Brexit – இழுபறியும் எதிர்காலமும் – பகுதி 2

ஐரோப்பிய ஒன்றியமானது அதன் உறுப்பு நாடுகளுக்கிடையில் அரசியல் பொருளாதார இணைவாக்கத்தில் மேலும் நெருக்கமான உறவினை எதிர்பார்க்கின்றது. இதனை ஒருவகையில் பிரித்தானியா தனது தனித்துவத்தை இழக்கச் செய்யும் பொறிமுறையாகவும், இறைமையை அடகுவைப்பதாகவும் கருதுகின்றது.

பிரித்தானிய – அயர்லாந்த் முரண்பாடு
பிரித்தானிய – அயர்லாந்த் முரண்பாடு என்பது 15ம் நூற்றாண்டிலிருந்து வரலாற்று நீட்சியைக் கொண்டிருக்கின்றது. 1921இல் அயர்லாந் தனியாகவும் வட-அயர்லாந்த் பிரித்தானியாவின் ஒரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டது. அதிலிருந்து அரசியல் மற்றும் ஆயுத முரண்பாடுகள் நீடித்து வந்தன. 1998இல் கொண்டுவரப்பட்ட ‘புனித வெள்ளி’ சமாதான உடன்படிக்கை மற்றும் அதன் பின்னரான காலகட்டங்கள் தனியாகப் பார்க்கப்பட வேண்டியவை. வட-அயர்லாந்த்தின் தலைநகர் பெல்பஸ்ட்டில் ஏப்ரல் 10, 1998, புனித வேள்ளி தினத்தன்று பிரித்தானிய அரசாங்கத்திற்கும் அயர்லாந்த் அரசாங்கத்திற்குமிடையில்; – வட அயர்லாந்தின் முதன்மையான அரசியல் கட்சிகளின் முன்னிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. வட-அயர்லாந்த் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் உடன்படிக்கை அமைந்திருந்தது. அதாவது வட-அயர்லாந்தின் எதிர்காலம் பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்படுவதென்பதோடு, உள்ளக சுயாட்சியுடன் தனியான பாராளுமன்றத்தினைக் கொண்ட பிராந்திய நிர்வாகம் அமைக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்புத்துறை பிரித்தானிய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் பிரித்தானிய மையப் பாராளுமன்றத்தில் வட அயர்லாந்துக்குரிய தொகுதிப்பிரதிநிதித்துவத்துவமும் அந்த சமாதான உடன்படிக்கையில் எட்டப்பட்டது.

எல்லைக் கையாளல் சிக்கலின் மையப்புள்ளி
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகலுக்குப் பின் அயர்லாந்த் எல்லை நடைமுறை வன்-எல்லையாக (Hard-border) இல்லாமல் இறுக்கம் தளர்த்தப்பட்ட மென்-எல்லையாக (Soft-border) இயங்கவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவுடன் செய்துகொண்ட விலகல் உடன்படிக்கையில் முக்கியமான ஒரு அம்சமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்குள் நிரந்தர உடன்படிக்கை எட்டப்படாதுபோயினும் மென்-எல்லை (Soft-border) நடைமுறைக்கான உத்தரவாதம் வழங்கப்படவேண்டுமென்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாகவுள்ளது. ஏனெனில் இந்த எல்லையின் இறுக்கமென்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வணிக நடமாட்டத்தை வெகுவாகப் குறுக்கக்கூடியது. அது ஒன்றியத்தின் கூட்டுப்பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் அயர்லாந்த் ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் வட-அயர்லாந்த் உறுப்புரிமை நீங்கிய நாடாகவும் இருக்கும் பட்சத்தில் இவ்விரு நாடுகளுக்குமிடையிலான முரண்பாடுகள் மீளௌவும் இந்த எல்லை விவகாரம் கால்கோளாக அமைந்துவிடும் அபாயமுண்டு.

