளைத் தளபதியாக மண்டேலா பொறுப்பேற்றார்.

மீண்டும் 2 ஆண்டுகளில் (1963) தேசத்திற்கெதிரான நாசவேலைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. மண்டேலா உட்பட்ட ANC அமைப்பின் பல மூத்த தலைவர்கள், போராளிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். சிறைவாசம் அனுபவித்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள், தென்னாபிரிக்காவின் ரொபன் தீவில் (Robben Island) தனிமைப்படுத்தப்பட்ட உயர்நிலை பாதுகாப்புள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். மண்டேலாவும் ஏனைய அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த சுண்ணக்கல் சுரங்கங்களில் கல்லுடைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

1963 கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, தனது சார்பாக வாதிட்டு மண்டேலா ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்ற உரையாகும்.

’ஆபிரிக்க மக்களின் விடுதலைக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணிக்கத் திடங்கொண்டுள்ளேன். நான் வெள்ளையின மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடினேன். கறுப்பின மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடினேன். சுதந்திரமும் ஜனநாயகமும் அமையப் பெற்ற – எல்லோருக்கும் சமத்துவ வாய்ப்பும் இனங்களுக்கிடையிலான பரஸ்பர உறவும் கொண்ட ஒரு சமூகத்தை கட்டியெழுப்பும் கொள்கையில் உறுதியாக உள்ளேன். எனது வாழ்க்கைப் பாதையில் இந்தக் கொள்கையைத் தாங்கிப் போராடவும், எனது வாழ்நாளுக்குள் இதில் வெற்றி கொள்ளவும் உறுதி பூண்டுள்ளேன். இந்தக் கொள்கைக்காக எனது உயிரைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படின், அதற்கும் தயாராகவுள்ளேன்’ என்பது அந்த உரையில் முக்கியத்துவம் பெறும் கொள்கைப் பிரகடனக் கூற்றுகளாகும்.

இந்தக் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக, அவரது வாழ்க்கை முடிவதற்குள் நிகழ்த்திக்காட்டிய மாற்றங்கள் சான்றாக உள்ளன.

உறுதியான கொள்கை, போராட்ட குணம், அர்ப்பணிப்பு, அரசியல் தெளிவு, இராஜதந்திரம், தீர்க்க தரிசனம், துணிச்சலான முடிவுகள், நெகிழ்வுப் போக்கு போன்ற அனைத்துப் பண்பியல்புகளும் ஒரு தேர்ந்த தலைமைத்துவத்திற்குரிய அடிப்படைகளாகும். இப்பண்பியல்புகளின் திரட்சியாக மண்டேலாவைக் கூறமுடியும்.

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்ட காலத்திலிலும், சிறையில் அடைக்கப்பட்ட காலகட்டங்களிலும் தென்னாபிரிக்க ஆட்சியாளர்களாலும் வேறு பல நாடுகளின் தீவிர வலதுவாரி சக்திகளாலும் பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்ட மண்டேலா, ஒடுக்கப்படும் மக்கள் இனங்களாலும், உலகின் பல நாடுகள் மட்டத்திலும் விடுதலைப் போராளியாகவே பார்க்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலிருந்தே, தென் ஆபிரிக்க ஆட்சியாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தப் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறே 1990 இல் மண்டேலாவின் விடுதலைக்கும், 1994இல் தென்னாபிரிக்க வரலாற்றின் முதன்முதலான ஜனநாயகத் தேர்தலுக்கும் வழிவகுத்தது.

1993 இல் நெல்சன் மண்டேலாவிற்கும், தென்னாபிரிக்காவின் இறுதி வெள்ளையின அரசதலைவர் F.W.de Klerk இற்கும் சமாதானத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டது. அமைதியான முறையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் நிறவெறி மேலாதிக்கம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமையை அடையாளப்படுத்தியும், ஜனநாயத்திற்கான புதிய அடித்தளத்தினைத் தோற்றுவித்தமைக்காகவும் இவ்விருது இருவருக்கும் வழங்கப்பட்டது.

1994 இல் தென்னாபிரிக்க வரலாற்றில் முதற்தடவையாக ஜனநாயக வழியிலமைந்த தேர்தல் இடம்பெறுகின்றது. அத்தேர்தலில் வெற்றியை அறுவடை செய்து, அந்நாட்டின் முதலாவது கறுப்பின அரசதலைவராக மண்டேலா பொறுப்பேற்கின்றார். ஐந்தாண்டு கால ஆட்சியின்; பின்னர் (1999இல் 5 ஆண்டுகளின் பின்னர்) அரசதலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகினார்.

27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர், 1990ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னரான காலப்பகுதி தென்னாபிரிக்க வரலாற்றிலும், நெல்சன் மண்டேலாவின்; வரலாற்றிலும் அதிமுக்கியமான காலப்பகுதியாகும். தென்னாபிரிக்காவின் நிறவெறி மேலாதிக்கத்திற்கு முடிவு கட்டப்பட்டு, ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலி, ஜனநாயகத்தை ஏற்படுத்தியது வரையான மாற்றங்களுக்கு மண்டேலா என்ற ஆளுமை மிக்க தலைமையின் செயல் நகர்வுகள் மூலாதாரமாக இருந்துள்ளன.

