‘Antisocial behavior’ – சமூகவிரோத நடத்தை!

சமூக வலைத்தளங்கள் எந்தவிதக் கட்டுகளுமற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குரிய வெளிகளைத் திறந்துவிட்டிருக்கின்றன. இணைய இணைப்புடன் ஒரு கைத்தொலைபேசி இருந்துவிட்டால் போதும். யாரும் எங்கிருந்தும் கருத்துகளைப் பகிர்ந்து விடலாம். கருத்தென்ற பேரில்கூட எதையாவது பதிந்து விடலாம்.

கருத்துகளை வெளிப்படுத்துவதற்கென்று ஒரு அணுகுமுறை இருக்கிறது. வரைமுறை இருக்கிறது. அடிப்படை அறம் சார் விழுமியங்களும், பண்புகளும் இருக்கின்றன. பாெறுப்புணர்வு அவசியம். அவரவர் பார்வைக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும், அளவீடுகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும், விழுமியங்களுக்கும் ஏற்ப, கருத்துகள் மாறுபடுவது இயல்பு.

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்தும் போது குறைந்த பட்சம் தனது சொந்த முகத்தோடு, பெயரோடு தன்னை அடையாளப்படுத்தியவாறு கருத்து வெளியிடுவதென்பது அடிப்படை நிபந்தனையும் நேர்மையுமாகும்.
இங்கு துயரம் என்னவெனில் முகமூடிகளோடும், Fake IDகளோடும் கருத்தென்ற பெயரில் அவதூறுகளையும், தனிமனித தாக்குதல்களையும் திட்டமிட்ட வகையில் மேற்கொள்கின்ற ஒரு இழி கலாச்சாரம் தமிழ்ச்சூழலில் அதிகரித்து வருகின்றது.
சொந்த முகத்தோடு சொந்தப் பெயரோடு உரையாட, விவாதிக்க, கருத்துக்கூற முடியாதவர்களை எந்த வகையில் சேர்ப்பது. இவர்கள் விவாதங்களுக்கும் கருத்துகளுக்கும் நேரடியாக முகம் கொடுப்பதில்லை. கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்வதும் இல்லை. அதனைத் திசை திருப்பும் வகையில் – முன்வைக்கப்படும் கருத்துடன் கிஞ்சித்தும் தொடர்பில்லாத விடயங்களையே எழுதுகின்றனர். அவை அவதூறுகளாக, பொய்க் குற்றச்சாட்டுகளாக, தனிமனித தாக்குதல்களாக இருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் ஒரு வகை வாந்தியெடுத்தலாகவே இருக்கின்றன.

உண்மைக்குப் புறம்பான கருத்து வறுமையுடையோரின் இவ்வகை வாந்தியெடுப்புகளையிட்டு அதிகம் பொருட்படுத்த வேண்டிய தேவையில்லைத் தான். இருந்த போதும் இந்தப் போக்கு அதிகரித்து வருகின்றமையைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
சமூக அமைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனங்களைச் சரியான தளத்தில் சரியான அணுகுமுறையோடு எதிர்கொள்ளத் திராணியற்றவர்களால் இவ்வாறான முகமூடிகளும் Fake IDகளும் களமிறக்கப்பட்டுள்ள சம்பவங்களையும் அண்மைக்காலங்களில் அதிகம் காணமுடிகிறது.
சமூகத்தை வழிநடத்தும் அமைப்புகளாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் நிறுவனங்கள் இத்தகையை போக்கினை அனுமதித்து, ஊக்குவிக்கும் நிலையானது, அவர்களின் பொறுப்பற்ற தன்மையையும், பார்வைக்கோளாறினையும் அம்பலப்படுத்துகின்றது. விமர்சனங்கள்-குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் அவர்கள் கொண்டுள்ள போதாமைகளையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

விமர்சனங்களைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வது – எதிர் விமர்சனங்களை முன்வைப்பது – பதிலளிப்பது – நியாயப்படுத்துவது – எதிர்ப்பது – சரி தவறுகளுக்கு அப்பால் தம்தரப்பு நியாயங்களை முன்வைப்பது என்பது வேறு. இவை கருத்துகளைக் கருத்துகளால் எதிர்காெள்ளும் முறைமை. அவதூறுகளைப் பரப்புவதென்பது வேறு. இவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை அறியாத தன்மையே இவ்வாறான அவதூறுக் கலாச்சார வளர்ச்சியின் நதிமூலம்.
இதில் இன்னொரு அவலம் தேசியம் என்ற போர்வையிலும் இவை நிகழ்த்தப்படுகின்றன. அடிப்படை விழுமியங்களைக் கருத்திலெடுக்காத தேசியம் மெய்யான அர்த்தம் பெறுமா? தேசிய முலாம் பூசிய, தேசியப் போர்வை போர்த்திய எல்லாவற்றையும் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்வது சமூகத்திற்கு ஆரோக்கியமா?

இவர்கள் இளைய தலைமுறைக்கு என்ன வகையான விழுமியங்களைக் கடத்தப்போகிறார்கள், இவர்கள் போன்றவர்களால் தான் எமது சமூகம் நிறைந்திருக்கப்போகுதென்றால், இதைப் பற்றிப் பேசாமல் இருப்பது பொருத்தமானதல்ல.
ஒரு வகையில் இந்த அபாண்படமான அவதூறுகளின் பின்னால், இதைச் செய்பவர்களின் கருத்து வறுமை ஒருபுறமிருக்க திட்டமிட்ட நோக்கமும் உள்ளது. சாதாரணமானவர்கள் சமூக அமைப்புகள் மீதான அதிருப்திகளை வெளிப்படுத்தாதிருக்க வேண்டுமென்ற உள்நோக்கமும் இதற்குள் இருக்கின்றது. அவதூறுகள், முத்திரைகுத்தல்களுக்கு அஞ்சி, எதற்கு வம்பு என மக்கள் வாய்மூடி இருப்பதற்கும் இவை வழிகோலுகின்றன. இவ்வாறான இழிசெயல்களை எதிர்த்து நிற்பதற்கு மனவலு வேண்டும். எதிர்க்காவிட்டால் இந்தப் போக்கு மேலும் வளர்ந்து செல்லும்.

தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, நோர்வேஜிய மற்றும் உலகளாவிய ரீதியில் இது அதிகரித்துவரும் ஒரு இழி கலாச்சாரமாகும்.
சமூக வலைத்தளங்களில் இவ்வாறான வாந்தியெடுப்புகள், தனிமனித தாக்குதல்கள், அவதூறுகளில் ஈடுபடுபவர்களை நோர்வேஜிய மொழியில் ‘Nett-Troller’ என்று அழைக்கப்படுகின்றது. இவர்கள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதில் நோர்வே நீதியமைச்சு கவனமெடுத்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘Antisocial behavior’ – சமூகவிரோத நடத்தை கொண்டவர்களாக இத்தகையவர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர்.

‘Character assassination’ – பாத்திரக் கொலை, வெறுப்பினைக் கக்குதல், காழ்ப்புணர்வினை வெளிப்படுத்துதல் என்ற வகையிலும் தனிமனிதத் தாக்குதல்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவை தண்டனைக்குரிய செயற்பாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply