ரூபனின் ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’: கவிதைத் தொகுப்பின் ஊடாகக் கடந்து செல்லல்! – சோதியா

– சோதியா

 

அவருக்கான ஒரு சொற்களஞ்சியத்தை, ஒரு கவிமொழியை அவர் வனைந்திருக்கின்றார். யார் தன்மையையும் சாராது, நகல் எடுக்காது ஏனைய கவிஞர்களிலிருந்து இங்கு வேறுபடுகின்றார். அவரது கவிதைகளை ஒன்றுசேர்த்த இத்தொடர் வாசிப்பில், அதனை நிறுவுவதற்கான பல ஆச்சர்யங்கள் ஆங்காங்கே தலைதட்டுகின்றன. திட்டமிடப்படாமல் சடுதியாக, இயல்பாக எழுதும் கவிதைகளே உயிர்ப்புடையனவாக இருக்கும் எனும் பல கவிஞர்களது கருத்தியலோடும் ரூபன் உடன்படுகின்றார்.

 

1993! அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் எனது தமிழ் வகுப்புகளில் தமிழ் அப்பியாசக் கொப்பிகளுடன் பதினான்கு அகவை மாணவனாக அறிமுகமானவர் ரூபன். கடந்த சில வாரங்களுக்கு முன் தனது முதலாவது கவிதைத் தொகுப்போடு எனது வீடு தேடி வந்தார். அதே ஆத்மார்த்தமான அன்பு@ மாறாத மரியாதை!

ரூபன்! நாற்றுமேடையிலேயே நான் கண்ட இளம் நாற்று. பார்த்திருக்க வளர்ந்த பயிர்! நான் அறிந்தரையில் வகுப்பறைத் தமிழ் கற்றலுக்கு அப்பால் தனது ஆர்வத்தினூடாக, தேடலினூடாக, சுயமுயற்சிகளினூடாக ரூபன் கற்றுக்கொண்டவைகள் அதிகம். தன்னைப் பல முனைகளில் பட்டைதீட்டித் தனக்கான மொழிச்செழுமையை வளர்த்துக் கொண்டவர். அந்த மொழி ஆளுமையின் நீட்சியே கவிதைகளாக, கட்டுரைகளாக, பாடல்களாக, மொழிமாற்றங்களாகப் பரிமாணம் கண்டுள்ளன.

ஆங்காங்கே ஒற்றைக் கவிதைகளாக ரூபனின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். என் கவனிப்பையும் கருத்துகளையும் அவ்வப்போது அவரிடமே பகிர்ந்தும் உள்ளேன். கடந்த சில வருடங்களாக அவர் எழுதிய கவிதைகளின் இணைந்த தொகுப்பை அவரிடமிருந்து பெற்றபோது ஓர் இனம்புரியாத களிப்பு இதயத்தில் இருந்தது. எனது தொகுப்பு ஒன்றையே முதன்முதலாகக் காணுவது போன்ற ஆர்வ உந்துதல் இருந்தது. தொகுப்பை கையில் ஏந்தியபோது ஒரு புதிய சிசுவை ஸ்பரிசிக்கும் உணர்வு மிகுந்தது. மறுபுறம் கட்டுரைகளின் காதலன் ரூபன். ஆய்வுக்கட்டுரைகள் அவரின் அலாதியான ஆகர்சிப்பிற்கு உரியன. இவரது பல பெறுமதியான கட்டுரைகளின் தொகுப்பும் ஏலவே வெளிவந்திருக்கிறது.

சரி, இனி ‘எழுதிக் கடக்கின்ற தூரத்தினூடாக’ நான் கண்டு@ உணர்ந்து@ கடந்ததை மீள்நினைந்து பார்க்கிறேன். கவிதை வரிகளை அடையாளப்படுத்தி விதந்துரைக்கும் அணிந்துரையாக அல்லாமல் ஒட்டுமொத்தமான இப்படைப்பையும் படைப்பாளியையுமே பேச விழைகிறேன். நூலுக்கு அழகான ஆர்ப்பாட்டமில்லாத அட்டைப்படம். வர்ணக்கலப்புகளில் கண்களுக்கு உறுத்தலில்லாத கலைநேர்த்தி இருக்கிறது. எழுத்துகளின் அளவு, தாளின் தன்மை என்பன ஒரு கவிதைத் தொகுப்பிற்கு கச்சிதமாய் பொருந்துகின்றன. அதிகமில்லாமல் தேர்ந்த சில ஓவியங்களும் கவிதைகளுக்குத் துணை நிற்கின்றன. தமிழகத்தின் பிரபலமான ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வெளியீட்டாளர்களின் தரமான வடிவமைப்பில் நூல் வெளிவந்திருக்கின்றது.

தன்னுரையிலேயே ‘உணர்வுகளின் உந்துதலிலிருந்தும் சமூகப் புறச்சூழல்களின் தாக்கத்திலிருந்தும் வெவ்வேறு தருணங்களில் கருக்கொண்டவையே இக்கவிதைகள்’ என ரூபன் குறிப்பிடுகின்றார். மனித இருத்தலின் முரண்பாடுகள், முகமூடி மனிதரின் போலித்தனங்கள், இயற்கை மீதான பேரார்வம், போர் தின்ற மனிதம், தொழில்நுட்ப உலகம், ஆணாதிக்க அவலம் என இங்குள்ள கவிதைகளின் பேசுபொருள் பன்முகத்தன்மை கொண்டன. ஒவ்வொரு கவிதைகளும் பேசவந்த பொருளைச் சீராக@ தீர்க்கமாக எடுத்துரைக்கின்றன. இவ் எழுத்தாளரின் வயதை ஒத்த பல இளம் படைப்பாளிகள், புரியாது கவிதை எழுதுவதனையும் அர்த்தமற்ற சொற்களின் திரட்சியை கோர்த்து நிரற்படுத்துவதையுமே புதுக்கவிதை என்று அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். அதனையே கவிதைக்கான அதிநவீன பண்பாகவும் கருதுகின்றனர். ஆனால் ரூபனின் பலம் அவர் தேடிக்கண்டடைந்த மொழிநடையே என்பேன்.