விலகலின் பாதக விளைவுகள்
ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதுபோல் அதன் வரி ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கம் வகிப்பதென்பது வாக்காளர்களின் தீர்மானத்திற்கு முரணானது. அதாவது பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார, வணிக, ஏற்றுமதி, இறக்குமதி ஐரோப்பிய ஒன்றிய சந்தை உடன்படிக்கைகளுக்கு கட்டுப்பட நிர்ப்பந்திக்கப்படும். பொருளாதார நடவடிக்கைகளில் சுதந்திரமான செல்வாக்கினைச் செலுத்தமுடியாத நிலை பிரித்தானியாவிற்கு நீடிக்கும். இந்தப் புறநிலையில் 43 ஆண்டுகாலங்களுக்குப் பின்னர் ஏறபட்;டுள்ள இந்த விலகல் முடிவானது பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரமின்மையை ஏற்படுத்துமென்று சர்வதேச நாணய நிதியம் (International money fund- IMF) தெரிவித்திருக்கின்றது

50 வரையான நாடுகளுடன் பிரித்தானியாவின் அனைத்துத் தொழிற்துறை சார்ந்த வணிக, ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பொருளாதார உடன்படிக்கைகள் மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே நடைமுறையிலுள்ள உடன்படிக்கைகள் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். அத்தோடு புதிய வணிக உடன்படிக்கைகளையும் ஏற்படுத்தவேண்டும்.

வங்கிககள், நதி நிறுவனங்கள் பிரித்தானியாவிலிருந்து வெளியேற நேரும். ‘லண்டன் மாநகரம்’ சர்வதேச நிதிமையங்களில் ஒன்றென்ற அதன் அந்தஸ்தை இழக்க நேரிடும். ஐரோப்பிய ஒன்றிய நாடாக பிரித்தானியா இருக்கும் போது வங்கிகளும் நிதிநிறுவனங்களும் பெரும் வருமானத்தை ஈட்டுவதற்கான பரந்த வாய்ப்பு உள்ளன.

வேலை வாய்ப்புகள் கணிசமாகப் பாதிப்புகளைச் சந்திக்கும். ஏறத்தாழ மூன்று மில்லியன் பிரித்தானிய வேலை வாய்ப்புகள், ஐரோப்பிய ஒன்றிய வணிகத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் இணைந்திருப்பதே பிரித்தானிய நலன்களுக்கு உகந்ததென அமெரிக்கா, சீனா உட்பட்ட பொருளாதார சக்திகளும் கருதுகின்றன. ஸ்கொட்லாந்த தனிநாட்டுக் கோரிக்கை மீள் எழுச்சிக்கு இந்தப் பிரிவினை வழிகோலுமென்ற கருத்துகளும் சில மட்டங்களில் கூறப்படுகின்றன.

விலகலின் சாதக விளைவுகள்
பிரித்தானியத் தரப்பில் விலகலுக்கு ஆதரவாகக் கூறப்படும் கருத்துகளில் முக்கியமானது குடிவரவு மற்றும் சுதந்திரமான வணிக உறவுகள் சார்ந்தவை. ஒன்றிய நாடுகளின் புவியியல் எல்லைகளுக்குள் சுதந்திர நடமாட்டம் (Free movement) என்பது கொள்கை நடைமுறையாக உள்ளது. இந்த நடைமுறையானது ஒன்றியத்தின் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலகுவில் பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கும் குடியேறுவதற்கும் இலகுவாக உரிமையளிக்கின்றது. இந்த இலகுத்தன்மை அல்லது ஓட்டையென்பது சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கான புறச்சூழல்களையும் அனுமதிக்கின்றது. கட்டுப்பாடற்ற வெளிநாட்டவர் குடியமர்வு நாட்டின் பொதுநலச் சேவைகளின் வாய்ப்புகளில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. அதாவது வெளிநாட்டவர்களின் அதிகரிப்பு, பிரித்தானிய பூர்வீக, நிரந்தரக் குடிகளின் வேலை, கல்வி, மருத்துவ மற்றும் இதர பொதுநலச் சேவைகளைத் தட்டிப்பறிப்பதாக உணரப்படுகின்றது.

மறுவளமாக பிரித்தானியாவின் விலகல் என்பது அதன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்ற வாதங்களும் உள்ளன. ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் இதர வணிகத் தொழிற்துறை உடன்படிக்கைகளை பிரித்தானியா நேரடியாக அந்தந்த நாடுகளுடன் மேற்கொள்ளும் சூழல் நாட்டின் வணிகத்தைப் போட்டிவலு (Competetive) மிகுந்ததாக ஆக்கும்.

