ரூபனின் கவிதைகள்: சமூகச் சூழல்களின் தன்மைகளும் கருப்பொருட்களின் பல்வகைமையும்

-பேராசிரியர். ந.சண்முகரத்தினம்

தனது கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவர இருப்பதாகவும் அதில் எனது பார்வையில் ஒரு ‘அறிமுக-விமர்சனக் குறிப்பு இடம்பெறுவது பொருத்தமென’ என்ணுவதாகவும், அதைச் செய்ய நேரமும் வாய்ப்பும் இருக்கிறதா என ரூபன் சில மாதங்களுக்குமுன் ஒரு மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தார். நான் கவிதைகளை முதலில் படிக்க விரும்புவதால் அவற்றை அனுப்பிவைக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டேன். சில நாட்களின்பின் கவிதைக்கோப்பு மின்னஞ்சலுடன் வந்தது. இணைப்பை ஆவலுடன் திறந்தேன். அந்தக் கோப்பில் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகள்! ‘சற்று அசந்துபோனேன்’ எனச் சொல்வது அந்தக் கணத்தின் எனது ஆச்சரியத்தின் குறைமதிப்பீடாகிவிடும். பொறுப்பறியாது அவசரப்பட்டுச் சம்மதித்துவிட்டேனோ என எண்ணினேன்.

ஏற்கனவே அரைகுறையிலிருந்த சில பொறுப்புக்களைப் பூர்த்தி செய்ததும் கவிதைகளை வாசிப்போம் எனும் முடிவுக்கு வந்தேன். ஆனால் அடுத்து வந்தன கோவிட்-19 பெருந்தொற்றுப் பற்றிய செய்திகள். கொரோனா நெருக்கடி பற்றிய தகவல்களைத் தேடுதல், அதுபற்றி இணையத்தளத்தில் கலந்துரையாடுதல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியாமாயிற்று. இதனால் ரூபனின் கவிதைகளை வாசிப்பதைப் பின்போடுவது தவிர்க்கமுடியாததாயிற்று. இதை அவர் நன்கு புரிந்து கொண்டார்.

சிலவாரங்களின்பின் ரூபனின் மென்மையான நினைவூட்டலுடன் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினேன். அதுஒரு தொடர்வாசிப்பாயிற்று. கொரோனா நெருக்கடி பற்றிய செய்திகளிலும் கட்டுரைகளிலும் உரையாடல்களிலும் மூழ்கியிருந்த எனக்கு அந்த வாசிப்பு அழகியல் கலந்த புத்துணர்வூட்டும் ஒரு அனுபவமாயிற்று. கவிதைகளின் உள்ளடக்கங்களும் அவை விம்பங்களுக்கூடாகச் சொல்லும், சொல்லாமல் சொல்லும் செய்திகளும் சிந்தனைக்கும் கலைத்துவ இரசனைக்கும் தீனி போட்டன.

அரசியல் மற்றும் சமூகம் பற்றிய விமர்சன நோக்கு, இலங்கையிலிருந்து பலஸ்தீனம் மற்றும் சிரியாவரை பல இடங்களின் போரின் கொடூரங்கள், இன்றைய உலகிலும் தலைவிரித்தாடும் ஆணாதிக்கத்தின் வன்முறையும் கேவலமான தன்மைகளும், மனித உறவுகளில் இழையோடும் முரண்மிகு நியமங்கள், தனிமனிதரின் ஒழுக்கவியல் மற்றும் தார்மீக விழுமியங்கள் பற்றிய கேள்விகள், இன்றைய தகவல்யுக வாழ்வியலின் முரண்பாடுகள், அந்நியமாதலும் தனிமையும் வெளிப்படுத்தும் உணர்வுகள், இயற்கையின் தோற்றங்களும் அசைவுகளும் குறிப்பாக ரூபன் வாழும் வட ஐரோப்பிய நாடான நோர்வேயின் காலங்களின் நகர்ச்சியுடன் விசேடமாக வசந்தத்துடன் வரும் வெளிச்சமும் எழில்மிகு மாற்றங்களும் அவை தூண்டும் காதலுணர்வும் பிரதிபலிக்கும் இன்பகரமான செய்திகளும், மறுபுறம் காலமாற்றத்துடன்வரும் நீண்ட குளிர்மிகுந்த இரவுகளும் அவை மிகைப்படுத்தும் தனிமை உணர்வுகளும், இன்னொருபுறம் மோசமடையும் இயற்கையின் சீரழிப்பின் துன்பகரமான விளைவுகள் ….. இப்படியாகப் பல்வேறு பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுப்பை வாசிப்பவர் மனதில் இதன் படைப்பாளியின் பின்னணி என்ன எனும் கேள்வி எழுந்தால் ஆச்சரியமில்லை.

ரூபன் சிவராஜா 1993 இறுதியில் பதிநான்கு வயதுச் சிறுவனாக அவரது தாய் மற்றும் மூன்று சகோதரர்களுடன் நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். சில வருடங்கள் முன்பு புலம்பெயர்ந்த தந்தையுடன் ஒஸ்லோவில் குடும்பம் இணைந்தது. இலங்கையின் உள்நாட்டுப் போரின் அவலங்களின் அனுபவங்களுடனும் ஆழப் பதிந்துவிட்ட நினைவுகளுடனும் நோர்வேக்கு வந்த ரூபன் தனது தமிழ் அறிவை வளர்க்கத் தவறவில்லை. புலப்பெயர்வு அவருக்குக் கொடுத்த சந்தர்ப்பங்கள் அவரிடம் ஏற்கனவே இருந்த கலை இலக்கிய ஈடுபாட்டையும் சமூக செயற்பாட்டு ஆர்வத்தையும் செழுமையூட்டி வளர்க்க உதவியுள்ளன என நம்புகிறேன்.

ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் சமூகங்களில் ரூபன் மற்றும் அவருக்கும் இளைய சந்ததியினர் ஒரு கலப்புக் கலாச்சாரத்தையும் அதைப் பிரதிபலிக்கும் அடையாளங்களையும் கொண்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடவேண்டும். தனிமனித மட்டத்தில் அவரவரின் குடும்பப் பின்னணி, ஆர்வங்கள், ஈடுபாடுகள் மற்றும் சமூக சூழலுக்கேற்ப இந்தக் கலப்புக் கலாச்சார அடையாளத்தின் பரிணமிப்பில் வேறுபாடுகள் இருக்கலாம். 2004 ஆம் ஆண்டு ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில் கணனித்துறையில் பட்டப் படிப்பை முடித்தபின் வங்கி ஒன்றில் கடமையாற்றும் ரூபனின் நோர்வீஜிய மற்றும் ஆங்கில மொழியாற்றல் அவர் ஒரு பரந்த படைப்பிலக்கிய உலகிற்குள் பிரவேசித்துப் பயன்பெற உதவும் திறவுகோல்களாயின. இதன் செல்வாக்கை அவருடைய கவிதைகளில் காணலாம்.

பதின்மவயதிலிருந்து தொடர்ச்சியாகத் தாயக அரசியலில் இருந்த ஈடுபாடு மற்றும் நோர்வேயில் சமூகம் சார்ந்த பொதுப்பணிகளில் பங்குபற்றியமை தனது சமூகநீதி சார்ந்த உலகப் பார்வையின் உருவாக்கத்திற்கு அடிகோலின என எனக்கு அறியத்தந்த ரூபனிடம் அவருக்கு ஆகர்சமாய் விளங்கும் படைப்பாளிகள் பற்றிக் கேட்டபோது பாரதி, இன்குலாப், பிரமிள், சு.வில்வரத்தினம், ரூமி, மற்றும் இப்சன் எனும் பெயர்களைக் குறிப்பிட்டார். இப்சன் மற்றும் பல சமகால நோர்வீஜியக் கவிஞர்களின் கவிதைகளை ரூபனும் கவிதா லட்சுமியும் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்கள் என்பதையும் அறிந்தேன். அதேபோல் ரூமி மற்றும் கலீல் ஜிப்ரானின் கவிதைகளை ரூபன் தனியாக மொழிபெயர்த்து வருகிறார். இந்தச் செயற்பாடுகள் உலக இலக்கியம் பற்றிய அவருடைய அறிவின் மற்றும் அவரது கவித்துவப் படைப்பாற்றலின் விருத்திக்கு உதவியுள்ளன என்பதில் சந்தேகமில்லை.
அரசியல் மற்றும் சமூக விமர்சனத்தைப் பொறுத்தவரை தாயகத்தில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டமும் அதன் வரலாறும் விளைவுகளும் ரூபன்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைச் சில கவிதைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

அவர்களுக்கு
ஒரு பெரும் கனவு இருந்தது
அந்தக் கனவுக்கு உயிர் இருந்தது
உணர்வில் தகித்த
அந்தக் கனவுக்காக
அவர்கள் உயிரையும் கொடுத்தார்கள்
……
யுகமொன்றின் படிக்கட்டுகளில்
அந்தக் கனவின் பெருமிதங்களையும்
சறுக்கல்களின் பாடங்களையும்
அவர்கள் பதித்துவிட்டுச் சென்றனர்
…….
அந்தப் பெருங்கனவின் மீதியைக்
கூறுபோட்டு விற்கச்
சிலர் கடை விரிப்பர்
என்பதை நிச்சயம் அவர்கள்
அறிந்திருக்க மாட்டார்கள்

‘கனவின் மீதியும் கடைவிரிப்போரும்’ எனத் தலைப்பிடப்பட்ட இந்தக் கவிதை சில உண்மைகளைச் சொல்கிறது. புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திலும் தாயகத்திலும் இவைக்குப் பின்னாலுள்ள வேறு உண்மைகளைத் தேட வாசகனை நிர்ப்பந்திக்கிறது கவிதை. இந்தத் தேடலுக்கான உந்தல்போலாகிறது தாயகம் பற்றி வேறொரு கவிதையில் வரும் செய்தி.

போதாமைகளின்
பாரத்தில்
தாழ்ந்து கிடக்கிறது
ஜனநாயகப் படகு
…….
நிராகரிக்கப்பட்ட கனவுகளால்
நிரப்பப்பட்ட
காலமற்ற பொழுதுகளில்
உத்தரித்துக் கிடக்கிறது
போர்தின்ற வாழ்வின் மீதி

அங்கே நந்திக்கடலில் நிகழ்ந்த கோரத்திற்குப்பின்,

காணிநிலக்கோரலும்
உரிமைக் கோரலும்
தலைமுறைத் தாகமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது

மனித உரிமைமீறல்கள் பற்றிக் கவிஞரின் அக்கறையும் ஆத்திரமும் ஈழத்திற்கும் அப்பால் பலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளின் நிலைமைகளையும் உள்ளடக்குகின்றன. ‘மனித உரிமையின் மனச்சாட்சிக்குக்’ குரல் கொடுக்கும் ஒரு கவிதையின் சில வரிகள்:
…….
ஈழத்திலும் பலஸ்தீனத்திலும் சிரியாவிலும்
உலகத்தின் வஞ்சிக்கப்பட்ட
நிலங்களெங்கும் காணாமற்போனவர்கள்
எங்கிருக்கிறார்கள்?
…….
குற்றவாளிகளே நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும்
அரசியல் வியாபார அரங்கிலா
உங்களைத் தொலைத்தவர்களுக்கான
நீதி கிடைக்கப்போகிறது?

……….
நான் மனித உரிமையின் மனச்சாட்சி பேசுகிறேன்
முடிந்தவர்கள் என்னையும் சேர்த்தே தேடிப்பாருங்கள்

மனித உரிமைகளுக்காக உலகரீதியில் குரலெழுப்பும் அதேவேளை தமிழ் சமூகத்திற்குள் ஜனநாயக விழுமியங்கள் நடைமுறையில் மதிக்கப்படாதிருப்பதைக் கண்டு மனம்புழுங்குகிறார். ஐரோப்பிய நாடுகளில் நிலவும் ஜனநாயகச் சூழலில் வாழும் தமிழ் சமூகத்திலும் சுதந்திரமாக, அமைதியாகக் கருத்துப் பரிமாறும் மரபு இல்லாதிருப்பது பற்றிய ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன சில கவிதைகள்.

நாகரிகம் தொலைத்த
தலைமுறையின் நாக்குகளில்
கூசாமல் சுரக்கிறது
குரோதமும் குரூரமும்
……
முரண்படும் உரிமையில்
உடன்படலும்
சகிப்பின் ஈரலிப்பில்
உரையாடலும்
எப்போது

வேறொரு கவிதையில்:

உரையாடலுக்கு அஞ்சிப்
பதுங்குகிற தென்றால்
அது கருத்து வறுமைதானே

‘நாகரிகம் தொலைத்த தலைமுறை’ எனும்போது தற்போது மூத்த தலைமுறையாகிவிட்ட சந்ததியைத்தான் பிரதானமாக இனங்காணமுடிகிறது. நமது தமிழ் சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்படாமைக்கு எதிரான விமர்சனம் புலத்தில் எழுவது இதுதான் முதற் தடவையல்ல. தாயகத்தில் போர் உக்கிரமடையத் தொடங்கிய காலத்திலிருந்தே (1980-90களிலிருந்தே) விடுதலைப் போராட்டத்தின் பெயரால் அறிவுரீதியான விமர்சனச் சுதந்திரத்தைப் பயமுறுத்தலாலும் வன்முறையாலும் அடக்குவதை நியாயப்படுத்துவதற்கு எதிரான விமர்சனங்கள் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கிய வெளியீடுகளிலும் கருத்தரங்குகளிலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. ஆயினும் கருத்துச் சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் இன்னும் போதியளவு மாற்றம் ஏற்படவில்லை என்பதையே 2014-2019 காலத்தில் எழுதப்பட்ட ரூபனின் கவிதைகள் சொல்ல முற்படுகின்றன.

சமீப காலங்களில் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திலும் பல்வேறு மட்டங்களில் திறந்த கருத்துப் பரிமாறல்களும் விவாதங்களும் இடம்பெறுவதைக் காண்கிறோம். ஆயினும் தமிழ் சமூகத்தில் ரூபன் போன்றோர் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘முரண்படும் உரிமையில் உடன்படும்’ போக்கினைச் சகிக்கமுடியாதோர் குரோதமிகு பகைமை பாராட்டும் பழக்கத்திலிருந்து மாறவில்லை எனும் கசப்பான செய்தியைத்தான் இந்தக் கவிதைகள் சொல்ல விளைகின்றன.

நாகரிகத்தைத் தொலைத்தவர்கள் ஊடகத் துறையிலும் சுதந்திரமாகச் செயற்படுவது தொடர்கிறதென்பதை நியாயமான ஆத்திரமிகுந்த வெறுப்புடன் சாடுகிறது ‘ஊடக வன்புணர்வாளர்கள்’ பற்றிய கவிதை. அதை வாசிக்கும் போது ஊடக அறம் பிறழ்ந்த போக்குத் தடையின்றி தொடர்வதைச் சமூகம் எத்தனை காலம் பொறுக்கப்போகிறது எனும் கேள்வி எழுகிறது.