அவருக்கான ஒரு சொற்களஞ்சியத்தை, ஒரு கவிமொழியை அவர் வனைந்திருக்கின்றார். யார் தன்மையையும் சாராது, நகல் எடுக்காது ஏனைய கவிஞர்களிலிருந்து இங்கு வேறுபடுகின்றார். அவரது கவிதைகளை ஒன்றுசேர்த்த இத்தொடர் வாசிப்பில், அதனை நிறுவுவதற்கான பல ஆச்சர்யங்கள் ஆங்காங்கே தலைதட்டுகின்றன. திட்டமிடப்படாமல் சடுதியாக, இயல்பாக எழுதும் கவிதைகளே உயிர்ப்புடையனவாக இருக்கும் எனும் பல கவிஞர்களது கருத்தியலோடும் ரூபன் உடன்படுகின்றார்.

பல கவிதைகளில் இவரது சொற்களும் வரிகளும் வாள்வீச்சுகளாக விழுகின்றன. சமூகப்போலிகள் மீதான இவரது அறச்சீற்றம் ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது. கவிதை அழகியலுக்காகவும் அரிதாரப்பூச்சுக்காகவும் அவற்றோடு இங்கு சமரசம் செய்துகொள்ளப்படவில்லை. இங்குதான் கவிஞன் தனது உண்மைத்தன்மையில் வெற்றிபெறுகின்றான். வாழ்வுக்கும் எழுத்துக்கும் இடையே வேறுபாடு இருத்தலாகாது என கவிஞர் புதுவை இரத்தினதுரை அடிக்கடி மொழிவார். சொல்முறைமைக்கும் செல்முறைமைக்கும் வேறுபாடில்லாத ஒரு படைப்பாளியாகவே நான் ரூபனைப் பார்க்கிறேன்.

பெரும்பாலான கவிதைகள் காடு, மழை, காற்று, வானம், பறவை என்று இயற்கையோடு பயணிக்கின்றன. சொல்லவரும் சேதிக்கான படிமங்கள் அழகாக விழுந்திருக்கின்றன. சில கவிஞர்கள் தம் படைப்புகளில் காற்றோடு கைகோர்த்து நடப்பார்கள். சிலர் சூரியனோடு பேசுவார்கள். அந்தவகையில் ரூபனின் பல கவிதைகளில் இரவும் இருளும் துருத்தி நிற்கின்றன. கவிதைகள் நீளும்போது அவற்றின் உயிர்வேர் அறுந்துவிடும் அபாயமிருக்கிறது. சொற்களையும் வரிகளையும் சிக்கனமாக கையாண்டு சிறிய கவிதைகளிலேயே தான் சொல்லவரும் பெருங்கருத்தையும் நிறைத்துவிடும் கலை ரூபனுக்கு கைவந்திருக்கிறது. தாயகத் துயர் நினைந்து உருகும் இப்படைப்பாளியின் தார்மீக வரிகள் உலக அவலங்களைக் கண்டும் உடைந்து அழுகின்றது. அதனையும் இங்கு சில கவிதைகள் பேசிக் கடக்கின்றன.

சரி, ரூபனை புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறை வகைமைக்குள் அடக்குவதா? இரண்டாம் தலைமுறை வகைமைக்குள் அடக்குவதா? இரண்டிலிருந்தும் நழுவி நடுவே நிற்பதாகவே நான் கருதுகிறேன். தாயகத்தை ஆக்கிரமிப்பும் அவலமும் சூழ்ந்த காலப்பகுதியில் புலம்பெயர்ந்த ஒரு பதின்மவயது இளைஞன், இந்நாடுகளில் உள்ள சுதந்திர கட்டற்ற வெளியில் தடந்தவறிப் போவதற்கான ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆயினும் சுமந்துவந்த தாயகக் கனவோடு இங்கும் செயற்பட்டவர் ரூபன். அவை எழுத்துருக்களாக அரங்க ஆற்றுகைகளாக அவ்வப்போது வெளிப்பட்டிருந்தன. தன் கருத்தியல் செல்நெறியிலிருந்து மடைமாறிப்போகாது இன்னும் பயணிப்பவர்.

ரூபனின் நோர்வேஜிய, ஆங்கில மொழி ஆளுமை உலக இலக்கியங்களைப் புரிந்துகொள்ளவும், அவரது சமூகப்பார்வை விரிவடையவும் உதவியிருக்கின்றது என்றால் அது மிகையல்ல. அதனாலேயே அவரது மொழிமாற்றப் படைப்புகளும் வெறும் சொற் பிரதியீடுகளில்லாமல் உயிர்த்துடிப்போடு வருகின்றன.

மாணவனா? தம்பியா? தோழனா? எப்படி வரித்துக் கொண்டாலும் ரூபனுடனான உறவு இனிமையானது. ஈர்ப்பானது. புலம்பெயர் தமிழ் இலக்கியப்பரப்பில் நம்பிக்கை தரும் இளம் படைப்பாளி. அவரிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன். அதேநேரம் தாயுள்ளத்தோடு தமிழள்ளி வாழ்த்துகிறேன்.

Leave A Reply