பிரித்தானியா எதிர்பார்க்கும் புதிய சந்தை வாய்ப்பு
ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு கட்டுப்பாடுளையும் ஒதுக்கீடுகளையும் கொண்டிருக்கின்றது. விவசாய மற்றும் மீன்பிடி ஏற்றுமதி-இறக்குமதி சார்ந்த கட்டுப்பாடுகளால் நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டி நிர்ப்பந்திக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியில் புதிய சந்தை வாய்ப்புகள் மீதான கவனக்குவிப்பினைக் குறைக்கின்றது. சீனா, இந்தியா போன்ற பாரிய சந்தைவாய்ப்புகளைக் கொண்டுள்ள நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை நேரடியாகச் செய்வதற்கு இடைஞ்சலாக ஒன்றிய அங்கத்துவ நீடிப்பை பிரித்தானியா கருதுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம், அதன் உறுப்பு நாடுகளுக்கிடையில் அரசியல் பொருளாதார இணைவாக்கத்தில் மேலும் நெருக்கமான உறவினை எதிர்பார்க்கின்றது. இதனை ஒருவகையில் பிரித்தானியா தனது தனித்துவத்தை இழக்கச் செய்யும் பொறிமுறையாகவும், இறைமையை அடகுவைப்பதாகவும் கருதுகின்றது.

ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல்
மே 22ம் நாள் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்குரிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தல் மூலம் 27 உறுப்பு நாடுகளிலிருந்தும் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர். அதற்கு முன்னர் விலகல் உடன்படிக்கை தொடர்பான இறுதித் தீர்வு எட்டப்படவேண்டும். அப்படி நிகழாத பட்சத்தில், அத்தேர்தலில் பிரித்தானியாவும் பங்கேற்றே தீரவேண்டும் என்பது உறுப்புநாடாக தவிர்க்கமுடியாத நிபந்தனை. நிச்சயமற்ற எதிர்காலத்திற்காக ஒரு தேர்தலை நடாத்துவது வீணான நிதிச்செலவு, நேர மற்றும் உழைப்பு விரையம் என்று பிரித்தானிய அரசாங்கம் கருதுகின்றது. எனவே அத்தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றப் பெரும்பான்மையுடன் விலகலை அதிகாரபூர்வமாகச் சாத்தியப்படுத்திட வேண்டுமென்பதில் அது முனைப்புக் கொண்டுள்ளது. ஆயினும் ஏலவே மூன்று தடவைகள் நிராகரிக்கப்பட்ட உடன்படிக்கைக்கு பெரும்பான்மையைப் பெறுவதென்பது பாரிய சவால் மிக்கது.

தேர்தலின் பின்னர் புதிய ஐரோப்பிய பாராளுமன்றம், ஜூலை மாதம் கூடவிருக்கின்றது. அதற்கு முன்னர் தீர்வு எட்டப்பட்டுவிடுமென்ற நம்பிக்கையில் ஜூன் இறுதிவரையான காலநீடிப்பினையே தெரேசா மே ஒன்றியத்திடம் கேட்டிருந்தார். ஆனால் ஒன்றியத்திற்கு அதில் நம்பிக்கை இல்லை. அதனால் ஒக்ரோபர் 31 வரை காலநீடிப்பினை அது வழங்கியுள்ளது. அத்தோடு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்கவேண்டுமென்ற நிபந்தனையும் பிரித்தானியாவிற்கு விதித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் கென்சர்வேற்றிவ் கட்சி படுதோல்வி
இவற்றுக்கிடையில் கடந்த மே 2ம் நாள் பிரித்தானியாவின் நகர மற்றும் உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது. இதில் கென்சர்வேற்றிவ் கட்சி படுதோல்வியைத் தழுவியுள்ளது. மொத்தம் 248 நகர-உள்ளாட்சித் தொகுதிகளில் கடந்த முறை 134 தொகுதிகளை வென்றிருந்தது. இம்முறை வெறும் 91 தொகுதிகளையே வென்றுள்ளது. தொழிற்கட்சி கடந்தமுறை 66 தொகுதிகளிலும் இம்முறை 60 தொகுதிகளில் வென்றுள்ளது. இரண்டு பெரிய கட்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில் சிறிய கட்சிகளும் சுயாதீன வேட்பாளர்களும் கூடுதல் இடங்களில் வென்றுள்ளனர். இந்தத் தேர்தலில் கென்சர்வேற்றிவ் கட்சி சந்தித்துள்ள பெரும் தோல்வி என்பது எதிர்வுகூறப்பட்ட ஒன்றுதான். Brexit விவகாரம் தேசிய அரசியல் சார்ந்தது என்றபோதும் உள்ளாட்சித் தேர்தல்களில் அது வெகுவாகப் பிரதிபலித்திருக்கின்றது.