அன்று
இனவெறிப் பற்கள் குதறிய
ஊடகக் குயிலின்
உடலைப்
படங்களாய்ப் பதிவேற்றிப்
பரபரப்புக் காட்டினர்

இன்று
உள்ளூர் பிறழ்வுகள்
பிய்த்தெறிந்த
விதியாவின் வலியை
விற்றுத் தீர்க்கிறார்கள்
இன்னும் அடங்கவில்லை
வக்கிரப் பசி

சிந்தனை வறுமையில்
குற்றுயிராய்க் கிடக்கிறது
சமூகப் பிரக்ஞை

சமூகத்தைத் துருவி விமர்சிக்கும் ரூபனின் பார்வை இன்றைய தகவல் யுகத்தில் மனித வாழ்வியலின் போக்குகளின் பக்கம் திரும்புகிறது. ‘கையடங்கும் வையகம்’ எனும் பொருத்தமான தலைப்பினைக் கொண்ட கவிதை ‘கணிப்பொறிக்குள் கட்டுண்டு’ கிடக்கும் மனித உறவுகள் பற்றிக் கூறுகிறது. அந்தக் கவிதையிலிருந்து சில வரிகள்.
அருகிருப்பவருடனான
உரையாடல் ஊடகமும்
‘குறுந்தகவல்’ என்றானபின்
ஒரே வீட்டிற்குள் குடியிருந்தும்
தூரமாய் உறவுகள்

நாம் வாழும் சமூக அமைப்பில் தொடரும் தனிமனிதமயமாக்கலின், அந்நியமாக்கலின் இன்னொரு வெளிப்பாடுதான் இது. ஆயினும்,

மானிட விழுமியங்களை
விழுங்காதவரையில்
வாழ்தலின் அழகியலை
அழிக்காதவரையில்
உரையாடலின் உன்னதத்தை
உடைக்காதவரையில்
iPhoneகளையும் iPadகளையும்
நோண்டட்டும் விரல்கள்

என்றும் கேட்டுக்கொள்கிறது கவிதை. இன்றைய உலக அமைப்பின் யதார்த்தத்திற்கு முன்னே இது ஒரு அழகான, தூய்மையான உணர்ச்சிகலந்த யாசிப்பாக ஒலிக்கிறது. இதே கவிதையில் இடையில் வரும் வேறு சில வரிகள் இந்தத் தொகுப்பின் பல கவிதைகளின் கருப்பொருளான இயற்கைக்கும் மனிதருக்குமிடையிலான உறவுகள் பற்றிய ஒரு அறிமுகம்போலாகிறது.

மலை அடிவாரம்
மறந்து போனது
வனங்களின் வனப்பு
வறண்டுபோனது
இயற்கையின் இருப்பும்
இயல்பினை இழந்தது

இயற்கையின் மடியில்
இன்பம் துய்த்திருக்கவேண்டிய
அலாதியான பொழுதுகளை
தொழில்நுட்பக் காட்டாறு
துடைத்தழித்துச் செல்கிறது

இந்தத் தொகுப்பில் இயற்கையின் சீரழிப்புப் பற்றி வேறு பல கவிதைகளும் பேசுகின்றன. அதேபோன்று இயற்கையின் அழகைக் கொண்டாடும் கவிதைகள் மற்றும் உறையவைக்கும் குளிர்காலத்தின் தாக்கங்களும் ஏக்கங்களும், சமூகவாழ்வு தரும் சோர்விலும் ஏமாற்றத்திலுமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக்கொள்ள இயற்கையிடம் சரணடையும் கணங்களின் மனோகரமான உணர்வுகள், மறுபுறம் நம்பிக்கையூட்டும் இயற்கையின் கோலங்கள் போன்றனவும் கவித்துவமாக வரையப்படுகின்றன. இவற்றின் பல அம்சங்களைச் சிறப்பாகவும் அழகாகவும் இணைக்கின்றது ‘அணுவணுவாய்’ எனும் தலைப்புடன் வரும் கவிதை. ‘கனவுகள் தீர்ந்துபோன’ ஒரு இரவிலிருந்து மீளும் அனுபவமாய் வாழ்தலின் அழகைக் கொண்டாடும் பாடத்தை அற்ப ஆயுசைக் கொண்ட ஒரு பூவிடமிருந்து படிக்கும் பாடாமாய் வடிக்கப் பட்ட அந்தக் கவிதையிலிருந்து சில வரிகள்:

பாலைவனத்தில் நீர் தேடும்
கால்நடைபோல்
வெட்டவெளியில் கிளை தேடும்
பறவை போல்
கல்லில் நாருரிக்க முயன்று
தோற்றுத் துவண்டு நின்றபோது
ஆற்றுப்படுத்துகிறேன் வா
என்றழைத்தது இயற்கை
……..
இலையுதிர்கால இலைகள்
இதயத்தில் கோலமிட
மணல் தேடி முத்தமிடும் அலைகள்
செவிநுளைந்து தாளமிட

பிஞ்சுப் பிள்ளையின்
உச்சி முகர்ந்து
உள்ளம் களித்திருக்கும்
ஒரு வாழ்வு வாய்த்திருக்க
வேறென்ன வேணும்

வாழ்தலின் அழகினை
அணுவணுவாய்
அனுபவிக்கச் சொல்கிறன
மொட்டவிழ்ந்து
தேன் சிந்தும் பூக்கள்

நேற்றுத் துளிர்த்து
இன்று மொட்டவிழ்த்து
நாளை வாடப்போகும் நானே
இத்தனை பிடிமானத்தோடு
வாழ்தலைக் கொண்டாடுகிறேன்
உரத்துச் சொல்கிறது பூ

நோர்வீஜியக் கோடையின் கோலமாற்றங்கள் மனித இருப்பின் முரண்பாடுகளை நினைவூட்டுகின்றன:
சடுதியில் மாறியும்
சமயத்தில் மீறியும்
நிலையாமை விளக்கம்
சொல்கிறது காலநிலை

ஆசைகள் மட்டும்
அடங்காத அலையாய்
அங்கலாய்த்துத் திரிகின்றன

‘சூரியன் முகம் காட்ட மறுக்கும்’ உறைபனிக் காலத்தைக் கடக்க நெருக்கமான மனிதத் தொடர்புகளுக்கான தேவையை உருக்கம் கலந்த மென்மையுடன் வெளிப்படுத்துகிறது இன்னொரு கவிதை:

ஆசுவாசமாய் ஒரு பார்வை
சிறிதாய் ஒரு புன்னகை
சிநேகம் ஒழுக ஒரு வார்த்தை
கண்களால் ஒரு நல விசாரிப்பு
அகம் அறிந்து
இடுக்கண் களைய ஒரு நட்பு
நினைந்துருக ஒரு காதல்
குழந்தைகளின் உலகைத்
தரிசிக்கும் தருணங்கள்

இப்படியாக
இவற்றில்
ஏதேனும் ஒன்றாயினும்
அவசியப்படுகிறது

இந்தத் தனிமைக்கு ஒரு பருவகாலம்தான் காரணமா அல்லது ‘இயந்திர இயங்குதல்’ என வேறொரு கவிதையில் வர்ணிக்கப்படும் அன்றாட வாழ்வில் நிரந்தரமாகிவிட்ட அந்நியமாதலின் விளைவுகளை நீண்ட இரவுகளும் குளிரும் தாங்கமுடியாது செய்கின்றனவா? தனிமை பற்றி வேறொரு கவிதை சொல்வதைக் கேளுங்கள்.
தனிமையின்
தாழுடைக்கவும்
வெறுமையின் வேரறுக்கவும்
புதியதோர் வேட்கை
கிளர்கிறது

தூய சுடரொளியில்
தோயும் பறவைகளின்
சிறகடிப்பை நிகர்த்த
குழந்தைகளின் உலகத்தைத்
தரிசிக்கும் அங்கலாய்ப்புத்
தொற்றித் தொடர்கிறது

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் மனித வாழ்வுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஐக்கியத்தைக் கொண்டாடும் கவிதைகளுடன் இயற்கையின் சீரழிப்பு ஏற்படுத்தும் துன்பம், பயம் மற்றும் அதைத் தடுக்க இயலாமை பற்றிய பதிவுகளாய் ஒலிக்கின்றன வேறு சில கவிதைகள். உதாரணமாக,
ஓசோனில் ஓட்டை
பூமிப் பந்தில் கொதிப்பு
ஆதார ஆய்வுகளும்
சேதாரச் செய்திகளும்
பீதியைக் கிளப்புகின்றன

உலகமயமாகிவிட்ட பகிர்தலுணர்வற்றுப்போன அழகியல் பண்பற்ற நுகர்வுவாத வாழ்க்கைமுறைக்கும் சுற்றுச்சூழலின் சீரழிவுக்குமிடையிலான தொடர்பினைச் சுட்டிக் காட்டும் கவிதைகளில் ஒன்றான ‘வெள்ளம் தலைக்குமேல்’ சொல்வதைக் கேட்போம்.