மண்டேலா அவர்கள் 2004 இற்குப் பின்னர் அரசியல் செயற்களத்தில், பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை என்ற போதும், அவருடைய இருப்பு தென்னாபிரிக்க தேசத்திற்கு குறியீட்டு நிலைப்பட்டும் தார்மீக அடிப்படையிலும் செல்வாக்குச் செலுத்திய ஒன்றாக இருந்திருக்கின்றது.

அரச தலைவராகப் பொறுப்பு வகித்த 5 ஆண்டுகளில், நல்லிணக்கம் என்பதே மண்டேலாவின் முதன்மை அரசியல் குறிக்கோளாக இருந்தது. மண்டேலா தெரிவு செய்த அரசியல் செல்நெறியானது பகைமை உணர்வோடு, பழிதீர்க்கும் அரசியல் செல்நெறி அல்ல. மிகவும் சிக்கல் மிகுந்த, முரண்பாடுகள் கூர்மையடையக்கூடிய புறநிலைகளுக்கு மத்தியில், வேறுபாடுகளைக் கடந்த தேசமாக தென்னாபிரிக்காவை ஐக்கியப்படுத்துகின்ற வரலாற்றுப் பொறுப்பு அவர் முன்னால் இருந்தது.

பல பத்து ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாகவும், அடிமைப் படுத்திய சமூகமாகவும் இருந்த ஒரு தேசத்தை மீண்டும் பகை முரண்களுக்குள் இட்டுச் செல்வதை முற்றிலும் தடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புணர்வோடுதான் கறுப்பின மற்றும் வெள்ளையின மக்களுக்கிடையிலான நல்லிணக்கம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அதனால் தான் நல்லிணக்கத்திற்கான முக்கிய குறியீடாகவும் மண்டேலா மேற்குலகத்தால் போற்றப்படுகின்றார்.

அடக்குமுறைக்குள்ளான ஒரு மக்கள் இனம், தனது விடுதலையை வென்றெடுத்த பின்னர், அந்த இனத்தின் தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க அரசியல் இது என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது. அடக்குமுறையாளர்கள் வென்றிருப்பின் நல்லிணக்கமென்பது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் மேலாதிக்க நலன் சார்ந்த பேச்சளவில் மட்டுமான நல்லிணக்கமாகவே இருந்திருக்கும்.

ஒரு முறை மட்டுமே அரசதலைவர் பதவியில் இருந்து விட்டு, தொடர்ந்து தேர்தலில் பங்கேற்காது விலகியமையானது, அவர் பதவி, அதிகார விருப்பற்ற ஒரு மனிதர் என்பதை வெளிப்படுத்தி அவருக்கு மேலும் பெருமை சேர்த்து நிற்கின்றது. ஏனைய ஆபிரிக்க, ஆசிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பல பத்து ஆண்டுகள் ஆட்சி நாற்காலியில் அமர்ந்திருப்பதில் அதீத மோகம் கொண்டவர்கள் என்பதை சமகாலம் கண்கூடாகக் கண்டு வந்திருக்கின்றது.

ஏனைய ஆபிரிக்க நாடுகளின் முரண்பாட்டுக் களைகை மற்றும் சமாதானத்திலும் மண்டேலா மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். அனைத்துலக அரசியல் விவகாரங்களில் தனது கருத்துகளை வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் வெளிப்படுத்தியவர். அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் ’பயங்கரவாதத்திற்கு எதிரான போரினையும்இ அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியலையும்’ கடுமையாக விமர்சித்தவர். ஈராக்கின் எண்ணெய் வளத்தினை இலக்கு வைத்தே George W.Bush ஈராக் மீதான படையெடுப்பில் இறங்கினார் எனவும் கூறியவர் மண்டேலா.

தன்னுடைய அர்ப்பணிப்பும், தீர்க்க தரிசனமும் இராஜதந்திரமும் மிக்க தலைமைத்துவ செயல்வழியின் மூலம் கொடிய அடக்குமுறையிலிருந்து தனது மக்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்ததோடு, ஜனநாயக அடித்தளத்தினைத் தோற்றுவித்து தனது இலக்கில் மண்டேலா என்ற தலைவர் வெற்றி பெற்றிருக்கின்றார்.

நெல்சன் மண்டேலா என்ற பெயர், நிறவெறி மேலாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தின் குறியீடாக மட்டுமல்ல அனைத்துவகை அடக்குமுறைகளுக்கும் எதிரான ’வாழும் குறியீடாக’ கடந்த நூற்றாண்டும் இந்த நூற்றாண்டும் பார்த்த ஒரு பெயராகும். தொடர்ந்தும் வரலாற்றுப் பெருவெளியில் அப்படித்தான் அவர் பார்க்கப்படுவார் என்பது மிகையான கூற்றல்ல.

நிறவெறி மேலாதிக்க ஆட்சி அகற்றப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்ட புறநிலையில், தென்னாபிரிக்க தேசம் அரசியல் சமூக பொருளாதார நிலைகளிலில் முற்றிலும் மேம்பட்டு விட்டதா என்றால், இல்லை என்பதே யதார்த்தமாகும். 50 விழுக்காடு வரையான கறுப்பின மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். எயிட்ஸ் தொற்று நோய் மிகப்பாரிய அளவில் பரவி வருகின்றது. கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையில் பெரும் குறைபாடுகள் நிலவுகின்றன.

டிசம்பர் 2013


ஓவியம்: துசி கணேச்சந்திரா

Leave a Reply

ரூபன் சிவராஜா
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.