லவீனமான அரசாங்கம்
கொன்சர்வேற்றிவ் கட்சி கூடுதல் தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் போது, Brexit பேச்சுவார்த்தைகளில் செல்வாக்குச் செலுத்தும் வகையில் , கோரிக்கைகள் வலுப்பெறும் எனும் எண்ணத்தில் 2017 தெரேசா மே இடைத்தேர்தலை அறிவித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் எதிர்மாறாக அமைந்தன. கென்சர்வேற்றிவ் கட்சி தனித்து ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மையைப் பெறவில்லை. 650 தொகுதிகளில் 314 மட்டுமே அக்கட்சி வென்றது. வட-அயர்லாந்தின் ஜனநாயக ஒன்றியக் கட்சியின் (Democratic unionist party) ஆதரவுடன் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது.

வட-அயர்லாந்த், ஸ்கொட்லாண்ட விலகலுக்கு எதிர்
Brexit பொதுவாக்கெடுப்பில் பிரித்தானியாவும் அதன் ஒரு பகுதியாகவுள்ள வேல்ஸ்சும் விலகலுக்கு ஆதரவாக வாக்களித்தன. வட-அயர்லாந்த் மற்றும் ஸ்கொட்லாண்ட் ஆகியன எதிராகவும் வாக்களித்தன. ஆனால் ஒட்டுமொத்தமாக நான்கு நிர்வாக அலகுகளுக்குமான வாக்குவிகிதாசார அடிப்படையில் பிரித்தானியாவின் பெரும்பான்மைக்கு இவ்விரு பிராந்தியங்களும் வளைந்துகொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டது. 2016 பொதுவாக்கெடுப்பில் வட அயர்லாந்த் மக்களில் 56 வீதத்தினர் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆயினும் கென்சர்வேற்றிவ் கட்சியுடன் கூட்டணியிலிருக்கும் ஜனநாயக ஒன்றியக்கட்சி விலகலுக்கு ஆதரவளிக்கிறது. வட-அயர்லாந்தின் பொருளாதார, உட்கட்டுமான அபிவிருத்தி மற்றும் சமாதான உடன்படிக்கைக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் வடக்குக்கும் தெற்கிற்குமிடையில் ஒரு இசைவான மென்-எல்லை நடைமுறையை அது விரும்புகிறது.

இவ்விரு அரசாங்கக்கட்சிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளகச் சந்தை, வரி ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து வெளியேற முனைகின்றன. உள்ளகச் சந்தை என்பது உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மக்கள், நுகர்வுப்பொருட்கள், தொழிலாளர்கள், சேவைகள், வணிகச் செயற்பாடுகளுக்கான சுதந்திர நடமாட்டத்திற்கான உத்தரவாதத்தைக் குறிக்கின்றது. இவ்வகை உள்ளகச் சந்தை இலகுவாக்கநடைமுறை கூட்டுப்பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. உள்ளகச் சந்தை மற்றும் வரி ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் ஒரு மென்-எல்லை நடைமுறையைப் பேணுவது சாத்தியமில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தனது தரப்பில் நிபந்தனை விதிக்கின்றது. இந்த எல்லை விவகாரத்திற்கான தீர்வு முதலில் எட்டப்பட வேண்டுமெனவும் அதற்குப் பின்னரே ஏனைய பிரச்சினைகளுக்குரிய தீர்வுக்கு நகரமுடியுமெனவும் ஒன்றியத்தரப்பு வலியுறுத்தியுள்ளது.

விலகலை ரத்துச்செய்யும் சாத்தியம்
விலகல் உடன்படிக்கைக்குரிய ஆதரவிளைப் பாராளுமன்றப் பொரும்பான்மையைப் பெற்று, அதனூடாக டீசநஒவைஇனைச் சாத்தியப்படுத்துவதென்ற தெரிவில் பிரித்தானிய அரசாங்கம் விடாப்பிடியாக இருந்து வந்தது. எதிரெதிர்க் கட்சிகள் இணைந்து தேசிய அளவிலான பிரச்சினைகளுக்குரிய கூட்டுத்தீர்வுகளைக் கண்டடையும் பாரம்பரியம் பிரித்தானிய அரசியலில் அரிது எனப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய நீடிக்கப்பட்ட கால எல்லைக்குள் அந்த அதிசயம் நிகழவேண்டுமெனில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் ஆதரவு இன்றியமையாதது. அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த இழுபறி எந்தளவிற்கு நீடிக்கின்றதோ அந்தளவிற்கு ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துச் செல்லும் என்று கருத இடமுண்டு. பிரித்தானியா ஒருதலைப்பட்சமாகத் தமது விலகலை ரத்துச்செய்வதும் சாத்தியமான முடிவுகளில் ஒன்றே.

தினக்குரல், காக்கைச் சிறகினிலே – மே 2019

Leave A Reply