நாகரிக மோகத்திளைப்பில்
இசைவற்ற வாழ்வின் பொறியில்
சரணடைந்து
வஞ்சித்தோம் இயற்கையை
வெஞ்சினம் கொண்டு
அது
வேகமெடுத்த பின்னர்
ஓலமிடுகிறோம்
………
வெள்ளம் தலைக்கு மேல்
உயர்ந்த பின்
பழி சுமத்துகிறோம்
இரக்கமற்ற இயற்கை
தாண்டவம் ஆடுகிறதென்று
……
நாம்தான் இயற்கையிடரின்
நதிமூலம்
வேலிகள் பயிர்மேய
விளைச்சல்கள்
சர்வநாசம்
…..
வருமுன் காக்கவும்
வக்கற்றுப் போனது
வந்தபின் மீட்கவும்
திறமற்றுப் போனது

தோல்வியைத் துன்பத்துடன் தழுவிக் கொள்ளும் ஒரு கையறு நிலையைப் பிரதிபலிக்கிறதா இந்தக் கவிதையின் முடிவு? ஆனால் அப்படித் தப்பிவிட அல்லது தவிர்த்துவிடக் கூடிய பிரச்சனையல்ல இது என்பதற்கான பல காரணங்களை இந்தத் தொகுப்பில் வரும் கவிதைகளே கவித்துவமாகப் பட்டியலிடுகின்றன! நிலமைகளை மாற்ற அந்தக் காரணங்களுக்குப் பின்னாலுள்ள காரணிகளையும் அவற்றின் அதிகார உறவுகளையும் அறிவது அவசியமான அடுத்த படி என்பதையும் அவை நினைவூட்டுகின்றன.

ரூபன் அனுப்பிவைத்த எல்லாக் கவிதைகளையும் இந்த அணிந்துரையை எழுத முன் ஒரு தடவை வாசித்தேன். இதை எழுதும்போது பல கவிதைகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை வாசித்தேன். இரசித்தேன். அவை எல்லாவற்றையும் பற்றி இங்கு எழுதுவது சாத்தியமில்லை. ஆயினும் இந்த அணிந்துரை ரூபனின் கவிதைகளின் சமூகச் சூழல்களின் தன்மைகளையும் கருப்பொருட்களின் பல்வகைமையினையும் ஓரளவு அறியத்தருகிறது என நம்புகிறேன். சிக்கலற்ற மொழிநடையைக் கவித்துவமாகக் கையாளும் அவருடைய ஆக்கத்திறனுக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன தொகுப்பிலிருந்து நான் பயன்படுத்தியுள்ள கவிதைத் துண்டுகள்.

புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழ் சமூகத்தின் இளம் சந்ததியினரில் தமிழில் ஆக்க இலக்கியம் படைக்கும் சிலரில் ரூபனும் ஒருவர். அவருடைய சமூகப் பார்வையும் உலக இலக்கியத்தில் அவர் கொண்டுள்ள ஈடுபாடும் அவருடையை படைப்புக்களுக்குச் செழுமை சேர்க்கின்றன. இந்தத் தொகுப்பு புலம்பெயர்ந்த தமிழ்க் கவிதை இலக்கியத்திற்கு இருபத்தியோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு சிறப்பான பங்களிப்பு. இந்தக் கவிதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி. ரூபனுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

சமுத்திரன்
(பேராசிரியர் ந.சண்முகரத்தினம்)
ஓஸ், நோர்வே
ஜூன், 2020

Leave A Reply